Rolex 34

34

நாட்கள் உருண்டோடின, ரோலக்ஸின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறுந்து, அவன் உடல் மீண்டும் பழைய வீரியத்தைப் பெற்றது. அவன் கண்கள் இப்போது வேட்டையைத் தொடரத் தயாராக இருந்தன. அவன் எடுத்த முடிவு தெளிவாக இருந்தது எதிரியின் குகைக்குள்ளேயே சென்று, அவனது நிழலாகவே மாறி, அவனை உள்ளிருந்தே சிதைப்பது.

ஒரு காலை வேளையில், ரோலக்ஸ் நேராகச் சென்றது பாபியின் கோட்டை. அந்தப் பிரம்மாண்டமான பங்களாவின் வாசலில் அவன் காலடி வைத்தபோது, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவனை மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றனர். பாபி அவனைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சி அலாதியானது. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த ரோலக்ஸ், இப்போது மீண்டும் தன் முன்னே நிற்பதைக் கண்டதும், பாபி ஓடி வந்து அவனை ஆழமாகத் தழுவிக்கொண்டான்.

பாபிக்கு ரோலக்ஸ் மீது ஒருவிதமான பாசம் இருந்தது. அவனைத் தம்பியாகவே கருதிய பாபி, அவன் உடல்நலத்தைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தான். “எங்கடா போன இத்தனை நாள்? உடம்பெல்லாம் எப்படி இருக்கு? மத்தவங்களை விட உன்னுடைய ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்,” என்று பாபி பேச, ரோலக்ஸ் அமைதியாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் அவனது உள்நோக்கம் யாருக்கும் தெரியவில்லை.

“அப்புறம் கேள்விப்பட்டேன்… உனக்குத் திருமணம் ஆகிடுச்சாமே? வாழ்த்துக்கள் தம்பி! உன் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம், இதை விட வேறென்ன வேணும்?” என்று பாபி மனதார வாழ்த்தினான்.

அவன் ரோலக்ஸைத் தன் அருகில் அமரச் சொன்னான். ஒரு காலத்தில் ‘தர்மா அமர்ந்திருந்த அந்த இருக்கையில், இப்போது ரோலக்ஸ் அமர்ந்திருந்தான். இது தற்செயலான நிகழ்வு அல்ல, பாபியின் மனதிற்குள் ரோலக்ஸை தர்மாவின் இடத்தில் வைத்துப் பார்க்கும் ஒரு பிம்பம். ஆனால், ரோலக்ஸின் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் அந்த அறையின் சுவர்களை விட இருண்டவை.

பாபி தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். அவன் குரலில் தர்மாவைப் பறிகொடுத்த வலி தெரிந்தது. “தர்மாவை… என் தம்பியை யார் கொன்றது என்று இன்னமும் எனக்குத் தெரியவில்லை ரோலக்ஸ். உன்னைத் தேடிய நேரத்தில், பைரவன் நீ கல்யாணம் முடித்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டதாகச் சொன்னான். உன்னைத் தொந்தரவு செய்ய எனக்கு மனமில்லை. ஆனா, தர்மாவைக் கொன்ற அந்த நாய் யாரென்று தெரிந்தே ஆக வேண்டும். என் தம்பி போல இருக்கும் நீதான் எனக்கு உதவணும். அந்தப் பாவி யாரென்று நீதான் கண்டுபிடித்து, அவன் தலையைக் கொண்டு வந்து என் முன்னால் வைக்கணும். இது சத்தியம், நான் அவனை சும்மா விடமாட்டேன்!” என்று பாபி சபதம் எடுத்தான்.

அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்த ரோலக்ஸின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகையில் ஒருவிதமான வஞ்சகம் இருந்தது. தான் தானே தர்மாவைக் கொன்றவன் என்பதை உலகமே அறியாத நிலையில், கொலையாளியைக் கண்டுபிடித்துத் தருவதாக அவன் பாபியிடம் சத்தியம் செய்தான்.

“கண்டிப்பாக, நீங்கள் சொல்கிறவரை நான் சும்மா இருக்க மாட்டேன். தர்மாவைக் கொன்றவனை உங்கள் கண் முன்னே நிறுத்துகிறேன்,” என்று தன் சைகை மொழியில் அவன் வாக்குறுதி அளித்தான். ஆனால், ரோலக்ஸின் அடிமனதில் ஒரு தீப்பொறி கனன்று கொண்டிருந்தது. ‘என்னைக் காட்டிக் கொள்ளாமல், பாபியின் இந்த ராஜ்ஜியத்தையே வேரோடு சாய்க்க வேண்டும். அதற்கான சரியான தருணம் வரும் வரை காத்திருப்பேன்,’ என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. பின்னர் ரோலக்ஸ் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசினான். அவனுக்கு இப்போது இந்த அடியாள் வேலைகள் பிடிக்கவில்லை என்பதைப் போல சைகை செய்தான்.

“அண்ணா , இப்போதைக்கு எனக்கு இந்த அடியாள் வேலைகள், ஆயுதங்களுடன் அலைவது போன்றவை வேண்டாம். நான் கொஞ்சம் நிம்மதியா, சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை செய்ய விரும்புகிறேன். எனக்கு அந்த வேலை போதும். தேவைப்பட்டால் மட்டும் என்னைக் கூப்பிடுங்கள், அப்போது நான் அந்த ‘வேலைகளை’ச் செய்து முடிக்கிறேன்,” என்று அவன் மென்மையாகக் கூறினான்.

பாபி சிறிது நேரம் யோசித்தான். அவனுக்கு ரோலக்ஸின் இந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தாலும், அவன் இப்போது திருமணமானவன் என்பதால், அவனைப் இது போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

“சரி ரோலக்ஸ் , உன் விருப்பப்படியே ஆகட்டும். கூலி வேலை என்றாலும், நீ என் ஆள்தான். கவனமா இரு,” என்று பாபி சம்மதித்தான்.

ரோலக்ஸ் சிரித்துக்கொண்டே கோட்டையை விட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வந்ததும், அங்கே காத்துக்கொண்டிருந்த பைரவனின் தோளில் கை போட்டுக் கொண்டான். அவன் கையில் அந்த ஹார்பர் கூலி பேட்ஜ் இருந்தது. வெளிர் சிவப்பு நிறத்திலான சட்டையை அணிந்திருந்த ரோலக்ஸ், ஒரு சாதாரணத் தொழிலாளியைப் போலவே தெரிந்தான். ஆனால், அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு புலி வேட்டைக்குத் தயாராவது போன்ற வேகம் இருந்தது.

ஹார்பரை நோக்கி அவர்கள் இருவரும் நடந்து சென்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. அந்த இரைச்சலும், இயந்திரங்களின் சத்தமும், கடலின் உப்புகாற்றும் அவனுக்குப் புதியதொரு உற்சாகத்தைத் தந்தன. அவர்கள் அங்கிருந்த கப்பலை அடைந்ததும், ரோலக்ஸ் தன் வேலையில் இறங்கினான்.

அங்கே அவன் ஒரு சாதாரணக் கூலியாகச் செயல்படத் தொடங்கினான். ஆனால், அவனது கண்கள் மட்டும் ஹார்பருக்கு வந்து சேரும் ஸ்டாக் கணக்குகளைத் தாண்டி, பாபியின் ஆட்கள் செய்யும் ஒவ்வொரு தந்திரமான அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தன. பாபியின் பிசினஸ் ரகசியங்கள், ஆயுதக் கடத்தல், பணப் பரிமாற்றம் என அனைத்தையும் அவன் இப்போது மிக அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றான்.

பாபிக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது ரோலக்ஸ் தன் தம்பி என்று. ஆனால், அந்தத் தம்பியே அவனது அழிவுக்கு வித்திடும் ஒரு மாய வலையைத் பின்னிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ரோலக்ஸ் அங்கே வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும், பாபியின் கோட்டைக்கு அடியில் ஒரு வெடிகுண்டை வைத்துக்கொண்டிருப்பது போன்றது.

பகல் நேரங்களில் கப்பலில் மூட்டை சுமக்கும் கூலியாகத் தெரிந்த ரோலக்ஸ், இரவு நேரங்களில் அந்த ஹார்பரின் இருளில் ஒரு வேட்டைக்காரனாக மாறினான். பைரவன் அவனுக்குத் துணையாக இருக்க, இருவரும் பாபியின் சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு பலவீனத்தையும் கண்டறிந்தனர். பாபி அவனிடம் சொன்ன அந்தச் சபதம், அவனுக்கே எமனாகப் போகிறது என்பதை உணராமல், பாபி இப்போதும் ரோலக்ஸைத் தன் நம்பிக்கைக்குரியவனாகவே வைத்திருந்தான்.

ரோலக்ஸின் முகம் மாறாமல் இருந்தது, ஆனால் அவனது மனம் ஒரு கத்தி போலக் கூர்மையாக இருந்தது. அவன் ஒவ்வொரு ரகசியத்தையும் திரட்டினான். பாபியின் ஆட்கள் யாரிடம் சரக்குகள் வாங்குகிறார்கள், யாருக்கு விநியோகம் செய்கிறார்கள் என அனைத்தையும் அவன் ஒரு சித்திரமாகத் தன் மனதில் கோர்த்துக் கொண்டான். ஹார்பரின் அந்தப் பழைய சிவப்புச் சட்டையும், கூலிப் பதக்கமும் அவனுக்குத் தேவையான சிறந்த கவசம் ஆகிப்போயின.

அவன் தர்மாவைக் கொன்ற அந்த நாளைப் பற்றி பாபி ஒவ்வொரு முறை பேசும்போதும், ரோலக்ஸ் மட்டும் அந்த வஞ்சகப் புன்னகையைச் சிந்திவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொள்வான். எதிரியை அழிக்க வேண்டுமானால், அவனது நம்பிக்கையைப் பெறுவதே முதல் ஆயுதம் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அந்த ஹார்பரின் இரும்புச் சங்கிலிகளின் சத்தத்திற்கு இடையே, ரோலக்ஸின் மௌனம் ஒரு பெரும் புயலாக மாறக் காத்திருந்தது.

நாட்கள் கடந்து செல்லச் செல்ல, பாபியின் கோட்டைக்குள் ரோலக்ஸின் செல்வாக்கு மெல்ல மெல்லக் கூடியது. ஆனால் அவன் தன் கூலித் தொழிலாளி என்ற அடையாளத்தை மட்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. அதுதான் அவனது உண்மையான பலம். யாரும் அவனை ஒரு அடியாள் என்று பார்க்கவில்லை, மாறாக ஒரு பாட்டாளி என்றுதான் பார்த்தார்கள். இந்த மாயைதான் பாபியின் வீழ்ச்சிக்கான தொடக்கமாக இருக்கப் போகிறது.

ஒரு நாள் ரோலக்ஸ்  desk ஓரமாக அமர்ந்து கொண்டு, கடலைப் பார்த்தபடி தன் கையில் இருந்த அந்தப் பேட்ஜை வருடினான். பைரவன் அருகில் வந்து அவனிடம் ஏதோ கேட்க, ரோலக்ஸ் அவனைப் பார்த்து மெல்லத் தலையசைத்தான். இப்போதைய வாழ்க்கை அவர்களுக்குப் பாதுகாப்பானது மட்டுமல்ல, எதிரியை வேரறுக்கத் தேவையான களமாகவும் அமைந்தது.

அடிவானத்தில் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருக்க, கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸ், மெல்லத் தன் பார்வையைத் திருப்பி, தன் பக்கத்தில் நின்றிருந்த பைரவனை நோக்கினான்.

“பைரவா…அந்த வீரமாலுவை நான் வெட்டிச் சாய்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அவன் துடிதுடித்ததை அவனுடைய மகன் நேரில் பார்த்தான். அந்த வீரமாலு செத்துப் போயிட்டான்… ஆனா அவனோட மகன்? அவன் என்ன ஆனான்? அவனைப் பத்தி ஏதாவது விபரம் தெரிஞ்சதா?”

ரோலக்ஸ் இப்படிக் கேட்டதும், பைரவன் சட்டென்று மௌனமானான். அவனிடம் உடனடி பதில் இல்லை. கடலின் குளிர்ந்த காற்று அவர்கள் மீது வீசிய போதிலும், பைரவனுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“என்ன பைரவா மௌனமா இருக்க? ஏதாவது விபரம் கிடைச்சதா இல்லையா?” ரோலக்ஸ் பைரவனின் தோளைப் பற்றினான். “நான் செஞ்ச கொலையை நேர்ல பார்த்த சாட்சி அவன் ஒருத்தன் மட்டும்தான். அந்த சந்துரு! அவன் எங்கே போனான்? இன்னும் இங்கேயேதான் சுத்திட்டு இருக்கானா, இல்ல வெளியூருக்கு ஏதாவது தப்பிச்சுப் போயிட்டானா? அவன் இருக்குற இடம் உனக்குத் தெரியுமா, தெரியாதா? அதை முதல்ல சொல்லு!” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் பைரவனைத் துளைத்தெடுத்தான்.

மெதுவாக மூச்சை இழுத்துவிட்ட பைரவன், “ரோலக்ஸ்… நீ போலீஸ் கண்ணுல படாம தலைமறைவா இருந்த பாத்தியா, அந்த நேரத்துல நான் சந்துருவை பத்தி சும்மா விடல. எல்லா இடத்துலயும் விசாரிச்சுப் பார்த்துட்டேன். அவன் இங்க விசாகப்பட்டினத்துலயோ, இல்ல ஆந்திரா எல்லையிலயோ கண்டிப்பா இல்லை. அவன் இந்த இடத்தை விட்டே ரொம்ப தூரம் எங்கேயோ ஓடிப் போயிட்டான். அதுமட்டும் எனக்கு நல்லாத் தெரியும்.”

“நீ பண்ண கொலையை அவன் நேருக்கு நேரா பார்த்தது நிஜம்தான். ஆனா, அந்த அந்த ரத்தக் கறையையும் உன்னோட ஆக்ரோஷத்தையும் பார்த்த உடனே அவன் பயந்து நடுங்கிட்டான். மரண பயம் அவனோட நெஞ்சுல உட்கார்ந்துடுச்சு. கண்டிப்பா அவன் பயந்து ஓடிப் போய், ஏதோ ஒரு மூலையில ஒளிஞ்சுட்டு இருக்கான். அவனோட வாழ்க்கையை அவன் வேற ஒரு திசையில மாத்தி, பிழைக்க வழியைத் தேடிட்டு இருப்பான். இனிமே இந்த பக்கம் அவன் திரும்பி வர்றதுக்கு 1% கூட வாய்ப்பு இல்லை. அவனப் பத்தி யோசிச்சு நீ உன் நேரத்தை வீணாக்காதே, ரோலக்ஸ்.”

பைரவன் சொல்லி முடித்ததும், அங்கே ஒரு சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கடலின் அலைகள் மீண்டும் கரையைத் தாக்கியது. பைரவனின் பேச்சைக் கேட்ட ரோலக்ஸின் உதடுகளில் ஒரு மேன்மையான, ஆனால் ஆபத்தான புன்னகை அரும்பியது. அவன் மெல்லச் சிரிக்கத் தொடங்கினான்.

“இல்லை பைரவா… நீ அவனைத் தப்பா எடை போடுற… அவன் பயந்து ஓடுறவன் இல்லை. அவன் கண்டிப்பா திரும்பி வருவான். ஏன்னா, அவன் ரத்தத்துல ஓடுறது அந்த வீரமாலுவோட குணம்.”

“அவன் கண்ணுல நான் பார்த்த வெறி எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு பைரவா அவன் அவனுடைய அப்பாவைப் போல இல்லாம ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ஆகணும்னு ஆசைப்பட்டான். நான் அவனோட அப்பாவைக் கொன்ன அதே இடத்துல நின்னு, அவனோட கனவை இன்னும் பெருசாக்கியிருப்பான். தன் அப்பாவோட பழிக்குப்பழி வாங்க அவன் கண்டிப்பா ஒரு நாள் காக்கிச் சட்டை போட்டு, துப்பாக்கியோட போலீஸா என் முன்னாடி வந்து நிப்பான்!” என்ற ரோலக்ஸ் மீண்டும் தன் பார்வையை ஆக்ரோஷமாக அலைமோதும் கடலின் பக்கம் திருப்பினான்.

சந்துருவின் வருகைக்காகவும், தனக்கு வரப்போகும் அந்த வேட்டைக்காகவும் காத்திருப்பது போல், அந்தப் பெருங்கடலைப் பார்த்தவன் மர்மமாகச் சிரிக்கத் தொடங்கினான். அந்தச் சிரிப்பு, வரப்போகும் ஒரு பெரிய புயலுக்கான அறிகுறி போல அந்த கடற்கரை எங்கும் எதிரொலித்தது.

பாபி, தான் வளர்த்துவிடும் அதே நாகம், ஒருநாள் தன்னைத்தான் தீண்டப் போகிறது என்று தெரியாமல், ரோலக்ஸைத் தன் பக்கபலமாக எண்ணிப் பெருமிதம் கொண்டான். ஆனால் ரோலக்ஸ், அந்தப் பெருமிதத்தைப் பொய்யாக்கக் காத்துக் கொண்டிருந்தான்.

அந்த ஹார்பரில், கடலின் அலைகள் மோதுவது போல, பாபியின் கோட்டையும் ரோலக்ஸின் தந்திரமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு இரத்தக் களரியாகவோ, அல்லது ஒரு நிசப்தமான வெற்றியாகவோ இருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அந்தப் பழைய கூலிச் சட்டை அணிந்த ரோலக்ஸ், பாபியின் மொத்த ராஜ்ஜியத்தையும் சுக்குநூறாக உடைக்கப் போகிறான்.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!