“கண்ணா விஷால் எங்க? அவன் ஆளையே காணோம்” என்று கண்ணனிடம் விசாரித்தான்.
“அட இவனை எப்படி மறந்தேன்? அவன் இல்லனா உங்கள சீக்கிரம் கண்டுபிடிச்சிருக்கவே முடியாது நானு. ஆனா அன்னைக்கு ஹாஸ்பிடல்ல நடந்த சண்டைக்கு அப்புறம் அவனை பார்க்கவே இல்லடா” என்று கூறினான்.
“சண்டையா? என்ன நடந்தது?” என்று அதிர்ச்சியாய் விசாரித்தான் ஓவியன்.
மீனாட்சி சண்டை போட்டது முதல் அதற்கு அன்னபூரணி பதில் சொல்லியது வரை கூறியவன் இடையில் ரத்னம் எதையும் பேசாது இருந்ததையும் சொல்லி அவரையும் திட்டித் தீர்த்தான்.
“விடுடா. அதை பத்தி எல்லாம் பேசாத. அவ ஒரு பொம்பளையா? இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கூட எங்க அம்மாவை கேவலப்படுத்துவேன்னு சொல்றா” என்றவனுக்கு சிறிது நேரம் பேச முடியவில்லை.
“கூல்டா. நடந்து முடிஞ்சதை பற்றி ஏன் பேசிட்டு இருக்க?” என்று கேட்டான்.
“ஆனா கண்ணா அன்னைக்கு நீ மட்டும் இல்லன்னா…” என்றவனுக்கு வார்த்தை தடுமாறியது.
“சியர் அப் மேன். அதெல்லாம் முடிஞ்சு போச்சு” என்று அவன் தோளைத் தட்டியவன் “சரி என்ன திடீர்னு விஷாலை கேட்கிற?” என்று கேட்டான்.
“அன்னைக்கு அவன் மட்டும் இல்லேன்னா நான் உயிரோட இருப்பேனான்னு தெரியல” என்று சொல்லியவன் விபத்தன்று நடந்ததை கூறினான்.
“ஓ மை காட் உனக்கு போன் பண்ணினானா. அவன் அன்னைக்கே இப்படி ஏதோ சொன்னான்டா. நான் அவன் மேல இருந்த கடுப்புல பிடிச்சி திட்டிட்டே தான்டா விசாரிச்சு வந்தேன்” என்றான்.
“சரி அவனுக்கு ஒரு போன் போடு”
“டேய் என்ன சொல்ற?”
“போனை போட்டு இங்க வர சொல்லு”
“சரிடா” என்றவன் விஷாலுக்கு போன் செய்து அவனை ஓவியன் வீட்டிற்கு வர சொன்னான்.
அவர்கள் வீட்டிற்கு தயங்கியபடி வந்த விஷால் வீட்டிற்கு வெளியே இருந்து போன் செய்தான்.
“சொல்லு விஷால்”
“நான் வீட்டுக்கு வெளியே இருக்கேன். என்னை எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டான்.
“வீட்டுக்குள்ள வாடா”
“நானா?!” என்று தயங்கிய குரலில் கேட்டான்.
“இவன் என்னடா இப்படி கேட்கிறான்” என்று சொல்லியவன் அவனை வெளியே வந்து கூட்டிச் சென்றான்.
“வா விஷால். ஏன் உனக்கு இவ்ளோ யோசனை இங்க வரதுக்கு?” என்று கேட்டான்.
“இல்ல கண்ணா… அது வந்து” என்றவன் திணற விஷாலை வீட்டுக்குள் பார்த்ததில் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
“என்ன தாத்தா யோசிக்கறீங்க?” என்று ஓவியன் அவரிடம் கேட்டவர் “வாப்பா” என்றதுடன் அங்கிருந்து கிளம்ப போனார்.
“ஒரு நிமிஷம் இருங்க. உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும். இவன் ஆக்ஸிடென்ட் ஆன அன்னைக்கு கால் பண்ணலேனா நான் உங்ககிட்ட இப்படி பேசிட்டிருப்பேனானு தெரியாது” என்றவன் சொல்ல நடந்ததை சொல்ல அனைவரும் அதிர்ந்தார்கள்.
“உனக்கெப்படி இந்த விஷயம் தெரியும் விஷால்?”
“அன்னைக்கு அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. தர்மராஜ் அங்கிள் கிட்ட அம்மா உங்கள ஆக்ஸிடென்ட் பண்றதுக்கு நான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இன்னையோட நீங்க குளோஸ் அப்படினு பேசிட்டு இருந்ததை அப்பா கேட்டாங்க. அன்னைக்கு வீட்ல பெரிய சண்டையா இருந்தது. எனக்கு உடனே உங்களுக்கு கூப்பிடணும்னு தோணுச்சு. கூப்பிட்டேன்” என்றான்.
“என் நம்பர் உனக்கெப்படி கிடைச்சது?”
“ஒரு நாள் கண்ணா போன்ல இருந்து எடுத்து வைச்சேன். அது இப்போ யூஸ் ஆச்சு” என்று கூறினான்.
“ஓஹோ” என்று தாடையை தடவியவன் “என்ன திடீர்னு என் மேல பாசம்?” என்று கேட்டான்.
“அது… எனக்கு உங்கள பிடிக்காது தான். ஆனா அம்மா நீங்க எனக்கு அண்ணானு சொன்னாங்க.அப்போ இன்னும் ஷாக் ஆயிடுச்சு. அந்த பாயிண்ட்க்கு மேல் எதுவும் எனக்கு யோசிக்க தோணல. நான் உங்களுக்கு கூப்பிட்டேன்” என்றான்.
“ஆனா விஷால்…” என்று ஏதோ சொல்ல வந்தவன் “ஓகே. நான் உன்னை நம்பறேன்” என்றவன் “நீ நித்திலாவை லவ் பண்ணியா?” என்று கேட்டான்.
“லவ் எல்லாம் இல்லை அண்ணா. அவளை பார்த்து பழகி இருந்ததுல எனக்கு மறுக்க தோணல”
“அப்படியா” என்று புருவம் உயர்த்தியவன் “அவ உனக்கு பிரண்டு நல்ல பழக்கமோ”
“ஆமாண்ணா”
“அப்புறம் எப்படிடா அவளை ஒரு பொறுக்கி கிட்ட விட்டுட்டு போக மனசு வந்தது?”
“ஆல்ரெடி ஆபிஸ்ல கொஞ்சம் இஷ்யூவா இருந்தது. நான் அந்த மீட்டிங் கேன்சல் பண்ணலாம்னு கூட நினைச்சேன். அம்மா தான் போனு வற்புறுத்தினாங்க. அதனால தான் வந்தேன்”
“ஒருத்தி உன்னை நம்பி வந்திருக்கிறா. அவ என்ன ஆனானு கூட உனக்கு கவலை இல்ல” என்று இறுகிய குரலில் கத்தினான்.
“அண்ணா…”
“இனிமேல் எந்த பொண்ணுகிட்டயாவது இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இல்லாம நடந்ததுனு கேள்விப்பட்டேன்”
“இல்லண்ணா… இல்லண்ணா… இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” என்று அவனது மிரட்டலான குரலில் பதறி அடித்துக் கூறினான்.
ஓவியன் ஒரு தலையசைப்புடன் அடுத்த விஷயத்திற்குச் சென்றான்.
அப்போதில் இருந்து அவர்களுக்குள் ஒரு நட்பு உண்டாகி இருந்தது.
எங்கே போவதென்றாலும் விஷாலை கூட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். இதில் அன்னபூரணிக்கு அவ்வளவு கோபம். விஷாலிடம் இப்போதெல்லாம் எரிந்து விழ ஆரம்பித்தார்.
அதே போல அன்றும் அவன் போன் செய்தான்.
“விஷால் வந்து என்னை கூட்டிட்டு போ. நான் ஆபீஸ் போகணும்”
இன்னும் அவனுக்கு கை சரியாகவில்லை. அதனால அவன் விஷாலுடனோ, கண்ணனுடனோ வெளியே செல்ல ஆரம்பித்தான்.
“இதோ வரேன் அண்ணா” என்றவன் கிளம்ப ஆரம்பித்தான்.
“எங்க கிளம்பிட்ட விஷால்?”
“ஓவியன் அண்ணாவை பார்க்க போறேன்”
“என்னடா நானும் பார்க்குறேன். ரொம்ப தான் ஓவரா பாசமழை பொழியற?”
“ம்மா அமைதியா இரு. வாயை கிளறாத”
“ஏங்க இவனை என்னன்னு கேளுங்களேன்” என்று ரத்னத்திடம் சொன்னார்.
“அங்க போனீன்னா எனக்கு போன் பண்ணு விஷால்” என்று ரத்னம் சொன்னார்.
“இதை பாருடா… என்ன திடீர் பாசம்?” என்று நக்கலாக கேட்டார்.
“பாசம் எல்லாம் இல்ல. ஆனா ஹாஸ்பிடல்ல கட்டு போட்டு அவன் படுத்திருந்ததை பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதான்” என்றவர் சொன்னார்.
“இதை பாருடா. இந்த மூஞ்சி தான் ஒரு வருஷம் முன்னாடி கத்தில குத்தலாமா? டைல்ஸ்ல ப்ராப்ளம் கொடுக்கலாமானு என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தது” என்று நக்கல் குரலில் சொல்லியவர் “நீங்க யாருகிட்டயும் பேசினீங்க… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது” என்று கேட்டார்.
“ஏய்… என்னடி நான் என்ன பண்ணிட்டேன்? மனசே எப்படியோ இருக்குடி” என்று கலங்கிய குரலில் சொன்னார்.
திரும்ப திரும்ப அவனை கொல்ல முயன்றது லேசாக உறுத்தி இருக்கும் போல!
அவர்கள் இருவரும் சண்டை போட ஆரம்பித்ததை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
“போதும்.ரெண்டு பேரும் அமைதியா இருங்க. இந்த வீட்ல நிம்மதியே இல்லை. என்னை எப்ப கொல்ல போறீங்களோனு பயம் தான் வருது”
“விஷால்” என்று இருவரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
“என்ன பார்க்கறீங்க? நடந்த உண்மையை தானே சொல்றேன். இதுக்கு மேல ஏதாவது சதி பண்ணீங்கனு தெரிஞ்சது என்னை மறந்துடுங்க” என்றவன் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தான்.
ஓவியனின் வீட்டிற்கு வந்தவனை மீனாட்சி வரவேற்றார். ஆரம்பத்தில் அவனுடன் ஒன்ற முடியவில்லை என்றாலும் அனைவரும் அவனிடம் பாசத்துடன் பழகினர்.
ஜெகநாதன், வசந்தா இருவரிடமும் பேசினான். அவர்களுக்கு விஷால் அவர்களிடம் பேசுவது மகிழ்ச்சி.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பத்தில் ஒருவராக ஆகி போனான்.
இதற்கிடையில் தர்மராஜ் ரத்னத்திடம் பேசினார்.
“ரத்னம் உன்னோட பிஸினஸ் சம்பந்தமான எல்லாம் நான் கேன்சல் பண்றேன்”
“என்ன சொல்ற தர்மா?” என்று அதிர்ச்சி ஆனார்.
“ஆமா. உன்னை மாதிரி ஒரு கொலைகாரன் பேமிலி கூட நான் டீல் வச்சுக்க விரும்பல”
“ஓ… அப்ப நீ பண்ணது? நீயும் தானே அவ கூட சேர்ந்த” என்று நக்கலாக கேட்டார்.
“ஆமாடா. தங்கச்சி தங்கச்சினு பாசமா பேசினதுக்கு என்னை தனிமரம் ஆக்கி விட்டீங்களேடா” என்று இறுகிய குரலில் கூறியவர்
“உன் பையன் எவ்ளோ நல்ல பையன் தெரியுமா? நான் அவன் மேல எவ்ளோ பாசம் வைச்சிருக்கேன் தெரியுமா? அது அத்தனையும் அன்னப்பூரணினால என்னை விட்டுப் போயிடுச்சு. ஃபர்ஸ்ட் எனக்கு புரியலடா அவன் ஏன் என்கிட்ட அவ்வளவு பாசமா பேசினான்னு. ஆனா இப்போ ஒவ்வொன்னும் யோசிக்கறப்ப அவன் உன் இடத்தில என்னைய பார்த்து இருக்கிறான். ஆனா நானே அந்த அன்பை கொன்னுட்டேன்டா. அதுவும் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கூறியது பார்த்து நான் ஆடி போயிட்டேன்டா. உங்க குடும்பமே அரக்க குடும்பம்டா. உங்க சங்காத்தமே வேண்டாம்” என்று கையெடுத்து கும்பிட்டார்.
தர்மராஜ் பேச பேச ரத்னம் உணர்வின்றி அவரை பார்த்தார்.
“அதே மாதிரி நீ எந்த விதத்திலும் என்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாத. அது பிசினஸ் ஆர் ரிலேஷன்ஷிப். எதுனாலும் நமக்குள்ள ஒன்னும் வேணாம். எனக்கு என் மக வாழ்க்கை முக்கியம். நீங்க நிம்மதியா வாழ விட மாட்டீங்க. பெத்த பையனையே கொலை பண்ண ட்ரை பண்ணும்போது என் மகளெல்லாம் எம்மாத்திரம்? சோ நீ கிளம்பு. உனக்கான டாக்குமெண்ட்ஸ் உன்னை தேடி வரும். அதுல நீ சைன் பண்ணி அனுப்பினா போதும்” என்றவர் அத்துடன் பேச்சை முடித்துக் கொள்ள ரத்னம் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பினார்.
அடுத்த ஒரு மாதத்தில் ஓவியன் ஜெகநாதனுடன் வசிக்க ஆரம்பித்தான். ஜெகநாதன் தனது சொத்து அனைத்திற்கும் வாரிசு என ஓவியனை அறிவித்தார்.
ஓவியனை அவரது தொழிற்சாலைக்கு கூட்டிச் சென்றவர் அவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
“இவன் ஓவியன். என்னோட பேரன். இனி இவன் தான் எல்லாமே பார்த்துப்பான்” என்று அறிவித்தார்.
“ஹாய் பிரண்ட்ஸ்… என்னோட சேர்ந்து நீங்களும் நம்ம உயரத்துக்கு வொர்க் பண்ணுங்க. மீதிய வொர்க்ல பார்ப்போம். தேங்க்ஸ்” என்று வெகு சாதாரணமாக முடித்துக் கொண்டான்.
மீட்டிங் முடிந்து வந்தவுடன் அனைத்து ஃபைல்களையும் பார்வையிட்டான்.
முதலில் சில மாதங்கள் அவனுக்கு கற்றலில் சென்றது. பின்னர் சிறிது சிறிதாக தனது தொழில் வெற்றி கண்டான்.
அதே சமயம் அவனது ஒரு பார்வை ரத்னத்தின் மீதும் இருந்தது.
அதனை முழுமையாய் பார்வையிட்டவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
ரத்னத்தை கம்பெனியில் இருந்து வெளியேற்ற எண்ணியவன் தனது நண்பர்கள் மூலமாக அந்த ஷேர்களை வாங்க செய்து அவர்களிடமிருந்து இவன் வாங்கினான்.
திடீரென்று கம்பெனியிலிருந்து மீட்டிங் என்று வரவும் அவர் யோசனையில் ஆழ்ந்தார். ஏனெனில் அங்கே போய் வெகு காலம் ஆகிவிட்டது. ஆனாலும் அவருக்கு உண்டான பதவி அங்கு அப்படியே இருந்தது.
இப்போது திடீரென்று ஈமெயில் வரவும் தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிக்க அவர்கள் ஏதும் சொல்லாமல் கையை விரித்தனர்.
“சரி. அங்கேயே போய் பார்த்துக் கொள்ளலாம்” என்று நிதானித்தவர் ஜெகே இண்டஸ்ட்ரீஸ்க்குச் சென்றார். அவர் சென்ற போதும் உடனே ஓவியன் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. சிறிது நேரம் காத்திருக்க வைத்து விட்டு உள்ளே கூப்பிட்டான்.
அவனைப் பார்த்ததும் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனைப் பார்த்தபடி இருந்தார்.
அவருக்கு சமீபமாக ஓவியனின் இளமை காலங்கள் ஞாபகம் வந்தது. இப்போது ஒரு விதத்தில் பார்க்க அவன் தன்னை பிரதிபலிப்பதாகவே அவருக்கு தோன்றியது. அதுவும் கூட அன்னபூரணி அன்று சண்டையில் சொல்லிய போது தான் கவனித்தார்.
அவனை அன்று கையில் வாங்கிய போது எவ்வளவு பூரித்து போனோம். ஆனால் தன்னுடைய செய்கையால் அவனை எங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டோம் என்று அவரது மனசாட்சி கேள்வி கேட்டது.
“வாங்க மிஸ்டர். ரத்னம்” என்று கம்பீரமான குரலில் கூப்பிட்டான் ஓவியன்.
“எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டார்.
“உங்கள நான் போர்ட் மெம்பர் பதவியில் இருந்து விலக்கறேன்”
“வாட். அதுக்கு உனக்கான ரைட்ஸ் யார் கொடுத்தா?”
“நல்ல கேள்வி. ஆனா யார் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க?” என்று நக்கலாக கேட்டவன் “என்னை மீறி உங்களால ஒன்னும் பண்ண முடியாது. உங்க ஷேர்ஸ் எல்லாம் என் கையில இருக்கு. இப்படியே போனீங்கன்னா கொஞ்சம் டீசண்டா போயிரும். இல்லேன்னா அதற்கான பின் விளைவுகளையும் நீங்க அனுபவிக்க வேண்டி வரும்” என்று கூறினான்.
“என்ன நேத்து முளைச்ச காளான் நீ. என்ன திமிரா பேசுற?”
“அஃப்கோர்ஸ் மிஸ்டர் ரத்னம். பட் இனி உங்களுக்கு இங்க வேலை இல்ல கிளம்புங்க” என்றான். அப்போது அங்கே ஜெகநாதன் வந்தார்.
“அப்பா இங்க என்ன நடக்குது?” என்று கேட்டார்.
“யார் சார் நீங்க? என்னை அப்பானு சொல்றீங்க?”
“ப்பா”
“போதும்டா. பணம் வேணும்னா மட்டும் தான் உனக்கு எங்க நினைப்பு வரும். நாங்க ஏன் தான் உன்னை பெத்தோம்னு நினைக்க வைச்சிட்ட? எப்படிடா உனக்கு இவனை கொல்ல மனசு வந்தது?” என்று ஆக்ரோஷமாய் கேட்டார்.
“தாத்தா டென்ஷன் ஆகாதீங்க. என்னை பொறுத்த வரையும் எனக்கு அப்பான்னு யாரும் இல்ல. அதுவும் இவரு கூட இருக்குதே… அது பொம்பள இல்ல. சூனியக்காரி தாத்தா. எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா தானே இருந்தாரு” என்று பெரும் தவிப்புடன் சொன்னவன்
“உங்களுக்கு இனி இந்த கம்பெனில வேலை இல்ல. அதே போல எதையும் காரணம் காட்டி எங்ககிட்ட கூட வந்துடுடாதீங்க” என்றவன் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்று விட்டான்.
அடுத்த ஒரு வருடத்தில் ஓவியன் நித்திலாவின் திருமணம் ஊரே வியக்கும்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு அவர்களது சொந்தங்களும்,தொழில் துறை நண்பர்களும்,அரசியல் வட்டாரங்களும் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.
அனைவரின் ஆசீர்வாதத்துடன் ஓவியன் நித்திலாவின் கழுத்தில் தாலி கட்டினான். யாரும் இல்லாமல் இருந்தவனுக்கு இப்போது அனைத்து சொந்தங்களும் சேர அவனுக்கு நெஞ்சம் நிறைந்தது. இதனை சாத்தியமாக்கிய தனது தேவதையை கண் கொட்டாமல் பார்த்தான்.
“என்ன ஓவியன் இப்படி பார்க்குறீங்க?”
“நான் பார்க்க தானே நீ மேக்கப் பண்ணி இருக்க”
“ஓவியன்” என்றவள் சிணுங்கினாள்.
“உன்னால தான் இவ்ளோ பேர் எங்கூட இருக்காங்க நிலா. நான் ஒரு காலத்துல குடும்பம்னு ஒன்றை பத்தி யோசிக்காம எவ்ளோ தப்பு பண்ணியிருக்கேனு புரியுது. தேங்க்ஸ் நிலா” என்றவன் “லவ் யூ நிலா” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
அவனது சந்தோஷமான செய்கையும், அதற்கு அவளின் நாணம் கலந்த புன்னகையும் அழகிய கவிதையை போல் இருந்தது.
ஓவியன் ஒவ்வொரு சம்பிராதயத்தையும் ரசித்து செய்தான். கண்ணன் அவனுக்கு துணை மாப்பிள்ளையாக இவனின் ஒவ்வொரு செயலையும் அவன் வம்பிழுத்துக் கொண்டு இருந்தான்.
நித்திலாவுக்கு பக்கத்தில் ஓவியனின் தங்கை இருந்தாள்.
மண்டபத்தில் நுழையும்போது ஸ்வஸ்திகா நித்திலாவுடன் வந்தாள்.
அவளது மிதமான அலங்காரத்தை பார்த்து மயங்கி போனான்.
எந்நேரமும் முகத்தில் புன்னகையும், கலகலவென்று அனைவரையும் வம்பிழுப்பதும் அவனை கவர்ந்திழுத்தது.
“டேய் மச்சான் யார்டா இந்த ஃபிகர்?”
“யாரை கேட்கற மச்சி?”
“நித்திலாவுக்கு பக்கத்தில அந்த ஆரஞ்சு கலர்”
“ஏன்டா கேட்கற?”
“அந்த பொண்ணு செம ஃபிகரா இருக்கா மச்சி. நான் ஐ லவ் யூ மச்சி. எனக்கு ஹெல்ப் பண்ணு மச்சி” என்று கேட்க ஓவியன் பல்லை கடித்தான்.
“ஏன்டா இவ்ளோ பாசமா பார்க்கற?”
“டேய் அவ என் தங்கச்சிடா. எங்கிட்டயே நீ இப்படி பேசற?” என்றவன் சொல்ல அவன் அதிர்ந்தான்.
“அதெல்லாம் தெரியுமே. அந்த பொண்ணு பேரு ஸ்வஸ்திகா தானே. எப்படியும் பிஇ முடிச்சிருப்பாங்க தானே? என்ன வாய் தான் கொஞ்சம் அதிகம்” என்று கூறியவனை வியப்பாய் பார்த்தான்.
“என்னடா பார்வை?”
“ஆனாலும் என் தங்கச்சிய பத்தி என்கிட்டயே கேட்கற பார்த்தியா” என்று கேட்டான்.
“போடா எரும. உனக்கு நான் எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன். எனக்கு இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டியா?”
“டேய் என்னாச்சு உனக்கு?”
“தெரியலடா. அவளை பார்த்ததுல இருந்து வேற எங்கேயும் ஐபால் மூவ் ஆக மாட்டேங்குது. மனசு அங்கேயே போய் நிக்குது. அங்க ஹாஸ்பிடல்ல பார்த்ததுல இருந்தே இப்படி தான் மச்சி” என புலம்பினான்.
“மச்சி லவ் பண்றியா அவளை? என்னடா சொல்ற? அவளை பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்று வியப்பாய் கேட்டான்.
“சத்தியமா இது லவ்வா? எனக்கு ஒன்னும் புரியல” என்றவனின் பார்வை அங்கே தான் சென்றது. அதை பார்த்த ஓவியனுக்கு தன்னை குறித்தே ஞாபகம் வந்தது.
“உனக்கு என் தங்கச்சியை கொடுக்கறது எனக்கு சந்தோஷம் தான்டா” என்றவன் “ஆனா அதுக்கு முன்னாடி அவளுக்கு உன்னை பிடிக்கணுமே” என்று யோசனையுடன் கூறினான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்டா” என்றவனுக்கு அவர்களின் கல்யாணம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து மணமக்களை வீட்டிற்கு கூட்டி வந்தவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர்.
அனைத்தையும் முடித்து நித்திலா ஓவியனின் அறைக்குள் வர தன் தேவதை தன் கை வளைவில் உள்ளதை நம்ப முடியாமல் திகைத்து நின்றான்.
ரத்னம் ஏதேனும் பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்த்தான். குறிப்பாக அன்னபூரணி. ஆனால் அதனை விஷால் தடுத்து விட்டான்.
ஓவியனின் திருமணத்தின் போது ரத்னத்தை பல பேர் விசாரித்தனர். அப்போது அங்கு வந்த ஜெகநாதன் “இது என் மகளோட பையன் கல்யாணம். எல்லாரும் வந்ததற்கு ரொம்ப நன்றி” என்று அவர் மைக்கில் அறிவிப்பை வெளியிட அனைவரும் அமைதியாகினர்.
ஓவியனின் திருமணத்தின் போது ரத்னத்தையும், அன்னபூரணியையும் விஷால் வெளியூர் அனுப்பி விட்டான். அன்னபூரணி தேள் என்னும் கொடுக்கை குறைத்த பாட்டை காணவில்லை. அவர் எவ்வளவு சொன்னாலும் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு மூளையும் இல்லை.
ஓவியன் எல்லாவற்றையும் அனுபவிக்கிறான் என்றே பொறாமையில் வெந்தார். அது மட்டுமின்றி அவரை அவ்வப்போது ஆஃப் செய்ய ஓவியனின் விபத்து பயன்பட்டது.
விஷால் தானே சாட்சி என்று சொல்லி அவரை அவ்வப்போது ப்ளாக் மெயில் செய்ய ஏதும் செய்ய முடியாமல் திணறி போய் நின்றார்.
ஓவியனுடன் விஷாலும் சேர்ந்துக் கொள்ள இப்போது அவர்கள் தனிமைப்பட்டு நின்றனர்.
மனைவியை தன் கை வளைவில் கொண்டு வந்தவனுக்கு இவ்வளவு சிந்தனைகள் ஓடியது.
“ஓவியன் என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று நக்கலாக கேட்டாள்.
“நீ என் கைக்குள்ள வர்றதுக்குள்ள எவ்ளோ போராட்டம்னு யோசிச்சேன்”
“ஓவியன் கொஞ்சம் சந்தோஷமாவும் நினைங்க”
“நீ தான் நினைக்க வையேன்” என்று கண்ணடித்தான்.
“டேய்”
“என்னவாம் என் பேபிக்கு” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“தூங்கு நிலாமா. நீ டயர்டா தெரியற” என்றவனை ஆச்சரியமாய் பார்த்தாள்.
“தூங்குடா” என்றவன் தட்டி கொடுக்க “நீங்க தூங்கல” என்று கேட்டாள்.
“பெரும்பாலும் நைட் படுக்கறப்ப தூக்கம் பழைய ஞாபகங்கள் வந்தா அவ்ளோ சீக்கிரம் வராதுடா. எத்தனையோ நாள் என் கண்ணீர் அந்த தலையணைக்கு தான் தெரியும்” என்று வலியுடன் கூறியவன் “ஆனா இப்போ நீ பக்கத்துல இருக்கறதை நினைச்சு சந்தோஷத்துல தூக்கம் வரலடா” என்று சொன்னான்.
“ஓவியன்”
“ஹேய்… ஏன் வாய்ஸ் டல்லாகுது? ஒரு படத்துல ஐ ஆம் தி ஹேப்பியஸ்ட் மேன் இன் தி வேர்ல்ட்னு சொல்வாரே, அதே மாதிரி நானும் கத்தட்டுமா?”
“ஓவியன் இப்போவா?” என்றவள் திகைக்க
“ஐ ஆம்” என்று ஆரம்பித்தவனை அப்படியே வாயை மூடி அடக்கினாள்.
அந்த கைகளை பற்றியவனுக்கு அவனது சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்லை. பற்றிய கைகள் தனது வேலையை ஆரம்பிக்க நித்திலா அந்த கைகளின் ஜாலத்தில் மயங்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் ஓவியனுக்கு என்றும் இல்லாத திருநாளாக இனிமையாக விடிந்தது.
இருவரும் குளித்து ரெடியானவர்கள் வெளியே செல்ல அங்கே சொந்தங்கள் அவர்களை வரவேற்றது.
ஜெகநாதன் பேரனுடன் பேத்தி வந்த சந்தோஷத்தில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
கோயிலுக்குச் சென்று வந்தவுடன் அடுத்த நாள் மறு வீட்டுக்கு செல்வதற்காக தயாராகி்னர். அவர்களை நித்திலாவின் சித்தி, சித்தப்பா அழைத்து போனார்கள்.
பயணத்தின் ஆரம்பத்தில் அவ்வளவு மகிழ்வாக இருந்தவன் அவள் வீடு நெருங்க நெருங்க அமைதியாகி போனான்.
நித்திலா பேச்சு சுவாரஸ்யத்தில் இதனை கவனிக்கவில்லை. கண்ணனும் அவர்களுடன் வந்திருந்தான். வீட்டிற்குச் சென்றவனை அனைவரும் வரவேற்றார்கள்.
அண்ணாமலை அவனை உச்சி முகர்ந்தார். அனைவரும் அவனிடம் நலம் விசாரிக்க ஓவியன் அனைத்திற்கும் பதில் சொன்னான்.
பின்னர் அவர்களுக்கு பரிமாற சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தார்கள்.
“நிலா… நான் நம்ம ஆஃபிஸ் வரையும் போய்ட்டு வரேன்”
“இன்னைக்குமா?” என்று கோபமான குரலில் கேட்டாள்.
“இவ்ளோ பக்கமா வந்திருக்கோம். ஒரு விஸிட் போயிட்டு வந்துடறேன்” என்றவன் கண்ணனுடன் கிளம்பினான்.
“மச்சி என் ஆள் எப்படி இருக்கிறா?”
“யார்டா அது உன் ஆளு?” என்று கேட்டவனை கேள்வியாய் பார்த்தான்.
“அது எப்படிடா கல்யாணம் ஆனா அப்படியே மறந்துடுவீங்க” என்று நக்கலாக கேட்டான்.
“அதுக்கெல்லாம் நீ கல்யாணம் பண்ணனும் மச்சி” என்று சிரித்தான்.
“அதை தான் பண்ண விட மாட்டேங்கறியே? அவ எப்படிடா இருக்கா?”
“நான் அவளோட க்ளாஸ் டீச்சர்கிட்ட கேட்டு சொல்லட்டுமா?” என்று கேலியான குரலில் கேட்டான்.
“மச்சான்” என்று அவன் அதிர்ந்து இதயத்தில் கை வைத்தான்.
“ஆமாடா” என்று தலையசைத்தான்.
“அப்புறம் எதுக்குடா நல்வவனாட்டம் ஓகே சொன்ன?” என்று பல்லை கடித்தான்.
“என் கல்யாணத்தப்ப என் மச்சான் கவலையோட இருக்கறதா. அதான்” என்றவன் சொல்ல “டேய்” என்று கழுத்தை நெறிக்க வந்தான்.
அவனை தனது கைகளில் தடுத்தவன் “ஜோக்ஸ் அபார்ட் அவ லெவன்ந்த் படிக்கிறா” என்று கூறினான்.
“டேய் பார்க்க பெரிய பொண்ணு மாதிரியே இருந்ததேடா”
“சேரி கட்டினா அப்படி தான் இருப்பாங்க இடியட்” என்று கூறினான்.
“புரியுதுடா. நீ என்னை ஜெயில்ல தள்ள பிளான் பண்ற. அதானே. உண்மைய சொல்லு” என்று அவனை உலுக்கினான்.
“மச்சி அவ இப்போ சின்னப் பொண்ணு. அவ படிச்சி முடிக்கற வரையும் நிஜமாலுமே அவ உன் மனசில இருந்தா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று சொன்னவனை “தேங்க்ஸ் மச்சி” என்று கட்டியணைத்துக் கொண்டான்.
அனைத்து வேலைகளையும் முடித்தவர்கள் திரும்பி நித்திலா வீட்டுக்கு வந்தனர்.
ஓவியன் தனது உடையை மாற்றியவன் பால்கனியில் பார்வை வைத்தபடியே தனக்குள் மூழ்கினான். அவனுக்கு அடி வாங்கிய சம்பவம் உறுத்தலாகவே இருந்தது.
“என்னாச்சு ஓவியன்? ஏன் எப்படியோ உட்கார்ந்திருக்கீங்க?”
“அப்படி ஒண்ணும் இல்ல”
“டேய் என்னனு சொல்லுடா”
“உன் அப்பா ஏன் அப்படி பிஹேவ் பண்ணாங்க அன்னைக்கு.என்னால அதை மறக்க முடியல” என்று சொன்னான்.
“ஓவியன்” என்று நித்திலா அதிர்ச்சி அடைந்தாள்.
“நத்திங்டா. இட்ஸ் ஜஸ்ட் மெமரீஸ்” என்று அவளை தேற்றும் விதமாக சொல்ல அவள் நேராக தர்மராஜிடம் சென்றாள்.
“ப்பா… ஏன்பா அன்னைக்கு அவரை அடிச்சீங்க?”
“குட்டிமா”
“ப்பா… அவரு அதை மறக்க முடியாம படாதபாடு படறாரு” என்றவர் சொல்ல தர்மராஜ் ஓவியன் இருக்கும் இடம் வந்தார்.
“ஓவியன்”
“வாங்க மிஸ்டர். தர்மராஜ்” என்று வரவேற்றான்.
“சாரி ஓவியன். நான் செஞ்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறினார்.
“என்ன திடீர் மன்னிப்பு? நீ மன்னிப்பு கேட்டீனா நடந்தது இல்லைனு ஆகிடுமா? உன் பொண்ண காப்பாத்தி கூட்டிட்டு வந்தா அவ்ளோ கேவலமா அடிப்பியா?” என்று ஆக்ரோஷமாக கேட்டான்.
“சரி. அந்த சூனியக்காரி உன்னைய கைட் பண்றானே வெச்சுப்போம். ஆனா என் கூட கொஞ்ச நாள் பழகியிருக்கேல்ல. என்னைய பத்தி கூடவா உனக்கு தெரியாது” என்று அவரை பிடித்து உலுக்கினான்.
“நான் உன் பொண்ண நாசம் பண்ணுவேனாடா? நான் யார் கைடன்ஸும் இல்லாம தான் அந்த டீனேஜ்ல இருந்தேன். ஆனா அப்போ நீ தானே என்னை கைட் பண்ணுவ? உன் வளர்ப்பு மேலயே உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றவன் கேள்வியில் அனைவரும் திகைத்து நின்றார்கள்.
“ஓவியன்”
“உன்னை என் அப்பன் மாதிரி நினைச்சேனேடா. வார்த்தைக்கு வார்த்தை அநாதைனு என்னை கூறு போடுட்டியே” என்றவன் கதறவும் தர்மராஜிற்கும் கண்ணீர் வந்தது.
“சாரி ஓவியன். தப்பு என் மேல தான் ஓவியன். என்னை மன்னிச்சிடு ஓவியன்” என்றவர் அவனை இறுக அணைத்துக் கொள்ள இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது.
“சாரிப்பா… சாரிப்பா… அப்பாவை மன்னிச்சிடுப்பா” என்று ஜெபம் போல கூறிக் கொண்டே இருந்தவர் அவன் சமாதானம் ஆகும் வரை விடவில்லை.
ஒரு கட்டத்தில் சுதாரித்த ஓவியன் அவ்விடம் விட்டு அகன்று விட்டான். அவனுடன் கண்ணன் செல்ல தர்மராஜை நித்திலா கவனித்தாள்.
பின்னர் இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் எதுவும் பேசவில்லை. அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.
அவர்கள் அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தார்கள். இருவரும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாலும் ஓவியன் கிளம்பும் போது அவரின் தவிப்பான பார்வையை கவனித்தவன் “வர்றேன் தர்மாப்பா” என்று சொல்ல அவர் கதறிவிட்டார்.
இருவரது பாசப் பிணைப்பையும் கண்டு அனைவருக்கும் கண்ணீர் வந்தது.
