தேநீர் இடைவேளையில் பாலாவும் மலரும் சேர்ந்தே கேண்டீனுக்கு சென்றனர். தங்கள் இருவருக்கும் அவள் சமோசா, எக் பப்ஸ், காபி ஆர்டர் சொல்லி வாங்கிக்கொண்டிருக்க, “ஹாய் ஃபிளவர்… எங்களுக்குலாம் சமோசா இல்லையா?” என்று கேட்டவாறு அங்கு சசி வந்தான்.
‘என்னது ஃபிளவரா?!’ என்று திகைப்போடு அவனைப் பார்த்தவள், “உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க சசி” என்றாள்.
அவள் கூறியதுதான் தாமதம்… சசி, ரகு, ராகவ் மூவரும் கேண்டீனில் இருப்பதெல்லாம் வாங்கிக்கொள்ள, “இவனுங்க என்ன? மாசக் கடைசில பெரிய ஆப்ப வைக்கிறானுங்க” என்று நினைத்தவாறு திருதிருவென விழித்தாள்.
அவள் மனதில் உள்ளதைப் புரிந்துகொண்ட பாலா, நண்பர்கள் வாங்கியதற்கு அவனே பணத்தைச் செலுத்தினான். “அப்பாடா…” என முணுமுணுத்தவள், அவனருகே போய் அமர்ந்துகொண்டாள்.
பாலா மேஜையின் மீதிருந்த சாஸ் பாட்டிலை எடுக்க திரும்பியதும், அவனுடைய கால் மலரின் காலை உரசியது.
சட்டென்று அவளது உடம்பில் மின்சாரம் பாய்வது போலிருக்க, உள்ளுக்குள் லேசாக நடுக்கம் எடுத்தது. கனவில் வந்த முத்தக் காட்சியும் நினைவுக்கு வர, முகம் வெளிறிப் போனாள்.
அவளது முக மாற்றத்தைக் கவனித்த பாலா, “என்னாச்சு மலர்? ஆர் யூ ஓகே?” என்று கேட்க, “ஹ்ம்ம்… ஓகே” என்றாள் சுரத்தையில்லாத குரலில்.
“நான் வர்றேன் பாலா… ஒர்க் இருக்கு” என்று விறுவிறுவென அவள் அங்கிருந்து செல்ல, பாலா குழப்பத்தோடு அமர்ந்திருந்தான்.
அலுவலக நேரம் முடிந்துவிட, வண்டிக்காக காத்திருந்தவளுக்கு அருகே தன் காரை நிறுத்திய பாலா, “வாங்க மலர்… உங்க ஹாஸ்டல் என் வீட்டுக்குப் போற வழிலதான் இருக்கு. நானே உங்களை ட்ராப் பண்ணிடுறேன்” என அழைத்தான்
அவளும் மறுக்க முடியாமல் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். கலகலவென பேசுபவள் அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமாய் இருந்தது.
“என்ன மலர் நல்லா ஜாலியா பேசிட்டே வருவீங்க. இன்னைக்கு ஒண்ணுமே பேச மாட்டேங்கிறீங்க” என்று எதார்த்தமாக வினவியதும், “கொஞ்சம் டயர்டா இருக்கு…” என்றாள் சமாளிப்பாக.
“ஆமா… அந்த புது கிளையண்ட் சரியான தலைவலி போல. எப்படி சமாளிக்கிறீங்க? நல்லவேளை நான் அவர்கிட்ட மாட்டிக்கல” அவள் முகத்தைப் பார்த்தபடியே அவன் பேசிக்கொண்டிருக்க, “நாம சொல்றதையே கேட்க மாட்டார், அவர் பேசுனதையே பேசுவார்” என்று அவளும் அவனுக்கு பதில் தந்தாள்.
திடீரென்று காரை நிறுத்திய பாலா, மெல்ல திரும்பி புன்னகையோடு அவளை நெருங்கி வர, ‘முத்தம் தரப் போகிறானோ!’ என்றெண்ணியவளோ கண்களை இறுக்கமாக மூடி, உதடுகளை மடித்துக்கொண்டாள்.
அவனோ கீழே குனிந்து, அவளது கால்களுக்கு அருகே கிடந்த தன் வாலட்டை எடுத்து நிமிர்ந்தவன், மலரின் செய்கையைப் பார்த்து திடுக்கிட்டான். “மலர்… கூல்… கூல்… நான் கீழே கிடந்த என்னோட பர்ஸைத்தான் எடுத்தேன்” என்று தோளைத் தட்டியதும் அவளும் இயல்பானாள்.
காரை மீண்டும் இயக்கியவன், “மலர்… காலைலருந்து நீங்க ஒரு மாதிரி நடந்துக்கிறீங்க. ஐ ஆம் ரியலி சாரி… அன்னைக்கு நடந்ததை நினைச்சு பயப்படுறீங்க போல. தப்பு என்மேல தான், உங்க பக்கத்திலேயே நானும் இருந்தா என்னை பார்க்கும்போது உங்களுக்கு அந்த ஞாபகம் வரத்தான் செய்யும்” என்று தன் வருத்தத்தைத் தெரிவிக்க,
“இல்ல பாலா… அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். ஏதோ சின்ன குழப்பம், பதட்டம். அதான் அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன். நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க” என்று அவளும் அவன் குற்ற உணர்வை போக்க எண்ணினாள்.
விடுதிக்கு சற்று தள்ளி வாகனம் நின்றதும், அவள் இறங்கினாள். “நீங்க ஒண்ணும் குழப்பிக்காதீங்க. பாய், குட் நைட்” என்று பாலா தலையசைத்து அவளிடம் விடைபெற்றான்.
“என்னடி இன்னைக்கும் கார்ல வந்தியா?” என அனன்யா கேட்க,
“பாவம்டி பாலா… இன்னைக்கு அவனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என்று அன்று காலை முதலே மலர் தான் கண்ட கனவையும், பாலாவிடம் நடந்து கொண்ட விதத்தையும், அவனை தவறாக புரிந்து கொண்டதையும் கூறி கண்கள் கலங்கினாள்.
“ஹே விடுடி… வா, அவன் நல்லவன்தானே. உன்னை புரிஞ்சுப்பான், தப்பா நினைச்சுக்க மாட்டான்!” என்று தோழியை சமாதானம் செய்தாள் அனன்யா.
மறுநாள் அலுவலகத்திற்குச் சென்ற மலரின் கண்ணில் பாலா படவே இல்லை. அவளை எதிரில் கண்டால் வேறு வழியில் நகர்ந்து விடுகிறான். அவளது கேபின் பக்கம் செல்வதே இல்லை, அலுவலகம் முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பியிருந்தான்.
பாலா தன்னைப் புறக்கணிப்பதாக அவளுக்குத் தோன்றியது, ஏனோ அவனது பேச்சும் அருகாமையும் தேவைப்பட்டது. ‘இப்போதான் கொஞ்சம் சிரிச்சோம். அது கடவுளுக்கே பொறுக்கலையா?’ என மனதிற்குள் நொந்துபோனாள்.
உறவுகளையும் பிரிவுகளையும் பழகிப் போனவள், இதையும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து சென்றாள். கண்ணும் கருத்துமாக தன் வேலையில் கவனத்தைப் பதித்தாள்.
நாட்கள் வாரங்களாகின… அன்று அலுவலகத்திற்கு சென்ற மலருக்கு உடல்நிலை சரியில்லை. மீட்டிங்கில் இருந்து அவள் பாதியிலேயே எழுந்து சென்றதை பாலா கவனித்துவிட்டான்.
அலுவலக நேரம் முடிந்ததும், பாலா வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருக்க, எதேச்சையாக மலரின் கேபினை பார்த்தான். அங்கு அவள் இல்லை; அவளது கைப்பை மட்டுமே இருந்தது.
“மலர் கிளம்பிட்டங்களா? இல்லையா?” என்று குழப்பத்தில் ஆழ்ந்தவன் ஓய்வறைக்குச் சென்று பார்த்தபோது, அவள் அங்கிருந்த நீள்விருக்கையில் படுத்திருந்தாள்.
பாலா அவளருகே சென்றவன், “மலர்… மலர்… ஆபீஸ் டைம் ஓவராகிடுச்சு. ஹாஸ்டலுக்குப் போகலையா?” என்று அவளது தோளைத் தட்டி எழுப்பியதும், கண்களைத் திறக்க முடியாமல் மெல்ல விழித்துப் பார்த்தாள்.
“ஹ்ம்ம்… போகணும்” எனப் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தவள், “பாலா… ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்று வினவினாள்.
“என்ன மலர்? சொல்லுங்க…” என்றவன், அவள் முகத்தையே உற்று நோக்க, “என் கேபின்ல என்னோட ஹேண்ட்பேக் இருக்கும், எடுத்திட்டு வாங்களேன்” என்றாள் சோர்வான குரலில்.
அவன் எடுத்து வந்ததும், “அதுல ஒரு பாக்ஸ்ல பி.பி டேப்லெட் இருக்கும், அதை கொஞ்சம் எடுத்து தாங்க, பிளீஸ்” என்றாள் உள்ளிழுத்த குரலில்.
அவன் மாத்திரையும், தண்ணீர் புட்டியும் எடுத்து கொடுத்து அவளை விழுங்க வைத்தான். தன்னையறியாமலே மெல்ல அவள் முதுகை தட்டிக்கொடுத்தான்.
சிறிது நேரம் கழித்து விழித்துப் பார்த்தவள், “தேங்க்ஸ் பாலா…” என்றாள் சிறு புன்னகையோடு.
“வா மலர்… உன்னை ட்ராப் பண்றேன்” என்று அவன் அழைக்க, “வேணாம் பாலா, நான் போய்க்கிறேன்” என மறுத்தாள்.
“ஹே… ஆபீஸ்ல யாருமே இல்லை. நீ எப்படி போவ? முதல்ல எழுந்து கிளம்பு” என்று ஒருமையில் உரிமையாய் பேசியதும், அவனுடன் புறப்பட்டுச் சென்றாள்.
இருவரும் அவனது காரில் ஏறிக் கொள்ள, மலர் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்திருந்தாள்.
“மலர்… உடம்புக்கு என்ன பண்ணுது. ஹாஸ்பிட்டலுக்குப் போகலாமா?” என்று அவன் தவிப்போடு வினவியதும், “இல்ல பாலா… ஐ ஆம் ஓகே. பி.பி லோ ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். டேப்லெட் போட்டுருக்கேன்ல, சரியாகிடும்” என்றாள்.
‘முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ…
முல்லை இரவுகள் பற்றி எரியாதோ…’
கார் மியூசிக் பிளேயரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவள் சோர்வாய் கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்திருக்க, “மலர் பாட்டை ஆஃப் பண்ணிரட்டுமா?” என்று அக்கறையோடு வினவினான்.
“வேணாம் பாலா… இருக்கட்டும்” அவள் மெல்ல விழிகளைத் திறந்து அவனை நோக்கினாள்.
“உன்னோட ஃபேவரைட் மியூசிக் டைரக்டர் யாரு?” ஏதோ பேச வேண்டுமென்றே அவன் உரையாடலைத் தொடங்க,
“எனக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். ஃபேவரைட்னு யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லாரோட சாங்க்ஸும் கேட்பேன். உங்களுக்கு?” என எதிர்கேள்வி கேட்டாள்.
“நானும் உன்னை மாதிரிதான் எல்லாரோட சாங்ஸும் கேட்பேன். பட்… ஏ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் பேசிக்கொண்டே அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ உறங்கியிருந்தாள்.
வாகனம் விடுதியை நெருங்கியதும் ஓரமாக நிறுத்திய பாலா அவளை எழுப்ப முயற்சிக்க, அவளோ மாத்திரை போட்டதில் நன்கு தூங்கியிருந்தாள். பாலா தூங்கும் அவளது எழில் முகத்தையே கண்கொட்டாமல் நோக்கினான்.
ரோஜாப்பூ போன்று மலர்ந்திருக்கும் முகம், இன்று ஏனோ வாடியிருந்தது. பூ மொட்டுகளைப் போல இமைகளை மூடியிருந்த கண்கள்; பூவிதழ்களை மேலும் கீழும் ஒட்ட வைத்தது போன்ற சிவந்த அதரங்கள்!
லேசாக உதடுகளைத் திறந்து குழந்தைபோல் தூங்கிக் கொண்டிருந்தாள்; பஞ்சு போன்ற மிருதுவான கன்னங்கள்; வலது கன்னத்தின் நடுவே அழகானதொரு மச்சம்!
அவனது விழிகளோ அவளது கழுத்திற்கு கீழே அலைபாய்ந்திட, சட்டென்று பார்வையைத் திரும்பிக்கொண்டான். “வேணாம் பாலா, தப்பு” என்று தன் பின்னந்தலையில் தட்டிக்கொண்டான். அப்படியே ஸ்டீயரிங்கில் சாய்ந்து அவனும் கண்ணயர்ந்தான்.
திடீரென தூக்கத்திலிருந்து விழித்த மலர், ‘நாம எப்போ கார்ல தூங்கினோம்?’ என்ற யோசனையோடு, அருகிலிருந்த பாலாவைத் தட்டி எழுப்பினாள்.
உடம்பை வளைத்து நெளித்து முறுக்கியவாறு எழுந்தவன், “மலர்… நல்ல தூக்கம் போல?” என வினவினான்.
“என்ன பாலா… ஹாஸ்டல் வந்தா என்னை எழுப்பிவிட வேண்டியது தானே” என்று அவள் சற்று குரலுயர்த்த, “நான் எழுப்பிவிட்டேன்… நீ முழிக்கவே இல்ல, அதான் நானும் தூங்கிட்டேன்” என்று மறைவாக கொட்டாவியை வெளியேற்றினான்.
“சாரி பாலா… என்னால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு” என்று அவளது குரலில் வருத்தம் தொனிக்க, “பரவாயில்ல மலர்… எத்தனை சாரி தேங்க்ஸ்தான் சொல்லுவ. நீ பத்திரமா போ, நல்லா ரெஸ்ட் எடு, குட் நைட்!” என்று அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.
“மலர் என்னடி? டெய்லி பிக்கப், ட்ராப்னு ஜாலியா போயிட்டிருக்கு போல” என்று அனன்யா கேட்டுக்கொண்டிருக்க, மலர் அப்படியே தரையில் மயங்கி சரிந்தாள்.
“ஐயோ மலர்… என்னாச்சுடி உனக்கு?” என்று அனன்யா வேகமாக தண்ணீரை எடுத்து தோழியின் முகத்தில் தெளித்தும் அவளோ அசைவுறாமல் கிடந்தாள்.
ஒரு வாடகை வாகனத்தை பதிவு செய்தவள், அங்கிருந்தவர்ளின் உதவியோடு மலரைத் தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மலர் இரண்டு நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை. ‘அன்று மலரை அப்படியே ஹாஸ்டல் வாசல்ல விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு போயிருக்கணும்” என்று தன் மீதே கோபம் கொண்டான்.
இன்னும் மலரின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்திருக்கவில்லை. அவளது தோழியின் எண் இருந்தும் அழைக்கத் தயங்கினான்.
எதற்கும் ஆசிரமத்திற்கு போய் பார்க்கலாம் என்று சென்றிருந்தான். அங்கும் அவள் இல்லாது போக மதரை மட்டும் சந்தித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
அவளைக் காண முடியாமல் அவனுக்கு அவஸ்தையாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் அவளது முகம்தான் தெரிந்தது. ‘ஒருமுறை மட்டும் பார்த்துவிட வேண்டும், அவள் நலமாக இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும்’ என்று மனம் ஆவலாதியாய் துடித்தது.
மாலை அலுவலகம் முடிந்த பிறகு, மலரின் விடுதிக்குச் சென்று அவளை இறக்கிவிடும் இடத்திலே நின்று, ‘விடுதிக்குள்ளிருந்து அவள் வெளியே வருவாளா?” என நோட்டமிட்டான்.
காதல் மலரும்🌹
