கெட்டவன் 7

அந்த நாள் முழுதும் நிஷா, விஷாகா இருவரிடமும் பேசவே இல்லை அனு. ஏன், அவர்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

“உண்மையான தோழிகளாக இருந்திருந்தால், என்னை தனியாக விட்டுச் சென்றிருப்பார்களா? இருவரின் நட்புக்காகத்தானே கெட்டவனிடம் சண்டை போட்டேன். ஆனால், இவர்களோ என்னை அவனிடம் தனியாகச் சிக்க வைத்து விட்டார்களே? என் தேவைக்காகவா பணம் வாங்கினார்கள்? இவர்களின் கடனை நான் சுமக்க வேண்டுமா? இது போதாதென்று ஆளை வைத்து மிரட்டுகிறார்கள்” என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தாள் அனு.

“ஹேய் அனு, காலேஜ் டைம் முடியப் போகுது. நீ எங்ககிட்ட பேசவே இல்லை” என்று சோகமாகக் கூறினாள் நிஷா.

“எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமே இல்லை” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அனு.

அவர்கள் இருவருக்கும் முகத்தில் அடித்தது போல் இருந்தது.

“நாங்க தப்பு பண்ணிட்டோமா, அனு?” விஷாகா கேட்ட கேள்விக்கும் அனு பதில் சொல்லவில்லை.

“இன்னும் ரெண்டு மாசம்தான் அனு. காலேஜ் லைஃப் முடியப் போகுது. நீ இப்படி முகத்தைத் தூக்குனா எப்படி?” என்று கேட்டாள் நிஷா.

இருவரும் மாறி மாறி அவளைக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தனர்.

“ரெண்டு பேரும் என்கிட்ட பேசாதீங்க. அவ்ளோதான்” என்று அவர்களின் பேச்சை முடித்துக் கொண்டாள்.

தன்னை அந்தக் கெட்டவனோடு சம்பந்தப்படுத்திப் பேசி விட்டார்கள் என்று அவளுக்குக் கோபம் இல்லை. ஆனால், அவர்களின் மேல் சிறு வெறுப்பு உண்டாகி விட்டது.

அந்த நாளைத் தனிமையில் கழித்து விட்டாள் அனு.

“என்ன டி, சாப்பாடு அப்படியே இருக்குது? சாப்பிடலையா டி?” அவள் வந்ததும் கொடுத்து அனுப்பிய டிஃபன் பாக்ஸைத்தான் திறந்து பார்த்தார் சுபத்ரா.

“இல்லைம்மா. கையிலயும் காயம், மனசுலயும் காயம்” என்றவளை சிறு சிரிப்போடு பார்த்தார் சுபத்ரா.

இருவரும் நடுக் கூடத்தில் தரையில் அமர்ந்தனர். இரவு உணவை அனுவுக்கு இப்பொழுதே ஊட்டி விட்டார் சுபத்ரா.

“மனசுல என்ன காயம்?” என்று கேட்டார்.

“என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் என்னை அந்தக் கெட்டவனோடு சம்பந்தப்படுத்திப் பேசுறாங்கம்மா” என்றாள் உதட்டைக் குவித்து சோகமாக.

“கெட்டவனா? யார் அது?” புருவம் முடிச்சிடக் கேட்டார் சுபத்ரா.

“நம்ம ஹவுஸ் ஓனர்ம்மா” என்றவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அந்தத் தம்பியை எதுக்கு டி கெட்டவன்னு சொல்ற? முறைப்போடு கேட்டார் சுபத்ரா.

“எனக்கு என்னவோ அவரைப் பிடிக்கவே இல்லைம்மா” என்றாள் அனு.

“அதுக்காகக் கெட்டவன்னு சொல்லாத டி” அவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார் சுபத்ரா.

“நீங்க என்னம்மா, அவர் உங்ககூடப் பிறந்த மாதிரி அவரை விட்டுக் கொடுக்காமப் பேசுறீங்க?” என்றாள்.

“என்ன, கோபம் வருது. நுனி மூக்கு சிவக்குது உனக்கு” என்று கிண்டல் செய்ய, “அம்மா, நாம வேற வீடு மாறிப் போயிருவோம்மா” என்று பாவமாக முகத்தை வைத்துக் கூறினாள் அனு.

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டால், தாய் தன் பேச்சைக் கேட்பார் என்று நினைத்து விட்டாள் போலும்.

“எதுக்கு டி வேற வீடு மாறணும்? இந்த வீட்டைக் கொஞ்சம் சுற்றிப் பாரு” என்றார் சுபத்ரா.

“ஒரு ஹால், மூணு பெட்ரூம், ஒரு கிச்சன், பத்தாததுக்கு மூணு பெட்ரூம்லயும் அட்டாச் பாத்ரூம், அப்பறம் இலவச இணைப்பா பின்னாடி கொஞ்சம் தோட்டம் மாதிரி இருக்குது” என்றாள்.

“நம்ம பக்கத்து வீட்டுல இருக்குறவங்களுக்கும் இதே மாதிரி வீடுதான். ஆனால், வீட்டு வாடகை மாசம் பத்தாயிரம். நமக்கும் அதே வாடகைதான் தம்பி சொல்லுச்சு. ஆனால், இன்னைக்குக் காலையில வாடகையை நமக்கு மட்டும் குறைச்சிருக்குது தெரியுமா?” என்று இல்லாத சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டு சுபத்ரா கூற,

“எவ்ளோ குறைச்சிருக்காரு?” என்று கேட்டாள் அனு.

“வெறும் மூவாயிரம் சொன்னாரு டி. இந்தக் காலத்துல இப்படி யாரு வீட்டு வாடகையைக் குறைச்சிச் சொல்வா? அந்தத் தம்பி நமக்காகக் குறைச்சிருக்காரு டி” பெருமையாகக் கூறினார் சுபத்ரா.

இவள் உதட்டைச் சுளித்தாள்.

“படிக்கிற பிள்ளை வீட்டுல இருக்கும் போது, காலேஜ் கட்டணமும் கட்டிக்கிட்டு வீட்டு வாடகையும் கட்டுறது ரொம்பக் கஷ்டம் அக்கா. உங்களுக்கு மட்டும் வாடகை குறைச்சிருக்கேன்” சொன்னாரு. “எவ்ளோ நல்ல மனசு டி அந்தத் தம்பிக்கு” என்று வெற்றியை மனதாரப் புகழ்ந்தார் சுபத்ரா.

இதற்கு மேல் தாயிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து போனது அவளுக்கு. அதனால் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்து கொண்டாள்.

*****

இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவளின் உள்ளங்கையில் இருந்த காயத்தில் யாரோ இதமாக வருடி விட்டது போல் ஒரு உணர்வு.

அந்த வருடல் அவளுக்குப் பிடித்திருந்தது போலும். உதடுகள் அழகாகப் புன்னகைத்தது தூக்கத்திலும் கூட.

திடீரென்று அந்த வருடல் அவளின் கன்னங்களில் தொடர, பட்டென்று கண் விழித்தாள் அனு.

“ஆஹ்…” என்று அலறப் போனவளின் வாயைச் சரியான நேரத்தில் அடைத்து விட்டான் வெற்றி.

“கையை எடுப்பேன். கத்துன, கொன்றுவேன் ராஸ்கல்” மிரட்டினான்.

இவள் கத்த மாட்டேன் என்பது போல் பயத்தில் தலை அசைத்தாள்.

இவன் அவள் வாயிலிருந்து கையை எடுத்தான். “என்னாலதான் உனக்குக் காயமாச்சு” என்று அவளின் செவியோரம் கிசுகிசுத்தான்.

“உங்களால இல்லை. உங்க சரக்கு பாட்டிலால” என்று இவளும் அவனைப் போல் கிசுகிசுத்தாள் பயத்தில்.

“எதுக்கு இப்போ இங்கே வந்தீங்க? எங்க அம்மா இருக்காங்க பாருங்க” என்று தன் அருகில் படுத்திருக்கும் சுபத்ராவைக் காட்டிச் சொன்னாள்.

“உன்னோட கைக்கு மருந்து போட வந்தேன்” என்றவன், மயில் தோகையால் அவளின் கைகளை வருடினான்.

“நீங்கதான் எனக்குக் கொலுசும் போட்டு விட்டீங்களா?” என்று மெல்லிய குரலில் அவன் விழிகளைப் பார்த்தாள்.

“அதான் காலையிலேயே சொன்னேனே. என்னைத் தவிர என் வீட்டுக்குள்ள எவனும் நுழைய முடியாது” என்றான்.

இவள் தலை குனிந்து கொண்டாள்.

“தனியா படுக்குற பழக்கம் இல்லையா உனக்கு? உன் காலுக்குப் பதிலா உன் அம்மா காலுக்குக் கொலுசு போட்டு விட்டுருந்தா என்னாயிருக்கும்?” என்று நக்கலாகக் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள் அனு.

“தனியா படுக்கப் பயப்படுவியோ?” மீண்டும் அதே நக்கல் அவன் குரலில்.

“நீங்க வெளியே போங்க. இல்லைனா நான் கத்தி என் அம்மாவை எழுப்பி விட்டுருவேன்” என்று மிரட்டியவளைப் பார்க்கும் பொழுது, அவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“ம்ம்ச், எதுக்குச் சிரிக்கிறீங்க? உண்மையா சொல்றேன். என் அம்மாவை எழுப்பி விட்டுருவேன்” என்றாள்.

“என்ன, எனக்குப் பயந்து வேற வீடு மாறப் போறியாம்? கேள்விப்பட்டேன்” என்று கேட்டவனைத் திகைப்பாகப் பார்த்தாள் அனு.

“அம்மாகிட்டதான பேசுனோம். கெட்டவனுக்கு எப்படித் தெரிஞ்சிது?” என்று யோசித்தவளின் முகம் இருட்டிலும் நிலவைப் போல் பிரகாசித்தது.

அவளின் உதடுகள் மின்மினிப் பூச்சு போல் மின்னியது. அவளின் காலடியில் தரையில் முட்டி போட்டு அமர்ந்திருந்தவன், இப்பொழுது எழுந்து அவளின் காலடியில் பஞ்சு மெத்தையில் அமர்ந்து அவளின் முகம் பார்த்தான்.

“வெ… வெளி… வெளியே போங்க” என்று திக்கித் திணறி, காற்றுக்கும் கேட்காமல் கிசுகிசுத்தவளின் உதடுகள் அவனை அருகே வா என்று அழைப்பது போல் இருந்தது.

இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தான். “என்ன டி ட்ரெஸ் இது? இந்த ட்ரெஸ்ஸைப் போடுறதுக்கு, நீ போடாமயே இருக்கலாம்” என்றான் கிசுகிசுப்பாக.

இவளுக்குப் பயத்தில் மூச்சு முட்டியது. கண்கள் விரிந்தது. மூளை வேலை நிறுத்தம் செய்தது போல் இருந்தது. அதிர்ச்சியில் இருந்தாள்.

“நான் மருந்து போட்டு விட்டுட்டுப் போயிரலாம்னு நினைச்சிதான் வந்தேன். ஆனால், போக முடியல” என்றான் அவளைப் பார்த்து.

இவள் போர்வையை எடுத்து உடனே உடல் முழுதும் மூடிக் கொண்டாள்.

அவளின் செய்கை இவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“என் அம்மாவை எழுப்புறேன்” என்று “அம்” என்று கூறுவதற்குள், அவளின் உதடுகளைக் கவ்விக் கொண்டான் வெற்றி.

அவளின் “அம்மா” என்ற அழைப்பு, அவனின் உதடுகளுக்குள் சென்று மறைந்து கொண்டது.

கைகள் இரண்டும் அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்திருந்தன. அவன் அவளின் உதட்டில் தேன் பருகிக் கொண்டிருந்தான்.

அனுவின் பிஞ்சு கைகள் அவனின் தோள் பட்டையில் அடித்தது. அவனுக்கு அது தட்டிக் கொடுத்தது போல் இருக்க, இன்னும் அவனின் இதழ் முத்தத்தில் வன்மையை அதிகரித்தான்.

அரை நிமிடம் கழித்து, பாவம் பார்த்து முத்தத்தை நிறுத்தினான். அதுவும் அவள் மூச்சு விடுவதற்காக மட்டும்.

அவன் முத்தத்தை நிறுத்தியதும், அவள் தலையணையில் மயங்கி விழுந்தாள்.

அவளின் அருகில் சுபத்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

கீழ் இதழைக் கடித்துச் சிரித்தவன், மயங்கிக் கிடக்கும் அவளின் காதோரம் சென்று, “என்ன பூனைக் குட்டி, கழுத்துலயும் கிஸ் வேணுமா?” என்று கேட்டான்.

அவள் பட்டென்று கண்களைத் திறந்து கொண்டாள். அவள் கண்களைத் திறந்ததும் சிரித்தவன், “நடிக்கிறியா டி கேடி?” என்றான்.

அவளுடைய இதயத் துடிப்பு அவளுக்கே கேட்டது. தன் நெஞ்சில் கை வைத்தாள். அவனிடமிருந்து தப்பிக்கத்தான் மயங்கியது போல் நடித்தாள். இப்பொழுது உண்மையில் மயக்கம் வருவது போலிருந்தது அவளுக்கு.

“ப்ளீஸ் போங்க கெட்டவன் சார்” என்றாள் அழுகுரலில்.

அவள் அழுதால் கூட இவன் அப்படி ரசித்துப் பார்ப்பான். அவள் அழும் பொழுது கூடப் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், இன்று, இப்பொழுது அழுவது வெற்றியின் மனதை உறுத்தியது.

அவளின் கைகளைப் பற்றி, காயப்பட்ட அவளின் உள்ளங்கையில் முத்தம் வைத்தான்.

இவளுக்குக் கன்னங்களைத் தாண்டி வழிந்த கண்ணீர் நின்று விட்டது. உதடுகளில் கொடுத்த முத்தத்தை விட, இந்த முத்தம் மென்மையாக இருப்பது போல் உணர்ந்தாள்.

“ஹேய் பூனைக் குட்டி, நீ எனக்குப் பணமே தர வேண்டாம் டி” என்றவன், அவளின் பதிலை எதிர்பாராது அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

“பணமே தர வேண்டாம்” என்று அவன் கூறும் பொழுது, அவனின் முகம் சாந்தமாகத்தான் இருந்தது. அவனின் உதடுகளில் புன்னகை தெரிந்தது.

அவன் கூறியது உண்மையா, பொய்யா என்று சிறிது நேரம் குழப்பத்தின் பிடியில் இருந்த அனு, சுய நினைவு வந்து எழுந்து பார்க்க, அவன் வந்து போன தடயம் கூட அறையில் இல்லை.

*****

“ஹேய் அனு, என்ன இன்னைக்கு இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க? காலையில், சுபத்ரா அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்த பின்தான், கனவிலிருந்து விழித்தது போல் பதறியடித்து எழுந்தாள் அனு.

“காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு, கிளம்பு. இன்னைக்கு அதுக்கு மட்டும்தான் உனக்கு நேரம் இருக்குது” என்று கூறி விட்டுச் சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றார் சுபத்ரா.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா கமெண்ட்ஸும் குட்டி ஹார்ட்ஸும் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!