Rolex 48

48

நள்ளிரவுப் பொழுதின் அமைதியில், துறைமுக வீதியின் சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்த உரையாடல் தொடர்ந்தது.

பைரவன் கிசுகிசுப்பாக ரோலக்ஸிடம் அசைவில் பேசியதை ACP ஷர்மா கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ரோலக்ஸின் அமைதியான, குளிர்ந்த பார்வை தன் மீது நிலைத்திருப்பதை உணர்ந்த ஷர்மா, தன் உதடுகளில் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டவன், “ரோலக்ஸ்… என்ன, உன் ஆளு சொல்றதைக் கேட்டு யோசிக்கிறீங்களா? ஒருவேளை நான் வேலையை முடிச்சுட்டு உங்களை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறீங்களோ? இல்ல… இந்த வீடியோவை வச்சு அப்புறமா உங்களை பிளாக்மெயில் பண்ணுவேன்னு சந்தேகம் வருதா? அதானே உங்க பயம்?”

என்ற ஷர்மா தன்னிச்சையாக நக்கலாகச் சிரித்தான். பின்னர் தன் கையில் இருந்த அந்த அதிநவீன மொபைலை எடுத்தான். ரோலக்ஸ், பைரவனின் கண்களுக்கு நேரே திரையைக் காட்டியபடி, அந்த உக்கிரமான கொலை ஆவணத்தின் வீடியோ ஃபைலைத் தேர்வு செய்து, Delete பொத்தானை அழுத்தினான். Permanently Deleted என்ற செய்தி திரையில் தோன்றி மறைந்தது.

“இதோ… இந்த வீடியோவை உங்க கண் முன்னாடியே முழுசா அழிக்கிறேன். நான் இந்த வீடியோவை வச்சு உன்னை மிரட்ட வரல ரோலக்ஸ். எனக்கு வேண்டிய வேலை ஆகணும். அது உன்னால் மட்டும்தான் முடியும்! ஏன்னா… நீதான் இந்தக் கடலின் அரசன்! நீ நினைச்சா இதை கண்டிப்பா கச்சிதமா செஞ்சு முடிக்க முடியும்ங்கிற ஒரே நம்பிக்கையில தான் உன்னைத் தேடி வந்தேன்.”

ஷர்மா தன் குரலில் இருந்த நக்கலைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு சீரியஸான வியாபாரியின் அழுத்தத்தோடு பேசத் தொடங்கினான், “ரோலக்ஸ், எனக்கு நீ இதைச் செஞ்சு கொடுத்தா, டெல்லியில இருக்கிற மிகப்பெரிய அரசியல் அதிகாரமெல்லாம் உனக்குக் கை கொடுக்கும். ஏன்னா, நீ திசைதிருப்பி அனுப்பப் போற இந்த சரக்கு, டெல்லியில இருக்கிற ஒரு மாபெரும் அரசியல் புள்ளிக்குச் சேர வேண்டியது. அவருடைய ஆசி உனக்குக் கிடைச்சா, இந்தத் தென்னகத்துல மட்டுமில்ல… இந்தியா முழுமைக்கும் நீதான் மாஃபியா சக்கரவர்த்தி!” என்றான் 

ரோலக்ஸ் மெதுவாக ஷர்மாவின் பக்கம் திரும்பினான். அவனது உதடுகளில் ஒரு சிறிய, கம்பீரமான புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகையே அவனது சம்மதத்திற்கான பதிலாக இருந்தது.

ஷர்மா ஆவலுடன் தன் கையை நீட்டினான். ரோலக்ஸ் அவனது கையைப் பற்றி, வலுவாகக் குலுக்கினான்.

ரோலக்ஸ் தன் விரல்களால் சைகை செய்து, அந்தச் சரக்குக் கப்பலில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, அது எந்தப் பாதையில் வருகிறது, சர்வதேச கடல் எல்லையில் அதன் சிக்னல் எண்கள் என்னென்ன என்ற விவரங்களைக் கேட்டறிந்தான். ஷர்மா தான் கொண்டு வந்திருந்த ரகசிய வரைபடத்தையும், சிக்னல் குறியீடுகள் அடங்கிய காகிதத்தையும் ரோலக்ஸிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

ரோலக்ஸும் பைரவனும் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். அங்கே மயூரா விளக்கை எரியவிட்டு, இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்ததும், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பைரவன் பரபரப்பாக விவரித்தான். ஏசிபி ஷர்மா சொன்ன சலுகைகளையும், டெல்லி தொடர்புகளையும் பற்றி அவன் உற்சாகமாகப் பேசினாலும், மயூராவுக்கு அது திருப்தியளிக்கவில்லை. அவளது முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

அவள் ரோலக்ஸின் கைகளைப் பற்றி, கவலையுடன் சைகை செய்தாள், “ரோலக்ஸ்… இது எனக்கு ஏதோ பெரிய ஆபத்து மாதிரி தெரியுது. ஒரு போலீஸ்காரன் தன் கையில் இருக்குற ஆதாரத்தை அழிச்சுட்டு உன்னைக் நம்புறான்னா, அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய சதி இருக்கும். இதெல்லாம் வேண்டாம்… இதனால பெரிய பின்விளைவுகள் வரும்!”

ரோலக்ஸ் அவளது தோள்களைத் தட்டி, மென்மையாகப் புன்னகைத்தவன் தன் விரல்களால் அவளுக்குப் பதிலளித்தான், “பயப்படாத மயூரா… ஒரு போலீஸ்காரனை எப்படிப் பயன்படுத்திக்கணும்னு எனக்குத் தெரியும். இந்த விஷயம் நம்மை மாஃபியா உலகத்தின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஒருவேளை பாபியிடம் நாம் மாட்டிக் கொள்ளும் நிலை வந்தாலும், டெல்லியில் இருக்கும் இந்த அரசியல் பலம் நம்மைக் காப்பாற்றும். நரியை வச்சே வேட்டைக்காரனை அடிக்கப்போறேன், அவ்வளவுதான்.”

ரோலக்ஸ் சொன்னதில் உள்ள தந்திரம் பைரவருக்குச் சரி என்று பட்டது. ஆனால், மயூராவின் மனதில் ஏதோ ஒரு அமானுஷ்யமான பயம் நிலவியது. பைரவனுக்கும் கூட அந்த ஏசிபி ஷர்மாவை முழுமையாக நம்ப முடியவில்லை. ‘வேலை முடிந்ததும் அவன் நம் முதுகில் குத்த மாட்டான் என்பது என்ன நிச்சயம்?’ என்ற கேள்வி அவன் மனதிற்குள் குடைந்துகொண்டே இருந்தது.

இருப்பினும், திட்டம் தொடங்கியது. மேஜை மீது வரைபடத்தை விரித்தான் பைரவன்.

“ரோலக்ஸ்… சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து வர்ற ‘எம்.வி. அட்லாண்டிக்’ கப்பல் மும்பை துறைமுகத்துக்குப் போக வேண்டியது. ஆனா டெல்லிக்குக் கடல் வழியோ, கடற்கரையோ கிடையாதே! ஒரு பிரம்மாண்டமான சரக்குக் கப்பலை எப்படி டெல்லிக்குத் திருப்புவது? துறைமுகங்கள்ல சுங்கத்துறை செக்கிங் கடுமையா இருக்குமே?” என்று பைரவன் குழப்பத்துடன் கேட்டான்.

ரோலக்ஸ் அந்த வரைபடத்தை உற்றுப் பார்த்தான். அவனது விரல்கள் அரபிக் கடலின்  மையப்பகுதியில் ஒரு புள்ளியைத் தொட்டன. பின்னர் அங்கிருந்து குஜராத் மாநிலத்தின் கட்ச் துறைமுகத்தை நோக்கி ஒரு கோட்டைக் கிழித்து, அங்கிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லிக்குத் தரைவழியாக ஒரு பாதையை வரைந்து காட்டினான்.

பைரவனின் கண்கள் விரிந்தன. அவனுக்கு ரோலக்ஸின் பிரம்மாண்டமான திட்டம் புரிந்துவிட்டது.

“அற்புதம் ரோலக்ஸ்! கப்பலை முழுசாத் திருப்புனா சர்வதேச ரேடார்ல மாட்டிப்போம். அதனால… நடுக்கடல்ல வச்சே அந்தப் பெரிய கப்பலை மறிக்கிறோம்! நமக்குத் தேவையான சரக்குகளை மட்டும் நடுக்கடல்ல நம்மளோட ரகசியக் கப்பலுக்கு மாத்துறோம். அப்புறம் அந்த மெயின் கப்பலை அதோட பாட்டுல மும்பைக்கே போக விட்டுடுறோம். நம்ம சரக்கு ஏத்துன கப்பல், குஜராத்ல இருக்குற கட்ச் துறைமுகத்துக்குப் போகுது. அங்கிருந்து தரைவழியா டெல்லிக்குப் போகுது! அதானே உன் பிளான்?” என்று பைரவன் உற்சாகமாகக் கேட்டான்.

ரோலக்ஸ் தன் தலையை அசைத்து, தன் வெள்ளை நிறத் துப்பாக்கியை மேஜை மீது வைத்தான். அந்தத் திட்டத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவர்கள் செதுக்கத் தொடங்கினர். கட்ச் துறைமுகத்தில் இருக்கும் சில ஊழல் அதிகாரிகளையும், தரைவழிப் போக்குவரத்திற்கான மாபெரும் நெட்வொர்க்கையும் ரோலக்ஸ் முன்கூட்டியே தனது நிழல் சாம்ராஜ்யம் மூலமாகத் தயார் செய்தான்.

இரவு 2:00 மணி. அரபிக் கடலின் மையப்பகுதி.

அலைகள் ஆக்ரோஷமாக மலைபோல எழும்பி மோதிக்கொண்டிருந்தன. சுற்றிலும் காரிருள். ‘எம்.வி. அட்லாண்டிக்’ என்ற பிரம்மாண்டமான சரக்குக் கப்பல், தன் பிரம்மாண்ட விளக்குகளின் வெளிச்சத்தில் மும்பையை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

திடீரென, அந்த இருண்ட கடலின் பரப்பில், எந்தவிதச் சத்தமும் இல்லாமல், கறுப்பு நிறத்தில் ரோலக்ஸின் Ghost Ship உடன் இரண்டு அதிவேக ஸ்பீட் போட்கள் நீரைக்கீறிக்கொண்டு பாய்ந்து வந்தன.

ரோலக்ஸ் தன் கையை உயர்த்திச் சைகை செய்தான். அடுத்த நொடி, போட்டில் இருந்த அதிநவீன சிக்னல் ஜாமர் ஆன் செய்யப்பட்டது. பிரம்மாண்டக் கப்பலின் ரேடார் திரைகள், GPS, தகவல் தொடர்பு அமைப்புகள் அனைத்தும் ஒரே நொடியில் துண்டிக்கப்பட்டன.

கப்பலின் பின் பக்கத்திலிருந்து ரோலக்ஸின் ஆட்கள் எறிந்த இரும்பு நங்கூரக் கயிறுகள், கப்பலின் பக்கவாட்டுச் சுவர்களில் கச்சிதமாகப் பாய்ந்து கொக்கிகளால் பூட்டிக்கொண்டன.

ரோலக்ஸ், ஒரு கையில் வெள்ளைத் துப்பாக்கியை ஏந்தியபடி, அந்த அசைந்தாடும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, கடல் காற்றில் அதிவேகமாக மேலே ஏறி, கப்பலின் Deck தளத்தில்  பாய்ந்து குதித்தான்! அவனுக்குப் பின்னால் பைரவனும் இருபது ஆயுதம் தாங்கிய வீரர்களும் சிறுத்தைகளைப் போலக் குதித்தனர்.

கப்பலின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புக் காவலர்கள் சுதாரித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

“டக் டக் டக் டக்! பாங்! பாங்!…”

தோட்டாக்கள் கப்பலின் இரும்புத் தளத்தில் பட்டுத் தெறித்தன. ரோலக்ஸ் தன் உடலைச் சறுக்கி, ஒரு பெரிய கன்டெய்னருக்குப் பின்னால் மறைந்தான். ஒரு காவலன் அவனை நோக்கி பாய, ரோலக்ஸ் தன் வெள்ளைத் துப்பாக்கியின் பின்புறத்தால் அவனது தாடையில் ஓங்கி அடித்தான். அவன் நிலைகுலைந்து விழும்போது, அவனது ஆயுதத்தைப் பறித்து, பின்னால் வந்த இருவரின் நெஞ்சிலும் சுட்டுக் கீழே சாய்த்தான்.

ரோலக்ஸின் ஆக்ரோஷம் அந்த நடுக்கடலில் அசுரத்தனமாக இருந்தது. அவன் கன்டெய்னர்களின் மீது ஏறிப் பாய்ந்து, எதிரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து, அவர்களைக் கடலுக்குள் தூக்கி வீசினான். அவனது ஒவ்வொரு அடியும் மரணத்தின் நிழலாக இருந்தது. ஐந்தே நிமிடங்களில், கப்பலின் பாதுகாப்புக் குழு முழுவதும் ரோலக்ஸின் காலடியில் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தது.

ரோலக்ஸ் கேப்டன் அறைக்குள் புகுந்தான். கேப்டனின் நெற்றியில் தன் வெள்ளைத் துப்பாக்கியை வைக்கவும், பைரவன் கத்தினான், “வண்டியை நிறுத்தடா! கப்பலோட இன்ஜினை ஆஃப் பண்ணு! கப்பலோட Cranes ஆன் பண்ணு!” என்றான் 

நடுக்கடலில் அந்த பிரம்மாண்டக் கப்பல் நிறுத்தப்பட்டது. ரோலக்ஸின் ரகசியக் கப்பல் ‘எம்.வி. அட்லாண்டிக்கின்’ பக்கவாட்டில் வந்து உரசியபடி நின்றது. கேப்டனை மிரட்டி, கப்பலின் ராட்சச கிரேன்கள் மூலம், டெல்லிக்குப் போக வேண்டிய அந்த ரகசிய ஆயுதங்கள் அடங்கிய கன்டெய்னர்கள் மட்டும் நடுக்கடலிலேயே ரோலக்ஸின் கப்பலுக்கு மாற்றப்பட்டன.

வெறும் முப்பதே நிமிடங்களில், நடுக்கடலில் ஒரு மாபெரும் கடத்தல் அரங்கேறி முடிந்தது. “இனி மும்பைக்குப் போ. போலீஸ்கிட்ட வாய் திறந்தா, உன் குடும்பம் உயிரோட இருக்காது,” என்று கேப்டனை மிரட்டிவிட்டு, ரோலக்ஸ் தன் கப்பலுக்குத் திரும்பினான்.

இரண்டு நாட்கள் கழித்து. குஜராத் மாநிலத்தின் கட்ச்  துறைமுகத்தின் மிக ரகசியமான, தனியாரால் நிர்வகிக்கப்படும் ஒரு இருண்ட கிடங்குப் பகுதி.

அதிகாலைப் பனிமூட்டத்திற்கு நடுவே ரோலக்ஸின் ரகசியக் கப்பல் அங்கே நின்றது. துறைமுகத்தில் முன்னதாகவே பைரவனால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கன்டெய்னர் லாரிகள் வரிசையாக நின்றிருந்தன.

ரோலக்ஸ் துறைமுகத் தளத்தில் நின்று கொண்டு, தன் கையில் இருந்த ரோலக்ஸ் கடிகாரத்தைப் பார்த்தான். எல்லாம் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருந்தது. ரோலக்ஸ் தன் நிழல் உலக நெட்வொர்க் மூலம் அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளைப் பணத்தால் விலைக்கு வாங்கியிருந்தான்.

சரக்குகள் லாரிகளுக்கு மாற்றப்பட்டன. ஆனால், அவை வெறும் லாரிகள் அல்ல.

“ரோலக்ஸ்… டெல்லி வரைக்கும் மூணு மாநிலங்களைத் தாண்டிக் கொண்டு போகணும். போலீஸ் செக்கிங் நிறைய இருக்கும். அதனாலதான் இந்த வியூகம்,” என்று பைரவன் ஒரு லாரியைத் திறந்துகாட்டினான்.

லாரியின் உள்ளே, விவசாயத்திற்குப் பயன்படும் மாபெரும் டிராக்டர் இயந்திரங்களும், தொழிற்சாலைப் பாய்லர்களும் இருந்தன. அந்த பாய்லர்களுக்கு உள்ளேதான் ஆயுதங்கள் எல்லாம் மிகத் தந்திரமாகப் பற்றவைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. வெளியே பார்த்தால், அது அரசாங்கத்தின் விவசாயத் திட்டத்திற்காகச் செல்லும் கனரக இயந்திரங்களைப் போலவே தோற்றமளித்தது.

மேலும், லாரிகளுக்கு முன்னும் பின்னும், போலி ராணுவ எண்கள் பதிக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் செல்லத் தயாராக இருந்தன. இந்தத் தரைவழி நெட்வொர்க், ரோலக்ஸின் மாஃபியா மூளையின் உச்சகட்டத் திட்டமிடலைக் காட்டியது.

“எந்தப் போலீஸும், எந்தச் செக்போஸ்ட்டும் இதைத் தடுத்து நிறுத்த முடியாது ரோலக்ஸ். சரக்கு நேரா டெல்லிக்குப் போகுது!” என்றான் பைரவன்.

ரோலக்ஸ் தன் வெள்ளைத் துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு, ஒரு புன்னகையோடு லாரிகள் புறப்படுவதைப் பார்த்தான். குஜராத்தின் பாலைவனச் சாலைகளைக் கடந்து, ராஜஸ்தான் வழியாக டெல்லியை நோக்கி அந்த மாபெரும் கடத்தல் ஊர்வலம் சீறிப் பாய்ந்தது.

சில நாட்கள் கழித்து, விசாகபட்டின துறைமுகத்தின் ஒதுக்குப்புறமான ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் அடியில், ACP ஷர்மாவின் கறுப்பு நிறக் கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய ஷர்மா, அங்கே தனியாக நின்று அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரோலக்ஸையும், பைரவனையும் நோக்கி ஓடி வந்தான். அவனது முகத்தில் வியப்பும், உச்சகட்ட ஆச்சரியமும் படிந்திருந்தன.

“ரோலக்ஸ்! நீ… நீ சாதாரண மனுஷனே கிடையாது! நீ ஒரு அரக்கன்!” ஷர்மா கத்தினான்.

பைரவன் சிரித்துக் கொண்டே, “என்ன ஏசிபி… சரக்கு டெல்லிக்குப் போய்ச் சேர்ந்துடுச்சா?” என்று கேட்டான்.

“சேர்ந்தது மட்டுமில்ல பைரவா! நடுக்கடல்ல ஒரு பிரம்மாண்டக் கப்பலை மறிச்சு சரக்கை மாத்தி… அதை குஜராத் கட்ச் துறைமுகத்துக்குக் கொண்டுபோய்… அங்கிருந்து கனரக இயந்திரங்களுக்குள்ள மறைச்சு, ராணுவ கான்வாய் மாதிரி செட்டப் பண்ணி டெல்லிக்குக் கொண்டு வந்திருக்கான் ரோலக்ஸ்! எந்த ஒரு போலீஸ் செக்போஸ்ட்லயும் ஒரு சின்ன சந்தேகம் கூட வரல! டெல்லியில இருக்குற அந்தப் பெரும் புள்ளி இந்தத் திட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிட்டாரு!” என்று மூச்சிறைக்கச் சொன்னான் ஷர்மா.

ஷர்மா ரோலக்ஸின் அருகே வந்து, அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒரு மரியாதையோடு பேசினான், “ரோலக்ஸ்… இந்தியாவுல எத்தனையோ கடத்தல்காரங்களைப் பார்த்திருக்கேன். ஆனா உன்னோட இந்தத் தரைவழி வியூகமும், கடல் ஆளுமையும் யாராலும் செய்ய முடியாத ஒன்னு. டெல்லி அரசாங்கத்தோட ரகசிய ஆதரவு இனி உனக்குக் கிடைச்சிடுச்சு. உன்னைத் தொட இந்தியாவில எந்தக் கொம்பனாலும் முடியாது!” என்று ஷர்மா ரோலக்ஸின் தோளைத் தட்ட முயன்றான்.

ஆனால் ரோலக்ஸ், ஷர்மாவின் கையைத் தடுத்து, தன் கூர்மையான பார்வையால் அவனைத் துளைத்தான். அவனது பார்வை, ‘என் காரியத்தை நான் முடித்துவிட்டேன், என் எல்லையைத் தாண்டாதே’ என்று எச்சரிப்பது போலிருந்தது.

ஷர்மா தன் கையைப் பின்னிழுத்துக் கொண்டு, மரியாதையாகத் தலையசைத்துவிட்டுத் தன் காரில் ஏறிப் புறப்பட்டான்.

பைரவன் ரோலக்ஸிடம் வந்தான். “ரோலக்ஸ்… டெல்லி அரசியல் சப்போர்ட் நமக்குக் கிடைச்சாச்சு. இனி பாபியால நம்மைக் கனவுல கூட அசைக்க முடியாது. நம்ம நிழல் சாம்ராஜ்யம் இப்போ இமயமலை அளவுக்குப் பெருசாயிடுச்சு!” என்றான் 

ரோலக்ஸ் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உள்ளங்கையில் அந்த வெள்ளைத் துப்பாக்கி உறங்கிக் கொண்டிருந்தது. பாபியின் வீழ்ச்சி உறுதியாகிவிட்டது. டெல்லியின் பலம் கையில் வந்துவிட்டது. ஆனால், அவனது மனக்கண்ணில், IPS அதிகாரியாக உருவெடுத்து வரும் சந்துருவின் முகமே நிழலாடியது.

இந்த அதிகார பலம் அனைத்தையும் வைத்து, காக்கிச் சட்டையில் வரப்போகும் அந்தப் பழைய எதிரியை எப்படி வேட்டையாடப் போகிறான் என்று ரோலக்ஸின் மிருக மூளை திட்டமிடத் தொடங்கியது.

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!