ஒளி 18

 

“கண்ணா என்னாச்சு? டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று தாத்தா படப்படப்புடன் கேட்டார்.

“தாத்தா இப்பதான் பார்த்துட்டு இருக்காங்க. ஒண்ணும் ஆகாது தாத்தா. பயப்படாதீங்க” என்று கண்ணன் அண்ணாமலைக்கு ஆறுதல் கூறினான். அவர்கள் அருகில் விஷால் நின்றிருந்தான்.‌ ஒரு ஓரமாக தர்மராஜ் அமர்ந்திருந்தார்.

அவரை பார்க்க பார்க்க அவனுக்கு அப்படி கோபம் வந்தது.

பிஸினஸ் சம்பந்தமாக அவன் பேச வருகையில் அங்கே அவர் பேசியதை கேட்டு மனம் பதைத்து போனான்.

“ப்பா… என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்றவனது குரலில் திகைத்து போய் அவனை பார்த்தார்.

பின்னர் அமைதியான குரலில் “ஏன் நான் என்ன பேசினேன்னு உனக்கு காதுல விழல?” என்று கேட்டார்.

“ப்பா… நீங்க என்ன செய்றீங்கனு புரிஞ்சு தான் பண்றீங்களா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் கண்ணன்.

“ஆமா… புரிஞ்சு தான் பண்றேன். நீயும், அவளும் அந்த அட்ரஸ் இல்லாதவனோட போய் உறவாடிட்டு இருப்பீங்க? அதை நான் பார்த்திட்டு அமைதியா இருக்கணுமா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

“ப்பா…  நான் நீங்க திருந்திட்டீங்கனு நினைச்சேன். அவனுக்கு ஏதாவது ஆனா உங்க மக எப்படி சந்தோஷமா இருப்பா?” என்றவன் கோபமாய் கேட்டான்.

“டேய் என்னை புரிஞ்சுக்கோடா. நான் நிஜமா அவங்க கிட்ட ஆக்ட் பண்ணிட்டு இருக்கேன்டா. ஒரு சில டௌட்ஸ் எனக்கும் இருக்கு. அவளை எப்படி சந்தோஷமா வச்சிக்கணும்னு எனக்கு தெரியும்டா” என்று மமதையான குரலில் கூறினார்.

“ப்பா… அவ சந்தோஷமே ஓவியன் தான்”

“சரிடா கண்ணா. இப்போ அதுக்கென்ன?” என்று கேட்டவரை கொலைவெறியாய் முறைத்தான்.

“யார் புரியாம பேசுறாங்க? உங்களுக்கு தான் புரியல”

“என் மகளுக்கு எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்” என்றவர்‌ பேச சட்டென்று அவனுக்கு நித்திலா ஞாபகம் வந்தது.

“ஷிட்” என்று தலையில் அடித்துக் கொண்டவன் “நீ மனுஷன் தானா? பெத்த மகளையே கொல்ல பார்க்கறியே?” என்று ஆத்திரத்துடன் கத்தியவன் நித்திலாவுக்கு போன் செய்தான். ஆனால் அவனது நேரமோ என்னமோ அவள் போனை எடுக்கவில்லை.

“ஏய்… என்ன‌ சொல்ற? நித்திலா எங்கிருக்கா?”

“அதை பத்தி உனக்கென்ன கவலை? அதான் அவனை கொலை பண்ண பிளான் போட்டல்ல? அப்புறம் என்ன?” என்றவன் இருவருக்கும் தொடர்ந்து மாறி மாறி முயன்றுக் கொண்டிருந்தான்.

ஆனால் இருவரும் எடுக்கவில்லை. இதற்கிடையில் விஷாலிடம் இருந்து அவனுக்கு போன் வந்தது.

“கண்ணா நீ ஓவியன் கிட்ட பேசினியா? நான் பேச பேச கட் ஆயிடுச்சு. திரும்ப போன்‌ பண்ணா லைன் போக மாட்டேங்குது” என்று பதறிய குரலில் கூறினான்.

“நீ எதுக்குடா அவனுக்கு போன் போட்ட?”

“அம்மாவும், அப்பாவும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அம்மா ஓவியனை போட்டு தள்ளணும்னு பேசிட்டு இருந்தாங்க”

“விஷால்”

“ப்ளீஸ்… அவங்களுக்கு ஃபர்ஸ்ட் கால் பண்ணு. எனக்கு நியூஸ் கேட்டதுல இருந்து நிம்மதியா இருக்க முடியல”

“உன்னை எப்படி நான் நம்பறது?”

“கண்ணா எனக்கு அவனை பிடிக்காது தான். அதுக்காக நான் கொலை பண்ற‌ அளவுக்கு நினைக்கிற ஆளு இல்லடா” என்று வருத்தமான குரலில் கூறினான்.

அதற்குள் விஷாலுக்கு ஓவியனின் செல்லில் இருந்து கால் வந்தது.

“ஹேய்… கண்ணா இரு ஓவியன் கூப்பிடுறான்” என்று கட் செய்ய போக “காலை கான்ஃபிரன்ஸ்ல போடு” என்று சொல்ல அவன் சொன்னதை செயல்படுத்தியவன்

“ஹலோ”

“சார் நீங்க விஷாலா?”

“சொல்லுங்க சார். நீங்க யாரு? ஓவியன் நம்பர்ல இருந்து கூப்பிட்டு இருக்கீங்க? அவன் நல்லாருக்கான்ல?” என்று பதட்டத்துடன் கூறினான்.

“சார் அவர் வந்த கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. போன் தனியா கீழே விழுந்து கிடந்ததால அதை பார்த்து உங்களுக்கு கூப்பிட்டேன்”

“நீங்க எங்க இருக்கீங்க சார்?” என்று அவர் இடத்தை சொல்ல இருவரும் பதறியடித்துச் சென்றார்கள்.

அவன்‌ ஒரு பக்கம் மயங்கியிருக்க, நித்திலா ஒரு இடத்தில் மயங்கியிருக்க இருவரையும் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு தர்மராஜும் அவன் பின்னோடே வந்தார். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஓய்ந்து போனார்கள்.

நேராக தர்மராஜிடம் வந்த கண்ணன் “நீங்க எதுக்கு இங்க இருக்கறீங்க? கிளம்புங்க”

“நான் ரெண்டு பேரையும் பார்த்துட்டு போயிடறேன் கண்ணா”

“எதுக்கு மிச்ச மீதி இருக்க அவங்களோட உயிரை எடுக்கறதுக்கா? கிளம்புங்க” என்று கத்தினான்.

“நான் குட்டிமாவை மட்டுமாவது பார்த்துட்டு போயிடறேன். ப்ளீஸ்டா” என்று கெஞ்சினார்.

“வேண்டாம். நீங்க யாரையும் பார்க்க வேண்டாம்” என்று அவரை துரத்த அப்போதும் அவர் போகாமல் அங்கேயே இருந்தார்.

“கண்ணா எதுக்கு யாருனே தெரியாதவங்க கிட்ட பேசற? நீ இங்க வா” என்று தாத்தா அவனை அழைத்தார். அதன் பிறகு அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அண்ணாமலை தர்மராஜிடம் பேசியதை முழுவதுமாக நிறுத்தி விட்டார். அதற்கு பிறகு அவர் இன்னமும் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

சிறிது நேரத்தில் கண்ணன் தனது அம்மாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவரும் பதறியடித்து ஓடி வந்தார். அவருடன் மீனாட்சியும் வந்தார்.

“ஓ மை காட்…  இவரை எப்படி நான் மறந்தேன்?” என்றவனுக்கு அடுத்து என்ன ஆகுமோ என்று மனது அடித்துக் கொண்டது. 

“தம்பி என் பையன் எப்படி இருக்கான்? என்னாச்சு அவனுக்கு? நல்லா தானே போனான்? அவன் இல்லாம நான் எப்படி இருப்பேன்? சொல்லு தம்பி” என்று அவனை உலுக்க பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.

“ஆன்ட்டி அவனுக்கு ஒன்னும் இல்ல” என்று அவனுக்கு பக்கத்தில் இருந்த விஷால் பதில் கூறினான்.

ஓவியனை அப்போது அறைக்குள் மாற்றி இருந்தார்கள்.

 நித்திலாவிற்கு அதிர்ச்சியில் வந்த மயக்கம் ஆதலால் அவளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளுக்கு அங்கங்கே காயங்கள் இருந்தது. 

ஓவியனுக்கு வலது தோள், இடது முழங்கால் மற்றும் உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டு காயம் இருந்தது. மருத்துவர் வலது தோள் மற்றும் கால்களில் அவனுக்கு கட்டு போட்டிருந்தார்.

மருத்துவரை பார்க்க கண்ணனுடன் அண்ணாமலையும் சென்றார். 

“டாக்டர் அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?” என்று அண்ணாமலை விசாரித்தார்.

“டோன்ட் ஒர்ரி சார். அந்த பொண்ணுக்கு சின்ன மயக்கம் தான். சரி ஆயிடும். அவருக்கு முழங்கால்லயும் தோள்பட்டைலயும் அடிப்பட்டிருக்கு. அவரு ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது வரும். மத்தபடி ஹீ ஈஸ் ஆல் ரைட். நீங்க ஏதும் ஒர்ரி பண்ணிக்காதீங்க” என்று ஆறுதல் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அவர்கள் வெளியே வந்த போது ரத்னத்தை மீனாட்சி பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தார்.

“என் பையனை என்னடா பண்ண? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா நீ பெத்த புள்ளையவே கொல்ல ட்ரை பண்ணுவியாடா? நாங்கதான் நீ வேணாம்னு ஒதுங்கி தானே இருக்கிறோம். நாங்க வாழ்றது கூட உனக்கு பிடிக்கலையா?” என்று அவரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த கேள்வியில் அங்கிருந்த அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.

“ஏம்மா நீ என்ன பேசற? ஓவியன் ரத்னத்தோட பையனா?” என்று அண்ணாமலை கேட்டார்.

“ஆமா சார். இவனை நம்பி வந்ததுக்கு எங்களுக்கு அவமானம் தான் மிச்சம். இந்த ஆளோட நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்” என்றவர் “டேய் இப்போ மட்டும் அவன் எழுந்திரிச்சு வரல உன்னை என்ன பண்ணுவேனு தெரியாது” என்று கதறியழுதார்.

ஓவியனை நினைத்து அனைவரும் சமைந்து நின்றார்கள். அதிலும் தர்மராஜ் உச்சக்கட்ட அதிர்ச்சியில் நின்றார். எத்தனை நாட்கள் ரத்னம் இருக்கும் போதே தர்மராஜ் அவனை அவமானப்படுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அதை நினைத்து எவ்வளவு துடித்திருப்பான்?  

அதை விட அவன் மருத்துவமனையில் இருந்த போது ரத்னத்திடம் நடந்துக் கொண்டது‌. இப்போது தான்‌ அவருக்கு புரிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு நொடியும் அவனை எவ்வளவு கீழாக நினைத்தார்? ஆனால் அவன் அவரது மிக நெருக்கமான நண்பரான ரத்னத்தின் பையனா? இருவரும் ஒரு நொடி கூட அப்படி காட்டிக் கொள்ளவில்லையே? கடவுளே நான் என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று துடித்து போனார்.

அவருக்கு அன்பான ஒரு குடும்பம் என்று நினைத்திருக்க, இவரோ அவர்கள் குடும்பத்தை ஏமாற்றிவிட்டு இங்கே சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் அவ்வளவு கண்டித்தும் தான் செய்வதே சரி என்று இருந்தார்.

ஆனால் இப்போது ரத்னம் குடும்பத்தின் கோரமுகம், அதற்குத் தானும் துணை நின்றது எனது தன்னை மிக இழிவாக உணர்ந்தார். அதுவும் ரத்னமே கொலை‌ முயற்சியில் ஈடுபட்டு இருந்ததை ஊகித்தவருக்கு தடுமாறியது. 

உண்மையில் அவர் இந்த விபத்தை தடுக்க தான் முயற்சித்தார். இந்த ஒரு வருடத்தில் அவர்களுடன் பழகி அவர்களின் உண்மை முகத்தை அறிந்தவருக்கு ஜீரணிக்க முடியாததாக இருந்தது.

எப்படி தடுக்க முயற்சி செய்தும் அவரால் தடுக்க முடியாமல் இருக்க ஏற்கனவே அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஆனால் இப்போது நடந்துக் கொண்டிருப்பதோ…

ஒரு பார்வையாளராக இருவரும் பேசுவதை நிலைகுத்தி போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இல்ல மீனா. நான் ஒண்ணும் பண்ணல”

“டேய் நீயும்,உன் புள்ளையும் பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டு தானே இருந்தேன்? எங்க உன் அருமை பொண்டாட்டி? அவ எதை சொன்னாலும் நீ கேட்பியாடா? ஆனா உங்கிட்ட நல்லது எதிர்பார்க்கிறது தப்பு தான். எங்கிட்டயே என் பையனை கொன்றுவேன்னு மிரட்டின இல்ல?” என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

இவர்கள் இடையில் அன்னபூரணி புகுந்து “நான் தான் ப்ளான் பண்ணேன். அதுக்கென்னங்குற?” என்று தெனாவட்டாக கேட்க ஓங்கி அறைந்தார் மீனாட்சி.

“ச்சீ… நீயும் தானே புள்ள பெத்து வச்சிருக்க? உனக்கு எப்படி கொல்ல மனசு வந்தது?”

“அவன் எங்களை கேவலமா நடத்துவான். நாங்க நிச்சயம் பண்ற அன்னைக்கே நித்திலாவை நான் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விடுவான். என் பையன் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறான். இத்தனையும் பண்ணிட்டு அவனுக்கு அப்பானு சொல்லிட்டு நித்திலாவையே வந்து பொண்ணு கேட்க சொல்லுவான். என் பையன் வாழ்க்கைய கெடுக்க நினைக்கிறவனை எந்த காலத்திலயும் நான் உயிரோட விட மாட்டேன்” 

“ஓவியனை இவரு என்னைக்காவது பையன்னு சொல்லியிருக்காரா? என்ன தெனாவட்டு இருந்தா எங்ககிட்டயே வந்து பொண்ணு கேளுங்கன்னு கெஞ்சுவான் அந்த பரதேசி. அவன் லவ் பண்றானாம். அதுவும் என் பையனுக்கு பண்ண நிச்சயத்தை கேன்சல் பண்ணிட்டு வந்து பொண்ணு கேட்கணுமா?”

“காசுக்கு ஒண்ட வந்த பிடாரி நீ? ஏதோ அத்தை மாமா சப்போர்ட்டு இருக்கறதால பிழைச்சிட்டு இருக்க? நீ என்னை வந்து கேள்வி கேட்பியோ? இப்போ மட்டும் இல்ல. ஒரு வருஷம் முன்னாடியே ப்ளான் பண்ணேன். என்ன தைரியம் இருந்தா எங்ககிட்டயே சொத்தை கேட்பான்” என்று ஆக்ரோஷமாக ஒட்டுமொத்த வன்மத்தையும் கக்கினார் அன்னபூரணி.

அன்னபூரணியின் யாரும் காணாத இன்னொரு முகம் அனைவரையும் அச்சுறுத்தியது. இவர்களிடம் ஓவியனின் குடும்பம் என்ன பாடுபட்டு இருக்கும் என மனம் பதறியது.

அந்த பகுதிக்குள் வந்த நர்ஸ் ஒருவர் இவர்களின் சண்டையை பார்த்து விட்டு “இதென்ன சந்தை கடையா? இப்படி கத்திட்டு இருக்கீங்க? அமைதியா இருக்கற மாதிரி இருந்தா இருங்க. இல்லனா வெளிய போங்க. இது ஹாஸ்பிடல். பேஷன்ட்ஸை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று சொல்ல அமைதியாகினர்.

மீனாட்சியை சீதா தான் சமாதானம் செய்தார். அவருக்கு அருகிலேயே இருக்க வைத்தார்.

சிறிது நேரம் கழித்து நித்திலா கண் விழித்தாள். கண்விழித்து ஓவியனை தான் தேடினாள். கடைசியாக நடந்தது ஞாபகம் வந்து அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

“குட்டிம்மா… ரிலாக்ஸ்டா. ஒண்ணும் இல்ல”

“அண்ணா… ஓவியன்” என்று சொல்லும் போதே அவள் உடல் நடுங்கியது.

“ஒண்ணுமில்ல டா.  ஓவியன் நல்லா இருக்கான். அவ்ளோ தான். நீ தூங்கு” என்று அவளை படுக்க வைத்தான். அவளுக்கு கை,கால்களில் ஆங்காங்கே கட்டு போடப்பட்டிருந்தது.

“அண்ணா… அவரை பார்த்திட்டு வந்திடலாம்ணா” என்றவள் கூற அதற்கு மேல் அவனால் தட்ட முடியவில்லை.

கண்ணன் நித்திலாவை ஓவியனின் அறைக்கு நர்ஸின்‌ உதவியுடன் அழைத்துச் செல்ல அங்கே ஓவியன் மயக்க மருந்து உதவியுடன் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவள் “ஓவியன்” என்று கதறியழுதாள். அதற்கு பிறகு அவள் ஓவியனை விட்டு நகரவே இல்லை. தனது உடல்நிலையும் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்தாள்.

கண்ணன் நர்ஸிடம் சொல்லி அவளுக்கு தனியாக பெட் அரேன்ஜ் செய்தான். 

ஓவியன் கண் விழித்தவுடன் அவன் அருகில் நித்திலா இருந்தாள்.

அவளை பார்த்து புன்னகைக்க முயன்றவன் தோற்று “சாரி நித்திலா. என்னால உனக்கும் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு” என்று வருத்தமான குரலில் கூறினான்.

“நீங்க எதுவும் பேசாதீங்க” என்றவள் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!