வெற்றி கொடுத்த ஒரு வார காலக்கெடு முடிந்து விட்டது.
கல்லூரியில் மூன்று தோழிகளுக்கும் நடுவே சலசலப்பு அதிகமாக இருந்தது.
“அனு, நீ அந்த அண்ணாகிட்ட எங்களுக்காக பேசு டி!” என்றாள் அவளின் தோழி விஷாகா.
அனுவின் புருவங்கள் சுருங்கியது. தோழியை தீயாக முறைத்து பார்த்தாள்.
“ஆமா டி, நீங்க இப்போ அந்த அண்ணன் வீட்டுலதான வாடகைக்கு குடி இருக்கீங்க. நீ அதுனால எங்களுக்காக பேசி பாரு,” என்றாள் இன்னொரு தோழி நிஷா.
அனு பயத்தில் இரு தோழிகளையும் பார்த்து, “அப்போ உங்ககிட்ட பணம் இல்லையா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“இல்லை டி, ரெடி பண்ண முடியல. நீ அந்த அண்ணாகிட்ட இன்னும் ஒரு வாரம் டைம் கேட்டு பாரு,” என்றாள் நிஷா.
இவளுக்கு கைகள் நடுங்கியது. “அவரை பார்க்க நல்ல விதமாவே தெரியல. அவரோட பார்வை ரொம்ப தப்பா இருக்குது தெரியுமா? நான் எப்படி அவர்கிட்ட டைம் கேட்க முடியும்?” என்று பயத்தில் விழிகளை உருட்டி தோழிகளை பார்த்தாள்.
அவளின் கால்கள் வெற்றியை நினைத்ததற்கே நடுங்க ஆரம்பித்து விட்டது.
“எங்களுக்காக கேட்க மாட்டியா அனு? நாங்க உன் ஃப்ரெண்ட்ஸ். இதுவே நீ இந்த நிலைமையில இருந்தா நாங்க கண்டிப்பா உனக்காக உதவிக்கு வந்து நின்னுருப்போம்,” என்று கூறினாள் விஷாகா.
“ஆமா அனு, நீ ரொம்ப சுயநலவாதியா இருக்க,” என்று முகத்தை திருப்பிய நிஷாவை பார்த்ததும் அனுவுக்கு பயம் மறைந்து கோபம் வந்து விட்டது. அவளுக்கு கோபம் வந்தால் நொடியில் நுனி மூக்கு சிவந்து விடும்.
இப்பொழுதும் மூக்கு சிவக்க தோழியை பார்த்தவள், “என்ன சொன்ன? நான் சுயநலவாதியா?” என்று கோபத்தோடு நிஷாவை பார்த்து விட்டு பின் விஷாகாவை பார்த்தவள், “நான் உங்க ரெண்டு பேரோட நிலைமையில இருந்தா நீங்க எனக்காக முன்னாடி வந்து ஹெல்ப் பண்ணுவிங்களா?” என்று கேட்டாள்.
நிஷாவுக்கும் விஷாகாவுக்கும் அவளின் கோபம் கண்டு லேசான பயம் துளிர்த்தது.
“அது இல்லை அனு…” என்று பேச வந்த விஷாகாவை கை நீட்டி தடுத்தாள் அனு.
விஷாகா அவளின் கோபம் கண்டு முகம் வெளிறி போனாள்.
அனுவுக்கு அதிகமாக கோபப்பட தெரியாது. அப்படியே கோபம் வந்தாலும் அதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கும். இப்பொழுது அவளுக்கு கோபம் வந்ததுக்கு முக்கிய காரணம், தோழிகள் இருவரும் தன் நட்பை இழிவுபடுத்தி விட்டார்களே என்றுதான்.
“நான் எப்பவும் உங்க நிலைமைக்கு வர மாட்டேன் விஷாகா. ஏனா எனக்கு எந்த ஆணோட அன்பும் தேவைப்படாது, என் அப்பா ஒருத்தரை தவிர. அப்படியே எனக்கும் காதல் வந்தாலும் இப்படி கையில காசு இல்லாத நேரத்துல காதலர் தினம் கொண்டாட மாட்டேன்,” என்றவளை இருவரும் பேயை பார்த்தது போல் பார்த்தனர்.
நிஷா எழுந்து அவளின் கைகளை பற்றினாள். “சாரி அனு, அது ஏதோ பயத்துல விஷாகா அப்படி சொல்லிட்டா. நீ ப்ளீஸ் சீரியஸா எடுத்துக்காத,” என்று கொஞ்சலாக சொன்னாள்.
அனுவின் முகம் நொடியில் நார்மலானது. நிஷாவும் விஷாகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிஷா விஷாகாவிடம் கண்ணை சிமிட்டி, “எதுவும் பேசாதே,” என்பது போல் கூறினாள்.
விஷாகா மெதுவாக தலை அசைத்துக் கொண்டாள்.
“எங்களுக்காக ஒரே ஒரு முறை அவருகிட்ட பேசி பாரு அனு. ப்ளீஸ், நாங்க ஏதோ தெரியாமல் இப்படி பண்ணிட்டோம். இதை வீட்டுல சொன்னா எங்க வீட்டுல காலேஜ்க்கு அனுப்ப மாட்டாங்க,” என்று அழுவது போல் பாவனை செய்தாள் நிஷா.
அவள் அழுததும் விஷாகாவும் இரண்டு சொட்டு கண்ணீரை சிரமப்பட்டு வெளியே விட்டாள்.
“ஆமா அனு, என் வீட்டுல நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சா கொன்னு பொதச்சிருவாங்க அனு,” என்று தேம்பினாள்.
இவளுக்கு தோழிகளை பார்க்கும் போது பாவமாக இருந்தது. “சரி, உங்களுக்காக அவர்கிட்ட பேசி பார்க்குறேன்,” என்றாள்.
“இப்போதான் அனு நீ எங்களோட பெஸ்ட் ஃப்ரென்ட்,” என்று இருவரும் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டனர்.
அனுவுக்குதான் வெற்றியை நினைத்ததும் மறுபடியும் பயம் தொற்றிக் கொண்டது.
****
கல்லூரி முடிந்து விட்டது. அனுவின் முகம் இன்னும் பயத்தில் சுண்டி போய் இருந்தது.
ஆனால், நிஷா விஷாகா இருவரும் கதை பேசி பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டு நடந்தனர்.
“காலேஜ் பக்கத்துல பஸ் ஸ்டாண்ட் கட்டி வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் நிஷா. இப்போ பாரு, ரொம்ப தூரம் நடக்கணும். கால் ரொம்ப வலிக்குது,” என்று புலம்பிக் கொண்டே நடந்தாள் விஷாகா.
“எங்க அப்பா கார்ல வந்து அழைச்சிட்டு போறேன்னு சொன்னாரு விஷா. ஆனால், நான் வேணாம்னு சொல்லிட்டேன். எல்லாம் அனுவுக்காகதான். ஏனா நம்ம அனு தனியா நடந்து போவா. நாம அவளோட சேர்ந்து நடந்தா அவளுக்கும் ஒரு ஹாப்பியா இருக்கும். ஃப்ரென்ட்ஷிப்ல இது ரொம்ப சாதாரணம்,” என்றாள் நிஷா.
வெற்றியிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தித்துக் கொண்டு வந்த அனு, நிஷாவின் வார்த்தையில் நடையை நிறுத்தி விட, புயல் வேகத்தில் ஒரு கருப்பு நிற கார் வந்து நிஷாவையும் விஷாகாவையும் கவர்ந்து சென்று விட்டது.
அனு திடீரென்று நடந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள். அவளுக்கு கத்த வேண்டும் என்ற சுயநினைவு கூட இல்லை. அதிர்ச்சியில் அவளால் காற்றை கூட சுவாசிக்க மறந்து நின்றிருந்தாள்.
அது ஆள் அரவமற்ற காட்டு வழி சாலை. நிஷாவையும் விஷாகாவையும் கவர்ந்து சென்ற கருப்பு நிற கார் போல் மற்றொரு கார் வந்து அவள் அருகில் நின்றது.
காரை பார்த்து திகைத்து நின்றிருந்தாள் அனு. காரின் கண்ணாடி கீழே இறங்கியது. புருவங்கள் ஏறி இறங்க, முறைப்பாக டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் வெற்றி.
யாரோ தன் தலையில் தட்டியதை போல் சட்டென்று சுயநினைவுக்கு வந்திருந்தாள் அனு.
“சார், என்னோட ப்ரெண்ட்ஸ்ஸை யாரோ சில பேர் கடத்திட்டு போறாங்க சார்,” அழுகையோடு கூறியவளை ஏற இறங்க பார்த்தான் அவன்.
“வாங்க சார், காப்பாத்துவோம்.” கடத்தியவனிடமே உதவி கேட்கிறாள் இந்த குட்டி தேவதை.
“நான்தான் கிட்னாப் பண்ணேன்.” கருப்பு நிற கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு கூலாக சொன்னான் வெற்றி.
“ஏன் சார்? பாவம் அவங்க,” என்று அழுகுரலில் கூறினாள் அனு.
அவள் அழும் பொழுது முகமெல்லாம் சிவந்து விட்டது. அவன் இமை சிமிட்டாமல் அவளின் சிவந்த வதனத்தை ரசித்து பார்த்தான்.
“நீ வண்டியில ஏறு, அவங்கள கடத்திட்டு போன இடத்துக்கு உன்னையும் கடத்திட்டு போறேன்,” கண்ணடித்து கூறினான்.
இவள் உடனே வண்டியில் ஏறினாள். “சார், அவங்கள விட்டுருங்க சார்,” அழுகை இன்னும் நிற்கவில்லை அவளுக்கு. “வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும் சார்.” சிறு குழந்தை போல் அழுபவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.
கார் நிற்கும் வரை அவளின் அழுகை ஓயவில்லை. இவனும் எதுவும் கூறவில்லை.
நேராக அவனின் அலுவலகத்துக்குதான் அவளை அழைத்து வந்திருந்தான்.
அங்கே கை கால்கள் கட்டப்பட்டு முட்டிப் போட்ட வண்ணம் நின்றிருந்தனர் இரு இளைஞர்கள்.
அவர்களின் அருகில் நிஷாவும் விஷாகாவும் அதே நிலையில் இருந்தனர்.
“ஹய்யோ, ரமேஷ் அண்ணா, சுரேஷ் அண்ணா!” என்று பதறிக் கொண்டு அவர்களின் அருகில் ஓடினாள் அனு.
இவ்வளவு நேரமும் அவள் அழுது கொண்டிருப்பதை ரசித்தவன், இப்பொழுது “ஹேய், மூச்!” என்றான் கடுமையான குரலில்.
அந்த இடமே நொடியில் அமைதியானது.
“என்ன டைரிமில்க் விளம்பரமா இங்கே நடக்குது?” வெற்றியின் கோப முகம் கண்டு அனைவரும் பயத்தில் உறைந்தனர்.
வெற்றியின் உதவியாளன் ரவிதான் அவர்களை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரவி, இந்த பசங்க மூஞ்சை உடைக்க சொன்னேன். நீ அவங்கள முழுசா விட்டு வச்சிருக்க,” என்றவனின் பார்வை ரவியின் மேல் விழுந்தது.
“சின்ன பசங்கண்ணா, பாவம்,” என்றான் ரவி.
“இந்த பாவம், இரக்கம் எல்லாம் நம்ம தொழிலுக்கு செட்டாகாது ரவி. நான் உன்னையவே பாவம் பார்க்க மாட்டேன். நீ இவங்களுக்கு பாவம் பார்க்குறியா?” என்று ஆபிஸ் அதிர சத்தம் வைத்தான் வெற்றி.
“சாரிண்ணா,” என்ற ரவி அதற்கு மேல் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்.
வெற்றி அந்த பெண்களின் முன்னால் சென்று அமர்ந்தான். “உங்க ஒரு வாரம் டைம் முடிஞ்சு போச்சு. என் பணம் இப்போ என் கைக்கு வரணும்,” என்றான். அவனின் விழிகள் பார்த்து பெண்கள் இருவரும் கதி கலங்கி அமர்ந்திருந்தனர்.
இருவரிடமும் பதில் இல்லை.
“ரவி, இவளுங்க அப்பனுக்கு போன் போடு,” என்றான் வெற்றி.
“ஐயோ சார், விட்டுருங்க சார்,” என்ற அனு அவனின் முன்னால் வந்து நின்றாள்.
“எனக்கு என் பணம் கைக்கு வரணும். நான் இதுவரைக்கும் யாருக்கும் கை மாத்தா பணம் தந்தது இல்லை. உங்களுக்கு தந்த பத்தாயிரத்தை வெளில கொடுத்து இருந்தேனா, இப்போ என் கையில ஐம்பதாயிரம் பணம் இருந்திருக்கும்,” என்றான்.
இவர்கள் அவனின் கணக்கு புரியாமல் திரு திருவென்று விழித்தனர்.
“பணம் தந்தாதான் விடுவிங்களா?” அனுவின் நுனி மூக்கு சிவந்து விட்டது. அனுவுக்கே கோபம் வந்து விட்டது போலும்.
“ஆமா, என் பணம் வரணும்.” அவனும் அவளின் கோபத்துக்கு மேல் ஈடு கொடுத்தான்.
இவள் எதுவோ யோசித்தாள். பின் தன் கால்களை பார்த்தவள், இரண்டு கால்களிலும் அணிந்திருந்த கொலுசுகளை மனதை கல்லாக்கிக் கொண்டு கழட்டினாள்.
இவன் அவளின் வெண் பிஞ்சு பாதங்களை பார்த்தான். அந்த பாதங்களில் வெள்ளி கொலுசு சிணுங்காமல் வெறுமையாக இருந்தது.
கழட்டிய வெள்ளி கொலுசை அவனின் முன்னால் நீட்டினாள். “இப்போதைக்கு இதை வச்சிக்கோங்க. பணம் தந்துட்டு இதை வாங்கிக்கிறேன்,” என்றாள்.
அவளின் நுனி மூக்கை பார்த்தவன், கீழ் இதழை அழுந்தக் கடித்து விட்டு, “இது என்ன அடகு கடையா?” என்று கேட்டான்.
“ப்ளீஸ் சார், இதை வச்சிக்கோங்க. நானே உங்க கடனை அடைச்சிட்டு என்னோட கொலுசை வாங்கிக்கிறேன்,” என்றாள் அனு.
“இது ஐயாயிரம் தேறாது,” என்றான் உதட்டை பிதுக்கி.
“சார், இதை வாங்கும் போதே இருபதாயிரம். பாருங்க, நிறைய முத்து இருக்குது,” என்றாள் பாவமாக.
“என் கைக்கு வந்ததுக்கு அப்பறம் ஐயாயிரம்,” என்றான்.
இவளின் முகம் கூம்பி போனது. அது அவனுக்கு வருத்தமாக இருந்ததோ என்னவோ.
“சரி சரி, அவங்கள விட்டுறேன். இன்னும் ஐயாயிரம் ஒரு வாரத்துல கொடுத்திரு,” என்றான் அவளை பார்த்து.
இவள் தலை அசைத்தாள்.
ரவி அவர்களின் கை கால்களில் போட்டிருந்த கட்டை அவிழ்த்து அவர்களை அனுப்பி வைத்தான்.
இவளின் தோழிகள் ஒரு வார்த்தை கூட பேசாமல் காதலர்களின் கைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.
“டேய் ரவி, சுவாமிநாதனுக்கு ஒரு போன் போடு. அவரு பொண்ணு நம்ம ஆபிஸ் வந்து பணம் கேட்குதுனு சொல்லு,” என்ற வெற்றியை பார்த்து அரண்டு போனாள் அனு.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா குட்டியா ஒரு ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
