ஒளி 19

 

மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஓவியன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு விபத்து நடக்கும் முன் வந்த போன் கால் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு யோசனையில் இருந்தான்.

நித்திலா அவனை பார்த்துக்கொள்ள தினமும் அவன் வீட்டிற்கு வந்தாள். அவனை இனி எங்கேயும் தனியே விட மனதில்லை. ஓவியனுக்கு நித்திலாவும் கண்ணனும் உறுதுணையாக இருந்தார்கள். அதுவும் தன் அப்பாவே… என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

ரத்னம் தான் ஓவியனின் அப்பா என்பது அவளால் நம்ப முடியவில்லை. எந்நேரமும் ஓவியன் ஏதோ சிந்தனையில் இருப்பது வேறு அவளை பயமுறுத்தியது.

“ஓவியன்”

“நீ எதுக்கு வந்த நிலா? உனக்கே இன்னும் உடம்பு சரியாகல. இதுல நீ என்னைய வேற பார்த்துக்குறேனு வர. ரெஸ்ட் எடுடா” என்று சொன்னான்.

“எடுக்கலாம் எடுக்கலாம்” என்றவள் அவனுக்கு இட்லி எடுத்து வந்து ஊட்டி விட்டாள்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஓவியனுடைய பாட்டி உள்ளே வந்தார்.

“ஓவியன்”

“சொல்லுங்க பாட்டிமா”

“நீ நம்ம வீட்டுக்கே வந்துடுடா. ஏன் டா வீணா கஷ்டப்படுற?”

“ஏன் பாட்டி அங்க வந்து உங்க பையன் என்னை கொல்றதுக்கா? அந்த ஆள் சொத்தை நான் திருடிட்டேனு”

“ஓவியன் அது உன் பேர்ல இருக்கற சொத்து”

“நான் தான் உங்க சொந்தமே வேண்டாம்னு சொல்றேன் இல்ல. இதுவரை நாங்க உங்க கூட இருந்ததும் போதும் அனுபவிச்சதும் போதும்”

“ஓவியன் உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்கா?” என்று தழுதழுப்பான குரலில் கேட்டார்.

அந்த குரல் அவனை ஏதோ செய்ய தடுமாறினான்.

“பாட்டி ஏன் இப்படி ஒரு பையனை பெத்தீங்க? அப்படி இந்தாளு பத்தி தெரிஞ்சு பிரிஞ்சு போக ட்ரை பண்ணியும் எங்களை போகவிடலை. நான் இதுவரையும் இழந்ததெல்லாம் போதும். நான் இவளையும் இழக்க தயாரா இல்லை. எனக்கு அந்த ஒரு போன் கால் மட்டும் வரலைன்னா” என்றவன் நடுக்கத்துடன் அவளுடைய கையை பிடித்துக் கொண்டான்.

“ஓவியன் நம்ம நல்லா இருக்கோம்ல… ஏன் தேவையில்லாம குழப்பிக்கிறீங்க? பாட்டிமா, தாத்தாவை நீங்க தானே பார்த்துக்கணும் ஓவியன்” என்று நித்திலா எடுத்துச் சொல்ல ஓவியன் அமைதியானான்.

“நல்லா சொல்லுமா அவனுக்கு. அங்க அவனுக்கு சொந்தமா எத்தனை கோடி சொத்து இருக்குது? ஆனா இவன் இங்க யாரும் இல்லாத மாதிரி கஷ்டப்படுறான்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

ஓவியன் அதைப் பற்றி பேச பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு சிறு வயதில் இருந்து நடந்தது ஞாபகம் வர நித்திலாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

மீனாட்சியும், ரத்னமும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். ஆனாலும் இருவரும் ஈருடல் ஓருயிராய் அவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தனர்.

ஓவியனது பத்து வயது வரையுமே அவர்களுக்கு வாழ்க்கை சுமூகமாக சென்றது. எப்போதும் பிஸினஸ் என்று வெளியில் போனால் அவருடைய வேலையை பொறுத்து நாள் கணக்கோ, மாத கணக்கோ ஆகும். அதனால் அதை மீனாட்சி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

ரத்னம் குடும்பத்தின் தொழிலும் க்ரானைட் சம்பந்தப்பட்டது தான். அது போக கட்டிட தொழில் சம்பந்தமாக நிறைய தொழில்கள் செய்தனர். அதுவே அவர்களது பெரிய சாம்ராஜ்யம் போல இருந்தது.

பிஸினஸ் வேலையாக சென்றவருக்கு அவருடன் வேலை செய்ய பிஏவாக அன்னபூரணி வந்தாள்.

அவர்களது சொத்துக்களை பார்த்து ரத்னத்தின்‌ மேல் காதல்‌ வந்தது. ரத்தினத்தின் முன்னே ரொம்பவும் நல்லவள் போல நடிப்பாள். 

முதலில் தான் காதலிக்க ஆரம்பித்தவள் பின்னாளில் அவரையும் காதலிக்க வைத்தாள்.

பிஸினஸ் என்று வெளியூர் சென்றாலே இருவருக்கும் கொண்டாட்டம் தான். ரத்னம் வெளியூரில் கூத்தடிக்க, மீனாட்சியோ அவரது நினைவில் ஏங்கி நின்றாள்.

ஒரு முறை ஓவியனும், மீனாட்சியும் வெளியூர் செல்லும்போது ரத்னம் குடும்பமாக அவள் கண்ணில் பட்டான்.

அவன் கையில் வைத்திருந்த குழந்தைக்கு ஓவியனை விட ஒரு வயது குறைவாக இருக்கும். அவ்வளவு தான்.

ரத்னத்தை பார்த்ததும் ஓவியன் “அப்பா” என்று அவளது கைகளில் இருந்து நழுவி ரத்னத்திடம் வந்தான். ரத்னம் ஓவியனை பார்த்து திடுக்கிட்டவன் சுற்றுப்புறத்தை பார்வையிட அங்கே மீனாட்சி தென்பட்டாள். 

அவரைப் பார்த்து அதிர்ந்து நின்றவள் ஓவியனை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள். 

அதன் பின் வந்த நாட்களில் இருவருக்கும் பெரும் சண்டை வந்தது.

மீனாட்சியை பார்த்த அன்னபூரணிக்கும் அதிர்ச்சி தான். ஆனாலும் அவர்களை தப்பானவர்களாக அவர்களிடம் சித்தரித்தே ரத்னத்தை அவள் வழிக்கு கொண்டு வந்து விட்டாள்.

முதலில் சில நாட்கள் மீனாட்சியை சமாதானம் செய்ய முயன்றான் ரத்னம். ஆனால் அதை மீனாட்சி சட்டை செய்யவில்லை.

மீனாட்சி இதை பற்றி யோசித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஓவியனை கூட அவரது அருகில் நெருங்க விடவில்லை. தனது அன்பில் கிடைத்த ஏமாற்றத்தில் பித்து பிடித்தவர் போலானார்.

மருத்துவரிடம் காண்பித்த போது ரத்னம் தான் அதற்கான மருந்து என்றனர். சின்னப் பையனான ஓவியன் அவரை பார்க்கும் போதெல்லாம் கெஞ்சினான்.

“ப்பா… ப்ளீஸ்ப்பா… அம்மாவை பார்க்க வாங்கப்பா… நாம சேர்ந்து இருக்கலாம் பா… நீங்க வாங்கப்பா” என்று அந்த பிஞ்சு ஏங்கி அழுத போது கூட அவனை ரத்னம் கண்டு கொள்ளவில்லை.

அதற்கு தகுந்தாற் போல் அங்கே பூரணி ரத்னத்தை ஆட்டி வைத்தாள்.

நடந்ததெல்லாம் ஓவியனின் மனதை இறுக்கியது. அப்போதில் இருந்தே அவன் மிகவும் அமைதியானான்.

ரத்னத்தின் அம்மா, அப்பா அவனை மிகவும் பாசமாக பார்த்துக் கொண்டனர். ஆனாலும் கூட அவன் தனக்குள் ஒடுங்கி போனான். தேவையின்றி ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து வராது.

மீனாட்சியை மீட்க அவன் மிகவும் போராடினான். அவரும் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.

ஆனாலும் ஓவியனது செய்கைகள் ரத்னத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்ததில் அவர் ஓவியனை அறவே வெறுத்தார்.

அவனை எப்போதும் கண்டு கொண்டதில்லை. அவனது தாத்தா, பாட்டியின் பாசத்தில் தான் அவன் கொஞ்சம் உயிர்ப்புடன் இருந்தான்.

ஆனால் நாளாக நாளாக ஓவியனுக்கு அவர்களின் நிழலில் வாழ பிடிக்கவில்லை. ரத்னம் செய்து வைத்துச் சென்றது அவன் மனதில் ஆழ பதிந்து விட்டது.

அதனால் முற்றிலும் தனது அடையாளத்தை துறக்க எண்ணினான். கல்லூரியில் கண்ணனின் நட்பும் கிடைக்க அது நித்திலாவின் குடும்பத்தோடு பழகும் வாய்ப்பாகவும் அவனுக்கு அமைந்தது.

முதலில் கல்லூரி செல்லும் போது கண்ணனின் கடைகளுக்குச் சென்றவன் அங்கு பகுதி நேரமாக வேலை செய்து தொழிலை கற்றுக் கொண்டான். 

அண்ணாமலைக்கு சின்னப் பையன் பொறுப்பாக இருந்தது பார்த்து அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனாலேயே கண்ணனை அவனுடன் நட்புடன் பழக ஊக்கினார்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டு  அவர்களுடன் இருந்தாலும் அவன் தேவைக்கு மேல் பேசியதில்லை. 

ஆனால் இங்கே ரத்னம் தர்மராஜின் நண்பராக இருப்பார் என்பது ஓவியன் எதிர்பாராதது. ஆனாலும் கூட எதையும் காட்டிக் கொள்ளாமல் தர்மராஜின் அலுவலகத்தில் பழகினான்.

தர்மராஜ் முதலில் ஓவியனிடம் நல்லபடியாக தான் பழகினார். அவனுக்கும் அவருக்கும் இடையில் நல்ல நட்புறவு கூட இருந்தது. 

ஆனால் எப்போது பூரணியின் கண்களில் அவன் பட்டானோ அப்போதில் இருந்து அவனுக்கு கெட்ட காலம் ஆரம்பம் ஆகியது.

முதலில் பூரணியும் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு உறுத்தலில் அவனை பற்றி விசாரிக்க ஆடி போய் விட்டார். இவனை எப்படியாவது இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று விரும்பியவர் தர்மராஜின் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார்.

இவரது ஓதலில் தர்மராஜ் கொஞ்சம் கொஞ்சமாக ஓவியனுக்கு தொல்லை கொடுத்தார். ஆனால் நித்திலாவை காப்பாற்றி கூட்டிச் சென்ற அன்று அவனது ஒழுக்கத்தை பற்றி பேச அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

ரத்னத்தின் செயல்களால் மனம் வெந்து இருந்தவன் ஒழுக்கத்தை தனது உயிரை போல மதித்தான். அந்த ஒழுக்கத்தை அவர் கேவலமாக பேசுகையில் அவர் அப்படி நடந்துக் கொள்வார் என எதிர்பார்க்காதவன் அவரது நடத்தையில் அவனுக்கு திரும்ப பதில் பேச வேண்டும், தடுக்க வேண்டும் என்று‌ கூட தோன்றவில்லை.

ஏனெனில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட தந்தை மகனை போல பழகினர். அவர்களுக்கிடையே கண்ணுக்கு தெரியாத பாசம் இருந்தது. அப்படிப்பட்டவர் தன்னை அடித்து கேவலமாக பேசியது ஆறாத வடுவாக அவன்‌ மனதில் பதிந்தது.

ஆனால் நித்திலாவின் குடும்பம் அவனை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டதில் அவன் வீழ்ந்து போனான். தாத்தா, பாட்டியில் இருந்து தர்மராஜின் தம்பி குடும்பம் வரை அவனிடம் அவ்வளவு பாச மழை பொழிந்தனர்.

விபத்துக்கு பிறகு கண்ணனும், நித்திலாவும் ஓவியனுக்கு இன்றியமையாதவர்கள் ஆனார்கள். அவர்கள் இன்றி அவனால் இருக்க முடியும் என்று தோன்றியதில்லை. அதுவும் நித்திலாவின் மூலமாக அவன் தாயின்‌ பாசத்தை உணர்ந்தான். 

இடையில் தர்மராஜ் செய்த செயலால் அவன் கொடுத்த முத்தம் அவனை ரொம்பவே தொந்தரவு செய்தது. எவ்வளவு முறை முயற்சித்தும் திரும்ப அந்த முத்தமே ஞாபகம் வர திணறி போனான்.

அடுத்து அந்த வீடியோ… ஏற்கனவே அவள்‌ மேல் பித்தாய் இருந்தவன் இப்போது எந்நேரமும் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.

எப்போது அவன் நித்திலாவை காப்பாற்றினானோ அப்போதே அவள் மேல் இனம் புரியாத பாசம் வந்தது. அதுவும் நிச்சயப் புடவை எடுக்க அவனும் சென்றதில் அவர்கள் வீடியோ வைரல் ஆனதில் ஏற்கனவே அவன்‌ வானில் மிதந்துக் கொண்டிருக்க அவள் புடவையை வைத்து பார்த்ததில் அவனது மனம் அங்கேயே அவளை மனைவியாக வரித்துக் கொண்டது.

அதற்கு பின் நடந்த நிச்சயத்தில் அவனது மனம் தவித்தாலும் அங்கு நடந்த சம்பவத்தில் அவனுக்குள் இருந்த காதலன் வந்து சவால் விட்டான்.

அவளுக்கு நிச்சயம் நடந்த வேளையில் அவன் கண்களில் தெரிந்த உணர்ச்சி பெருக்கில் நித்திலா அவளையும் அறியாமல் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். அவன்‌ தனக்காக சண்டையிட்டு தன்னை காத்த போதே அவன்‌ மேல் அன்பு சுரந்தது. 

தர்மராஜ் அவளுக்கு கொடுத்த டார்ச்சரில் நொந்து போய் இருந்தவளுக்கு அவன் கொடுத்த முத்தம் கிளர்ச்சியை கொடுத்தது. அந்த வீடியோ… யாரை பார்த்தாலும் உங்க ஹஸ்பென்ட் ரொம்ப ரொமான்ட்டிக், நீங்க ரொம்ப லக்கி என்று சொல்ல அவளுக்கு அது ஆழமாய் பதிந்து விட்டது.

ஆனால் இப்போது அவன்‌ பார்த்த பார்வை ‘நீ என்னிடம் வந்து விடேன்’ என்று கேட்பதை போலிருந்தது. அந்த பார்வையை அவளால் இன்றளவும் மறக்க முடியவில்லை. அந்த பார்வை அவளுக்கானவன் ஓவியன் தான்‌ என்பதை அவளின் உள்ளுணர்வு சொல்லியது. ஏற்கனவே உயிராய் இருந்தவள்‌ இப்போது உணர்வோடு கலந்து விட்டாள்.

அதற்கு பின் நடந்த எந்த சம்பவத்திலும் அவனை தனியே விட்டதில்லை.

இந்த பிரச்சனையில் மண்டை காய்ந்தது என்னவோ அன்னபூரணி தான். அவர் விஷால் மூலம் பொதுவாக விசாரித்து அறிந்துக் கொண்டவர் ஒருவனை நியமித்து வேலை வாங்கினார். ஆனால் அவருக்கே அது பிரச்சனையாக முடிந்தது.

உண்மையில் ஒவ்வொரு முறையும் அவர் பிரிக்க சதி செய்ய அதுவோ அவரை உயிராக இணைத்தது.

இவனின் சவாலுக்கு பயந்து தான் ரத்னம் வீட்டினர் ஓவியனுடன் பேச வந்தனர். ஆனால் அவன் அவர்களை வேண்டுமென்றே வீட்டில் காக்க வைத்தான். 

அன்று அவர்கள் சென்றதும் முன்பு நடந்த அனைத்தும் அவனுக்கு ஞாபகம் வர அவன் மிகவும் மனமுடைந்து போனான். அந்த நேரம் நித்திலா வீட்டுக்கு வந்த போது அவன் தன்னையும் மீறி தனது காயங்களை வெளியிட்டான்.

அதனை மறக்க வைக்க ஓவியனை அவர்கள் தனது வீட்டுக்கு கூட்டிச் சென்ற போது அங்கு நித்திலாவின் அம்மா அவனை குடும்பத்தை வைத்து கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே ரத்னத்தின் செயல்களால் மன உளைச்சலுக்கு ஆளானவன் சீதாவும் அதே கேள்வியை கேட்டதில் மனம் உடைந்து போனான். 

அந்தக் கேள்வி தந்த தாக்கத்தில் யோசிக்காமல் ரத்னம் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பூரணி அவனை மிகவும் கேவலப்படுத்தினார்.

“நீ எதுக்கு இங்க வந்திருக்க?” என்று‌ ரத்னம் கேட்டார்.

“என்னோட வந்து நித்திலா வீட்டுல பொண்ணு கேட்கணும்” என அவன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“அடிங்… ராஸ்கல்… எழுந்திரிடா முதல்ல” என்று பூரணி ஆத்திரமாக கத்தினார்.

“யார் வீட்டுக்கு வந்து என்ன பேசற?”

“இவரு என் அப்பா தானே? அப்பா வீட்டுக்கு வந்து தான் பேசறேன்”

“இத்தனை நாளா இல்லாத அப்பா இப்போ எங்கேருந்து வந்தாரு?அவர் எதுக்குடா உனக்கு வந்து பேசணும்? அப்போ என் பையன் கல்யாணம் என்னாகிறது?”

“அதைப்பத்தி எனக்கென்ன கவலை?”

“டேய்… ராஸ்கல்… ஏதோ போனா போகுதுன்னு அமைதியா இருந்தா என்னடா ஓவரா பேசுற?”

“இங்க பாருங்க… அவரு இத்தனை நாளா என்னோட பொறுப்பை தட்டி கழிச்சாரு. இப்போ வந்து அதை பண்ண‌ சொல்றேன்”

“எப்படிடா பணம்னா அம்மாவும், பையனும் அப்படியே மாறிடுறீங்க?” என்று ஆச்சரிய குரலில் கேட்டார்.

“அதைப் பத்தி நீ பேசாத. ஒண்ணுமே இல்லாதவனாட்டம் இவ்ளோ நாளா நடிச்சிட்டு இப்போ தர்மராஜோட சொத்தையும் அடிக்கலாம்னு வந்தியோ?”

“அதெல்லாம் உன் வேலை. எனக்கெதுக்கு அந்த பழக்கம்?”

“இங்க பாரு. அவரு எங்கேயும் வர மாட்டாரு. அதே மாதிரி உன் அப்பானும் சொல்ல மாட்டாரு. இவ்ளோ நாளாக என்ன‌ அனுபவிச்சியோ அதையே இனிமேலும் அனுபவி.‌ உனக்கு தான் யார் அடையாளமும் வேணாம்ல. அப்புறம் என்ன? இப்படியே அநாதை நாயாவே இரு”

“ஏய்” என்று அவரின்‌ கழுத்தை பிடித்தான்.

“அடச்சீ… கை எடு. உன்னை என்னைக்கும் நிம்மதியா வாழ விடமாட்டேன். நீயும், உன் அம்மாவும் நடந்ததை நினைச்சு நினைச்சு சாகணும். நித்திலா என் பையனுக்கு தான். அதையும் மீறி நீ மாத்த நினைச்ச உன்னை உயிரோட விட மாட்டேன். அப்படியே இவரை எங்கயாவது அப்பான்னு சொல்ல நினைச்சு உங்கம்மா கேரக்டரை நாறடிச்சுவேன்” என்றவர் சொல்ல அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்கவில்லை அவனுக்கு.

தன் குடும்பம் சூனியக்காரியின் கையில் மாட்டியதை எண்ணி அதை மாற்ற இயலாத தன்‌நிலையை எண்ணி கையாலாகாத்தனத்துடன் அங்கிருந்து உடைந்த மனதுடன் வெளியேறினான்.

அவர் பேசிய பேச்சும், அவனது காதலும் அவனை நிலைகுலைய வைத்தது.இத்தனை வயதிற்கு பின்பும் தனது அம்மாவை அசிங்கப்படுத்துவேன் என்றவரை கொன்று போடும் வெறி வந்தது.‌ஆனால் அந்த ஈனப் பிறவியின் மேல் கை வைக்க பிடிக்காமல் வந்து விட்டான்.

அவனது காதல்… அதனை மண்ணோடு‌ மண்ணாக்க துணிந்து விட்டான். ஆனால் இப்படி ஒரு பிறவியிடம்‌ எப்படி தனது உயிரை கொடுக்க துணிவான்?

அனைத்தையும் நினைத்தவன் தடுமாறி போய் வெளியே வந்தான். அப்படி வந்தவனை தான் கண்ணன் பார்த்தான்.

கண்ணன் அவனை தொடர்ந்து வந்தாலும் அவனால் முழுவதுமாக அறிய‌ முடியவில்லை. அவன் வெளியே வரும் வரை பொறுத்திருந்தவன் அவனை ஆறுதலாக தேற்றி அவன் கூடவே இருந்தான்.

ஓவியன் ரத்னத்துடைய சொத்தை கேட்டதில் அதில் பதறி போன பூரணி தனக்கே அவ்வளவு சொத்தும் வர வேண்டும் என்று ஓவியனை கொல்ல ப்ளான் போட்டார். 

ஆனால் விஷயம் தெரிந்த போது ஓவியன் மிகவும் உருக்குலைந்து போனான். அவனை தர்மராஜும் சேர்ந்து கூட மீட்க முயற்சி செய்தார். என்ன அதனை வெளி உலகத்திற்கு காட்டவில்லை.

இந்த முறை நித்திலாவின் மொத்த குடும்பமே அவனுக்கு துணையாய் இருந்தது. அவன் தான் ஒரு நிலைக்கு வந்ததும் திருமணம் செய்யலாம் என நினைத்தவன் நித்திலாவிடம் சொல்ல சரி என்று ஒப்பு கொண்டாள்.

ஓவியனை பார்த்த ரத்னம் எங்கே கொலை முயற்சி என கம்ப்ளைண்ட் செய்து விடுவானோ என்ற படத்தில் அந்த குடும்பம் அடக்கி வாசித்தது.

இதற்கு மேலும் பொறுமையாய் இருந்தால் சரிவராது என்று நினைத்தவர்கள் அடுத்த கொலை முயற்சியை ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையில் ரத்னத்தை போன் செய்ய சொன்ன பூரணி மீனாட்சியிடம் மிரட்டல் விடுத்தார். அதை கேட்டுப் பதறிக் கொண்டு அங்கே வந்தார் மீனாட்சி.

எந்த உண்மை தெரிய வேண்டாம் என பூரணி நினைத்தாரோ… அந்த உண்மை அவர் மூலமாகவே தெரிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்? 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!