Rolex 20

20

விசாகப்பட்டினத்தின் மறுநாள் அதிகாலைப் பொழுது, வழக்கத்திற்கு மாறான ஒரு மரண அமைதியுடன் விடிந்தது. கடல் காற்றின் ஈரப்பதம் உடலைத் தழுவினாலும், சந்துருவின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பதற்றம் நிலவியது. அவசரமாகத் தன் சீருடையைச் சரிசெய்து கொண்டு, விறுவிறுவெனத் துறைமுகத்தின் Dock பகுதியை நோக்கி நடந்தான்.

துறைமுகத்தின் நுழைவாயிலைக் கடந்தபோதே, தூரத்தில் தொழிலாளர்கள் பெரும் கூட்டமாகத் திரண்டு நிற்பது தெரிந்தது. அலைகளின் ஓசையை மீறி, அங்கே ஒருவிதமான சலசலப்பும் அதிர்ச்சிக் குரல்களும் கேட்டன. “என்ன நடக்கிறது இங்கே?” என்ற கேள்வியுடன் சந்துரு கூட்டத்தை நோக்கி வேகமாகச் செல்ல, அந்தக் கூட்டத்திலிருந்து முகம் வெளுத்துப் போய் வெளியே வந்தான் கணேஷ்.

சந்துருவைப் பார்த்ததும் கணேஷின் விழிகளில் ஒருவித நடுக்கம் மின்னியது. “என்னடா ஆச்சு? எல்லாரும் எதைப் பார்த்துட்டு இருக்காங்க?” என்று சந்துரு கூட்டத்திற்குள் நுழையப் பார்க்க, கணேஷ் சட்டென்று அவன் தோள்களைப் பற்றித் தடுத்தவன்.

“ஒன்னும் இல்லடா சந்துரு… வா, நாம முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்,” என்று கணேஷ் அவனை வலுக்கட்டாயமாகத் திருப்புவதற்கு முயன்றான்.

கணேஷின் இந்தத் திடீர் பதற்றம் சந்துருவின் சந்தேகத்தை இன்னும் தூண்ட, “உண்மையைச் சொல்லு கணேஷ்! அங்க என்ன இருக்கு? ஏன் இப்படிப் பதறுற?” என்று அவனை மீறிச் செல்ல முயல, கணேஷ் மீண்டும் தடுத்தான்.

“சந்துரு, இது உனக்குத் தேவையில்லாத விஷயம்! இதில் தலையிடாதே. தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பு,” என்று கணேஷ் குரலைத் தாழ்த்தி எச்சரிப்பது போலச் சொன்னான்.

அவன் கையைத் உதறிவிட்டு, “ஒரு போலீஸ்காரன்கிட்ட இதச் சொல்லாத கணேஷ்!” என்று ஆவேசமாகச் சென்ற சந்துரு, கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.

அடுத்த நொடி, சந்துருவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அங்கே தெரிந்த காட்சி, எந்த ஒரு மனிதனின் ரத்தத்தையும் உறையச் செய்யும் ரகம்.

துறைமுகத்தின் அந்த ராட்சத இரும்புத் தூணில் (Mooring Post) சாய்ந்த நிலையில் ஒரு சடலம் கிடந்தது. உடல் முழுவதும் ஏதோ ஒரு கனமான இரும்புக் கம்பியால் அடித்தே சிதைக்கப்பட்டது போல ரத்த வெள்ளத்தில் நனைந்திருந்தது. முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருக்க, மண்டையின் பின்புறம் அந்த இரும்புத் தூணில் மோதிய வேகத்தில் ரத்தம் அலை அலையாக வடிந்து, கீழே ஓடிக்கொண்டிருந்த கடல் நீரில் கரைந்து கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த தொழிலாளர் சீருடை முழுவதும் சிவப்பாக மாறியிருந்தது.

சந்துரு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். “யார் இவ்வளவு கொடூரமா ஒரு மனுஷனைக் கொல்ல முடியும்?” என்று நடுங்கும் குரலில் கேட்டபடி அவன் இன்னும் அருகில் செல்ல முயன்றான். ஆனால், கணேஷ் ஓடி வந்து அவனது கைகளை ஆவேசமாகப் பற்றி, அங்கிருந்து வெளிப்பக்கத்திற்கு இழுத்து வந்தான்.

“டேய் கணேஷ்! நீ ஒரு ஹார்பர் DC ஆபீசர்! உன் கண்ணு முன்னாடி இவ்வளவு பெரிய கொடூரம் நடந்திருக்கு… எதையும் கண்டுக்காம என்னைக் கிளம்பச் சொல்ற? என்னடா நடக்குது இங்க?” என்று சந்துரு சீறினான்.

கணேஷ் பதில் ஏதும் பேசவில்லை. சந்துருவின் ஆவேசத்தைப் பொருட்படுத்தாமல், அவனது முகத்திற்கு நேராகத் தன் கைகளை உயர்த்திக் காட்டியவன்.

“இங்க பாரு சந்துரு… நம்மளுடைய டியூட்டி என்னன்னா, ஹார்பருக்கு வர்ற சரக்கு கப்பல்களைப் பார்க்கிறது மட்டும்தான். மத்தபடி இங்க நடக்கிற இதையெல்லாம் பார்க்கிறது நம்ம வேலை கிடையாது. இதுக்கு மேல நீ இதையெல்லாம் உன்னிப்பா கவனிச்சிட்டு இருந்தேன்னா, உன்னுடைய வேலையை அவங்க பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் உனக்குத் தான் பிரச்சனை!”

கணேஷின் வார்த்தைகளில் இருந்த அந்த மறைமுக எச்சரிக்கை சந்துருவை இன்னும் ஆத்திரப்படுத்தியது. அவன் பின்னாடியே திட்டிக் கொண்டே நடந்தவன். “டேய் கணேஷ்! என்னடா நீ இப்படிப் பண்ற? அந்தப் பைரவன் நேத்து மூணு நாலு பேரைக் கொலை பண்ணிருக்கான். அப்பவும் நீ அமைதியா இருந்த. இன்னைக்கும் இவ்வளவு கொடூரமா ஒரு கொலை நடந்திருக்கு, அப்பவும் எதுவும் பண்ணாம இருக்கிறியே… என்னடா நினைச்சுகிட்டு இருக்க? இதையெல்லாம் கேட்க மாட்டியா?”

தன் அறையை நோக்கி விறுவிறுவென நடந்த கணேஷ், சட்டென்று திரும்பி, “ஏன் கேட்கணும்? எதுக்குக் கேட்கணும்? கேட்டு என்ன பண்ணப் போற?” என்று உணர்ச்சியற்ற குரலில் வினவினான்.

“ஏய் கணேஷ்! இங்க இருக்கிற சிசிடிவி கேமரா மூலமா யாரு இதைப் பண்ணதுன்னு ஈஸியாத் தெரியுமேடா! போலீஸ் கிட்ட விவரத்தைச் சொல்லலாமே!” என்று சந்துரு கத்தினான்.

ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்த கணேஷ், “இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க காக்கி போலீசே வந்துரும். அவங்க என்ன பண்றாங்கன்னு நீயே பாரு. அப்புறம் உனக்கே தெரியும். அங்க இருக்கிறவங்களை நகர சொல்லிட்டு, இது ஏதோ விபத்து மாதிரியோ இல்ல தற்கொலை மாதிரியோ மாத்திட்டு, எந்தத் தடையுமே இல்லாம அந்த இடத்தை கிளீன் பண்ணிட்டுப் போயிடுவாங்க!”

சந்துரு திகைத்துப் போய் நின்றான். “டேய் என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல. இது யாருடைய வேலை? பைரவன் தான இதைப் பண்ணியிருக்கான்? நேத்து ராத்திரி நாம இருக்கும்போது அந்த ரோலக்ஸோட கோட்டைக்குத் தானே அவன் வந்தான்? அப்படி இருக்கும்போது இந்த கொலையை அவன் எதுக்காகப் பண்ணப் போறான்?”

தன் அறைக்குள் நுழைந்த கணேஷ், அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்தவன். மேஜை மீது இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு, திகைத்து நின்றிருந்த சந்துருவை ஏறிட்டுப் பார்த்து, ஒரு வாட்டர் பாட்டிலை அவனிடம் நீட்டினான்.

“இந்தா… முதல்ல இதைக் குடி,” என்றான் கணேஷ். அவனது குரலில் இப்போது ஒருவிதமான பாரம் தெரிந்தது.

அவன் நீட்டிய பாட்டிலை வாங்கி ஓரமாக வைத்த சந்துரு, மேஜையின் மீது இரு கைகளையும் ஊன்றி அவன் முகத்திற்கு நேராகக் குனிந்தான். “உண்மையைச் சொல்லு கணேஷ்… இந்த கொலையைப் பண்ணது பைரவன் தானே?”

“இல்லடா!” கணேஷின் பதில் சுருக்கமாக விழுந்தது.

சந்துருவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “பைரவன் இல்லையா? அப்போ இந்த கொலையைப் பண்ணது யாருடா? உனக்குத் தெரியுமா?”

சந்துருவின் அந்தக் கேள்வி கணேஷைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தது.  உண்மையை மறைக்க முடியாத தர்மசங்கடமும் அவன் முகத்தில் நிழலாடின.

சந்துருவின் கண்கள் கணேஷின் முகத்தையே துளைத்தன. அவன் கேட்ட கேள்வியில் இருந்த அழுத்தம், உண்மையை வெளியே கொண்டு வராமல் விடப்போவதில்லை என்பதை உரக்கச் சொன்னது.

“டேய் கணேஷ்… அப்போ இந்த கொலை செஞ்சவங்க யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படித்தானே?” சந்துருவின் குரலில் ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது.

மெல்ல ஒரு பெருமூச்சை விட்ட கணேஷ், சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஆமாம் என்பது போலக் கனமாகத் தலையாட்டினான்.

“யாருடா அதைப் பண்ணது?” சந்துருவின் பொறுமை எல்லை கடந்து கொண்டிருந்தது.

கணேஷ் அந்தப் பெயரை மெல்லிய குரலில், ஆனால் ஒரு எச்சரிக்கையோடு உச்சரித்தான்…

“ஜகா ரெட்டி!”

அந்தப் பெயர் சந்துருவின் காதுகளுக்குப் புதியதாக இருந்தது. “ஜகா ரெட்டியா? அவன் யாருடா? இங்க புதுசா இருக்கான்?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

கணேஷ் ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான். “நீ தான் இங்க புதுசு சந்துரு… அவன் புதுசு இல்ல, ரொம்பப் பழசு! இத்தனை வருஷமா அடங்கிக் கிடந்த அவனோட ஆதிக்கம் தான் இப்போ இங்க தலைதூக்கிட்டு இருக்கு.”

சந்துரு தன் இருக்கையில் அமர்ந்து, “யாரு அவன்? அவன் பின்னணி என்ன?” என்று ஆர்வமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டான்.

கணேஷ் மேஜை மீது சாய்ந்து ரகசியமாகத் தொடர்ந்தான். “ஆமாம் சந்துரு… ஜகா ரெட்டி! அவனும் இந்தத் துறைமுகத்தைக் கட்டுப்படுத்துற ஒரு தாதா தான். ஆனா அவன் ரொம்பக் கொடூரமானவன். எந்த இரக்கமும் பார்க்க மாட்டான், கண்டமேனிக்குச் சிதைச்சுக் கொலை செய்றது தான் அவனோட ஸ்டைல். ஒரு மிருகத்தை விட மோசமானவன் அவன். எல்லா அக்கிரமங்களையும் செஞ்சுட்டு அசால்ட்டாத் திரியுறவன். ரோலக்ஸோட இடத்தை எப்படியாவது பிடிச்சிடணும்னு ரொம்ப வருஷமா காத்துக்கிட்டு இருந்தான். இப்போ ரோலக்ஸ் இல்லாத நேரம், அவனுக்கு ஆசை சூடு பிடிச்சிடுச்சு. இப்போ இங்க பாரு… இப்படித்தான் எல்லா இடத்திலயும் ரத்த வெறியோட சுத்திக்கிட்டு இருக்கான். யாரை எதுக்குக் கொல்றான்னு அவனுக்கே தெரியாது, அவனுக்குப் பிடிச்சா கொல்வான், பிடிக்கலைன்னா இன்னும் கொடுமையாக் கொல்வான்.”

சந்துருவுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. “அப்போ இவனுக்கும் பைரவனுக்கும் நடுவுல போட்டி சண்டை இருக்கோ?”

மௌனமாகத் தலையாட்டிய கணேஷ். “இல்லடா… இப்போ அதுதான் இங்க இருக்குற கொடுமை. பைரவனும் ஜகா ரெட்டியும் இப்போ கூட்டாளிங்க!”

“என்னடா சொல்ற?” சந்துரு இருக்கையை விட்டுத் துள்ளி எழுந்தான். “ரோலக்ஸுக்கு எதிரானவன்னு சொல்ற, அப்புறம் எப்படி பைரவன் அவன் கூடச் சேர்ந்தான்? பைரவன் ரோலக்ஸோட விசுவாசி இல்லையா?”

கணேஷ் விரக்தியுடன் சொன்னான், “அதுதான் சந்துரு… இங்க எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. ரோலக்ஸ் உயிரோடு இருந்த வரைக்கும் ஜகாவோட ஆக்கிரமிப்பு ஒரு எல்லைக்குள்ள தான் இருந்தது. ரோலக்ஸைப் பார்த்தாலே ஜகாவுக்குப் பயம். ஆனா உள்ளுக்குள்ள ரோலக்ஸுக்கு எதிரா பல சதி வேலைகளை செஞ்சுட்டே இருந்தான். ஜகாவுக்கும் ரோலக்ஸுக்கும் இடையில பலமுறை ரத்த ஆறே ஓடியிருக்கு. ஒரு கட்டத்துல ரோலக்ஸை எதிர்க்க முடியாம ஜகா ஒதுங்கிப் போயிட்டான். ஆனா இப்போ ரோலக்ஸ் இல்லைன்னதும், பைரவன் புத்திசாலித்தனமா ஜகாவோடு கைக்கோர்த்துட்டான். ரோலக்ஸ் கட்டியெழுப்பின சாம்ராஜ்யத்தை இப்போ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பங்கு போட்டுக்கிறாங்க!”

சந்துருவின் முகம் கடுமையாகியது. ஒரு அதிகார வர்க்கமும், ரத்த வெறி பிடிச்ச தாதாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு துறைமுகத்தையே சுடுகாடாக்கிக் கொண்டிருப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

“என்னடா இது… எப்படி? எப்படி இது சாத்தியம்?” சந்துருவின் குரலில் திகைப்பு மேலோங்கி இருந்தது.

“என்ன எப்படி சந்துரு? எல்லாமே பணம்தான்! ஜகாவும் பைரவனும் இப்போ கைகோர்த்துட்டாங்க. இதுக்கு மேல இங்க என்ன இருக்கு? இங்க நடக்கிற எந்த ஆக்கிரமிப்புக்கும், எந்த அநீதிக்கும் இனி எதிர்ப்பே கிடையாது. எல்லாமே அந்தப் பச்சை நோட்டுக்கள் பேசுற பாடுதான்!”

கணேஷ் எழுந்து ஜன்னல் வழியாகத் துறைமுகத்தின் பரபரப்பைப் பார்த்தபடி தொடர்ந்தான். “இங்க வர்ற கடத்தல் சரக்குல இருந்து, சட்டவிரோத வருமானம் வரைக்கும் எல்லாமே இப்போ ஜகாவும் பைரவனும் சரிசமமா பங்கு போட்டுக்குறாங்க. ரோலக்ஸ் இருந்தப்போ ஒரு கட்டுப்பாடு இருந்தது, ஒரு சிஸ்டம் இருந்தது. ஆனா இப்போ அந்த வேலி இல்லாமப் போனதுல, ஜகாவோட ஆக்கிரமிப்பு தலைதூக்கி ஆடுது. தொழிலாளர்களை அவங்க நடத்துற விதம்… அதைச் சொல்லவே எனக்குக் கூசுது சந்துரு. மனுஷத்தன்மையே இல்லாம மிருகத்தனமா நடந்துக்குறாங்க.”

சந்துரு மௌனமாக அதைக் கேட்டுக் கொண்டிருக்க, கணேஷ் மீண்டும் அவன் பக்கம் திரும்பினான். “இங்க இருக்குற பெரும்பாலான கான்ட்ராக்ட் எல்லாமே இப்போ ஜகா கையிலதான் இருக்கு. அவன் பண்ற அத்தனை அக்கிரமத்துக்கும் பைரவன் ஒரு இரும்புச் சுவர் போலச் சப்போர்ட்டா நிக்கிறான். அதனாலதான் அதிகாரம் படைச்சவங்க கூட இப்போ அவங்களை எதிர்த்துப் பேசப் பயப்படுறாங்க.”

சந்துருவின் மூளை வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. “டேய் கணேஷ்… நீ சொல்றதை வச்சுப் பார்த்தா, ஜகாவும் பைரவனும் ஒண்ணு கூடிட்டாங்க. அப்போ ரோலக்ஸைக் கொலை பண்ணதுல ஜகாவுக்குப் பங்கு இருக்குமா?”

கணேஷ் சந்துருவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். “இதுல இன்னும் உனக்குச் சந்தேகம் இருக்கா சந்துரு?”

“பைரவன் தான் ரோலக்ஸைக் கொலை பண்ணிருப்பான்ங்கிற சந்தேகம் ஏற்கனவே இருக்கும்போது, துறைமுகத்தோட இன்னொரு தாதாவான ஜகா கூட அவன் கூட்டு சேர்ந்திருக்கான்னா… கண்டிப்பா ஜகாவுக்கும் இதுல பெரிய சம்பந்தம் இருக்கும். அப்போ நீ சொல்றதை வச்சுப் பார்த்தா, ஜகாவும் பைரவனும் சேர்ந்து திட்டம் போட்டுத்தான் ரோலக்ஸைத் தீர்த்துக்கட்டியிருப்பாங்களோ?” சந்துருவின் குரலில் ஒரு புலனாய்வு அதிகாரியின் கூர்மை தெரிந்தது.

தன் தோள்களை லேசாகக் குலுக்கிய கணேஷ், “இருக்கலாம்… யாருக்குத் தெரியும்? அந்தப் பாவம் இப்போ அவங்களை எந்தளவுக்கு உயர்த்தி வச்சிருக்குன்னு நீயே பார்க்கிறியே!” என்றான்.

சந்துரு ஒரு கணம் யோசித்துவிட்டு, “ரோலக்ஸ்… அவன் நல்லவனா கெட்டவனாடா? எனக்கே இப்போ ஒரு சந்தேகம் வருது,” என்று தார்மீகக் குழப்பத்துடன் கேட்டான்.

சந்துருவின் கண்களில் தெரிந்த அந்தப் அப்பாவித்தனமான குழப்பத்தைக் கண்டு கணேஷ் பலமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு ஒருவித ஏளனமாகவும், ஒருவித வலியின் வெளிப்பாடாகவும் இருந்தது.

“யார் நல்லவன், யார் கெட்டவன் சந்துரு? அது காலம்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒன்னு மட்டும் நிஜம்… ரோலக்ஸ் இருந்தப்போ இருந்த அந்தப் பயம் ஒரு ஒழுக்கத்தைக் கொடுத்தது. இப்போ ஜகா ரெட்டிங்கிற இந்த மிருகம் வந்ததுக்கப்புறம், இங்க ரத்தத்தைத் தவிர வேற எதுவுமே மிஞ்சப் போறதில்லை!”

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
3 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!