ஓவியனுக்கு கடந்த சில நாட்களாக நாட்கள் அழகாக சென்றது. தினமும் காலையில் நித்திலாவின் போன் காலில் தான் அவன் கண் விழித்தான்.
அப்படியே அவளிடம் பேசியபடியே கிளம்புபவன் அவளை சந்திக்கும் நாட்களை ஒரு நாள் கூட தவற விட்டதில்லை.
எப்படியாவது ஏதேனும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.
அவ்வப்போது பிஸினஸ் பற்றிய பேச்சில் நித்திலா கணினியில் உள்ள அனைத்தையும் ஆராய சொன்னாள்.
அதை மகேந்திரனிடம் செக் செய்ய சொன்னான்.
“மகே ஸ்டாக் செக் பண்ணிட்டியா? நம்ம எல்லா பிராஞ்சும் செக் பண்ணியாச்சா? உன்னை நான் அப்டேட் பண்ண சொன்னேன்ல” என்று இறுகிய குரலில் கேட்டான்.
“சார் செக் பண்ணிட்டேன். பட் ஒரு இஷ்யூ…” என்று மகேந்திரன் தயங்கிய குரலில் கூறினான்.
“என்ன இஷ்யூ?”
“சார் ஸ்டாக் லெட்ஜர்ல ஸ்டாக் அதிமாக காட்டிருக்காங்க. பட் அந்த ஸ்டாக் கம்மியா இருக்கு. கஸ்டமர் ஆர்டர் எடுக்க வந்து ஸ்டாக் லோவா இருந்ததால வேண்டாம்னு போயிட்டாங்க” என்று பயந்த குரலில் கூறினான்.
“என்ன மகே இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா பேசற?” என்று கத்தினான்.
மகேந்திரன் பேசிக் கொண்டிருக்கும்போது ஓவியனுக்கு அலைப்பேசியில் அழைப்பு வந்தது.
“சுரேஷ் என்னடா சொன்னேன் உன்கிட்ட? அலர்ட்டா இருக்க சொன்னேனா இல்லையா? என்ன நீ பண்ணிட்டு இருக்க?”
“இல்ல மச்சான். நான் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன். இருந்தாலும் குளறுபடி ஆயிடுச்சு”
“அந்த கஸ்டமருக்கு போன் பண்ணி பேசு. அவங்களுக்கு ஆஃபர்ல பண்ணி தரேன்னு சொல்லு. அப்படியே ஏதும் திட்டினாங்கனா எனக்கு கால் டைவர்ட் பண்ணி விடு. எவனுமே வேலைய கரெக்ட்டா பண்ண மாட்டீங்களா?” என்றவன் போனை கட் செய்ய அவனுக்கு இன்னொரு கால் வந்தது.
‘இதைப்பாருடா’ என்று அதிசயப்பட்டவன் “சொல்லுங்க மாம்ஸ்” என்றபடி பேச ஆரம்பித்தான்.
“யாருக்கு யார்டா மாமா?”
“நீங்க தான் எனக்கு மாமா. உங்க பொண்ணு அன்னைக்கு சொன்னது மறந்து போச்சா மாம்ஸ்?”
“டேய்” என்றவர் அந்த பக்கம் பல்லை கடித்தார்.
“சரி. என்ன காத்து இந்த பக்கம் வீசுது?”
“உன் ஷாப்ல ஏதோ பிரச்சனையாமே… கேள்விப்பட்டேன்” என்றவர் கேள்வியில் அன்று அவன் பார்த்த காட்சி ஞாபகம் வந்தது.
அவனது கடை ஊழியன் பிரதீப்பிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போது அவன் இருந்த மனநிலையில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இப்போது மனதிற்குள் அபாய மணி அடித்தது.
இருந்தாலும் சுதாரித்தவன் “அப்படியா? என் ஷாப்ல என்ன பிரச்சனை மாம்ஸ்?” என்று ஒன்றும் தெரியாதவன் போல வினவினான்.
“உனக்கு தெரியாதா? ஸ்டாக் பூரா ஒரே குளறுபடியா இருக்காமே? கஸ்டமர் கோவிச்சிட்டு போயிட்டாங்கனு கேள்விப்பட்டேன்”
“ஐயோ… அப்படியா மாமா… எனக்கு பயமா இருக்குதே” என்றவன் பயப்படுவது போல நடிக்க இவர் அங்கே தனக்குள் சிரித்துக் கொண்டார்.
“இங்க பாரு…நீ இங்கயே இருந்தினா இன்னும் பிராப்ளம் பெருசாகும். ஒழுங்கா என் பொண்ண விட்டு விலகி போயிடு” என்று மிரட்டினார்.
“யூ நோ… ஐ லவ் ஹர் வெரி மச். நீ என் காதலுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்க மாமா? நான் இல்லாம அவங்களால இருக்க முடியாது. நானும் தான். இப்படி இப்போ கஷ்டப்பட்டு எங்கள சேர்த்து வெச்ச நீயே பிரிக்க டிரை பண்ணாலாமா? அப்புறம் இன்னொன்னு சொன்னியே… பிராப்ளம் கொடுப்பேனு… எவ்ளோ பிராப்ளமா இருந்தாலும் என் டார்லிங்காக நான் சமாளிப்பேன். வைக்கட்டுமா மாம்ஸ்” என்றவனின் நக்கலில் வார்த்தைகள் வராமல் திணறினார்.
“போ மாம்ஸ். போய் ஹார்லிக்ஸ் குடிச்சு உடம்பை தேத்து” என்றவனின் குரலில் “டேய்” என கத்தினார்.
“இவரு ஒருத்தரு தெலுங்கு பட வில்லன் மாதிரி ஏய், டேய்னு… நமக்கு தான் காது கொய்ங்ங்ங்து” என்று முணுமுணுத்தவன்
“கொஞ்சம் சவுண்ட் கம்மி பண்ணு மாம்ஸ். அப்புறம் உன் மருமகன் செவிடு யாராவது சொல்லிட கூடாதுல” என்று நக்கல் குரலில் சொன்னான்.
“ராஸ்கல்… உடம்பு முழுக்க உனக்கு கொழுப்புடா. இருடா. உனக்கு நெக்ஸ்ட் நான் பண்ண போறதுல நீ பதறியடிச்சு ஓடி வரணும்” என்று பல்லை கடித்தார்.
அலைப்பேசியை வைத்த ஓவியன் நேராக அண்ணா நகர் கிளைக்குச் சென்றான். அவன் கணினியில் என்ன நடந்தது என்று பார்க்க ஆரம்பித்தான். அதே போல் மற்ற இரு கிளைகளிலும் ஏதேனும் சந்தேகப்படும்படி நடந்ததா என்றும் கண்காணிக்க சொன்னான்.
எல்லாரும் சென்ற பின் பிரதீப் திருட்டுத்தனமாக கணினியில் மாற்றுவது ஆதாரத்தோடு தெரிந்தது.
“பிரதீப் எனக்கு டீ வேணும். வாங்கிட்டு வரியா?”
“சரிங்க சார்” என்றவன் வாங்கி வந்து கொடுக்க குடிக்க ஆரம்பித்தவன் அப்படியே அவனுடைய குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு எப்போதுமே ஓரளவுக்கு அனைவரது குடும்ப விவரமும் தெரிந்திருக்கும்.
அவர்களை பற்றிய அனைத்தும் இவன் விரல் நுனியில் வைத்திருப்பான்.
மெதுவாக விசாரித்தவன் அவனை தன்னுடன் குடோனுக்கு கூட்டிச் சென்றான்.
“தர்மராஜை உங்களுக்கு தெரியுமா?”
“சா… சார்”
“ஏன் பிரதீப் இப்படி பார்க்குறீங்க?”
“தெரியும் சார்”
“அவரு உங்களுக்கு என்ன வேலை கொடுத்தாரு?”
“சார்”
“என்ன வேலை கொடுத்தாருனு கேட்டேன்”
“…..”
“பதில் சொல்லுங்க பிரதீப்”
இதுவரை அமைதியாக பேசி வந்தவனின் குரல் இப்போது இறுகி ஒலித்தது.
அவனது தொனியில் பிரதீப்புக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
“ஏன் ஸ்டாக்ல குளறுபடி பண்ணீங்க? அதையும் அந்தாள் பண்ண சொன்னாரா?”
“சார்… இல்ல சார்”
“எனக்கு பதில் வேணும் பிரதீப். திரும்பத் திரும்ப ரிப்பீட் பண்றது எனக்கு பிடிக்காது” என்றதும் பிரதீப் கடகடவென நடந்ததை ஒப்பித்து விட்டான்.
“இன்ட்ரஸ்டிங்” என்றவன் “எவ்ளோ பணம் வாங்குன அந்த ஆள்கிட்ட?” என்றவனின் கேள்வியில் அவன் விழித்தான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போது மற்ற கடைகளில் உள்ள இருவரும் வந்தார்கள்.
“ஏன் பிரதீப் ஷாக் ஆகறீங்க? எல்லாம் நம்ம பசங்க தானே” என்றவன் அவர்களிடமும் தனது விசாரணையை ஆரம்பித்தான்.
“தப்பித்தவறி இனி ஏதாவது குளறுபடி பண்ணீங்கன்னு தெரிஞ்சது மூணு பேரையும் இனி ஃப்யூச்சர்ல நீங்க எங்கேயும் வேலைன்னு ஒன்னு பண்ண விடாம பண்ணிடுவேன்” என்றவனின் மிரட்டலில் அனைவரும் உறைந்து நின்றார்கள்.
“பட் ஒரு கண்டிஷன் இங்க நடந்தது எனக்கு தெரியும்னு அந்த ஆளுக்கு நீங்க சொல்ல கூடாது. இனி எந்த அப்டேட்டா இருந்தாலும் முதல்ல எனக்கு தான் வரணும். ஓகே?”
“ஓகே சார்”
“ஓகே. நீங்க கிளம்பலாம்” என்றவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அப்போது அவனது கைப்பேசி அழைத்தது.
“சொல்லுங்க மிஸ்டர். ரத்னம்”
“என் ஆஃபிஸ்க்கு இன்னைக்கு ஈவ்னிங் வா” என்று கட்டளையிட்டார்.
“நான் எதுக்கு மிஸ்டர். ரத்னம் வரணும். உனக்கு வேணும்னா நீ வா. நீ யார் எனக்கு ஆர்டர் போட?” என்று இறுகிய குரலில் கூறினான்.
“ஓவியன் தேவையில்லாம வாய் விடாத” என்றவர் பல்லை கடித்தார்.
“அடச்சீ… அமைதியா இரு. நீ என்னோட இடத்துக்கு வந்தா நான் உன்கிட்ட பேசலாம். உனக்கு தேவைனா தானே எங்க ஞாபகம் வரும்?” என்றவனை கொன்று போடும் வெறி வந்தது.
இருந்தாலும் எதுவும் பேசாமல் “நான் வர முடியாது” என்று மட்டும் சொன்னார்.
“ஓகே. கூல். பாய்” என்றவன் விசிலடித்தபடி காரை ஓட்டினான்.
சிறிது நேரத்தில் அவனுக்கு திரும்பவும் ரத்னத்திடம் இருந்து போன் வந்தது.
“என்ன வேணும் உனக்கு? நீ ஒரு டைம் கூப்பிட்டாலே அதிசயம். நீ திரும்ப கூப்பிடுறியே?” என்று கேள்வி எழுப்பினான்.
“அதைப்பத்தி உனக்கென்ன? நாங்க எத்தனை மணிக்கு வரணும்?” என்று கேட்டார்.
“ஓ… ஒரு படையே வர்றீங்க போல… வாங்க… வாங்க… ஆனா சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?” என ரத்னத்திடம் கேட்டு அவரை கடுப்பாக்கியவன் “இப்போ டைம் மூணு. நாலு மணிக்கு வா” என்றவன் விசிலடித்தபடி தனது ஃபிளாட்டிற்குச் சென்றான்.
மதிய சாப்பாட்டை சாப்பிட்டவன் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்து தூங்க ஆரம்பித்தான்.
படுத்தவனுக்கு அடித்து போட்டாற் போல தூக்கம் வர இரண்டு மணி நேரமாகியும் அவன் எழுந்த பாட்டை காணவில்லை. போன் இடைவிடாமல் அடித்தது.
ஒரு வழியாக அந்த போனை எடுத்தவன் “ஏன் கூப்பிட்டுட்டே இருக்கீங்க செக்யூரிட்டி?” என்று தூக்க கலக்கத்தில் கேட்டான்.
“ரத்னம் சார் ஃபேமிலி வெயிட் பண்றாங்க. அவங்க ஒன் ஹவரா இங்க இருக்காங்க சார்” என்று சொல்ல “ஷிட்… இதை எப்படி மறந்தேன்” என்று முணுமுணுத்தவன் “ஓகே. அவங்கள வர சொல்லுங்க” என்றவன் தன்னை ரெஃபிரஷ் செய்துக் கொண்டான்.
அவன் ஹாலுக்கு வரும்போது மூவரும் கொலைவெறியாய் அமர்ந்திருந்தார்கள்.
“சொல்லுங்க ரத்னம்… எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க?” என்று எள்ளலான குரலில் கேட்டான்.
“தர்மராஜ் கிட்ட என்ன சொன்ன?” என கோபமான குரலில் கேட்டார்.
“என் மாமனார்கிட்ட நான் என்ன வேணும்னாலும் சொல்லுவேன் மிஸ்டர்.ரத்னம். அது எதுக்கு உங்களுக்கு?” என்று நிதானமான குரலில் வினவினான்.
“யாருக்கு யாருடா மாமனாரு?” என்று விஷால் அவனிடம் கத்தியவன் “ப்பா… என்ன பேசறான்னு பாருங்க” என்று அவனது அப்பாவிடம் முறையிட்டான்.
“நான் பேசிட்டு இருக்கேன் இல்ல விஷால். அமைதியா இரு” என்று ரத்னம் அதட்டினார்.
“இவன்கிட்ட என்னங்க பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க? எவ்ளோ கொழுப்பு இருந்தா நம்மள ஒரு மணி நேரம் காக்க வைப்பான்? எல்லாம் தொழில் பண்றோம்னு திமிரு” என்று அன்னபூரணி கோபமாக கேட்டார்.
“நானாவது தொழில் பண்றேன் மேடம். நீங்க என்ன பண்றீங்க? அடுத்து எந்த குடும்பத்தை எப்படி நாசம் பண்ணலாம்னு ப்ளான் பண்றீங்க. இதோட நிறுத்திக்க. அந்த குடும்பத்தை ஏதாவது பண்ண நினைச்ச நான் என்ன பண்ணுவேனு தெரியாது” என்று கர்ஜித்தவன் “அன்ட் ஒன் மோர் திங்க். இது என் வீடு. யார்கிட்ட எப்ப பேசணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்” என்று அழுத்தமாக கூறினான்.
“ஓவியன் என்ன பேசற? மரியாதையா பேச மாட்டியா?” என்று கேட்டார்.
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். நீங்க எதுக்கு வந்தீங்க? வரக்கூடாதவங்க எல்லாம் எதுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று நக்கலாக கேட்டான்.
“உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ நாங்க பிச்சை போடுறோம். நீ இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்” என்று அன்னபூரணி தெனாவட்டாக உரைத்தார்.
“ஏய்…” என்று ஓவியன் வீடு அதிரும் வண்ணம் கத்தினான்.
“எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க? முதல்ல எல்லாரும் கிளம்புங்க இங்க இருந்து” என்று கர்ஜித்தான்.
“அமைதியா இரு பூரணி. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல” என்றவர் “சொல்லு. உனக்கு எவ்வளவு பணம் வேணும்?” என்று அவனிடம் கேட்டார்.
“எவ்ளோ பணம் கேட்டாலும் கிடைக்குமோ?” என்று ஓவியன் புருவம் உயர்த்தினான்.
“எவ்வளவு பணம் வேணும் சொல்லு?” என ரத்னம் அழுத்தமாக கேட்டார்.
“எனக்கு 3500 கோடி ரூபாய் வேணும். அப்படியே அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லனு எனக்கு எழுதியும் கொடுக்கணும். டீல் ஓகேவா?” என்று கேட்டான்.
“யார் சொத்தை யார் கேட்கறதுடா? ஏதோ போனா போகுதுன்னு பொழைச்சி போகட்டும்னு பார்த்தா அவ்வளவு திமிராடா உனக்கு?” என்று அன்னபூரணி கேட்டார்.
“உனக்கு இருக்கிறதை விட கொஞ்சம் கம்மி தான்” என்று சொன்னவன் “நான் சொல்றதை நீ கொடு. அப்புறம் போறதை பத்தி யோசிக்கலாம்” என்று சொன்னான்.
“ஏங்க இவன்கிட்ட நமக்கு என்ன பேச்சு? வாங்க நம்ம போலாம்” என்று அன்னபூரணி அவர்களை கிளம்ப சொன்னார்.
“பார்த்துக்கோடா. இதுக்கான விலைய நீ அனுபவிப்ப” என்று அன்னபூர்ணி ஆங்கரமாக கத்தினார்.
“ஏய்… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று அவன் காதை குடைந்தபடியே சொன்னான்.
அவர்கள் சென்றதும் புயல் அடித்தது போல் ஓய்ந்து போய் உட்கார்ந்தவன் ஏதேதோ நினைவுகள் வர அப்படி சிலை போல் அமர்ந்திருந்தான்.
வெகு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் பின் அலைப்பேசி அழைப்பின் சத்தத்தில் சுதாரித்தான்.
“ஹலோ”
“என்னாச்சு ஓவியன்?”
“நித்திமா”
“ஏன் உங்க வாய்ஸ் டல்லா இருக்கு?” என்ற அவளது கேள்வியில் அவனுக்கு கண்கள் கலங்கியது.
“நான் உன்னை பார்க்கணும். வர்றியாடா?”
“எங்க வரது ஓவியன்?”
“என் ஃபிளாட்டுக்கு”
“ஓகே ஓவியன். நான் வரேன். நீங்க ஏதும் மனசை போட்டு குழப்பிக்காதீங்க” என்று அவனை தேற்றினாள்.
கண்ணனிடம் அவன் பணம் வாங்கிய அன்று நடந்த பிரச்சனையில் அவனை வெளியே கூட்டிக்கொண்டு சென்றவள் ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தினாள்.
இருவருக்கும் அவள் சாப்பிட ஆர்டர் செய்தாள். உணவு வரும் வரையும் அமைதியாக இருந்தவள் அவனை சாப்பிட சொன்னாள். ஆனால் அவனோ சிலை போல அமர்ந்து இருந்தான்.
திரும்பத் திரும்ப தர்மராஜ் அவனை கேவலப்படுத்துவது அவனால் தாங்க முடியாமல் இருந்தது.
அவன் அமைதியாக இருக்க நித்திலா தோசையை பிய்த்து அவனுக்கு ஊட்ட வந்தாள்.
அதைப் பார்த்தவன் இறுக்கமாக அவளது மற்றொரு கையை பிடித்துக் கொண்டான்.
“ஒன்னும் இல்ல ஓவியன். ரிலாக்ஸ் ஆகுங்க. நான் எப்பவும் உங்க கூட இருப்பேன். இதை மட்டும் மனசுல வச்சிட்டு சாப்பிடுங்க” என்று சொல்லவும் அவன் அமைதியாக சாப்பிட்டான்.
ஆனாலும் கடைசி வரை கையை விடவே இல்லை.
அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை போன் செய்தார்.
“நித்திலா எங்க இருக்கீங்க?”
“ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருக்கோம் தாத்தா”
“சரிடா. சாப்பிட்டு நம்ம ஆபிஸுக்கு கூட்டிட்டு வா” என்று சொன்னார்.
“சரி தாத்தா”
அவர்கள் இருவரும் சாப்பிட்டவுடன் அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றாள்.
“பணம் வாங்கிக்கோ ஓவியன்”
“இல்ல தாத்தா. எனக்கு வேணாம்”
“டேய் தாத்தாவே கொடுக்குறப்போ ஏன் டா நீ வாங்க யோசிக்கிற?” என்று கண்ணன் அதட்டினான்.
“இல்லடா. பரவாயில்ல”
“நான் கொடுத்தா வாங்க மாட்டீங்களா நீங்க?” என்று நித்திலா கேட்டாள்.
“இல்லடா. நான் வேற எங்கயாவது அரேஞ்ச் பண்ணிக்கிறேன்” என்று சொன்னான்.
“ஓவியா… இங்க வா” என்று தாத்தா அவனை அழைத்தார்.
“தாத்தா” என்று அருகில் சென்றவன் அவருடைய பாசத்தை அப்படியே கண் மூடி அனுபவித்தான்.
“நாங்க இருக்கோம் உனக்கு. நீ கவலைப்படாத” என்றவரின் வாஞ்சையான குரலில் அவன் கட்டுண்டு நின்றான்.
பின் அவனை சமாதானப்படுத்தியவர்கள் அவனிடம் பணத்தை கொடுத்து விட்டு தான் சென்றார்கள்.
கிட்டத்தட்ட அந்த நாள் முழுவதும் நித்திலா அவன் கூடவே இருந்தாள்.
கிளம்பும் போதும் கூட அவன் பார்த்த பார்வையில் பிரிய மனம் இல்லாமல் பிரிந்தாள்.
இன்று ஓவியனிடம் போனில் பேசியதும் அவளுக்கு அன்று பார்த்த ஓவியன் ஞாபகம் வந்தது. அதில் அவள் பதறிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் உள்ளே வந்தவள் அவனைப் பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டாள்.
அவன் அநாதரவான நிலையில் எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.
“ஓவியன்” என்று அவள் கனிவான குரலில் கூப்பிட அந்த குரலுக்கு கட்டுப்பட்டவன் “நான் உன்னை ஹக் பண்ணட்டுமா நிலா?” என்று கேட்டான். அந்த குரலில் தென்பட்ட தவிப்பில் அவள் திகைத்து நின்றாள்.
