9
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
அட சுடச்சுட …
ஆந்திராவின் எல்லையில் கால் வைத்த முதலே சந்துரு, தன் நண்பன் கணேசனை அழைத்தான்… (writer கணேஸ்வரன் இல்லைங்க, நம்ம விக்ரம் ல வந்த கணேஷ்)
எதிர்முனையில் பாட்டு சத்தம் கேட்டு அவனின் உதட்டில் ஒரு கிண்டல் புன்னகை அரும்ப..
“ஹலோ… ”
“டேய் கணேசா! எப்படிடா இருக்க?”
“நீ கடைசியா பார்த்தப்போ எப்படி இருந்தேனோ, அப்படியே தாண்டா இருக்கேன்! என்ன சார்… திடீர்னு போன் எல்லாம் பண்ணிருக்கீங்க? என்ன விஷயம் மச்சி?” என்று கணேசனின் உற்சாகமான குரல் சந்துருவின் காதுகளைத் துளைத்தது.
சந்துரு சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் இருக்கட்டும்… இன்னும் நீ இந்த காலர் டியூனை மாத்தவே இல்லையா? அப்போ விக்ரம் சொன்னான் நீ இந்த பாட்டு வச்சிருக்கேன்னு, இன்னுமா அதேதான் வச்சிருக்கே?” என்றான்.
“டேய்… என் ரசனைக்கு எப்பவுமே அதுதாண்டா மச்சி! காலம் மாறலாம், ஆனா கணேசனோட காலர் டியூன் மாறாது. சரி, இப்ப திடீர்னு கால் பண்ணிருக்கே… காரணம் இல்லாம நீ போன் பண்ண மாட்டே னு எனக்குத் தெரியும். அதை முதல்ல சொல்லு,”
“சரி, நீ இப்போ எங்க இருக்க? அதைச் சொல்லு முதல்ல,” என சந்துரு கேட்க.
“நான் எங்கடா இருப்பேன்? என்ன… தெருவோரம் இருக்குற அரச மரத்து அடியில இருக்குற பிள்ளையாரா என்ன நானு ? அதே ஹார்பர் கணேஷ் தானே! கடலுக்கு நடுவுல கப்பல்ல தான்டா உட்கார்ந்துட்டு இருக்கேன்,” .
“டேய்… கடல் நடுவுல உட்கார்ந்துட்டு இருக்கியா? இல்ல கடல்ல இருக்குற மீனைப் பிடிச்சு தின்னுட்டு இருக்கியா?” என்று அவன் கலாய்க்க, மறுமுனையில் பலமாகச் சிரித்த கணேசன்.
“இரண்டும்தான்! இரண்டையும் ஒழுங்காப் பார்க்கணும் இல்ல? நமக்குச் சோறு முக்கியம், வேலையும் முக்கியம். சரி, நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே மாட்டேங்குற… பேசி இவ்வளவு நேரமாகுது, என்ன விஷயம் சொல்லுடா?”
கணேசனின் கிண்டல் பேச்சு சந்துருவின் காதுகளைத் துளைக்க, போனின் மறுமுனையில் அவன் அடிக்கும் லூட்டி, சந்துருவின் இறுக்கமான மனநிலையைச் சற்றே லேசாக்கவும்… “மச்சி… நான் ஆந்திராவுக்கு வந்திருக்கேன்டா.”
“ஓ அப்படியா? ரொம்ப நல்ல விஷயம்! அப்படியே நேரா 7.30 மணி பஸ்ஸை ஒன்னு பிடிச்சு மலை மேல ஏறி ஏழுமலையானைப் பாரு. நல்லாத் தரிசனம் கிடைக்கும். தரிசனம் முடிஞ்சதும் நெத்தியில ஒரு பெரிய நாமத்தைப் போட்டுட்டு, வேணும்னா ஒரு மொட்டையையும் அடிச்சுக்கோ. அப்படியே ரெண்டு லட்டு கொடுப்பாங்க, அதை வாங்கித் தின்னுட்டு மவனே… பேசாம தமிழ்நாட்டுக்கே திரும்பி ஓடிடு!” என்று கணேசன் படபடவெனப் பேசி முடிக்க, சந்துருவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
“டேய்… என்னடா இது? ஒரு நண்பன் இவ்வளவு தூரம் தேடி வர்றேன்னு சொல்றான், நீ என்னடான்னா நாமம் போட்டு மொட்டை அடிச்சு ஓடச் சொல்ற? இதுதானா ஒரு பிரண்டோட லட்சணம்? சேச்சே… உன்னையெல்லாம் பிரண்டுன்னு சொல்றதுக்கே அவமானமா இருக்குடா!” என்று சந்துரு போலி கோபத்தைக் காட்ட…
“ஐயோ .. இதோ பாருடா… இப்பதான் சாருக்கு அவமானம் எல்லாம் தெரியுதோ? படிக்கும்போது கேண்டீன்ல இருந்து கொண்டு வர்ற என் பங்கு முட்டையெல்லாம் எடுத்துத் தின்னுப்புட்டு ஏப்பம் விடுவியே… அப்போ தெரியலையா இந்த பாவம்? அடிங்கு… இப்ப வந்து பாசக்காரன் மாதிரிப் பேசாத!” என கணேசனும் தன் பங்குக்கு விடமால் பேச..
சந்துரு சிரித்துக்கொண்டே, “சரி சரி… கோபப்படாத மச்சி. அதெல்லாம் முடிஞ்சுப்போன காலம்,” என சொல்லவும்
“டேய் பக்கி! இந்த நேரத்துல கால் பண்ணி வந்த விஷயத்தைச் சொல்லாம, மொட்டையா ‘ஆந்திராவுக்கு வந்துருக்கேன்’னு சொன்னா… அப்புறம் மொட்டை அடிச்சிட்டுப் போகச் சொல்லாம உனக்கு என்ன ‘கொங்கரா மட்டனா’ செஞ்சு கொடுப்பாங்க? விஷயத்தைச் சொல்லுடா! திடீர்னு அனுமான் இலங்கையில குதிச்ச மாதிரி ஆந்திராவுல குதிச்சுருக்க… என்ன மேட்டர்?” என்று கணேசன் மீண்டும் அழுத்தமாகக் கேட்டான்.
“அது ஒன்னும் இல்ல மச்சி… கொஞ்ச நாள் உன் கூடத் தங்கலாம்னு தான் வந்தேன்,” என சந்துரு மெதுவாக சொல்ல..
“மச்சி… இந்த டயலாக் எல்லாம் ரொம்ப பழசுடா, பழகிப்போச்சு! விஷயம் என்னன்னு டைரக்டா என்கிட்ட சொல்றியா இல்லையா?”
“அது வந்து மச்சி… டிபார்ட்மென்ட்ல சின்னப் பிரச்சனை. கொஞ்ச நாள் சஸ்பென்ஸ்… அதனாலதான்…”
அவன் முடிக்கும் முன்பே குறுக்கிட்ட கணேசன்…. “அடப்பாவிங்களா! டேய்… உங்களுக்கு எல்லாம் சஸ்பென்ஸ் வந்தா தான் என் ஞாபகமே வருமாடா? நோய் வந்தா தான் ஹாஸ்பிடலுக்குப் போவேன்னு சொல்ற மாதிரி, சஸ்பென்ஸ் வந்தா தான் என்னைத்தேடி வர்றீங்க. நீயும் விக்ரமும் விமலும்… என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?”
“டேய் என்னடா… நோய் வராமப் போய் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்துட்டு காம்பவுண்டர் வேலையா பார்க்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டான்.
“கேப்படா கேப்ப… ஏன் கேட்க மாட்ட? சஸ்பென்ஸ் வந்தாலே என்னைத்தான் தேடிட்டு வர்றீங்க. அப்படி என்னதான் உங்க வேலையில சஸ்பென்ஸ் ஆகுற அளவுக்கு வேலை செய்யறீங்களோ? சரி… இப்ப என்ன விஷயம்? அதைச் சொல்லு?” என்று கணேசன் வினவ, சந்துருவின் முகம் மீண்டும் சீரியஸானது.
“மச்சி… நான் ஆந்திராவுக்கு வந்திருக்கேன்டா!” என்று சந்துரு மீண்டும் ஆரம்பிக்க, கணேசன் கடுப்பானான்.
“அத தான்டா சொல்லிட்ட… திரும்பத் திரும்ப அதே சொல்லிக்கிட்டு இருக்க! இன்னும் எத்தனை தடவைதான் ஆந்திராவுக்குள்ளயே வந்துட்டு இருப்ப? மேல விஷயத்தைச் சொல்லுடா!”
சந்துரு தன் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யாழினியை ஒருமுறை பார்த்துவிட்டு, மெதுவான குரலில், “கூட… என் பொண்டாட்டியும் கூட்டிட்டு வந்திருக்கேன்டா.”
மறுமுனையில் கணேசன் அப்படியே அதிர்ந்து போனான். “அடேய்… பொண்டாட்டியா! இது எப்படா நடந்தது? சொல்லவே இல்ல படுபாவிப் பையா! எனக்குத் தெரியாம கல்யாணம் வேற பண்ணிக்கிட்டியா?”
“டேய் டேய் இருடா… அவசரப்படாத! அவளைக் கூட்டிட்டு வந்திருக்கேன். இனிமேல்தான் கல்யாணம் பண்ணனும்,” என்றான்.
“இனிமேல்தான் பண்ணனுமா? அப்போ… ஓடி வந்துட்டியா? டேய்! அதனாலதான் டிபார்ட்மென்ட்ல உன்னைத் துரத்தி விட்டுட்டாங்களா? உண்மையச் சொல்லுடா… இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, ரிஜிஸ்டர் ஆபீஸ் வேற லீவு! யாராவது துரத்திக்கிட்டு வரப்போறாங்களா? பின்னாடியே எவனாவது அரிவாளோட வர்றானா?” என்று கணேசன் பீதியைக் கிளப்ப.…
யாழினி இதைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் தன் கைகளால் வாயை மூடிக்கொண்டாள். சந்துருவோ நெற்றியில் கை வைத்துக்கொண்டவன், “டேய்… நான் சொல்றதைக் கொஞ்சம் முழுசா கேளுடா! அவ கல்யாணத்தை நிறுத்திட்டு நான் அவளைக் கூட்டிட்டு வந்திருக்கேன். அவங்க அப்பா எல்லாம் இதுல தலையிட முடியாது. ஆனா, எனக்கு இப்போ சஸ்பென்ஸ் ஆகிடுச்சு. இந்த நேரத்துல நான் இங்கதான் வர முடியும். இப்போ எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது உன்னுடைய பொறுப்புதான் மச்சி. உன்னை நம்பித்தான் கணேசா நாங்க ரெண்டு பேரும் வந்திருக்கோம். எங்களைக் காப்பாத்துப்பா!” என்று கொஞ்சம் ஓவராகவே ‘பில்டப்’ கொடுத்தான்.
ஒரு பெருமூச்சு விட்ட கணேசன், “ஆமாண்டா ஆமா… உங்க ரெண்டு பேருக்கும் லவ் செட் பண்ணி தரதுதான் என் வேலையா? அப்போ விக்ரம் இப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என் வேலையா? என்ன ஒரு புரோகிதராவே பயன்படுத்துங்கடா நீங்க ரெண்டு பேரும்!”
“டேய்… நேரத்தோட அவசரம் புரியாம பேசாதடா!” என்று சந்துரு அதட்ட.
“சரி சரி… அந்தப் பொண்ணுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமா? இல்ல அவளையும் வற்புறுத்தி ஏதாவது கடத்திக்கிட்டு தூக்கிக்கிட்டு வந்துட்டியா? ஒரு IPS ஆபீசருக்கு இதெல்லாம் அடுக்குமாடா?” என்று கணேசன் அடுத்த சந்தேகத்தைக் கிளப்ப.
யாழினி இப்போது சந்துருவின் போனைப் பிடுங்கி, “ஹலோ கணேசன் சார்… நான் என் முழுச் சம்மதத்தோட தான் வந்திருக்கேன். அவர் யாரையும் கடத்தல, நான்தான் இவரைக் கடத்திட்டு வந்தேன்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
போனை வாங்கிய சந்துரு, “கேட்டியா டா? அதெல்லாம் அவ சம்மதத்தோட தான் வந்திருக்கா. டேய்… எவ்வளவு நேரம்தான் ஸ்டேஷன்ல நின்னு பேசுறது? நீ எங்க இருக்கன்னு சொல்லு, நான் அங்க வந்து நேரடியா பேசுறேன்,” என்றான்.
கணேசன் குரலில் இப்போது ஒரு நிதானம் வந்தது. “சரி சரி… நான் இன்னும் ஒரு மணி நேரத்துல Land வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் நேரா Quarters போங்க. நான் அங்க வந்து மேல என்ன பண்ணலாம்னு பேசிடுறேன். அங்க கேன்டீன் சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும், போய் சாப்பிடுங்க.” என்றான்
சந்துரு குரலைத் தாழ்த்தி, “சரிடா… ஆனா நான் யாருன்ற விஷயம் அங்கே யாருக்கும் தெரிய வேணாம். நான் ஒரு ஆபீசர்னு அங்க யார்கிட்டயும் சொல்லிடாத,” என்றான்.
கணேசனோ சிரித்துக்கொண்டே, “டேய்… நீயே சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன் மகராசா! அந்தப் பொண்ணைக் கூட்டிட்டுப் பத்திரமா வா… மத்ததை நான் பார்த்துக்கிறேன்,” என்று போனைத் துண்டித்தான்.
சந்துரு ஒரு வண்டியை பிடித்து விசாகப்பட்டினம் குவார்ட்டர்ஸ் நோக்கி சென்றான் . ஜன்னல் வழியே தெரிந்த துறைமுக விளக்குகள் கடலில் ஒரு புதிய கோலத்தை வரைந்து கொண்டிருந்தன.
“என்ன சார்… உங்க பிரண்டு பயந்துட்டாரா?” என்று யாழினி கேட்க, “அவன் பயப்படல யாழி… ஆனா, நாம இப்போ போறது ஒரு பெரிய புயலுக்கு முன்னாடி இருக்குற அமைதிக்குள்ள!” என்றான் சந்துரு.
கணேசன் கொடுத்த விலாசத்தைத் தேடி அவர்கள் அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த. சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்த கணேசன், சந்துருவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டித் தழுவிக்கொண்டான்.
நீண்ட நேரப் பேச்சுவார்த்தைகள், பழைய நினைவுகள், மற்றும் தற்போதைய இக்கட்டான சூழல் என அனைத்தையும் அலசி ஆராய்ந்த பிறகு, கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான்.
“டேய் சந்துரு, மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல இந்த பொண்ணுக்கு ஒரு பாதுகாப்பு வேணும். அதுக்கு உங்க கல்யாணம் தான் இப்போதைக்கு முக்கியம். நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், கிளம்புங்க!” என்றான் அவசரமாக.
“அதெல்லாம் சரி கணேஷா… எங்க உன்னுடைய பெங்காலி சம்சாரம் காணோம்?
“ஆந்திரா சமோசா வேணா இருக்கு .. சம்சாரம் எல்லாம் இங்க இல்ல .. ” என அவன் பதில் தர …
“டேய் விளையாடாதா.. நாங்க வந்ததுல இருந்து அவங்களை கண்ணுலேயே காட்ட மாட்டேங்குற?” என்று சந்துரு சந்தேகமாகக் கேட்க,
சாதாரணமாகத் தோளைக் குலுக்கியவன், “டேய் அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா மச்சி… இப்போ பெங்கால்ல தான் இருக்கா,” என்றான்.
ஆனால் சந்துரு விடவில்லை, “இது என்னடா அநியாயமா இருக்கு? விக்ரம் வந்தப்பவும் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்ன, இப்போ என்கிட்டயும் அதையே சொல்ற! நாங்க யாரும் அவங்களைப் பார்த்திடக் கூடாதுன்னு பிளான் போட்டு ஊருக்கு அனுப்பி வச்சிடுறியா?” என கொக்கி போட..
நொந்துபோனவன் .. “ஆமாடா… நீங்க வர்றதே எனக்கே இப்பதான் தெரியும், இதுல நான் எப்படி அவங்களை பிளான் பண்ணி அனுப்ப முடியும்? அது தானா அமைஞ்சது மச்சி.”
“எப்ப பார்த்தாலும் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன்னு சொல்றியே, அப்படி என்னதான் நடந்தது?” என்று சந்துரு துருவிக் கேட்க,
சலித்துக்கொண்டே மெல்ல விவரிக்கத் தொடங்கியவன், “ஒன்னும் இல்ல மச்சி… ஒரு நாலு நாளைக்கு முன்னாடி ஷாப்பிங் போகணும்னு பத்தாயிரம் ரூபாய் கேட்டா.”
“சரி… நீ கொடுத்தியா?”
“தர முடியாதுன்னு சொல்லிட்டேன்! உடனே அவளுக்குக் கோபம் வந்துடுச்சு. ‘எனக்கு ஷாப்பிங் போகப் பணம் தரலைன்னா, நான் இப்போவே எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன்’னு மிரட்டுனா.”
குறுக்கிட்ட யாழினி சிரித்துக்கொண்டே, “நீங்க உடனே ‘சரிம்மா போயிட்டு வா’னு சொல்லி அனுப்பி வச்சிருப்பீங்களே அண்ணா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“அதெல்லாம் இல்லமா… எடுத்த உடனே சரின்னு சொல்லிட முடியுமா? அதெல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லி தடுத்துப் பார்த்தேன். ஆனா அவ, ‘நீ சொல்றதை நான் ஏன் கேட்கணும்? பத்து நாள் இல்ல, இருபது நாள் தங்கிட்டு தான் வருவேன்’னு சவால் விட்டா.”
இப்போது குரலைத் தாழ்த்தி, ஒரு பெருமிதத்தோடு, “நான் என்ன பண்ணேன் தெரியுமா? ‘சொன்ன பேச்சை மீறக்கூடாது டி செல்லம்… இருபது நாள் தங்கிட்டே வா’னு சொல்லி, அப்பவே ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி கையில கொடுத்து அனுப்பிட்டேன். அவளும் கிளம்பிட்டா!”
அதிர்ந்து போன சந்துரு, “அடப்பாவி! பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு இங்க தனியா உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கியா?” என்று கேட்க,
மெல்லச் சந்துருவின் காதருகே வந்தவன், “இனிமேல்தானே மச்சி உனக்குக் கல்யாணம் ஆகப்போகுது… போகப் போக உனக்கும் புரியும். அமைதியான வாழ்க்கை அமையணும்னா சில டிக்கெட்டுகளை நாம தான் புக் பண்ணித் தரணும்!” என கிசுகிசு குரலில் சொல்ல
கணேஷின் அந்த மென்மையான புலம்பல் யாழினியின் காதுகளில் விழுந்துவிட்டது. அவள் தன் இரு புருவங்களையும் உயர்த்தி, “என்ன சொன்னீங்க அண்ணா?” என்பது போல இருவரையும் ஒரு கோபப் பார்வையுடன் முறைத்தாள்.
யாழினியின் அந்த பார்வையை கவனித்த கணேஷ், “சரி சரி… நாம எதுக்கு வீணா பேசிட்டு இருக்கணும்? வாங்க, கல்யாண வேலையைப் பார்க்கலாம்!” என்று நைஸாக அங்கிருந்து நழுவினான்.
சந்துருவும் யாழினியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ள, அந்த கலகலப்பானது.
விசாகப்பட்டினத்தின் விடியற்காலைப் பொழுது. ஒரு சிறிய மலை குன்றின் மேல் அமைந்திருந்த அந்த வெங்கடேஸ்வரா கோவில், அதிகாலைப் பனியில் நனைந்து ரம்மியமாகக் காட்சியளித்தது.
சந்துரு இப்போது ஒரு கம்பீரமான மாப்பிள்ளை. அதே பட்டுச்சட்டை, ஜரிகை பார்டர் போட்ட வேஷ்டி. ஆனால் இம்முறை அவன் முகத்தில் அதிகாரத்தின் இறுக்கம் இல்லை, மாறாக, யாழினியைத் தன் வாழ்நாள் துணையாக ஏற்கப்போகும் ஒரு நெகிழ்ச்சி இருந்தது.
மறுபுறம் யாழினி… மாதுளம் பழ நிறத்தில் ஜொலிக்கும் பட்டுப்புடவை, தலையில் சூடிய மல்லிகைப் பூ, நெற்றியில் ஒரு சிறு திலகம் என ஒரு தேவலோக தேவதையாகத் தயாராகி வந்தாள். அவளைப் பார்த்த சந்துருவின் கண்கள் ஒரு நிமிடம் இமைக்க மறந்தன.
“என்ன சார்… இப்போவாவது நான் அழகா இருக்கேன்னு சொல்லுவீங்களா?” என்று யாழினி மெதுவான குரலில் கேட்க, “நீ அழகா இருக்கேன்னு சொன்னா அது அந்த அழகுக்கே நான் செய்யுற துரோகம் யாழி…” என்று சந்துரு காதலோடு அவள் காதோரம் முணுமுணுக்க, அவள் வெட்கத்தில் சிவந்து போனாள்.
கோவிலின் பிரகாரத்தில் மங்கல இசை முழங்கத் தொடங்கியது. கணேசன் ஒரு தமையனைப் போல முன்னின்று அனைத்துச் சடங்குகளையும் கவனித்துக் கொண்டான். அர்ச்சகர் மந்திரங்களை ஓத, அக்னி சாட்சியாகச் சந்துருவும் யாழினியும் அருகருகே அமர்ந்தனர்.
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்!”
கணேசன் குரல் கொடுக்க, நாதஸ்வரத்தின் வேகம் கூடியது. சந்துரு, யாழினியின் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றிலான தாலியைக் கட்டினான். மூன்று முடிச்சுகள்… அவை வெறும் முடிச்சுகள் அல்ல, இரு இதயங்களை இணைத்த வாழ்நாள் பந்தம். யாழினியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. சந்துரு அவளது நெற்றியில் குங்குமத்தை இட்டு, அவளைத் தன் மனைவியாக அங்கீகரித்தான்.
கல்யாணம் முடிந்ததும் கோவிலுக்கு வெளியே வந்தபோது, கணேசன் தன் வழக்கமான குறும்புடன், “வாழ்த்துகள் மிஸ்டர் & மிஸஸ் சந்துரு! டேய் சந்துரு, இப்போவாது சிரிடா… கல்யாணம் முடிஞ்சும் ஏன் அந்த IPS ஆபீசர் லுக் விட்டுப் போகமாட்டேங்குது?”
சந்துரு சிரித்துக்கொண்டே, “எல்லாம் உன் புண்ணியம் தான் மச்சி. ஒரு வழியா என்னைக் குடும்பஸ்தன் ஆக்கிட்ட,” என்றான்.
கணேசன் இருவரையும் பார்த்து, “சரி சரி… மொதல்ல வாங்க, கல்யாணச் சாப்பாடு ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமா ரெடியா இருக்கு. சாப்பிட்டு முடிச்சுட்டு உங்க ‘வேட்டை’ கச்சேரியை ஆரம்பிக்கலாம்,” என்று அவர்களை உற்சாகமாக அழைத்துச் சென்றான்.
கடலோரம் அமைந்திருந்த அந்தக் கோவிலில் இருந்து இறங்கி வரும்போது, சந்துருவின் ஒரு கையில் யாழினியின் கரம் இருந்தது.
வேட்டை தொடரும் ..⚓
