மறுநாள் காலை… வழக்கம்போலச் சிறு புன்னகையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த மலரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.
தன் இருக்கையில் அமர்ந்து கணினியைத் திறந்தவள், திட்டக் கோப்புகளைப் பார்த்த அடுத்த நொடியே திகைத்துப் போனாள். அத்தனை கோப்புகளும் சிதைந்து போயிருந்தன. பாலா அவற்றை மீட்டெடுக்கவே முடியாதபடி கச்சிதமாகச் செய்திருந்தான்.
மறுபடியும் முதலிலிருந்து அந்தத் திட்டத்தைச் செயலாக்கம் செய்து முடிக்க எப்படியும் ஒரு வாரம் ஆகிவிடும் என்பதை உணர்ந்தவள், பதற்றத்தோடு திட்டக்குழு மேலாண்மை அலுவலரின் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினாள்.
“மலர்… என்னம்மா இது? நான் கிளையண்ட்கிட்ட ப்ராஜெக்ட் முடிஞ்சதுனு சொல்லிட்டேன்… இப்ப வந்து இப்படிச் சொல்றீங்க? அது எப்படிம்மா டெஸ்டிங் முடிஞ்ச ப்ராஜெக்ட் கரப்ட் ஆகும்? அவ்வளவு பொறுப்பில்லாம வேலை பார்க்குறீங்க!” என்று அவர் ஆத்திரத்தில் கடிந்துகொள்ள, அவளது விழிகளில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.
அறைக்குத் திரும்பிய மலர், தன் இருக்கையில் அமர்ந்து அமைதியாக அழுதே விட்டாள். கண்கள் சிவந்து, விழிநீர் அவளது கன்னங்களில் வழிந்தோடியது.
மேனேஜர் கடிந்துகொண்டதற்காக அவள் அழவில்லை; ஒரு வார காலமாக குழுவினர் உருவாக்கிய செயல்திட்டம், தன் அஜாக்கிரதையால் அழிந்து போனதே என்ற குற்ற உணர்ச்சியும் கவலையும்தான் அவளை வாட்டின.
‘அழுதுகொண்டே முடங்கிப் போவதால் என்ன நடந்துவிடப் போகிறது!’ என்று தன்னைத் தேற்றியவள், துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வாடிக்கையாளரிடம் தானே பேசி இன்னும் சில நாட்கள் அவகாசத்தைப் பெற்றாள். அடுத்த கணமே, புதிய திட்டச் செயலாக்கத்திற்கான வேலைகளில் கவனத்தைச் செலுத்தினாள்.
தன் இருக்கையிலிருந்தவாறே அவளது கண்ணீரைக் கண்டு இதழோரம் நக்கல் புன்னகையை உதிர்த்தான் பாலா. எதேச்சையாக நண்பனைப் பார்த்த சசி, அவனது பார்வை சென்ற இடத்தைக் கவனித்தான்.
“என்னடா பாலா… அங்க மலர் அழுதுட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இப்படி விசித்திரமா சிரிச்சிட்டு இருக்க? என்ன விஷயம்டா?” என்று குழப்பமும் சந்தேகமும் கலந்த குரலில் ரகசியமாக வினவினான் சசி.
நண்பனுக்கு பதிலேதும் தராமல் மர்மப் புன்னகையுடன் மலரை கூர்மையாக நோக்கினான் பாலா.
தேநீர் இடைவேளை நேரத்தில் பாலா தன் நண்பர்களுடன் கேண்டீனுக்குள் நுழைந்தான்.
“இன்னைக்கு என்னோட ட்ரீட்! என்ன வேணுன்னாலும் வாங்கிக்கோங்க!” என்று அவன் குரலை உயர்த்தி அறிவிக்க, மற்ற மூவரும் கையில் இருந்த காபி கோப்பைகளை அப்படியே காற்றில் நிறுத்தினர்.
‘என்ன விஷயமா இருக்கும்?’ என்பதுபோல் மூவரும் அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவர்களின் திகைப்பை ரசித்தபடி, பாலா சற்றே முன்னோக்கி சாய்ந்து அமர்ந்தான்.
“இல்லடா… நாம இங்க வந்த அன்னைக்கே, அந்த மலர் பெரிய இவ மாதிரி எனக்கு ஆர்டர் போட்டா. அதுமட்டுமில்லாம, சும்மா சும்மா என்னைக் கூப்பிட்டு மேனேஜ்மென்ட் பத்தி எனக்கே கிளாஸ் எடுக்குறா. இத்தனை வருஷமா என்னோட கம்பெனியை ரன் பண்ணிட்டு இருக்கேன், எனக்குத் தெரியாததெல்லாம் அவளுக்கு தெரிஞ்சிடுமா? செம்ம கடுப்பா இருந்ததுடா… அதான் அவளோட ப்ராஜெக்ட்டை போட்டுத் தள்ளிட்டேன்!” என்று வில்லத்தனமாகச் சிரித்தான்.
“அடேங்கப்பா! அதான் காலையில இருந்து மலர் சீட்டை விட்டு எந்திரிக்காம கண்ணைக் கசக்கிட்டே இருந்துச்சா? இப்பதான்டா எனக்கு மேட்டரே புரியுது!” என்று கைகளைத் தட்டினான் ராகவ்.
சசியால் பாலாவின் இந்த விபரீத விளையாட்டை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. “அடப்பாவி! நிஜமாவாடா சொல்ற? அந்த வேலையைப் பார்த்தது நீதானா?” என்றான் திகைப்போடு.
“விடுடா சசி… அவ ரொம்பத்தான் ஆட்டம் போட்டா, அவளுக்கு நல்லா வேணும், அழட்டும். அப்போதான் அடுத்தவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு புரியும்” ரகுவும் பாலாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கினான்.
நால்வரும் கேன்டீனின் அரட்டையில் மூழ்கி, தங்களைச் சுற்றி நடப்பதையே மறந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த மேஜையில் அமர்ந்து, அவர்கள் பேசியவற்றை ஒரு ஜோடிக் காதுகள் மிகத் தீவிரமாகக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.
“டேய்! நைட்டும் எங்களுக்கு ட்ரீட் கொடுடா” என்று ராகவ் பாலாவின் தோளைத் தட்டிக் கேட்டதும், “இன்னைக்கு நான் செம்ம ஹாப்பி மூட்ல இருக்கேன். நைட் கொண்டாடிடலாம்!” என்று எழுந்தவன், காற்சட்டைக்குள் கைகளை விட்டபடி கம்பீரமாக புன்னகைத்தான்.
(இவன் என்ன ஹீரோவா, வில்லனா? இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!)
மறுநாள் காலை, பாலா அலுவலகத்திற்கு வந்ததும் நேராக மலரின் கேபினுக்குள் நுழைந்தான்.
“அந்த ப்ராஜெக்ட் எர்ரர் ஆனதுக்கு நீங்கதான் காரணம். அது உங்க தப்பு. சோ… அதை நீங்களே உட்கார்ந்து சரி பண்ணிக்கோங்க. நாங்க அதை மறுபடியும் செய்ய முடியாது. டீம் இனிமேல் புது ப்ராஜெக்ட்ல மட்டும்தான் ஒர்க் பண்ணுவாங்க!” என்று மலர் தனக்கு எடுத்துக்கூறிய நிறுவனத்தின் விதிகளையே அவளுக்கு நினைவூட்டினான்.
அவன் பேசி முடித்ததும், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சசியும், குழுவிலிருந்த மற்ற இரண்டு ஊழியர்களும் பாலாவிற்கு ஆதரவாகத் தலையசைத்து நின்றனர்.
அவளுக்கும் அவர்கள் கூறியது சரியென்றே தோன்ற, கண்களை மூடிப் பெருமூச்செறிந்தவள், “ஓகே… ஆல்ரைட். ஐ வில் மேனேஜ். நீங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்டைப் பாருங்க” என ஒப்புக்கொண்டாள்.
அவள் தனக்குத் தந்தவற்றை பதிலீடு செய்து பழிவாங்கியதை எண்ணி, கர்வப் புன்னகை பூத்தான் பாலா. அவனுக்கு மட்டுமல்லாமல் மற்ற டீம் லீடர்களுக்கும் எல்லையில்லா குதூகலம்.
திறமையால் தங்களை எப்போதும் முந்திக்கொண்டே இருக்கும் மலரின் வீழ்ச்சிக்காக எத்தனையோ நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் தானே!
திட்டமிட்டே தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையைப் பற்றி மலருக்குத் தெரியவில்லை. தன் மீதான பழியையோ, மற்றவர்களின் ஏளனப் பார்வையையோ அவள் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல, தான் உண்டு தன் வேலை உண்டு எனக் கணினித் திரையில் மூழ்கிப்போனாள்.
ஓய்வில்லாமல் இரவும் பகலும் அந்தச் செயல்திட்டத்தில் வேலை பார்த்து, ஏற்கனவே வாடிக்கையாளரிடம் கேட்டுக்கொண்ட அவகாசத்திலேயே அதைச் சமர்ப்பித்தும் விட்டாள்.
******
சில வாரங்களுக்குப் பிறகு…
அன்று ஒரு புதிய ப்ராஜெக்ட்டுக்கான காஸ்ட் கொட்டேஷனைச் சமர்ப்பிக்க வேண்டிய நாள். யார் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிடுகிறார்களோ, அந்தக் குழுவிற்கே செயல்திட்டம் தரப்படும்.
முந்தைய நாள் இரவில் நண்பர்களுடன் மது அருந்தச் சென்றிருந்தவன், போதையின் உச்சத்தில் சுயநினைவை இழந்து, தன் குழுவினர் ரகசியமாகத் திட்டமிட்டு வைத்திருந்த கொட்டேஷன் தொகையை நண்பர்களிடம் உளறிவிட்டான். தன்னை அறியாமலேயே பாலா தங்கள் குழுவிற்கு எதிராகச் செயல்பட்டிருந்தான்.
ராகவ், ரகு இருவரும் அதைத் தனது டீம் லீடர் ஜெகனிடம் பகிர்ந்துகொள்ள, அவனோ சாமர்த்தியமாக மலர் நிர்ணயித்த தொகையை விடக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு, அந்தச் செயல்திட்டத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டான்.
பாலாவின் அஜாக்கிரதையால், மலரின் குழுவிற்கு வரவேண்டிய ப்ராஜெக்ட் கைநழுவிப் போனது.
அலுவலகத்தில் அவள் மீது பொறாமை எண்ணம் கொண்டவர்களோ, அவளது வேதனையில் உள்ளம் மகிழ்ந்தனர்.
‘அவ்ளோதான்! இனிமே மலரோட அத்தியாயம் முடிஞ்சது. அவளோட வீழ்ச்சி அதிகாரப்பூர்வமா ஆரம்பமாகிடுச்சு!’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும், இந்தத் தோல்வி அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ‘ஒர்க்ல வெற்றியோ தோல்வியோ ரெண்டும் சகஜம்தான்’ என்று அதைப் பக்குவமாகக் கடந்துசென்றாள்.
புது செயல்திட்டத்தை ஜெகன் துரிதமாக, எவ்வித பிழையுமின்றி முடித்துக் காட்டினான். நிறுவனத்தின் உயரிய விருதான ‘பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் டீம்!’ அவார்டும், செயல்திறன் ஊக்கத்தொகையும் அந்த மாதம் அவனது குழுவிற்கே கிடைத்தது.
அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமான பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான். விருந்திற்கு தன் குழுவினர் மட்டுமன்றி, அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களையும் அழைத்திருந்தான் ஜெகன்.
கூட்டத்தில் நின்றிருந்த பாலாவைக் கண்டதும் உற்சாகத்துடன் அவனருகே சென்றவன், “தலைவா! இதெல்லாமே உன்னாலதான்… யூ ஆர் சோ கிரேட்!” என்று உரக்கக் கத்தியபடி, பாலாவை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டான்.
எதற்கு இந்தப் பாராட்டு?! என பாலா அவனைப் புரியாத பார்வை பார்க்க, “என்ன மச்சான்! திருதிருன்னு முழிக்கிற? இந்த இன்சென்டிவ், நான் வாங்கின அவார்டு எல்லாமே உன்னால கிடைச்சதுதான்! சியர்ஸ்… இப்போ இருந்து யூ ஆர் மை காட்பாதர்!” என்று தன் கையில் இருந்த மதுக்கோப்பையை உயர்த்திக் காட்டினான் ஜெகன்.
பாலாவிற்கும் சசிக்கும் இன்னுமே அவன் கூறியதன் அர்த்தம் விளங்கவில்லை. குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஜெகன் ஏதோ குடிபோதையில் உளறுகிறான் என்றே நினைத்துக்கொண்டனர்.
“பாலா… அன்னைக்கு, நீதானடா உங்க டீமோட கொட்டேஷன் அமௌன்ட் எவ்வளவுன்னு சொன்ன… அதனாலதான் நாங்க அதைவிடக் கம்மியா கோட் பண்ணி, அந்த ப்ராஜெக்ட்டை வாங்கி சக்சஸ்ஃபுல்லா முடிச்சோம்” என்று எவ்விதக் குற்ற உணர்வுமின்றி உரைத்தனர் ரகுவும் ராகவ்வும்.
“என்னடா இது? தப்பில்லையா? இட்ஸ் நாட் ஃபேர்!” என்று பாலா தன் நண்பர்களை கடிந்துகொள்ள, “அப்போ அன்னைக்கு நீ உங்க டீம் ப்ராஜெக்ட்டை எர்ரர் பண்ணது மட்டும் தப்பில்லையா? இஸ் இட் ஃபேர்? என ராகவ் கேலியாக இதழ் வளைத்ததும், அவனுக்கோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது.
குற்ற உணர்ச்சியில் தவித்த பாலா இறுகிப் போனான், அவனது முகமோ கோபத்தில் சிவந்தது.
“மலர் என்னை வெறுப்பேத்தினா… அதனால நான் அவளைப் பழி வாங்கணும்னு அப்படி செஞ்சேன்… இப்ப மலர் சும்மாதானே இருக்கா? உங்களை எதுவும் பண்ணலியே… அப்புறம் எதுக்குடா அவளோட வேலையைக் கெடுக்குறீங்க?” என்று பாலா நியாயத்தை எடுத்துரைக்க, அவனது நண்பர்களோ கிண்டலாகச் சிரித்தனர்.
“பாலா ப்ரோ… என்ன திடீர்னு நல்லவரா மாறிட்டீங்க?” என்று ஜெகன் நக்கலாகக் கேட்டதில் அவன் பொறுமை பறந்துபோனது. ஆத்திரத்தில் கண்கள் சிவக்க ராகவ்வையும் ஜெகனையும் நோக்கிப் பாய்ந்து அடிக்கச் சென்றான்.
மற்றவர்கள் அவனைத் தடுத்தி நிறுத்த, தன்னைத் தாங்கிப் பிடித்திருந்த நண்பர்களின் கைகளை உதறித் தள்ள முயன்றபடியே, ஆத்திரம் தாளாமல் கத்தினான்.
உணவு, மது, கொண்டாட்டம் என இருந்த இடம் சற்று நேரத்தில் இவர்களது சண்டையில் களேபரமாகிவிட்டது.
சரியாக அதே நேரத்தில் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்த மலர், இதையெல்லாம் அரைகுறையாகக் கேட்டுவிட்டு… அவளிடம் நடந்ததைச் சொல்ல வந்த பாலாவை அறைந்துவிட்டாள்.
ஆத்திரத்திலும் அவமானத்திலும் கண்கள் வெறிக்க மலரைத் திருப்பி அடிக்க அவன் கையை ஓங்கினான். பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்று சசி வேகமாக வந்து பாலாவின் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தினான்.
பாலா, ஜெகன் இருவரையும் வெறுப்போடு ஏறிட்ட மலர், “ஏன்டா, ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என் ப்ராஜெக்ட்டையும் வேலையையும் கெடுத்து நாசமாக்கிட்டு, இதுல உங்களுக்குப் பெருமை வேறயா? இதையெல்லாம் பண்ணிட்டு இப்போ நீ என்னை அடிக்க வேற வர்றியாடா?” என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
“எனக்கு நிகரா, திறமையா வேலை செஞ்சு… என்கூட நேரடியா மோதாம இப்படி மறைமுகமா ஜெயிக்கிறதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்ல? இதுல கொண்டாட்டம் ஒரு கேடு… இருங்க, உங்களை எங்க கம்ப்ளைன்ட் பண்ணணுமோ அங்க கம்ப்ளைன்ட் பண்ணிக்கிறேன்! ச்சீ… ” என்று அவர்களை ஒரு புழுவைப் போல அற்பமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
மலரின் கோபத்தைக் கண்ட அனைவரும் ஸ்தம்பித்துப் போயினர். பாவம், அவளும் எவ்வளவுதான் பொறுத்துப்போவாள்? தன்னைப்பற்றிய அனைத்துப் புறப் பேச்சுகளையும் அவதூறுகளையும் ஒரு புன்னகையோடு கடந்து சென்றவள், தன் உழைப்பையும் வேலையையும் திட்டமிட்டுக் கெடுத்தார்கள் என்றதும் அவளால் தாங்க முடியவில்லை; அணை உடைந்த வெள்ளமாய் பொங்கிவிட்டாள்.
மலரின் நியாயத்தை இந்த சுயநலக் கூட்டத்தில் யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? தவறே செய்யாமல் பழி ஏற்றதும்… இத்தனை பேர் முன்னிலையில் அடி வாங்கியதும் பாலாவிற்குப் பெருத்த அவமானமாய் போனது. ஆமாம், பாலா அடிக்காமல் வளர்க்கப்பட்ட செல்லப் பிள்ளை!
இனி, பாலாவின் பழிவாங்கும் படலம் ஆரம்பம்… அறிவுரை கூறியதற்கே ப்ராஜெக்ட்டை எர்ரர் செய்தவன், இப்போது அவள் அடித்தே விட்டாளே! என்ன செய்யக் காத்திருக்கிறானோ?!
🌹காதல் மலரும்🌹
