பாபியின் கொடூரமான சாம்ராஜ்யம் அந்தப் பிரம்மாண்டக் கிடங்கின் ரத்த வெள்ளத்தில் மூழ்கித் தொலைந்த நொடியிலிருந்து, அன்று விசாகப்பட்டினத் துறைமுகத்தின் வரலாறு முற்றிலும் புதிதாக எழுதப்படத் தொடங்கியது.
அதுவரை அச்சத்திலும், அடிமைத்தனத்திலும், அநியாயமான சித்திரவதைகளிலும் வாழ்ந்து வந்த அந்தத் துறைமுகத் தொழிலாளர்களுக்கும் அடியாட்களுக்கும், பாபியின் வீழ்ச்சி ஒரு விடுதலைக் காற்றாக வீசியது. பாபியின் இடத்தில் இப்போது அமர்ந்திருப்பது வெறும் ஒரு கடத்தல்காரன் அல்ல… அரபிக் கடலை தன் ஒற்றைப் பார்வையில் ஆளும் கடல் அரசன் ரோலக்ஸ்!
சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து ரகசியக் கடத்தல் குழுக்களும், பாதாள உலகச் சட்டவிரோதக் கும்பல்களும், கூலிப் படைகளும் ரோலக்ஸின் காலடியில் தலைவணங்கின. ஆனால், ரோலக்ஸ் பாபியைப் போலத் தன் அதிகாரத்தை வெறித்தனமாகப் பிரயோகிக்கவில்லை.
தன் கீழ் வேலை செய்யும் ஒவ்வொரு அடியாளையும், சுமை தூக்கும் கூலியையும் அவன் வெறும் ஆட்களாகப் பார்க்கவில்லை, மனிதர்களாகப் பார்த்தான்.
அவன் தன் சாம்ராஜ்யத்திலிருந்து வந்த லாபத்தின் ஒரு பகுதியைத் துறைமுகத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்காகப் பிரித்துக் கொடுத்தான். அவர்களின் வறுமையைப் போக்கினான். அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டான். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுத்தான். பாபியின் ஆட்சியில் பயந்து நடுங்கியவர்கள், இப்போது ரோலக்ஸை ஒரு கடவுளாகவே பார்க்கத் தொடங்கினர்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்த சர்வதேசக் கடத்தல்காரர்களிடமும் ரோலக்ஸிற்கு ஈடு இணையற்ற நற்பெயர் உருவானது. அவன் வார்த்தை தவறாதவன், கண்ணியமானவன். ஆனால்… அதே நேரம், ரோலக்ஸ் என்ற பெயரைக் கேட்டால் எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யவாதியின் குடலும் நடுங்கும்!
அவன் கண்ணியமானவன் தான், ஆனால் தன் எல்லையில் யாராவது கை வைத்தால், இரக்கமின்றித் தின்றே தீர்க்கும் ஒரு வேட்டை மிருகம்!
ரோலக்ஸின் இந்த அசாத்தியமான சாதுரியத்தால், துறைமுகத்தில் தினமும் நடந்து வந்த அர்த்தமற்ற கொலைகளும், ரத்தக் களறிகளும் பெருமளவு குறைந்தன. எதிரிகளைக் கூடத் தன் தந்திரத்தாலும், சலுகைகளாலும் தன் பக்கம் திருப்பிக் கொள்ளும் கலை அவனுக்குக் கைவந்த கலையாக இருந்தது. பைரவனும் ரோலக்ஸும் தோளோடு தோள் நின்று, இந்தியக் கடல் எல்லைகளின் ஒட்டுமொத்தக் கடத்தல் சாம்ராஜ்யத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.
காலம் தன் சிறகுகளை வேக வேகமாக அடித்தபடி நகர்ந்தது. அந்தப் பெருங்கடலின் கரையோரத்தில், ஊரே வியந்து பார்க்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்டமான மலை உச்சி மாளிகையை எழுப்பினான் ரோலக்ஸ்.
அடர்ந்த பாறைகளுக்கு நடுவே, கடலை நோக்கி அமையப்பெற்ற அந்த நவீன மாளிகையின் பால்கனியில் வந்து நின்றால்… கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த பெருங்கடலும், கீழே துறைமுகத்தில் எறும்புகளைப் போல வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஆட்களும், கப்பல்களின் அசைவுகளும் அப்பட்டமாகத் தெரியும். அது ஒரு மாபெரும் பேரரசன் தன் சாம்ராஜ்யத்தை உற்று நோக்குவது போலிருந்தது!
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப, ரோலக்ஸும் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டிருந்தான்.
அந்தப் பழைய அடர் செந்நிறச் சட்டையும், கழுத்தில் தொங்கிய கூலி பேட்ஜும் இப்போது அவனிடம் இல்லை.
அதற்குப் பதிலாக, பளபளக்கும் தூய வெண்ணிற கோட்-சூட்… கழுத்துவரை அடர்த்தியாக வளர்ந்து கம்பீரமாக மிளிரும் தாடி… வாயில் புகைந்து கொண்டிருக்கும் மலிவான பீடிக்குப் பதிலாக, சுவிட்சர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ராயல் சுருட்டு… கழுத்தில் கம்பீரமாக ஜொலிக்கும் கனமான தங்கச் சங்கிலி!
அந்தப் பழைய வெள்ளை நிறச் சிறிய துப்பாக்கியை எட்வர்ட்டிடம் கொடுத்துவிட்ட பிறகு, அவனது கைகளில் இப்போது Shortgun என்னும் அதிநவீன கனரகத் துப்பாக்கி எப்போதும் தவழ்ந்தது.
அவன் மாளிகையிலிருந்து கீழே இறங்கி துறைமுகத்திற்கு வரும்போது, ஒரு மாபெரும் சிங்கம் தன் காட்டிற்குள் உலா வருவது போல இருக்கும். அவன் நடக்கும் பாதையின் இருபுறமும் மக்கள் மரியாதையுடன் விலகி நின்று தலைவணங்குவர். அவன் கடல் உலகத்தின் முடிசூடா ராஜாவாக மிளிர்ந்தான்!
ஆனால்… இந்த அசாத்திய அதிகாரத்திற்கும், பயத்திற்கும், மரியாதைக்கும் கட்டுப்படாமல்… ரோலக்ஸின் வார்த்தையை முற்றிலும் நிராகரித்து, அவனுக்கு எதிரியாக நின்ற ஒருவன் இருந்தான்!
அவன் யார்?
அன்று மாலை, மலை உச்சி மாளிகையின் பால்கனியில் அமர்ந்து சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான் ரோலக்ஸ். அவனது வெண்சூட் காற்றில் பறந்தது. கையில் இருந்த ஷார்ட்கனின் இரும்புப் பகுதியை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தான்.
அருகில் பைரவன் அவசர அவசரமாக வந்து நின்றான். அவனது முகத்தில் லேசான கவலை படர்ந்திருந்தது.
“ரோலக்ஸ்… நாம நினைச்ச மாதிரி அந்தத் தெற்குப் பகுதிப் பரிவர்த்தனை சுலபமா முடியாது போலிருக்கு,” என்றான் பைரவன்.
ரோலக்ஸ் தன் சுருட்டை வாயிலிருந்து எடுத்து, புகையை மெதுவாக மேலே பறக்கவிட்டான். அவனது கூர்மையான கண்கள் பைரவனைப் பார்த்தன. ‘யார் அது?’ என்பது போல அவனது புருவங்கள் உயர்ந்தன.
“அவன்தான்… டேனியல் !” பைரவன் அந்தப் பெயரைச் சொல்லும்போது குரலில் ஒருவித அதிர்வு இருந்தது.
“அந்த அந்தமான்-நிகோபார் எல்லைக் கடற்பகுதியில் இருக்குற வளைகுடா தீவுகளைத் தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்கான். பர்மாவில் இருந்தும், தாய்லாந்தில் இருந்தும் வர்ற அத்தனை சட்டவிரோதக் கப்பல்களும் அவனோட அனுமதி இல்லாம இந்தியக் கடலுக்குள்ள வர முடியாது. நாம இப்போ டெல்லிக்கு அனுப்ப வேண்டிய அந்தப் பெரிய ரகசியச் சரக்கு, அவனோட எல்லை வழியாத்தான் வரணும்.”
ரோலக்ஸ் தன் தாடியை மெதுவாக வருடினான்.
பைரவன் தொடர்ந்தான், “நான் அவன்கிட்ட நம்ம ஆட்களை அனுப்பிப் பேசிப் பார்த்தேன் ரோலக்ஸ். ‘இந்தியாவுக்கே இப்போ ரோலக்ஸ் தான் ராஜா… அவரோட சரக்குக்கு வழி விடு’னு சொன்னோம். ஆனா அவன்… நம்ம ஆட்களை அடிச்சு விரட்டிட்டான். ‘ரோலக்ஸாவது… கத்திரிக்காயாவது! இந்தக் கடலின் தெற்கு எல்லை என் கோட்டை. இங்க என் பேச்சு மட்டும்தான் செல்லும். ரோலக்ஸ் இங்க கால் வச்சா, அவனைக் கடலுக்குள்ள பிணமாத்தான் மிதக்க விடுவேன்’னு சவால் விட்டிருக்கான்!”
ரோலக்ஸின் உதடோரத்தில் ஒரு குளிர்ந்த, ஆபத்தான புன்னகை அரும்பியது.
இத்தனை காலம் அவனை எதிர்த்துப் பேசக் கூட இந்தியாவில் ஆள் இல்லை என்றிருந்த நிலையில், இந்தக் கடலின் ஒரு பகுதியில் தனக்குச் சவால் விடும் ஒருவன் இருக்கிறான் என்பது அவனுள் இருந்த வேட்டை மிருகத்தை விழித்தெழச் செய்தது.
அன்று இரவு. மாளிகையின் பிரம்மாண்டமான வரவேற்பறையில் மயூரா ரோலக்ஸிற்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ரோலக்ஸின் முகத்தில் இருந்த அந்த மாறுபட்டக் அமைதியை அவள் கவனித்தாள். அவனது விரல்கள் மேஜை மீது ஒரு ரகசிய போர்க்களத் தாளத்தை மீட்டிக்கொண்டிருந்தன.
“ரோலக்ஸ்… என்ன ஆச்சு? பைரவ அண்ணா ஏதோ கவலையா பேசிட்டு இருந்தானே?” என்று சைகையில் கேட்டாள் மயூரா.
அவளது கைகளைப் பற்றிய ரோலக்ஸ், மென்மையாகப் புன்னகைத்தான். அவன் தன் விரல்களால் அவளுக்குப் பதிலளித்தான், “ஒன்றுமில்லை மயூரா… காட்டில இருக்குற எல்லா மிருகமும் சிங்கத்துக்கு அடங்கிடும். ஆனா, ஒரு சில ஓநாய்கள் தான் தன்னைச் சிங்கம்னு நினைச்சுட்டு உறுமும். அந்த ஓநாயோட நாக்கை அறுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு.”
மயூரா கவலையுடன் அவனைப் பார்த்தாள். ஆனால், ரோலக்ஸைத் தடுத்து நிறுத்துவது யாராலும் முடியாது என்பதை அவள் அறிவாள்.
ரோலக்ஸ் தன் உணவை முடித்துவிட்டு எழுந்தான். அவன் தன் வெண்சூட்டின் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு, அந்த அதிநவீன ஷார்ட்கனைத் தோளில் மாட்டினான்.
“பைரவா…”
பைரவன் முன்னே வந்தான். “சொல்லு ரோலக்ஸ்… ஆட்களைத் தயார் பண்ணட்டுமா?”
“ஆட்கள் வேண்டாம் பைரவா. நாம வழக்கமா போற பெரிய படகுகளும் வேண்டாம். அந்தமான் வளைகுடாப் பகுதி பாறைகள் நிறைந்த இடம். அங்க பெரிய கப்பல்கள் போனா அவனோட ரேடார்ல மாட்டிப்போம். நீயும் நானும்… அப்புறம் நம்ம நம்பிக்கையான நாலு பேர் மட்டும் போதும். ரகசிய ‘ஸ்டீல்த்’ போட்ல போறோம்.”
பைரவனின் கண்கள் விரிந்தன. “நேரடியா அவனோட கோட்டைக்கே போறோமா?”
ரோலக்ஸ் தன் சுருட்டைக் கீழே போட்டு மிதித்தான். அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக மாறின.
“அவன் எல்லைக்குள்ள புகுந்து… அவனோட சிம்மாசனத்துல அமர்ந்துதான் அவனை வேட்டையாடப் போறேன்!”
நள்ளிரவு 2:00 மணி.
அந்தமான் எல்லையை ஒட்டிய Black Rock) என்ற ஆளில்லா இருண்ட தீவு. சுற்றிலும் அலைகள் பாறைகளில் மோதி வெடிக்கும் கொடூரமான சத்தம். அடர்ந்த பனிமூட்டம்.
அந்தத் தீவின் குகை போன்ற பகுதியில், டேனியலின் ரகசியக் கோட்டை அமைந்திருந்தது. சுற்றிலும் நவீன ஆயுதங்கள் தாங்கிய நூற்றுக்கணக்கான காவலாளிகள் ரோந்து வந்துகொண்டிருந்தனர்.
டேனியல்… தன் கையில் ஒரு பெரிய மதுக் கோப்பையோடும், தோளில் ஏகே-47 துப்பாக்கியோடும் தன் ஆட்களுடன் உரக்கச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
“அந்த ரோலக்ஸ் இங்க வரட்டும்டா… அவனோட வெண் கோட்-சூட்டை அவனோட ரத்தத்தாலேயே சிவப்பாக்குறேனா இல்லையான்னு பாருங்க!” என்று டேனியல் கத்தினான்.
“டும்மமம்மாம்….!”
திடீரென, குகையின் பிரதான மரக்கதவு சுக்குநூறாக வெடித்துச் சிதறியது!
குகைக்குள் வீசப்பட்ட புகைக்குண்டுகளில் இருந்து அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. எதிரிகள் கண்கள் எாிச்சலால் கத்திக்கொண்டிருக்க… அந்தப் புகையைக் கிழித்துக்கொண்டு ஒரு பிரம்மாண்டமான உருவம் உள்ளே பாய்ந்தது!
அது ரோலக்ஸ்!
அவனது வெண்சூட் புகைக்கு நடுவே தேவதூதனைப் போலவும், அவனது கையில் இருந்த ஷார்ட்கன் எமனைப் போலவும் காட்சியளித்தன!
டுமீல்! டுமீல்! டுமீல்!.
ரோலக்ஸ் தன் ஷார்ட்கனை இயக்கிய அடுத்த நொடி… ஒரே சுட்டில் மூன்று எதிரிகளின் நெஞ்சுகள் பிளந்து பின்னால் போய் விழுந்தன. அவனது ஒவ்வொரு சுட்டும் ஒரு இடிமுழக்கத்தைப் போல அந்தக் குகைக்குள் எதிரொலித்தது.
டேனியலின் ஆட்கள் நாலாபுறமிருந்தும் சுடத் தொடங்கினர். தோாட்டாக்கள் சுவர்களில் பட்டுத் தெறிக்க, ரோலக்ஸ் தன் உடலைச் சறுக்கி, ஒரு பெரிய மரப் பெட்டிக்கு பின்னால் மறைந்தான்.
ஒரு வீரன் வீச்சவாளால் அவனை நோக்கிப் பாய… ரோலக்ஸ் தன் ஷார்ட்கனின் பின்புறத்தால் அவனது முகத்தில் ஓங்கி அடித்தான். அவனது பற்கள் தெறித்து விழ, அவனது உடலையே கேடயமாகப் பிடித்து, முன்னே வந்த இருவரை தன் ஷார்ட்கனால் சுட்டு வீழ்த்தினான்.
ரோலக்ஸின் ஆக்ரோஷம் அந்த நள்ளிரவில் அசுரத்தனமாக இருந்தது. அவன் குகையின் தூண்கள் மீது ஏறிப் பாய்ந்து, எதிரிகளின் ஆயுதங்களைப் பறித்து, அவர்களைப் பாறைகளின் மீது மோதி மண்டையை உடைத்தான்.
ஐந்தே நிமிடங்களில்… டேனியலின் முப்பதுக்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் ரத்த வெள்ளத்தில் பிணங்களாகச் சரிந்தனர்.
குகைக்குள் உறைந்துபோன மௌனம் கவிழ்ந்தது. புகைப் படலம் மெதுவாக விலகியது.
டேனியல் அதிர்ச்சியில் தன் கையிலிருந்த மதுக் கோப்பையைக் கீழே தவறவிட்டான். அவனது ஆட்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அவனுக்கு முன்னால் ஒரே ஒரு மனிதன்… தன் வெண்சூட்டில் எதிரிகளின் ரத்தத் துளிகள் சிதற, தோளில் ஷார்ட்கனுடன் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதையும் கண்டான்.
ரோலக்ஸின் கண்கள் டேனியலை உற்றுப் பார்த்தன. அந்தப் பார்வையில் இருந்த மிருகத்தனமான ஆளுமை டேனியலை அடிவயிற்றில் நடுங்க வைத்தது.
“நீ… நீதான் ரோலக்ஸா?” டேனியலின் குரல் நடுக்கத்தில் வெளிவந்தது.
ரோலக்ஸ் பேசவில்லை. அவன் மெதுவாக நடந்து வந்து, டேனியலின் பிரம்மாண்டமான மர நாற்காலியில் சென்று அமர்ந்தான். தன் கால்களை மேஜை மீது தூக்கி வைத்தான்.
இடுப்பிலிருந்து ஒரு புதிய சுருட்டை எடுத்து வாயில் வைக்கவும், பைரவன் தீப்பெட்டியை உரசி சுருட்டைப் பற்றவைத்தான். ரோலக்ஸ் புகையை ஆழமாக இழுத்து டேனியலின் முகத்தில் விட்டான்.
“டேனியல்…” பைரவன் முன்னே வந்து பேசினான்.
“என் ரோலக்ஸ் கால் வச்சா பிணமாத்தான் மிதப்பேன்னு சொன்னீல்ல? இப்போ அவர் உன் அரியாசனத்துலயே வந்து உக்காந்தாச்சு. இப்போ சொல்டா… யார் பிணமா போகப் போறா?”
டேனியல் நடுங்கும் கரங்களால் தன் ஏகே-47 துப்பாக்கியை உயர்த்த முயன்றான்….
அதற்குள் … ”டுமீல்…!’
ரோலக்ஸின் ஷார்ட்கன் ஒற்றைச் சுடு சுட்டது. டேனியலின் வலது கை மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்டுத் தரையில் விழுந்தது!
“ஆஅஹ்ஹ்ஹ்!” டேனியல் அலறித் துடித்துக் கீழே விழுந்தான்.
நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்த ரோலக்ஸ், டேனியலின் அருகில் வந்து, அவனது தலைமுடியைப் பிடித்துத் தூக்கியவன் அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.
அவனது விரல்கள் டேனியலுக்குச் சைகை செய்தன, “இந்தக் கடல்ல ஒவ்வொரு அலை வீசும்போதும்… அது என் பேரத்தான் சொல்லும். என் எல்லைக்குள்ள இனிமே உன் மூச்சுக்காற்று கூட என் அனுமதியில்லாம வரக்கூடாது!”
என்ற ரோலக்ஸ் அவனை உதைத்துத் தள்ளினான். டேனியல் தன் உயிரைப் பிச்சை கேட்டு அவனது காலடியில் விழுந்து கதறினான்.
“ரோல்ஸ் என்னை விட்டுடு! இனிமே இந்த அந்தமான் எல்லையும் உங்களுக்கேதான்! நான் உங்களுக்கு அடிமையா இருக்கேன்!” என்று அலறினான்.
ரோலக்ஸ் அவனைச் சுடவில்லை. அவனைத் தன் காலடியில் ஒரு அடிமையாக வாழ விடுவதே அவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்று கருதி, தன் ஷார்ட்கனைத் தோளில் மாத்தினான்.
அந்த வளைகுடாத் தீவும் இப்போது ரோலக்ஸின் கைக்கு வந்தது. இந்தியப் பெருங்கடலின் தெற்கு எல்லை வரை அவனது ஆதிக்கம் பரவியது!
விசாகப்பட்டினத்தின் மலை உச்சி மாளிகைக்கு ரோலக்ஸ் திரும்பியபோது, அதிகாலைச் சூரியன் கடலில் இருந்து உதித்துக் கொண்டிருந்தது.
மாளிகையின் பால்கனியில் நின்றபடி, தன் கையில் இருந்த ஷார்ட்கனைத் துடைத்துக் கொண்டிருந்தான் ரோலக்ஸ்.
டேனியலின் வீழ்ச்சிக்கு பிறகு, இந்தியாவில் ரோலக்ஸிற்கு இணையான எதிரி என்று யாருமே இல்லை என்ற நிலை உருவானது. தென்னகம், குஜராத், ஒடிசா, அந்தமான் என அத்தனை கடல் கதவுகளும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தன. டெல்லி அரசியல்வாதிகள் அவனது பெயரைச் சொன்னாலே மரியாதையுடன் எழுந்தனர்.
பைரவன் அவனருகே வந்தான். “ரோலக்ஸ்… இந்தியா முழுக்கவும் நாமதான் ராஜா. இனிமே நம்மை அசைக்க எவனாலயும் முடியாது,” என்றான் பெருமையுடன்.
ரோலக்ஸ் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் எந்தவிதமான இறுமாப்பும் வரவில்லை. அவன் தன் சுருட்டை மீண்டும் ஒருமுறை ஆழமாக இழுத்தான்.
“ஆனால் …. ” என்ற பைரவனின் அடுத்த வார்த்தை ரோலக்ஸின் கண்கள் அவனை திரும்பிப்பார்க்க வைத்தது …
ஆனால் என்ன ?
வேட்டை தொடரும் ..⚓
