ஏதேதோ எண்ணங்கள் ஓட வெகு நேரம் சிலை போல அமர்ந்திருந்த ஓவியன் தன்னை சுதாரித்து பார்வையை அக்கம் பக்கம் செலுத்தினான். அப்போது அவனுக்கு எதிர்ப்பக்கமாக நித்திலா விஷாலுடன் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர்களுடன் இணைந்துக் கொண்டார்.
அவர் விஷாலுடன் பேசிக் கொண்டிருக்க நித்திலா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்களைப் பார்த்ததும் ஓவியனுக்கு வேறு எங்கும் பார்வை செல்லவில்லை. அந்த வயதானவன் என்ன தான் விஷாலிடம் பேசினாலும் அவனது பார்வை முழுவதும் நித்திலாவை சுற்றியே இருந்தது. விஷால் அவனிடம் பேசிக் கொண்டிருக்க அவன் பார்வை போகும் இடங்களை பார்த்து அவனுக்கு பற்றி கொண்டு வந்தது.
‘என்ன இவன் கொஞ்சம் கூட அந்த ஆள நோட் பண்ணாம இருக்கான். இடியட்’ என்று திட்டியவன் அவர்களையே கண்காணித்த படி அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் அந்த வயதான மனிதன் நித்திலாவின் உடையில் எதையோ கொட்ட நித்திலா அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். சாரி சாரி என்று மன்னிப்பு கேட்க அவள் தனது ஆடையை சுத்தப்படுத்த ரெஸ்ட் ரூம் சென்றாள்.
அவன் செய்ததை பார்க்க பார்க்க நித்திலா மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
இதற்கிடையில் போன் வரவும் பேசிய விஷால் உடனடியாக அங்கிருந்து கிளம்பினான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் தன்னை பார்க்கவில்லை என உறுதி செய்த அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆள் மெதுவாக உள்ளே சென்றான்.
‘எங்க போறான்?’ என்று யோசனையுடன் பார்த்தவன் அவனை பின் தொடர்ந்தான்.
ஒரு கட்டத்தில் அவன் மறைந்து போக அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறியவன் கண்களில் அவள் பட்ட போது அந்த வயதானவன் நித்திலாவிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
நித்திலா அவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள முயற்சிக்க அவனோ அவளை பலவந்தப்படுத்த முயற்சித்தான்.
கொஞ்சமும் இதனை எதிர்பாராதவள் பேச கூட முடியாமல் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள்.
“ஏய்” என்றவனின் கர்ஜனையில் அவனிடமிருந்து அவள் விலக பார்க்க அவளது ஆடை கிழிந்து விட்டது.
இதை கொஞ்சமும் எதிர்பாராதவள் கூனிகுறுகி அவனை பார்க்க முடியாமல் வெடித்து அழுதாள்.
அவள் அழுவதை கண் கொண்டு பார்க்க முடியாதவன் அவனுடைய சட்டையை கழற்றி கொடுத்தான்.
அடுத்த நிமிடம் அவளை வதைத்தவனை ஓவியன் உணர்வின்றி செய்து விட்டான். அவனது மொத்த ரௌத்திரத்தையும் காட்டியவனை பயந்து நடுங்கி போய் பார்த்தாள்.
“அடுத்த டைம் உன்னை பார்த்தேன்… நீ பொணமாயிடுவடா” என்றவனின் உறுமலில் நித்திலா இன்னும் நடுங்கினாள்.
அந்த பார்வை அவனை ஏதோ செய்ய அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.
அவளோ அவனை இறுக அணைத்து கதறி விட்டாள்.
“ஒண்ணுமில்லடா… ஒண்ணுமில்லடா… எதுக்கும் பயப்படாத” என்று கனிவான குரலில் சொன்னவன் அவளை இறுக அணைத்து ஆறுதல் படுத்தினான்.
அவளை தனது கை வளைவிலேயே கொண்டு வந்தவன் ஒரு ஜவுளி கடையில் நிறுத்தி அவளுக்கான உடையை வாங்கி கொடுத்து மாற்ற வைத்தவன் பின் அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் இருவரும் ஏதும் பேச முயற்சி செய்யவில்லை.
நித்திலாவோ தனக்கு நடந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் இன்னமும் அதிர்ந்து நடுங்கினாள்.
அவளை பார்த்தவன் அவளுடைய கையை பிடித்து ஆறுதலாக அழுத்தினான்.
“இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ அழறீங்க மேடம்? நான் தான் கரெக்ட் டைமுக்கு வந்திட்டேனே. எங்கிட்ட வேலை சம்பந்தமாக அவ்வளவு திட்டற மேம் இப்போ நீங்க பயப்படலாமா? அவனை நாலு அறை அறைஞ்சீங்கனா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் மேம்” என்று சொன்னான்.
“நான் அந்த ஆள் இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல” என்றவளது குரல் அப்போதும் நடுங்கியது.
“ரிலாக்ஸ் மேம். ஒண்ணும் இல்ல” என்று அவளை ஆறுதல் படுத்தியவன் “உங்களுக்கு இப்போ அங்க என்ன வேலை?” என்று கேட்டான்.
“எங்க மேரேஜ் விஷயமா விஷாலை மீட் பண்ணலாம்னு வந்தேன்” என்றவள் சொல்ல அதிர்ச்சியாய் அவளை பார்த்தான்.
“விஷாலா?”
“ஆமா. அதான் மீட் பண்ணலாம்னு போனேன்” என்றவளுக்கு விஷால் கையில் கிடைத்தால் அவளை கொன்று போடும் வெறி வந்தது.
‘உன்னை நம்பி தானேடா வந்தேன்’ என்று திட்டியவள் தன்னை அமைதியாக காட்ட முயற்சித்தாள்.
அவளது முயற்சியை புரிந்தவன் போல பார்த்தவன் ஆறுதலாக கண்களை மூடி திறந்தான். அதில் அமைதியானவள் சுற்றுப்புறத்தை நோக்கி தனது கவனத்தை செலுத்தினாள்.
ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்த ஓவியனின் உள்ளத்தில் அவ்வளவு குமுறல் எழுந்தது அவளது வீட்டினரை எண்ணி.
மற்ற நேரமாக இருந்திருந்தால் கத்தி தீர்த்திருப்பான். ஆனால் இப்போது நித்திலாவுக்காக அமைதியாக இருந்தான்.
முதலில் அவள் மனம் அமைதியடைய வேண்டும். அது தான் அவனுக்கு முக்கியம்.
இடையிடையே கண்ணனுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.
இருந்த கடுப்பில் போனை தூக்கி போட்டவன் சாலையில் கவனத்தை செலுத்தினான்.
அவளது வீட்டில் காரை நிறுத்தியவன் அவளை கை பிடித்து கூட்டிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்தவனை அகிலவேணி வரவேற்றார். பின்னால் நித்திலா வரவும் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்.
அவர்கள் இருவரையும் கேள்வியாய் பார்த்தவர் நித்திலாவின் முகம் சரியில்லாது கண்டு அதிர்ச்சியானார்.
“என்னடா குட்டிமா ஆச்சு? ஏன் உன் முகம் டல்லாருக்கு?” என்றதும் “பாட்டி” என்று அழ ஆரம்பித்தவள் அவனுடைய கண் ஜாடையில் அமைதியானாள்.
“ஒண்ணுமில்ல பாட்டிமா. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். அதனால கொஞ்சம் மேடம் பயந்துட்டாங்க. ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்” என்று சொன்னான்.
“நிலாமா… எங்க அடிப்பட்டிருக்கு?” என்று அவளை ஆராய முற்பட்டார்.
“பாட்டி அவங்கள உள்ள கூட்டிட்டு போங்க. ரிலாக்ஸா இருக்கட்டும்” என்றவன் கண்களாலேயே பத்திரமாக இரு என்று தகவல் சொன்னான்.
அவனை கண்டு தலையசைத்தவள் அங்கிருந்து பாட்டியுடன் உள்ளே போனாள்.
அப்போது அங்கு வந்த சீதா அவனை வரவேற்றவர் “ஏம்பா என்ன ஆச்சு? ஏன் நித்திலா பதட்டமா இருக்கா?” என்று பதட்டத்துடன் கேட்டார்.
“ஒண்ணும் இல்ல. வழில சின்ன ஆக்ஸிடென்ட். அதான் பயந்துட்டாங்க” என்றவன் “சரிம்மா. நீங்க பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன்” என்று கூறினான்.
“இருப்பா. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்” என்றவர் கிளம்ப அவன் சோஃபாவில் உட்கார்ந்தான்.
அப்போது தான் தர்மராஜ் வேறு வேலையாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் அப்போது அறைக்குள் வந்த மகளை பார்த்ததும் பதறினார்.
“என்னாச்சு குட்டிமா?” என்று கனிவான குரலில் கேட்டவர் அவளோ நடந்ததை நினைத்து அவர் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“டேய் குட்டிமா ஏன்டா அழற?” என்றவர் விசாரித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த சீதா நடந்ததை சொல்லவும் “டேய் என்னடா பண்ண அவள? அவ முகமே சரியில்ல. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை உயிரோடவே விட மாட்டேன்” என்றவர் அவனை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளினார்.
அவரது வார்த்தைகளில் திடுக்கிட்டவன் மேற்கொண்டு விளக்கம் கூற முயன்றும் அவனை பேச விடவில்லை.
“சார் நான் சொல்றதை கேளுங்க சார்”
“டேய் எதுவும் பேசாத. நீ நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா குடும்பத்தோட அருமை தெரிஞ்சிருக்கும். யாரும் இல்லாத அநாதை நாய் தானே டா நீ. அப்பன் பேர் தெரியாதவன் நீ. என்னை எதிர்த்து பேசுறியா?” என்றவர் கண்மண் தெரியாமல் அடித்து வெளுத்தார்.
இவர்களது சத்தத்தில் வெளியே வந்த நித்திலா அவனை இவரிடம் இருந்து பிரிக்க பார்க்க அவரோ அவனை கொன்று போடும் வெறியில் இருந்தார்.
“ப்பா… ப்ளீஸ்ப்பா… நான் சொல்றதை கேளுங்கப்பா… வேணாம்ப்பா.. அவரு எதுவும் பண்ணலப்பா” என்று கெஞ்சினாள்.
“நீ அமைதியா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது” என்று கர்ஜித்தவர் அவனை அடிப்பதை நிறுத்தவில்லை.
“ஏங்க என்ன பண்றீங்க?” என்று சீதாவும் அருகில் வர அகிலவேணியும் அங்கே வந்தார்.
அவர் அடிப்பதை பார்த்து பதறியவர் “தர்மா என்ன பண்ற?” என்று கத்தினார்.
“ம்மா… நீங்க எதுவும் குறுக்க வராதீங்க. எவ்ளோ தைரியம் இருந்தா நித்திலாவோட நம்ம வீட்டுக்கு வருவான். நிச்சயமா அவன் ஏதோ நித்திலாவை பண்ணியிருக்கான்மா. அவன் குடும்பமே சரியில்லாத குடும்பம் தானே? எனக்கு அவனை பத்தி தெரியும் மா” என்றவர் சொல்ல அவரது வார்த்தைகளில் சில்லு சில்லாய் அவன் நொறுங்கினான். அதற்கு மேல் ஓவியன் தர்மராஜிடம் ஏதும் பேச முயற்சிக்கவில்லை.
“உன்னைய குப்பையா நினைச்சதால தான்டா நீ அநாதையா நிக்கிற. நான் என் மகளுக்கு என்னைக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வர விட மாட்டேன் டா. அநாதை நாய்…எவ்ளோ தைரியமா வீட்டுக்குள்ள வர?” என்றவர் அடித்த அடியில் அவன் மயங்கி விழுந்தான்.
வழக்கமாக இப்படி பேச கூடியவர் தான். அவனும் அவரை தூசி போல கடந்துச் சென்று விடுவான். ஆனால் தன்னை பற்றிய அவரது கணிப்பு. அந்த வார்த்தைகளில் அவன் உயிரோடு மரித்து போனான்.
என்ன தான் ஏதோ துவேஷத்தோடு பேசுவார் என்று நினைத்தாலும் இந்த சொற்கள் அவனை சுருட்டி போட்டது.
வீட்டிற்குள் கம்பீரமாக வந்தவன் இப்போது அநாதையாய் மயங்கி கிடந்தான். அவனை வாட்ச்மேனை கூப்பிட்டு வெளியே கேட்டுக்கு அருகில் போட செய்தவர் அப்போதே அங்கிருந்து கிளம்பி விட்டார்.
ஓவியன் கேட்பார் யாருமற்று அநாதை போல தெருவில் மயங்கி கிடந்தான்.
