காதல்- 9

அத்தியாயம்- 9

மெல்லிசையை அழைத்துக் கொண்டு அவனது அறையினுள் நுழைந்தான் ஜீவானந்தன். 

அறைக்குள் வந்ததுமே ஜீவாவின் கரத்திலிருந்த தன் கரத்தை வெடுக்கென்று உருவிக் கொண்ட மெல்லிசை,

“என்ன சார் இதெல்லாம்?” என்று கோபமாக கேட்டாள்.

ஜீவாவோ இவளை எப்படி சமாளிப்பது என்று இமைகளை இறுக மூடி திறந்தவன், “என்ன இதெல்லாம்ன்னா? நீயுமா இதையே கேட்ப?” என்று கீழே இருப்பவரிடம் பேசியது போல் இவளிடம் பேச ஆரம்பிக்க, தன் வலக்கரத்தை உயர்த்தி அவனை நிறுத்தியவள்,

“உங்களுடைய இந்த ஜித்து விளையாட்டு எல்லாம் உங்க குடும்பத்தோட வச்சிக்கோங்க. என் கிட்ட வேணாம். நிற்கதியா உங்க கிட்ட உதவி கேட்டு வந்தவளிடம், நீ கேட்ட பணத்தை நான் தரேன், அதுக்கு காண்ட்ராக்ட் கல்யாணம்னு நடிக்க ஒத்துக்கணும்னு சொல்லி, அழைச்சி வந்து இப்போ இந்த வீட்டோட உண்மையான மருமகளையே வெளியே அனுப்பிட்டீங்க? போலியா நடிக்க வந்தவளை” என்று ஆவேசத்துடன் கேட்டவளின் வாயை ஒரே எட்டில் நெருங்கி பொற்றியவன் திறந்து இருந்த கதவை காலால் எட்டி உதைத்து சாற்றினான். 

தன் வாயை பொற்றியவனின் நெருக்கத்தில் அவள் கண்கள் விரிய, உடல் அதிர, உள்ளமோ வேகமாக துடித்தது. 

அதிலும் அவன் கதவை சாற்றியதை பார்த்ததுமே அவளுக்கு பயப்பந்து உருள ஆரம்பிக்க, அதன் விளைவாக பெண்ணவளின் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிகள் சட்டென்று துளிர்விட ஆரம்பித்து இருந்தது. 

ஒரு வினாடியில் மெல்லிசையின் உடல் நடுக்கத்தை அணைத்தபடி நின்று இருந்த ஜீவா உணர, அவளை விட்டு மெல்ல விலகி வாயை பொற்றி இருந்த கரத்தை மெதுவாக விடுவித்தவன்,

“சாரி” என கூறிவிட்டு “இங்க பாரு மெல்லிசை நீ ஒன்னும் சும்மா இங்க எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக வந்து நிக்கலையே? சுளையா முப்பது லட்சம் வாங்க தானே வந்து நடிக்கிற? சோ அதுக்கு ஏத்த பர்ஃபார்மென்ஸ் நீ கொடுத்து தானே ஆகணும்?” என்று ஏற்ற இறக்கமாக ஜீவா கூற, 

அவன் விலகியதும் சற்று ஆசுவாசம் அடைந்த மெல்லிசைக்கு பணத்தை பற்றி பேசியது தர்மசங்கடமாக இருந்தாலும் அந்த பணத்திற்காக தானே இப்படி ஒரு வேஷம் போட வேண்டி இருக்கு என்ற வேதனை சூழ்ந்துக் கொண்டது அவளுக்கு. 

“அதான் நான் இன்னும் பணத்தை வாங்கலையே சார்” என்று கரகரப்பான குரலில் சொன்னாள். 

“நானும் கொடுக்க மாட்டேன்னு சொல்லலையே” என்றவன் அவளின் உடைந்து போன குரலை உள்வாங்கியவன் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு “இங்க பாரு மெல்லிசை. இங்க ஒரு போட்டியே இப்போ நடந்துட்டு இருக்கு. அந்த போட்டியில வெற்றி பெறுவதும் பெறாம இருக்கிறது எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் தான். ஆனா இந்த போட்டியால என் தாத்தாவோட நம்பிக்கையை நான் இழக்காம சம்பாதிச்சி காட்டணும். அவர் என் மேல வச்ச நம்பிக்கை எப்போவுமே தவறானதா போகாதுனு நான் நிரூபிச்சி காட்டணும். அதுக்கு இந்த ட்ராமா எல்லாம் முக்கியம் தான்” என்று பேசியவனை புரியாமல் நோக்கி,

“ஏன் ட்ராமா செய்து தான் நம்பிக்கையை சம்பாதிக்கணுமா?” என்று அவன் பதிலுக்கு மறு கேள்வி கேட்டவளை மெச்சிதலாக பார்த்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 

“வேணும் என்ற பட்சத்துல எல்லாமே செய்து தானே ஆகணும் மெல்லிசை. இப்போ உன்னையே எடுத்துக்கோயேன். பணத்துக்காக யாருனே தெரியாத என் வீட்ல வந்து மருமகளா என்னோட மனைவியா நடிக்க ஒத்துக்கிட்டு என்னைய நம்பி வரல. அது போல தான்” என்று அவளையே முன் நிறுத்தி உதாரணம் சொல்ல, அவளுக்கு தான் இப்பொழுது அடுத்த கேள்வி கேட்க நா எழவில்லை.

பேச்சற்று போய் நின்று இருந்தவளை ஓர விழியால் பார்த்தவன் உள்ளம் ‘அப்பாடா வாயை மூடிக்கிட்டா. இதுக்கு மேல இங்க இருக்கிறது ஆபத்து தான் ஜீவா. சோ அப்படியே எஸ்கேப் ஆகிடுட வேண்டியது தான். மீதி தாத்தா வந்ததும் பார்த்துக்கலாம்’ என்று எண்ணியவன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு,

“சரி மெலோ” என அழைக்க வந்தவன் பெண்ணவளின் தீப் பார்வையை கண்டு “சரி சரி… மெல்லிசை நான் கிளம்புறேன். இன்னிக்கு ஒரு பெரிய டீல் ஒன்னு வர இருக்கு. சோ அதை முடிச்சிட்டு நைட் வந்திடுறேன். நீ ரெடியா…” என ஒரே ஒரு கணம் இடைவெளி மட்டும் தான் விட்டான். 

அதற்கே இங்கே இந்த அம்மணியிடமிருந்து நெருப்பு பந்துகள் அவனை நோக்கி அதிவேகத்துடன் விழிகளாலே எரிந்தவள், “என்ன சொன்னீங்க ரெடியா?” என்று நிறுத்தி அழுத்தமாக கேட்டாள். 

‘யப்பா பார்வையிலே எரிச்சிடுவா போலவே’ என்று உள்ளுக்குள் சற்று பயந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், “ரெடியாகி இருக்காம சாப்பிட்டு படுத்து நிம்மதியா தூங்குனு சொன்னேன்” என்றவன் அவள் செவிகளில் விழாதபடி முணுமுணுப்பாக “அதுக்குள்ள உன் கற்பனை எங்கே எல்லாம் போகுது” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேற போனவனை அவசரமாக தடுத்தாள் மெல்லிசை. 

அவனோ என்ன என்பது போல் திரும்பி அவளை காண, “அது வந்து இங்க என்ன நடக்குதுனு சொல்றேன்னு கீழே சொல்லி தானே மேல அழைச்சி வந்தீங்க. ஆனா எதுவுமே சொல்லாம போனா எப்படி” என்று அவள் கேட்டு நிறுத்த, அவளை நோக்கி வந்து அவளின் அருகில் நின்றவன் 

“சொல்றேன்னு தான் சொன்னேன். ஆனா இப்போ சொல்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்ல. சோ நைட் வந்து எல்லாமே சொல்றேன். அதுவரை யார் என்ன கேட்டாலும். நான் வந்ததுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் கேட்டுக்க சொல்லு” என சொன்னவன் திரும்ப, 

“ஒரு நிமிஷம்” என்றாள் மீண்டும்.

ஜீவாவோ இப்போ என்ன என்பது போல் அவளை நோக்கி திரும்பி பார்க்க, “இல்ல யாராவது நம்ம லவ் ஸ்டோரி பத்தி கேட்டா என்ன சொல்றது? நம்ம முதல் முதலா எங்க பார்த்தோம்னு கேட்டா என்ன சொல்லணும். ஏன்னா நான் ஒன்னு சொல்லிட்டு நீங்க வேற ஏதாவது சொன்னா தப்பாகிடும்ல” என்று தன் சந்தேகத்தை கேட்டாள். 

அவள் கேட்டதும் தான் அவனுக்கு நினைவு வர, தன் ஆள்காட்டி விரலால் நெற்றியில் தட்டி யோசித்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக அவன் மெத்தையை நெருங்கி பஞ்சு போன்று இருந்த மெத்தையை ஒற்றை கரத்தால் சிறிது தூக்கி அங்கே அவன் வைத்திருந்த டைரி ஒன்றை எடுத்து கொடுத்தான்.

மெல்லிசையோ அவன் என்ன செய்கிறான் என்று எட்டி பார்த்தவள் விழியில் அங்கே இருந்த இரண்டு டைரியில் ஒன்றை மட்டும் எடுத்த ஜீவாவின் கரம் தான் தெரிந்தது. 

டைரியை எடுத்தவன் மெல்லிசையிடம் நீட்டி “இதுல நான் லவ் பண்ண பொண்ணை பத்தி எழுதி இருக்கேன். இதுல இருக்கிறதை படி மத்தவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்” என்று சொல்லிக் கொண்டே அவள் முன் டைரியை நீட்டினான். 

மெல்லிசையோ அவன் நீட்டிய டைரியை வாங்காமல், “சார் இது உங்க பர்சனல் டைரி சார். இதை போய் நான் எப்படி படிக்கிறது?” என்று தயக்கமாக கேட்டாள். 

அவனோ “அட நானே தானே ம்மா எடுத்து தரேன். நீ என்ன எனக்கு தெரியாம திருட்டுத் தனமாவா படிக்க போற? யாராவது கேள்வி கேட்டா நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி பதில் சொல்லணும் தானே. கண்டிப்பா நான் இதுல இருக்கிற மாதிரி மட்டும் தான் பதில் சொல்லுவேன். ஏன்னா இது என் உயிர் மூச்சோட கலந்து இருக்கிறது” என்றவன் தயங்கியபடி நின்று இருந்த பெண்ணவளின் கரத்தை பிடித்து அவனின் இரவு நேர காதலியான டைரியை திணித்தவன், “அப்போ நான் கிளம்பட்டா?” என்று கேட்டான். 

அவள் கரத்திலிருந்த டைரியை மெல்ல மயில் தோகை இல்லாமலே வருடிக் கொடுத்தவள், “நீங்க லவ் பண்ணீங்களா சார்?” என்று சந்தேகமாக கேட்டாள். 

அவள் அவனின் டைரியை வருடுவதை பார்த்தவன் விழி அவள் கேள்வியில் பெண்ணவளின் விழிகளை நேருக்கு நேர் நோக்கியது. 

ஆம் என்று அழுத்தமாக தலையை ஆட்டினான்.

“அப்போ அவங்களையே கல்யாணம்” என்று ஆரம்பித்தவளை தடுத்து “அவளுக்கு வேற பையனை தான் பிடிச்சி இருக்கு. என்னைய இல்லை” என்று வலி நிறைந்த குரலோடு ஜீவா கூற, 

ஏனோ அவன் வலி அவளுள் என்னவோ செய்தது. சரி என்று மெதுவாக தலையை அவள் ஆட்ட,

“சரி இப்போ நான் கிளம்புறேன்” என்று நகர போனவனை அவசரமாக தடுத்தாள்.

அவனோ பொறுமை இழக்காமல் “இப்போ என்னம்மா?” என்றான். 

மெல்லிசையோ சற்று சங்கடமாக “அது… வந்து சார் எனக்கு மாத்து உடை எதுவும் கொண்டு வரல. எல்லாமே ஹாஸ்டல்ல இருக்கு. அது மட்டுமில்ல என் ப்ரெண்ட் பவி கிட்ட கூட நான் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். இன்னும் என் கிட்ட இருந்து எந்த தகவலும் வரலனு கவலையா இருப்பா, சோ அவ கிட்ட மட்டும் நமக்குள்ள நடந்த விஷயத்தை சொல்லிக்கவா?” என்று தயங்கியபடியே கேட்டாள்.

ஜீவானந்தனோ சற்றும் தாமதிக்காமல் இல்லை என்று இருப்பக்கமும் தலையை ஆட்டியவன் “இல்ல வேணாம் மெல்லிசை. இந்த காண்ட்ராக்ட் மேரேஜ் நம்ம இரண்டு பேருக்குள்ள மட்டும் தான் இருக்கணும். எண்ணி ஒரே மாசம் தான். என் வேலை முடிஞ்சதும் நீ இந்த வீட்டை விட்டு போயிடலாம். உன்னை யாருமே, தடுக்க மாட்டோம். ஏன் என்னையும் சேர்த்து தான் சொல்றேன் உன்னை தடுக்க மாட்டேன். அதுவரை என்னோட மனைவியா இந்த வீட்டு மருமகளா, இந்த குடும்பத்தோட அடுத்த வாரிசோட மருமகளா நீ இருந்து தான் ஆகணும். உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் நான் கொண்டு வரேன்” என்று சொன்னவன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.

“சரி மெல்லிசை நேரமாகுது. இன்னிக்கு ரொம்ப பெரிய டீல் ஒன்னு வருது. அதை என் அண்ணனுக்கு விட்டு கொடுக்க முடியாது. சோ நான் இப்போ போறேன். நைட் வந்ததும் இந்த சக்கரவர்த்தியோட குடும்ப வரலாறை சொல்றேன். அதுவரை பத்திரமா இரு” என சொல்லி விட்டு அவள் விழிகளை நோக்கினான். 

நயனங்களில் அத்தனை தவிப்பு பயம் பதற்றம் என்று ஒன்றுக்கு ஒன்று போட்டிக் போட்டுக் கொண்டு தெரிய, என்ன நினைத்தானோ டைரியை பிடித்து இருந்த அவள் கரத்தின் மீது அவன் கரத்தை அழுத்தமாக டைரியோடே சேர்த்து பிடித்தான். 

தன் கரத்தை பிடித்ததும் அவள் ஜீவாவை என்னவென்று நோக்க, மெல்லிசையை தன்னை நோக்கி ஒரு அடி இழுத்து அவன் நெருக்கத்தில் நிற்க வைத்தான். 

ஜீவா இழுத்ததும் அவன் மேனியின் மீது உரசி விடாமல் ஒரு நூல் இழை தூரத்தில் நின்றவளுக்கு நெஞ்சாங்கூடு எகிறி துடித்தது. 

அதை அவன் உணர்ந்தாலும், அவளை விட்டு விலகாமல் “என்னை நம்பி எப்படி என் கூட இந்த வீட்டுக்கு வந்தியோ. அந்த நம்பிக்கையை கண்டிப்பா நான் உடைக்க மாட்டேன். சோ தைரியமா இரு” என்று சொன்னவனை வியப்புடன் தான் பார்த்தாள்.

இதுவரை அவள் கேள்விப் பட்டது வரையும் சரி அவள் அனுபவித்த வரையும் சரி ‘என்னை நம்புற தானே’ என்ற வார்த்தையை மட்டும் அறிந்தவளுக்கு ‘என் மீது வச்ச நம்பிக்கையை உடைக்க மாட்டேன்’ என்ற வார்த்தை புதியதாக இருந்தது அவளுக்கு. 

யோசனையோடு இருந்தவளின் நெற்றியில் அவள் எதிர்பாரா நேரத்தில் அழுத்தமாக தன் முதல் முத்திரையை பதித்தவன் உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அச்சாரம் போல் அவள் ஆழ்மனதில் ஆணி அடித்து இருந்தான் ஜீவா. 

ஆனால் அதை அவள் உணரும் முன் மெல்லிசையை விட்டு விலகியவன் அவள் கன்னத்தை ஒற்றை கரத்தால் தாங்கி “பயப்படாதடி… நான் திரும்ப வர வரைக்கும் எனக்காக காத்திரு. சீக்கிரம் வந்துடுறேன்” என்று கண் சிமிட்டி கூறிவிட்டு அங்கே இருந்து வேகமாகச் சென்றான். 

அவனின் திடீர் முத்தத்தில் அதிர்ந்து நின்ற மெல்லிசை அவன் கதவை சாற்றி விட்டு போகும் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் இதயம் ரயில் வண்டி இல்லாமலே தடக்தடக்கென வேகமாக தடம் புரள ஆரம்பிக்க, “இப்போ எதுக்காக எனக்கு கிஸ் கொடுத்துட்டு போறான்?” என்று அவன் இதழ் பதித்த இடத்தில் ஈரத்தை தொட்டு பார்த்தது அவள் கரம். 

உடல் நடுங்க கால்கள் தரையில் நிற்காமல் இம்சை செய்ய, தள்ளாடியவள் பட்டென்று அவன் மெத்தையிலே தொப்பென்று அமர்ந்தாள். 

அவள் அமர்ந்த வேகத்தில் கையிலிருந்த அவனின் டைரி கீழே விழுந்து அவள் காலடியில் சரணாகதியடைந்தது.

அதை குனிந்து எடுத்தவள் விழிகள் விரிந்து இருந்த ஒரு பக்கத்தில் நிலைக்க அதில்,

“என் இரவு நேர காதலியே…”

என்று எழுதி இருப்பதை வாசித்தவளுக்கு ஏனோ அவனின் குரல் ஒலி தான் கேட்டது. 

வாசித்தது என்னவோ இவள் தான் ஆனால் குரல் ஒலி அவன்…

அதை அவள் உணர்ந்தாலும் பார்வை அடுத்த வரியை தேடிச் சென்றது. 

“அழகிற்காக ஒருவரை காதலித்தால் அது ஆசை…

ஆனால் நான் என்ன செய்ய அவள் பேரழகியாக தானே இருக்கிறாள்.

ஆசை ஒன்றும் தப்பில்லையே?

பணத்திற்காக ஒருவரை காதலித்தால் அது தேவை.

தேவை என்பது எல்லா உயிர்களுக்கும் இருப்பது தானே, அது பணமா இருந்தா என்ன பாசமா இருந்தா என்ன?

அன்பிற்காக ஒருவரை காதலித்தால் அது ஈர்ப்பு…

ஈர்ப்பு இல்லாத உயிர் இவ்வுலகில் இருக்கிறதா என்ன? அதுவும் ஈர்ப்பால் உருவாகும் அன்பு பொய்யாக போய் விடுமா?

காதலிக்கிறார் என்பதற்காக காதலித்தால் அது அனுதாபம்…

அனுதாபம்????? ம்ம்ம்ம்… காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் எப்படி அனுதாபமாகும்?

காரணமே இல்லாமல் காதலித்தால் அது காதல்…

உண்மை தான்! ஆனால் மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால் காதலிப்பவர்களை சந்திப்பதற்காக நாம் உருகுவதற்கு பெயர்… அது காரணம் தானே?

காரணம் இல்லாமல் வரும் காதல் தான் காலம் முழுக்க நம் நினைவில் நிற்கும்.

நினைவில் இருப்பதற்காக மட்டும் காதலிப்பது துயரத்தின் கொடுமை அல்லவா?” 

என்று எழுதி இருந்த வார்த்தைகளை வாசித்தவளின் விழிகளிலிருந்து ஏனென்றே தெரியாமல் சட்டென்று கண்ணீர் வழிந்தோட, விலை மதிக்க முடியாத பெண்ணவளின் வைரத்துளிகள் அவள் மடி மீது இருந்த ஆடவனின் விலை போகாத பொக்கிஷத்தின் மீது பட்டு தெறித்தது. 

டைரியில் கண்ணீர் துளி பட்டதும் அதை மெல்ல வருடிக் கொடுத்தவள் மனம் ஏனோ அதை மேலும் படிக்கும் எண்ணத்தை கொடுக்காமல் அதை மூடி  மெத்தையின் அருகிலிருந்த மேசை மீது வைத்தாள். 

அவள் மனமும் சரி உடலும் சரி ஆயாசமாக இருந்தது. 

நினைவுகளோ அவள் சொல் பேச்சை கேட்காமல் பின்னோக்கி இழுத்துச் செல்ல, இழுப்பட்டவள் கண்கள் முன் காட்சிகளாக அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஃபிலிம் இல்லாமலே நிழற்படம் போல் ஓடியது. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page