37
பாபியும் அவனது ஆட்களும் இதுவரை பார்த்ததெல்லாம் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியும், கூர்மையான கத்தி, அரிவாள் போன்ற சாதாரண ஆயுதங்களை மட்டுமே. ஆனால், இன்று அந்த கப்பலின் அடித் தளத்திலிருந்து வெளிப்பட்ட அந்த நூற்றுக்கணக்கான பெட்டிகள், பாபியின் கண்களைக் குருடாக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தன.
பாபி ஒரு பெரிய இரும்புக்கம்பியை எடுத்து, அந்தப் பெட்டியின் மூடியைப் பெயர்த்தான். ‘க்ரீச்…’ என்ற சத்தத்துடன் பெட்டி திறந்தது. உள்ளே இருந்தது என்னவென்று பார்த்த பாபியின் கண்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயின. பெட்டி முழுக்க அடுக்கு அடுக்காக, நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ரகத் துப்பாக்கிகள், துல்லியமாகச் சுடும் ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள், லேசர் இலக்கு கொண்ட நவீன துப்பாக்கிகள் மின்னிக்கொண்டிருந்தன. பாபியின் ஆட்கள் ஒவ்வொன்றாக பெட்டிகளைத் திறக்கத் திறக்க, அங்கே மலை போல் குவிந்த ஆயுதங்களைக் கண்டு அவர்கள் வாயடைத்துப் போயினர்.
பாபிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய ஆயுதக் குவியலை நேரில் பார்த்ததே இல்லை. இவை வெறும் ஆயுதங்கள் அல்ல, இவை ஒரு தேசத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டவை. பாபியின் கண்கள் மின்னின. அவனது மூளை மிக வேகமாகச் செயல்படத் தொடங்கியது, இந்த ஆயுதங்களை வைத்து இந்த ஹார்பரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த கடற்கரை நகரத்தையே நாம் கட்டுப்படுத்தலாமே!’
அந்த வெள்ளைக்கார இளைஞனைத் திரும்பிப் பார்த்தான் பாபி. அவனது கண்கள் ஏளனத்துடனும், பேராசையுடனும் மின்னின. பாபி அந்த இளைஞனின் அருகில் சென்று, அவனது சட்டையைப் பிடித்து தன் முகத்திற்கு நேராக இழுத்தான். “இவ்வளவு பெரிய ஆயுதங்களை வைத்திருந்தும், ஒரு கிரிமினல் கும்பலிடம் இப்படி மாட்டிக்கொண்டு நிற்பதற்கும் நீ தைரியசாலிதான்!” என்று சொல்லி, நக்கலாகச் சிரித்தான்.
“இனிமேல், இது எதுவுமே உன்னுடையது இல்லை. இந்த ஆயுதங்கள் அனைத்தும்… இந்த கப்பல்… இந்தத் துறைமுகம்… எல்லாமே இனி என் வசம்தான். நான் சொன்னால் தான் இங்கு காற்று கூட அசையும். நீ வெறும் ஒரு எலிப் பொறிக்குள் சிக்கிய எலி!” என்று கத்தினான் பாபி.
பின்பு ரோலக்ஸின் பக்கம் திரும்பியவன். ரோலக்ஸின் கண்களில் இருந்த மௌனம் பாபிக்கு ஒரு தடையாகத் தோன்றவில்லை, ஏனெனில் ரோலக்ஸ் தனக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் என்று பாபி நம்பினான். “ரோலக்ஸ்! இவனை உள்ளே இழுத்துட்டுப் போ. அவன் கேரேஜுக்குள் கொண்டு போய் பூட்டி வை. இவனை இன்னும் விசாரிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இவனிடம் இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இவனை விசாரிக்கும் விதமே வேறாக இருக்க வேண்டும்!” என்று உத்தரவிட்டான்.
பாபியின் உத்தரவைக் கேட்டதும் ரோலக்ஸின் உள்ளம் அதிர்ந்தது. அவனுக்குத் தெரியும், பாபியின் அந்த கேரேஜ் ஒரு மரணக் கூண்டு என்று. அங்கே ஒருமுறை கால் வைக்கும் எவனும் உயிரோடு வெளியே வந்ததில்லை. அந்த வெள்ளைக்கார இளைஞன் தன்னைப்போலவே பேசவும், கேட்கவும் முடியாத ஒருவன் என்பதை அறிந்த பிறகு, ரோலக்ஸின் மனதில் அவன்பால் ஒருவிதமான சகோதரத்துவமும், பரிதாபமும் ஏற்பட்டிருந்தது.
ரோலக்ஸ் பாபியின் முன்னால் வந்து கைகளை அசைத்து, அவனது முடிவை மாற்ற முயற்சித்தான். “பாபி, இவன் வெறும் கைதி அல்ல. இவனை இப்போதே கொன்றுவிட்டாலோ, கொடுமைப்படுத்தினாலோ, நமக்கு இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் நுட்பம் தெரியாது. இவனை இப்போதே கொல்ல வேண்டாம்,” என்று சைகையில் எச்சரித்தான்.
ஆனால் பாபி இப்போது போதையில் இருந்தான். அந்த ஆயுதங்களின் மீதான காதலில் ரோலக்ஸின் அறிவுரையை அவன் கேட்கவில்லை. “ரோலக்ஸ், எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. நீ அவனை உள்ளே எழுத்துட்டு போ !” என்று உறுதியாகச் சொன்னான்.
வேறு வழியின்றி, ரோலக்ஸ் அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு, துறைமுகத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த பாபியின் ரகசிய கேரேஜை நோக்கி நடக்கத் தொடங்கினான். செல்லும் வழியெங்கும் பாபியின் ஆட்கள் துப்பாக்கிகளுடன் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
ரோலக்ஸின் இதயம் படபடத்தது. அவன் எப்படி அந்த இளைஞனைக் காப்பாற்றப் போகிறான்?
பாபியின் கேரேஜ். அந்த இருண்ட அறையில் சிமெண்ட் தரை குளிராக இருந்தது. கேரேஜின் இரும்பு கதவு ‘சடசட’ என்ற சத்தத்துடன் திறந்தது. உள்ளே ஈரப்பதமும், பழைய இரும்பு வாசமும் வீசியது. ரோலக்ஸ் அந்த இளைஞனை உள்ளே தள்ளி, கதவைப் பூட்டினான். வெளியில் காவலர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான். அவன் மெதுவாகத் தன் சட்டைப் பையிலிருந்த ஒரு சிறிய டார்ச் விளக்கை எடுத்து, அந்த இளைஞனின் முகத்தில் ஒளியைப் பாய்ச்சினான்.
ரோலக்ஸ் கண்களில் ஒரு தீவிரமான கேள்வியைக் கொண்டு வந்தான். “நீ யார்? ஏன் இங்கு வந்த? உன்னுடைய உண்மையான அடையாளம் என்ன ?” என வினவினான்
சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அவனின் கண்கள், மிரட்டிக்கொண்டிருந்தன. வெளியே பாபியின் ஆட்கள் ஆயுதங்களை எண்ணிக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் கேலிப் பேச்சுகள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சத்தங்களுக்கு மத்தியில், மெதுவாகத் தன் கைகளை உயர்த்தியவன் செய்கையிலே சொன்னான்,
“என் பெயர் அலெக்ஸ். ” என்றான் …
ரோலக்ஸ் தன் இடுப்பில் இருந்த அந்த டிராகன் துப்பாக்கியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். அவனது கண்கள் அலெக்ஸைத் தவிர வேறெதையும் பார்க்கவில்லை.
அலெக்ஸ் தன் கதையைத் தொடங்கினான், “என் பெயர் அலெக்ஸ். ஸ்காட்லாந்தின் கரடுமுரடான மலைகளுக்கு நடுவே எங்கள் பரம்பரை வாழ்ந்து வருகிறது. எங்கள் குடும்பம் ஆயுத தயாரிப்பில் உலகத்தரம் வாய்ந்தவர்கள். என் அப்பா ஒரு ஜாம்பவான். உலக நாடுகளின் போர்முனைகளில் எங்கள் குடும்பம் தயாரித்த துப்பாக்கிகள் தான் எதிரிகளை வீழ்த்தும். நாங்கள் வெறும் வியாபாரிகள் அல்ல, நாங்கள் ஒரு சாம்ராஜ்யம்.”
அலெக்ஸின் கைகள் இப்போது வேகமெடுத்தன. அவன் முகம் துயரத்தால் சுருங்கியது, “நடுக் கடலில் நான் வந்துகொண்டிருந்தபோது, முன்னால சென்ற எங்கள் வேறொரு சரக்கு கப்பலில் இருந்து ஒரு அவசர சிக்னல் கிடைத்தது. அந்தப் பாதையில் கடற் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதை அவர்கள் எச்சரித்தார்கள், அந்த கப்பல் ல எந்த சரக்கும் இல்ல, அனா என் கப்பல் முழுக்க முழுக்க புதையல்.. அந்தப் பாதையில் நானும் போனா, பல கோடி மதிப்புள்ள ஆயுதங்களும், அந்தத் தங்கம் அனைத்தும் கொள்ளையர்களின் கைக்குச் சென்றுவிடும். அதை நான் அனுமதிக்க விரும்பவில்லை. வேறு வழியின்றி, அந்தப் பாதையைத் தவிர்த்து, அருகில் இருக்கும் இந்தத் துறைமுகத்திற்குள் நுழைய முடிவெடுத்தேன். இதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய தவறு என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.” என்றான்
ரோலக்ஸ் தலையசைத்தான். அவன் முகத்தில் ஒருவிதமான பரிதாபம் தெரிந்தது. “கப்பலின் இன்ஜினில் கோளாறு இருப்பதாகவும், அவசரப் பழுதுபார்ப்பிற்காக உள்ளே நுழைய வேண்டும் என்றும் போலித் தகவல்களைத் தயாரித்து, துறைமுகத்தின் மேலிட அதிகாரிகளுக்குப் பெருந்தொகையைக் கொடுத்துப் பர்மிஷன் வாங்கினேன். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, எல்லாம் சரியாகியதும் கிளம்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு நுழைந்ததும் பாபி என்ற அந்த நரகத்தின் தூதன் என் கண்களில் பட்டான். அவன் இந்தப் பகுதியின் சாத்தான். அவன் கேட்கும் அந்தத் தொகையை என்னால் கொடுக்க முடியாது, அவன் இப்போ வெறும் பணம் மட்டும் கேட்கவில்லை, என் ஆயுதங்களை வைத்து இங்கேயே ஒரு சிண்டிகேட்டை உருவாக்க நினைக்கிறான். அவனிடம் நான் மண்டியிடவில்லை, மண்டியிட்டால் என் குடும்பத்தின் கௌரவம் அழியும்!” என்ற அலெக்ஸ் தன் விரல்களை முறுக்கினான். அவனது கண்களில் ஒருவிதமான வீரம் தெரிந்தது.
“இவனைப் போன்ற ஒருவனுக்கு நான் தலைவணங்க மாட்டேன், ரோலக்ஸ்! நீ பாபிக்கு உண்மையா இருக்கலாம், ஆனால் அவன் ஒரு பேராசை பிடித்த நரி. நீ ஒரு ஊமை… உனக்கு உலகம் பேசும் பொய்கள் கேட்காது, நீ உண்மையை மட்டும் தான் பார்ப்ப, அதனால் தான் உங்கிட்ட இதை எல்லாம் சொல்றேன்.”
ரோலக்ஸ் அமைதியாக இருந்தான். அவன் மனதிற்குள் இப்போது ஒரு பெரும் யுத்தம் நடந்தது. அவன் பாபியைப் பற்றி நன்றாக அறிவான். ஆனால், பாபி இவ்வளவு மோசமான ஆயுதக் கடத்தலுக்குத் துணை நிற்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
திடீரென கேரேஜின் கதவு வேகமாகக் திறந்தது. பாபியின் அடியாள் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் இருந்த மது பாட்டில் காலியாக இருந்தது. அவன் அலெக்ஸை உதைக்கத் தயாரானான்.
“ஏய் வெள்ளைக்கார நாயே! இன்னும் என்ன கொக்கரிச்சுட்டு இருக்க?” என்று கத்தியபடியே அலெக்ஸின் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.
ரோலக்ஸுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், ரோலக்ஸின் உடல் அனிச்சையாகச் செயல்பட்டது. அந்த ஆளின் கையை ரோலக்ஸ் தனது இரும்பு போன்ற பிடியால் பற்றினான், ஆனால் ஏதும் பேசவில்லை. அந்த ஆள் வலியால் துடித்தான். ரோலக்ஸ் அவனைப் பார்த்துச் செய்த அந்த சைகை ‘அவன் கைதி, உன் கைதி அல்ல’. அந்த ஆள் முறைத்துப் பார்த்தான்.
பாபியின் ஆட்களுக்கு ரோலக்ஸ் என்றால் பயம், அதே சமயம் ரோலக்ஸ் பாபியின் வலது கை என்பதால் யாரும் அவனை எதிர்க்க மாட்டார்கள். அந்த ஆள் கோபத்தோடு வெளியேறினான்.
இப்போது அறைக்குள் அலெக்ஸும் ரோலக்ஸ் மட்டுமே இருக்க. அலெக்ஸ் தன் சைகையில் கேட்டான், “நீ ஏன் என்னைக் காப்பாற்றின? நீயும் அவனது கூட்டாளி தானே?”
மெதுவாகப் பதில் சைகை செய்த ரோலக்ஸ், “நான் பாபிக்கு அடிமை தான், அவன் ஒரு காலத்தில் என் உயிரைக் காப்பாத்தினான், அதுக்காக தான் இப்போ வரை அவன் கூடவே இருக்கேன், ஆனால் அவன் செய்யப்போகும் இந்த ஆயுதக் கடத்தல், லட்சக்கணக்கான மக்களைப் பலிகொடுக்கும். இதை நான் அனுமதிக்க மாட்டேன். நீ வெறும் தங்கத்திற்காக வரவில்லை என்று எனக்குத் தெரியும், உன்னிடம் இருக்கும் அந்த ஆயுதங்கள் எதற்காக என்பது எனக்குப் புரியுது.”
அலெக்ஸ் அதிர்ந்தான். ரோலக்ஸின் கூர்மையான புத்திசாலித்தனத்தை அவன் வியந்தான்.
ரோலக்ஸ், தனது மௌனத்தின் ஆழத்திலிருந்து ஒரு கேள்வியை முன்வைத்தான், அவன் கைகளை மிக லாவகமாக அசைத்து அலெக்ஸிடம் கேட்டான், “ஆரம்பத்திலேயே அவன் கேட்ட அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு நீ கிளம்பியிருக்கலாமே? இப்போது பாரு, உன் கப்பலும் உன் உயிரும் இரண்டுமே பாபியின் பிடியில் சிக்கிடிச்சி. இப்போ இவனது கோரப் பிடியில் இருந்து நீ எப்படித் தப்பிக்கப் போறா? உனக்கு என்ன திட்டம் இருக்கு?”
சுவரில் சாய்ந்திருந்த அலெக்ஸ், தன் உடலைச் சற்று நிமிர்த்தி ரோலக்ஸைப் பார்த்தான். அவனது கண்களில் ஒருவிதமான உறுதியும், தன் தந்தையின் மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையும் தெரிந்தது. அவன் மெதுவாகச் சைகை செய்யத் தொடங்கினான்.
“ரோலக்ஸ், நீ நினைக்கிற மாதிரி இது வெறும் பணப் பிரச்சனை இல்லை. பாபி கேட்ட அந்தப் பெருந்தொகையைக் கொடுப்பது எனக்குப் பெரிய விஷயமே இல்லை. ஆனா, அந்தப் பணத்தை நான் கொடுக்க எனக்கு என் அகங்காரம் இடம் கொடுக்கல, என் தந்தை ஒரு மிகப்பெரிய ஆயுதத் தயாரிப்பாளர். நான் இங்கு மாட்டிக்கொண்டேன் என்ற செய்தி அவருக்குத் தெரிந்தால், ஒரு சில நாட்களிலேயே அவர் என்னைத் தேடி வருவார். அவர் வருவதற்குள் இந்த ஆயுதங்கள் பாபியின் கைக்குச் முழுசா கிடைச்சிடக் கூடாது. அதுதான் என் முக்கியக் கவலை. அவன் கையில் இந்த நவீன ஆயுதங்கள் கிடைத்தா, இந்த நகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கடற்கரையோரப் பகுதிகளுமே ரத்தக் காடா மாறிவிடும். அதை தான் இப்போ தடுக்க வேணும் .” என்றவன் மேலும்
“என் தந்தை கமிஷனர்களிடமோ, போலீஸிடமோ வரமாட்டார். அவர் வருவது என்றால், ஒரு மாபியா படையோடு வருவார். ஆனால், பாபி இப்போவே இந்தப் பெட்டிகளை உடைத்து அந்த ஆயுதங்களை வெளியே எடுக்கத் தொடங்கிவிட்டான். நான் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். இல்லைனா, நான் கொண்டு வந்த இந்த ஆயுதங்களே இந்தத் துறைமுகத்தின் அழிவுக்குக் காரணமாகிவிடும்.”
அலெக்ஸின் சைகைகள் அந்த அறையையே ஒரு தீவிரமான உணர்வுக்குக் கொண்டு சென்றன. அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, ரோலக்ஸ் தனது மௌனத்தின் பின்னால் மறைத்து வைத்திருந்த கோபத்தை உணர்ந்தான். இத்தனை நாட்களாகப் பாபியின் நிழலில் இருந்த தான், எப்பேர்ப்பட்ட பாதகமான செயல்களுக்குத் துணை நின்றிருக்கிறோம் என்பதை நினைத்து அவன் மனம் குமுறியது.
ஒரு கணம் யோசித்த ரோலக்ஸ்ன் கண்கள் அந்த இருண்ட அறையின் மூலைகளைத் துழாவின. அவன் மீண்டும் அலெக்ஸைப் பார்த்துச் சைகை செய்தான், “உன்னுடைய தந்தை யார்? அவர் இங்கிருக்கும் பாபி போன்ற ஒரு சாதாரணத் தாதாவால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய ஆளா? அவரிடம் நீ எப்படி உன் நிலைமையை சொல்ல முடியும்? எந்த வழியில் செய்தி அனுப்பினா அவர் சீக்கரம் புரிந்துகொள்வார்? அதை மட்டும் சொல்லு, நான் அதைச் செய்து முடிக்கிறேன்.” என்றான்
அலெக்ஸ் ரோலக்ஸைப் பார்த்தான். அவன் கண்களில் இப்போது ஒருவிதமான வியப்பு. தன் எதிரியாகக் கருதப்பட்ட ஒருவன், இன்று தன் மீட்பனாக மாறப்போகிறான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் தன் சட்டையின் உட்புறத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய Micro-transmitter மெதுவாக உருவினான். அது அவன் தந்தையோடு தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவி.
அலெக்ஸ் அதை ரோலக்ஸிடம் கொடுக்க முயன்றான். அவன் கண்களால் அதை வெளியில் எடுத்துச் செல்லச் சொல்லிக் கட்டளையிட்டான். ரோலக்ஸ் அதைத் தன் கையில் வாங்கிய அந்தத் தருணம்…
‘திடுக்’
வெளியே கதவு திறக்கும் அந்தப் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த இரும்புக்கதவு துருப்பிடித்த உறுமலோடு மெல்ல நகர்ந்தது. அலெக்ஸும் ரோலக்ஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த மௌனம் ஒரு பெரும் புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. பாபியின் ஆட்கள் யாரோ உள்ளே வருகிறார்கள்!
ரோலக்ஸ் மின்னல் வேகத்தில் அந்த மைக்ரோ-ட்ரான்ஸ்மிட்டரைத் தன் சட்டைப் பைக்குள் மறைத்துவிட்டு, அலெக்ஸை மீண்டும் தரைதள்ளிச் சுவரோடு சுவராய்ச் சார்த்தி வைத்தான். அவன் தன் கையில் இருந்த அந்த டிராகன் துப்பாக்கியை இடுப்பில் மறைத்து, எதையும் அறியாதது போலக் காட்டிக்கொண்டான்.
கதவு முழுவதும் திறந்தது. நிழல் உருவம் ஒன்று உள்ளே நுழைந்தது.
யார் வந்தது ?
வேட்டை தொடரும் ..⚓
