அத்தியாயம் 6

“பாலா… நீங்க பென்டிரைவ் எடுக்கலைனு தெரியாம நான் உங்களை அன்னைக்கு அடிச்சது தப்புதான். அதுக்காக நீங்க பதிலுக்கு என்னை ஒரு அடி இல்ல, எத்தனை அடி வேணும்னாலும் அடிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு… ச்சீ! ஒரு பொண்ணைக் காயப்படுத்தணும்னா முதல்ல அவளோட மானத்துலதான் கை வைக்கணும்னு உங்களுக்குத் தோணுதுல்ல?” என்று மலர் அவனை அழுத்தமாக நோக்கினாள். 

அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தான் பாலா. அவளது கண்ணீரும் வலி மிகுந்த வார்த்தைகளும் அவனைச் சித்திரவதை செய்தன; கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நிற்பதைப் போல் உணர்ந்தான். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், அவசரமாய் வெளியேறினான்.

பாவம்… பாலாவும் எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. ‘நான் எந்தத் தப்பும் பண்ணல… இனிமேல் என் மேல கை வைக்கிற வேலை வச்சுக்காத!’ என்று மலரை மிரட்டுவதற்காக மட்டும்தான் அன்று அவளைத் தடுத்து நிறுத்தினான். ஆனால்… மிகுந்த கோபத்தில் மதியிழந்து, அவளிடம் மூர்க்கத்தனமாக எல்லை மீறினான்.

இப்போது தன் தவறுகளை அவன் நியாயப்படுத்த விரும்பவில்லை; இனி இந்த மாதிரியான தவறைச் செய்யாமல் அவளிடம் ஒழுங்காக, சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று மட்டுமே அவனது மனம் நினைத்தது.

தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இருந்தாலும், அவளிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு அவனது மனம் சற்று நிம்மதியடைந்தது. 

அதன் பிறகு, தானுண்டு தன் வேலையுண்டு என்று அவளை விட்டு விலகியே இருந்தான். 

அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு மலரும் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தாள். ஜெகனுக்கு வேலை போனது அவளுக்கு பெரும் மனவருத்தத்தைத் தந்தது. 

‘அவனுக்கும் குடும்பம் இருக்கும்தானே? அவர்களும் கஷ்டப்படுவார்களே? அவனுக்கு வேலை போனதை நினைத்து வருந்துவார்களே?!’ என்றெண்ணி அவளது மனம் கனத்தது. 

அலுவலகத்தில் எல்லோரும் சொல்லும்படி, ‘ஒருவேளை நான்தான் மற்றவர்களின் வெற்றியைத் தடுக்கிறேனோ, வாய்ப்புகளை பறிக்கிறேனோ, அவர்களை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் தடுக்கிறேனோ?!’ என்று தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொண்டிருந்தாள். 

தன் பணி மீது அவளுக்கிருந்த நேர்மைக்கும், ஈடுபாட்டிற்கும் பின்னால் ஒரு பலமான காரணமும் இருந்தது.

மற்றவர்களுக்கு இது வெறும் மாதச் சம்பளத்திற்கான வேலையாகவோ, அடையத் துடிக்கும் கார்ப்பரேட் கனவாகவோ இருக்கலாம். மலருக்கோ இந்த வேலை தன் வாழ்நாளின் ஆகப் பெரும் பொக்கிஷம். 

அவளுக்கென ஆதரவளிக்கப் பெற்றோரோ, சொந்தங்களோ யாருமில்லை; காப்பகத்தில் அநாதையாக வளர்ந்தவள். அவளது வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி என எதுவுமே அத்தனை எளிதாக அவளை வந்தடையவில்லை. 

எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவரை, பிறரின் கருணையைச் சார்ந்துதான் கிடக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாகவே கைக்குக் கிடைத்த சிறு வாய்ப்புகளையும் பொன்னாகக் கருதி, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள்.

கல்வி ஒன்றே தன் நிலையை மாற்றும் என நம்பிய மலர், படிப்பையே தன் வாழ்வாதாரமாக இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். எப்படியாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்து, தன்னை வளர்த்தெடுத்த காப்பகத்தில் தன்னைப் போலவே உள்ள குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தாள். 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று, அதன் பலனாகக் கிடைத்த முழு கல்வி உதவித்தொகையைக் கொண்டு, நகரின் புகழ்பெற்றதொரு கல்லூரியிலும் தடம் பதித்தாள். 

கல்லூரியிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால், கல்லூரி வளாக நேர்காணலில் தேர்வாகி, இந்த நிறுவனத்தில் பணியில் அமர்ந்தாள்.

தன் வேலையை விரும்பி, மனமகிழ்ச்சியோடு செய்துவந்தாள்; தான் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். சற்றும் சோர்ந்து போகாமல் அத்தனை வேலைகளையும் குறித்த நேரத்தில் கச்சிதமாக முடித்தாள். அவளது அசாத்திய திறமையால் மட்டுமே அவள் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறினாள். 

‘மலரிடம் சொன்னால் அந்த வேலை நூறு சதவீதம் கச்சிதமாக முடியும்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே, நிர்வாக இயக்குநரும், மேலாளரும் பல முக்கியத் திட்டங்களை அவளிடம் ஒப்படைத்தனர். 

அவளது இந்த அசுர வளர்ச்சி மற்றவர்களுக்கு மலர் மீது தேவையற்ற வெறுப்பை உண்டாக்கியது. ‘மேலதிகாரிகளைத் தன் அழகாலும் பேச்சாலும் மயக்கி, கைக்குள் போட்டு வைத்திருக்கிறாள்’ என்று அவளது தூய்மையான குணத்தின் மீது அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

அலுவலகத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, மலர் சில முக்கிய முடிவுகளை எடுத்திருந்தாள். இப்போதெல்லாம் மீட்டிங், கொட்டேஷன் என எது நடந்தாலும் அவள் முந்திக்கொண்டு வாயைத் திறப்பதில்லை; தானாக முன்வந்து எந்த வேலையையும் ஏற்றுக் கொள்வதில்லை. 

மற்றவர்கள் செய்யும் வரை அமைதியாகப் பொறுத்திருந்தாள். யாரும் செய்ய முன்வராத பட்சத்தில் மட்டுமே புதுத் திட்டங்களைக் கையில் எடுத்தாள்.

பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ், டார்கெட்ஸ், இன்சென்டிவ் என எதைப் பற்றியும் அவள் யோசிப்பதே இல்லை. மற்ற குழுக்களுக்கு அவளது இந்த விலகல் உற்சாகத்தை அளித்தாலும், மலரின் டீம் மேட்ஸ், இந்த விசித்திரமான மாற்றத்தால் சோர்வடைந்தனர். பாலாவும், ‘என்ன திடீரென இவ்வளவு வித்தியாசமாக நடந்து கொள்கிறாள்?’ என்று திகைத்தான்.

அன்று காலைப் பொழுதின் ஆரம்பத்திலேயே, அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தனஞ்செழியனின் கார் அலுவலக வளாகத்திற்குள் வந்து நின்றது. அவர் எப்போதாவதுதான் அலுவலகத்திற்கு நேரில் வருவது வழக்கம்; தீர்க்க முடியாத ஏதேனும் முக்கியப் பணிகள் இருந்தால் மட்டுமே அவரது வருகை இருக்கும். 

அவர் நேரில் வராவிட்டாலும் கூட, மேலாளர் மற்றும் சில முக்கிய ஊழியர்களின் துணையோடு, அலுவலகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் இல்லத்தில் இருந்தபடியே விரல் நுனியில் கட்டுப்படுத்துபவர்.

அலுவலகத்திற்குள் நுழைந்த தனஞ்செழியன், இண்டர்காமில் பாலாவையும் மலரையும் உடனடியாகத் தன் அறைக்கு வரவழைத்தார். அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும், “உட்காருங்க…” என்று தன் அதிகாரக் குரலில் அமரச் சொன்னார்.

“மலர்… ப்ராஜெக்ட்ஸ்லாம் இப்போ எப்படி போயிட்டு இருக்கு?” தனஞ்செழியனின் குரலில் ஒரு கனிவான கம்பீரம் இருந்தது.

“சார்… எல்லாமே பெர்ஃபெக்ட்டா போயிட்டு இருக்கு. லாஸ்ட் டைம் காட்டிலும் இந்த குவார்ட்டர்ல கம்பெனியோட பிராஃபிட்ஸ் அண்ட் ஷேர்ஸ் குரோத்ல இருக்கு சார்” என்று பணி பற்றிய விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள்.

அவளது முகத்தையே உற்று நோக்கியவர், “என் மேல உள்ள மரியாதையால உனக்கு ஆபீஸ்ல ரொம்பப் பெரிய மன உளைச்சலும் பிரச்சனையும் வந்துடுச்சு இல்லம்மா?” என்று கேட்க, மலர் அதிர்ந்து போய் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

தனஞ்செழியன் பாலாவின் புறம் திரும்பியவர், “உன்னோட பிரச்சனை என்னன்னு எனக்குத் தெரியும். மலர் உன்கிட்ட ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கிறாங்க… ஒரு டீம் லீடரா உனக்கு லீடர்ஷிப், மேனேஜ்மென்ட் பத்தி அடிக்கடி அட்வைஸ் பண்றாங்க… இதுதானே உன்னோட குறை? அதனால அவங்ககிட்ட நீ உன் கோபத்தை வெளிப்படுத்துற, சரியா?!” என்று அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அவனோ பதில் சொல்லத் தடுமாறினான்.

“மலர் உன்கிட்ட இப்படி நடந்துக்கிறதுக்கான காரணம் நான்தான். இந்த ஆபீஸ்ல ரொம்ப சின்சியரா, டெடிகேட்டிவா ஒர்க் பண்ற சில ஸ்டாஃப்ஸ்ல அவங்களும் ஒருத்தர். அதனாலதான் உன்னை அந்த டீம்ல போடச் சொன்னேன். 

“மலர் எல்லாத்தையுமே ரொம்பப் பெர்ஃபெக்ட்டா பண்ணுவாங்க. நீ அவங்க டீம்ல இருக்கும்போது, ஒரு நல்ல லீடருக்கான பல நுணுக்கங்களை அவங்களைப் பார்த்து கத்துக்க முடியும்னு நான் நம்பினேன். அதுமட்டுமில்லாம, மலர்கிட்டயும் உன்னைப்பத்திச் சில விஷயங்களை நான் ஏற்கனவே சொல்லி வச்சிருந்தேன்” என்று உண்மைகளை உடைத்தார் தனஞ்செழியன்.

“இங்க பாரு பாலா… நீ என் ஃப்ரெண்ட்டோட பையன் மட்டும் இல்ல… என்னோட பையனும்தான். நான் உன்னை அப்படித்தான் நினைக்கிறேன். இந்த ஆபீஸ்ல ஒரு ஸ்டாஃப்பா நடத்தணும் அப்படிங்கிறது என்னோட எண்ணம் இல்லை. 

“உன் அப்பா இரவீந்திரனும் உன்னை மாதிரியே ரொம்ப அவசர புத்தி, துருதுருன்னு இருப்பான். நானும் அவனும் இந்த கம்பெனியை ஆரம்பிச்சப்போ, இரண்டு பேரும் சமமா உழைச்சுதான் இதை இந்த அளவுக்கு முன்னிறுத்தினோம். அவன் பிசினஸை ரொம்பப் பெரிய லெவல்ல பண்ணனும்னு ஆசைப்பட்டான்.

‘வேணாண்டா, முடிஞ்சதை மட்டும் செய்யலாம்… ரொம்பப் பெருசா பண்ணி அப்புறம் யோசிக்கக் கூடாது’ அப்படின்னு நான் அவன்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவன் கேட்கல” என்று பெருமூச்சு விட்டபடி பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

“அவனும் அவனோட ஷேர்ஸ்-ஐ பிரிச்சிட்டுப் போய் தனியா கம்பெனி ஆரம்பிச்சான், இந்தியா முழுக்கத் தன் பிசினஸைக் கொண்டு போகணும்னு நினைச்சான். ஒருபக்கம் ஃபேமிலியையும் இன்னொரு பக்கம் பிசினஸையும் அவனால சமாளிக்க முடியல. எப்படியோ பிசினஸை ஒருவழியா நல்லபடியா கொண்டு போய், பெரிய லெவல்ல வந்தான். 

“எதிர்பாராம அந்த ஆக்ஸிடென்ட்ல அவன் இறந்து போவான்னு நான் நினைக்கவே இல்ல.

அதோட, பிசினஸ்ல எந்த முன் அனுபவமும் இல்லாத, உன்னோட டீன் ஏஜ்ல, இவ்வளவு பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க எனக்குக் கொஞ்சம் யோசனையாத்தான் இருந்தது. அதனாலதான் நீ பி.ஜி முடிச்சதும், உன்கிட்ட உன் அப்பாவோட பிசினஸை முழுமையா ஒப்படைச்சேன்.

“நீயும் அந்த பிசினஸை உன்னால முடிஞ்ச வரைக்கும் சிறப்பாத்தான் கொண்டு போன பாலா. உன் நண்பர்களை உன் கூட பார்ட்னர்ஸா சேர்த்துக்கிட்ட. பெரிய பெரிய ப்ராஜெக்ட் எடுத்துப் பண்ணனும், அதுவும் ரொம்ப வேகமா பண்ணனும்னு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிட்ட. அந்த அவசரப் புத்தியாலதான் உனக்கு பெரிய லாஸ் ஏற்பட்டு, பைனான்சியலா நீ நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியதா ஆகிடுச்சு.

“நான் எல்லாத்தையுமே புரிஞ்சுக்கத்தான் செய்யுறேன். இருந்தாலும், ‘உனக்கு எந்த உதவியும் நான் செய்யலையே’ அப்படின்னு என்மேல உனக்கு வருத்தமாக்கூட இருக்கலாம். நான் எல்லாத்தையுமே கொஞ்சம் பொறுமையாத்தான் ஹேண்டில் பண்ணுவேன். அதுக்கான நேரம் வரணும், அதுக்கான சில தகுதிகள் வரணும்னு யோசிப்பேன்.

“இவ்வளவு வருஷமா ஒரு பெரிய கம்பெனியை ரன் பண்ணிட்டிருந்த உனக்குத் தெரியாதது எதுவும் இல்ல. ஆனாலும், பொறுமையா எல்லா விஷயங்களையும் எப்படி ஹேண்டில் பண்ணணும்கிறதை நீ கத்துக்கணும்.

“அதனாலதான் இந்த ஆபீஸ்ல பேசிக்ல இருந்து நீ எல்லாத்தையும் கத்துக்கிட்டு வரணும்கிறதுக்காகத்தான், உன்னை ஜூனியர் அசிஸ்டன்ட்டா போடச் சொன்னேன்.  என்னோட இந்த முடிவால மலருக்குத்தான் நிறைய கஷ்டம்னு நினைக்கிறேன், என்னம்மா… நான் சொல்றது சரியா?” என்றார் எம்.டி தனஞ்செழியன் மலரை நோக்கிப் புன்னகைத்தபடி.

“சார்… நீங்க கொடுத்த வேலையைச் செய்யறதுல எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை. ஆனா, அதை மத்தவங்க எப்படிப் புரிஞ்சிக்கிறாங்கன்றது எனக்கு இதுநாள் வரைக்கும் தெரியாம இருந்தது. ஆபீஸ்ல எல்லாருமே என்னை ஒரு போட்டியாத்தான் பார்க்கிறாங்க; காரணமே இல்லாம என்மேல கோபத்துல இருக்காங்க. நான் எம்.டி, மேனேஜர் எல்லாரையும் கைல போட்டுக்கிட்டுதான் இந்த மாதிரி வெற்றிகள் அடையுறேன் அப்படிங்கற மாதிரி தப்பா பேசுறாங்க… அது கேட்கும்போது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்குது சார்” என்று மலர் கண்கள் கலங்கினாள்.

“அதனாலதான் நீ பொறுமையா யோசிச்சு, இப்போ சில முடிவுகள் எல்லாம் எடுத்திருக்க, சரியாமா?” என்று எம்.டி புரிதலோடு வினவியதும்,

“எஸ் சார்… நான் இப்போ பொறுமையாத்தான் இருக்கேன். எல்லா வேலையையும் நானே இழுத்துப் போட்டுட்டுச் செய்யுறது இல்ல. இன்சென்டிவ் பத்தியெல்லாம் யோசிக்கிறதே இல்ல. எல்லாருக்குமே அவங்கவங்களுக்கான ஸ்பேஸைக் கொடுத்தாதானே அவங்களோட திறமை என்னன்னு நிர்வாகத்துக்குத் தெரியும்? எனக்கு அப்படித்தான் தோணுச்சு. அதனாலதான் இப்போ கொஞ்சம் மெதுவா, சோம்பேறித்தனமா எல்லா வேலையையும் பார்த்துட்டு இருக்கேன்” தன் விழிகளிலிருந்து வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டவள், மெலிதாய் புன்னகை பூத்தாள்.

🌹காதல் மலரும்🌹 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!