6
அந்தக் கறுப்பு நிற புல்லட் மழையில் நனைந்த சாலையை ஆக்ரோஷமாகக் கிழித்துக் கொண்டு பறந்தது. வண்டியின் பின் இருக்கையில், சந்துருவின் இடுப்பைத் தன் இரு கைகளாலும் ஒரு கொடி போலச் சுற்றிக் கொண்டு, அவன் முதுகோடு ஒட்டி அமர்ந்திருந்தாள் யாழினி. அவளது பிடியில் ஒருவித நிம்மதியும், அதே சமயம் ஒரு பெரும் ஆசுவாசமும் இருந்தது.
சந்துரு மெல்லச் சிரித்துக்கொண்டே கண்ணாடியில் அவளைப் பார்த்தவன், “ஏய் யாழி… அதான் வந்துட்டேன் இல்ல? இன்னும் ஏன் என் இடுப்பை அவ்வளவு இறுக்கமா பிடிச்சுகிட்டு இருக்க? என்னவோ நான் உன்னை விட்டுட்டு இப்பவே ஓடிடப் போற மாதிரி!”
“பின்ன என்னடா? கடைசி நிமிஷம் வரைக்கும் நான் எவ்வளவு பயந்துப்போய் இருந்தேன் தெரியுமா? நீ வருவேன்னு எனக்குத் தெரியும்… ஆனா எப்படி வருவ, எப்போ வருவன்னு எதுவுமே எனக்குத் தெரியாது. மூணு மாசம் சந்துரு… கிட்டத்தட்ட மூணு மாசம் உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஒரு நடைப்பிணமா அந்த வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தேன்.”
“அப்புறம் எந்த நம்பிக்கையில நான் வருவேன்னு எனக்காகக் காத்துக்கிட்டு இருந்த யாழி? உன் அப்பா உனக்கு வேற கல்யாணம் நிச்சயம் பண்ணியும் நீ எப்படி மௌனமா இருந்த?”
“நீ சொன்ன அதே வார்த்தைதான் இன்னைக்கு வரைக்கும் என் காதுல ஒலிச்சுக்கிட்டு இருக்கு சந்துரு. ‘நீதான் டி என் பொண்டாட்டி… இது சத்தியம்’னு அன்னைக்கு ஒருநாள் நீ சொன்னியே… அந்த ஒரு வார்த்தைதான் எனக்குத் தைரியம் தந்தது. எப்படியும் உன் பொண்டாட்டியைக் காப்பாத்த நீ வருவேன்னு எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கைலதான் என் கழுத்துல தாலி ஏறப்போற அந்த நிமிஷம் வரைக்கும் என்ன நடந்தாலும் சகிச்சுக்கலாம்னு அமைதியாவே இருந்தேன். ஆனா நான் எதிர்பார்த்தபடியே வந்துட்ட டா …”
என்றவள் அவன் தோள் மீது தன் தலையைச் சாய்த்துக்கொள்ள, அவனது சட்டையில் இருந்த அந்த மழையின் வாசனையும், அவனது உடல் சூடும் அவளுக்குள் ஒரு புதுத் தெம்பைத் தந்தது.
சந்துரு அவளது கைகளைத் தன் ஒரு கையால் வருடியவன், “ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு, நான் எப்படி வந்தேன், எதையும் கேட்க மாட்டியா யாழி?”
“ம்ம்ம்ஹ்ம்… எனக்கு அதெல்லாம் அவசியமே இல்லை டா. நீ எப்படி வந்தா என்ன? வந்தியா… அதுவே எனக்குப் போதும். உன்கூட இப்போ இந்த மழையில இந்த வண்டியில போறதுதான் எனக்கு உலகம். இனிமேல் என் உயிரே போனாலும் அது உன் மார்புலதான் போகணுமே தவிர, உன்னை விட்டு நான் போகவே மாட்டேன்.”
என்றவள் மீண்டும் அவனது தோள்களை இன்னும் ஆழமாக அணைத்துக் கொண்டு . ஒரு சிறு குழந்தையைப் போல அவனிடம் தஞ்சமடைந்தாள்.
சந்துருவின் கண்கள் லேசாகக் கசிந்தன. ஒரு போலீஸ் அதிகாரியாக எத்தனையோ குற்றவாளிகளைச் சந்தித்தவன் அவன். ஆனால், ஒரு பெண்ணின் இவ்வளவு தூய்மையான, பிடிவாதமான காதல் அவனை நிலை குலையச் செய்தது.
தன் மீது அவள் கொண்டுள்ள இந்த அபாரமான நம்பிக்கையைப் பார்த்து அவனுக்கே தன் மீது ஒரு நிமிடம் பொறாமை ஏற்பட்டது. “இவளின் இந்த காதலுக்கு நான் தகுதியானவனா?” என்ற கேள்வி அவன் மனதில் எழுந்து மறைந்தது. மெதுவாகத் தன் இடது கையால் அவளது கன்னத்தை வருடி, மென்மையாகத் தட்டிக் கொடுத்தான். அவள் ஒரு சிறு சினுங்களுடன் அவனது தோளில் முகம் புதைத்து, அந்தப் பயணத்தின் சுகத்தில் லயித்தாள்.
வண்டி இப்போது சென்னையை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. இருபுறமும் இருந்த மரங்கள் இருளில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.
யாழினியின் சீரான மூச்சுக்காற்று சந்துருவின் தோளில் பட்டது. அவள் உறங்கிவிட்டாளா அல்லது அந்த நிம்மதியில் அமைதியாக இருக்கிறாளா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவனது நினைவுகள் மெல்லப் பின்னோக்கிச் சென்றன.
சில வருடங்களுக்கு முன் …
அன்று நள்ளிரவு IT நிறுவனங்கள் நிறைந்த அந்தச் சாலை மழையில் நனைந்து கொண்டிருந்தது. யாழினி தன் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு ஆட்டோவுக்காகக் காத்திருந்தாள். அவளது அலைபேசி செயலிழந்திருந்தது.
திடீரென்று, மூன்று போதை ஆசாமிகள் அவளைச் சூழ்ந்துகொண்டனர். யாழினி பயத்தில் உறைந்து போனாள். அப்போது, ஒரு பழைய புல்லட் பைக்கின் சத்தம் அந்த மௌனத்தைக் கிழித்தது.
அழுக்கான சட்டை, கலைந்த தலைமுடி, கையில் ஒரு இரும்புச் சங்கிலி, பைக்கிலிருந்து குதித்த சந்துரு, எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி, அந்த மூன்று பேரையும் ஆக்ரோஷமாகத் தாக்கினான். அவனது கண்கள் ரத்த நிறத்தில் இருந்தன. தாக்குதல் முடிந்து அவர்கள் ஓடிய பிறகு, அவன் யாழினியை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ். உங்க பேர்?” என நடுங்கும் குரலில் அவள் வினவ
“பேர் தெரிஞ்சு என்ன பண்ணப்போற? இந்த நேரத்தில் இங்க இருக்காம ஒழுங்கா வீட்டுக்குப் போ!” என கரகரப்பான குரலில் எச்சரித்து விட்டு அவன் விரைந்தான்…
அவனது அந்த ‘ரௌடி’த்தனமான மிடுக்கிலும், யாழினிக்கு ஏதோ ஒரு பாதுகாப்பு தெரிந்தது.
அடுத்த சில வாரங்கள் யாழினியின் மனம் அந்த ரௌடியையே தேடியது. அவனைப் பற்றி விசாரித்தபோது, அவன் அந்தப் பகுதியின் பெரிய தாதாவிற்கு வலது கை என்றும், பல அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்றும் அவளுக்கு தெரிய வந்தது.
ஒரு மாலை நேரத்தில், சந்துரு ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்து காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தான். யாழினி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் முன் நின்றாள்.
அவளை பார்த்தவன் .. “மறுபடியுமா நீயா ? உனக்கு சொன்னா புரியாதா? நான் யாருன்னு உனக்கு தெரியல?”
“தெரியும். நீங்க ஒரு ரௌடி. ஆனா, அன்னைக்கு என்னைக் காப்பாத்தும்போது உங்க கண்ணுல தெரிஞ்சது கோபம் இல்ல, அக்கறை.”
“ப்ச் … சினிமா பாக்குறதை நிறுத்து. நான் ஒரு கெட்டவன். எனக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை. நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருற பொண்ணு, நான் கொலைக்கு முன்னாடி நிக்கிறவன்.”
மெல்லச் சிரித்த யாழினி, “உங்க இருட்டு உலகத்துக்குள்ள ஏதோ ஒரு ஒளி இருக்கு, நான் அதை நம்புறேன்.” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
தொடர்ச்சியான சந்திப்புகள். சந்துருவை அவள் துரத்தினாள், திட்டினான், மிரட்டினான். ஆனால் யாழினியின் பிடிவாதமான காதல் அவனது இரும்பு இதயத்தை மெல்ல உருக்கத் தொடங்கியது.
ஒரு நாள் இரவு, சந்துருவின் எதிரிகள் அவனைத் தாக்கியதாகத் தகவல் வர, யாழினி பதறிக்கொண்டு அவன் தங்கியிருக்கும் அந்தப் பாழடைந்த கிடங்கிற்கு ஓடினாள். கதவு லேசாகத் திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள். அங்கே சந்துரு சட்டை இல்லாமல் அமர்ந்திருந்தான். அவன் முன்னே ஒரு நவீன லேப்டாப், சுவர்களில் அந்த ஊரின் மிகப்பெரிய கிரிமினல்களின் புகைப்படங்கள், மற்றும் ஒரு சிறிய மேஜையில் ஒரு துப்பாக்கியும், போலீஸ் ID Card இருந்தன.
சந்துரு அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் ரௌடிக்கான அந்த முரட்டுத்தனம் மறைந்து, ஒரு அதிகாரியின் கம்பீரம் இருந்தது.
“நீ இங்க வந்திருக்கக் கூடாது யாழினி.” என அமைதியான குரலில் சொல்ல
“சந்துரு… இதெல்லாம் என்ன? போலீஸ் ஐடி? அப்போ நீங்க…”
“ஆமா. நான் அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்ல இருக்கிற IPS officer. இந்த ஊரோட பெரிய போதைப்பொருள் கும்பலை பிடிக்க ரௌடி வேஷம் போட்டுட்டு இருக்கேன். இதுதான் என்னோட நிஜ முகம்.”
யாழினிக்கு மூச்சு முட்டியது. அவள் நேசித்த ரௌடி ஒரு போலீஸ் அதிகாரி! அதிர்ச்சியில் சிலை போல நின்றிருந்தவளது தோள்களைப் பிடித்து சந்துரு உலுக்கினான். அவனது குரல் இப்போது அதிகாரம் மிக்கதாக இருக்க, “இப்போ புரியுதா? என் வாழ்க்கை ஒரு பெரிய நாடகம். ஒவ்வொரு நிமிஷமும் மரணம் என் பின்னாடியே வரும். நான் யாரோட நெருக்கமா இருந்தாலும், அவங்க உயிருக்கு ஆபத்து. எனக்குக் காதல் பண்ண நேரமும் இல்லை, தகுதியும் இல்லை. தயவுசெஞ்சு என்னை விட்டுப் போயிரு. என்னை ஒரு ரௌடியா நினைச்சு வெறுத்துட்டுப் போயிரு!” என கதறினான்
ஆனால், அவன் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த யாழினியின் கண்களில் பயமில்லை, மாறாக ஒரு பேரன்பு இருந்தது, அதனை கவனித்தவள்
“நிஜமா சொல்லுங்க சந்துரு… இந்த வேஷத்துக்கு நடுவுல, என்கிட்ட பழகுன அந்த நிமிஷங்கள்ல உங்க அன்பு பொய்யா?” என அவன் கண்களை பார்த்தே கேள்வி எழுப்ப, சந்துரு பதில் சொல்லாமல் தலைகுனிந்தான்.
“நீங்க ரௌடியா இருந்தாலும் சரி, இல்ல போலீஸா இருந்தாலும் சரி… நான் காதலிச்சது உங்களைத்தான். உங்க வேலைக்காக உங்க உயிரே போற நிலைமை வந்தாலும், அந்த கடைசி நிமிஷம் வரை உங்க கூட இருக்கிறது நான் மட்டும்தான். உங்க ஆபத்து என்னையும் சேரட்டும், எனக்குச் சம்மதம்!” என ஒரே பிடிவாத குரலில் யாழினி சொல்ல …
“உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு யாழினி. இது விளையாட்டு இல்ல!”
“ஆமாம், உங்க மேல பைத்தியம்தான். நீங்க துப்பாக்கியை வச்சு மிரட்டுனாலும் சரி, லத்தியை வச்சு விரட்டுனாலும் சரி… இந்த யாழினி உங்களை விட்டுப் போக மாட்டா!”
வெளியே இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சந்துரு தன் கையில் இருந்த துப்பாக்கியை இறுக்கமாகப் பற்றினான். அவனுக்குத் தெரியும், அவனது நிஜம் தெரிந்த பிறகு யாழினியின் உயிருக்கு இன்னும் ஆபத்து அதிகம் என்று. ஆனால், அவளது காதலைத் தடுக்கும் வலிமை அவனிடம் இல்லை.
அப்போது, அவனது வாக்கி-டாக்கியில் ஒரு குரல் கேட்டது, “சார், கேங் மூவ் ஆகுது… Plan B start பண்ணலாமா?”
யாழினியைப் பார்த்த சந்துரு, “சரி… இனி உன் இஷ்டம். ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோ, இது காதலை விடப் பெரிய போர்! இப்போ தயவுசெய்து இங்க இருந்து கிளம்பு, இப்போ எனக்கு encounter operation இருக்கு” என சந்துரு உறுதியான குரலில் சொல்ல
யாழினியும் சூழ்நிலை புரிந்த்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள், சந்துருவின் அந்த operation முடிந்த சிறிது நாட்களுக்கு பிறகு, சந்துருவின் மனதின் கதவுகள் யாழினிக்காக மெல்லத் திறந்தது.
மீண்டும் ஒரு மழை நாள்
“யாழினி, நீ இப்போ பிடிவாதமா வந்து நிக்கிற… ஆனா முதல் முறை மழையில உன்னைப் பார்த்தப்பவே எனக்குள்ள ஏதோ ஒன்னு நடந்துடுச்சு. ஆனா என் வேலை அப்படி. நான் ஒரு நிழல்… நிழலோட நிஜம் சேரக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உன்னோட இந்த அன்பு என்னை வீழ்த்திடுச்சு.” என மெல்லிய குரலில் பேசியவன் அவளது கைகளை முதல்முறையாகப் பற்றினான்.
அவனது அந்த ஜில்லென்ற கரங்களில் இப்போது ஒரு கதகதப்பு பரவியது. சந்துரு அவளை ஏற்றுக் கொண்டான்.
அடுத்த சில ஆண்டுகள் அவர்கள் காதல் ஒரு நதியைப் போல அமைதியாகவும் அழகாகவும் ஓடியது. யாழினி தன் ஐடி வேலையிலும், சந்துரு தன் ரகசிய போலீஸ் ஆபரேஷன்களிலும் பிஸியாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சந்துருவின் முரட்டுத்தனமான முகத்திற்குப் பின்னால் ஒரு குழந்தைத்தனமான காதலன் இருப்பதை யாழினி ரசித்தாள்.
சந்துரு அவளிடம், “யாழினி, இந்த ஆபரேஷன் முடிஞ்சதும் நான் வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாம். அங்க நாம புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்,” என்று கனவுகளை விதைத்தான்.
“சந்துரு, நாம எவ்வளவு நாள் இப்படித் திருட்டுத்தனமா சந்திப்போம்? நீங்க எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாகிட்ட பேசுங்க. அவர் கொஞ்சம் கண்டிப்பானவர் தான், ஆனா என்கிட்ட ரொம்ப பாசம். நீங்க வந்து கேட்டா கண்டிப்பா சம்மதிப்பார்.” என தன் தந்தையின் மீது உள்ள நம்பிக்கையில் பேச
சந்துருவின் முகம் சட்டென மாறியது. அவன் மௌனமாகத் தரையைப் பார்த்தான். அவனது மௌனம் நீண்டுகொண்டே போக, யாழினிக்கு ஒருவித நடுக்கம் ஏற்பட்டது.
“ஏன் அமைதியா இருக்கீங்க? என்னால எங்க அப்பாவை விட்டுட்டு வர முடியாது… நீங்க பேசிப் பாருங்களேன்.”
“உங்க அப்பாகிட்ட பேசறதுல எந்தப் பயனும் இல்லை யாழினி. நான் வரமாட்டேன்.”
“ஏன்? உங்களுக்கு பயமா? இல்ல என்னை விட உங்க வேலைதான் முக்கியமா?”
இடத்தை விட்டு எழுந்த, சந்துரு அவளது கண்களை உற்றுப் பார்த்தான். அவன் கண்களில் ஒரு போலீஸ் அதிகாரிக்கான அந்தத் தீவிரம் மீண்டும் குடியேறியது.
சந்துரு, யாழினி தந்தை பற்றிய முழு விவரங்களையும் முன்கூடியே அறிந்து கொண்டதால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்றும் அவனுக்குத் தெரிந்தது மீறி போனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவன் தயாராக இருந்ததான், அதனால் தான் அவளின் தந்தையிடம் வந்து சமாதானம் பேச முடியாது என்றே அன்றைய இரவு அவன் உறுதியாக கூறினான்.
“நீ எப்ப கூப்பிட்டாலும்… உன் கூட வர நான் ரெடி சந்துரு …” என்று மெதுவாய் சொன்னவள், ஒரு நிமிடம் கூட திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இன்று சந்துருவின் பதவிக்கும், அதிகாரத் தோரணைக்கும் அவன் முன்னால் சிதம்பரத்தினால் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேச முடியவில்லை. அவனது ஆட்கள் சந்துரு போலீஸ் என கண்டு பின்வாங்கினர்.
சந்துரு யாழினியை கையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான், அனைவரின் முன்னே கௌரவமாக மண்டபத்தை விட்டு தன்னோடு அழைத்து வந்தான்.
இப்பொழுது அந்த வண்டி அவர்களின் அடுத்த பயணத்தை நோக்கி சென்றது…
வேட்டை தொடரும் ..⚓
