53
காலத்தின் சக்கரங்கள் மெதுவாகச் சுழன்றன. இந்திய அண்டர்வேர்ல்ட் மாஃபியாவின் பேரரசனாக, அகில கடல்களையும் தன் ஒற்றைப் பார்வையில் ஆட்டிப்படைக்கும் ரோலக்ஸ், தன் மலை உச்சி மாளிகையின் ரகசிய அறைகளுக்குள் முற்றிலும் வேறு ஒரு மனிதனாக மாறினான்.
வெளியே எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அந்த உறைந்த கண்கள், தன் மனைவி மயூராவைப் பார்க்கும் தருணங்களில் அளவில்லா அன்பையும், பனி போன்ற மென்மையையும் பொழிந்தன.
மயூராவின் கருப்பை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியபோது, ரோலக்ஸின் கவனமும் அக்கறையும் உச்சத்தைத் தொட்டன. மாஃபியா உலகத்தின் இரக்கமற்ற அரக்கன், தன் மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண்ணிமைக்காமல் காக்கும் ஒரு பிரியமான காதலனாக உருகினான்.
இரவு வேளைகளில், மாளிகையின் பால்கனியில் இருந்து வீசும் குளிர்ந்த உப்புக் காற்று அறைக்குள் நுழையும்போது, மயூரா தூக்கத்தில் லேசாக அசைவாள். அதனை கவனித்த உடனே விழித்துக்கொள்ளும் ரோலக்ஸ், தன் கரங்களால் அவளுக்குப் போர்வையை மென்மையாகப் போர்த்திவிடுவான்.
அவளது கர்ப்பகாலச் சோர்வும், இடுப்பு வலியும் அவளைத் தூங்கவிடாமல் தவிக்கும் இரவுகளில், அவளைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டவனின் கனமான, தழும்புகள் நிறைந்த கரங்கள், மயூராவின் வீங்கிய கால்களையும், இடுப்பையும் மென்மையாகத் தடவிக் கொடுக்கும்.
அவன் தன் நீண்ட தாடியை அவளது கூந்தலில் பதித்து, அவளது கழுத்தோரம் மென்மையான முத்தங்களை பொழிவான். அவனது இதழ்களின் ஸ்பரிசத்தில் மயூராவின் வலிகள் அனைத்தும் கரைந்துபோனது.
அவன் தன் அகன்ற கரத்தை மயூராவின் வயிற்றில் மெதுவாக வைத்து, உள்ளே இருக்கும் அந்தப் பிஞ்சு உயிர் அசைவதை உணரும் நொடிகளில், ரோலக்ஸின் முகத்தில் ஒளிரும் அந்தப் புன்னகை உதிர்க்கும்… அவனது அந்த சந்தோசத்தம் பிரபஞ்சத்தின் அத்தனை அழகுகளையும் தோற்கடித்துவிடும்.
தன் உதடுகளை அவளது வயிற்றில் பதித்து, தன் ரகசிய மெளன மொழியால் அந்த உதிரத்துத் துளிக்கு தாலாட்டு பாடுவான். அவனது காதலும் அக்கறையும் மயூராவின் மனதை அசாத்தியமான பாதுகாப்பில் நனைய வைத்தன.
ஒன்பது மாதங்கள்… ஒவ்வோர் நாளும் ரோலக்ஸ் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் மயூராவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று நள்ளிரவு 2:00 மணி.
வெளியே பெருங்கடலில் இடி முழக்கத்துடன் மழை கொட்டிக் கொண்டிருந்தது. மாளிகையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, மயூராவின் மெல்லிய முனகல் சத்தம் கேட்டது.
“ரோலக்ஸ்…” மயூரா தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வேதனையில் துடித்தாள். அவளது முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகள் அவளது அசாத்தியமான பிரசவ வலியை உணர்த்தின.
அடுத்த நொடி…
ரோலக்ஸ் பதறி அடித்துப் படுக்கையிலிருந்து எழுந்தவன் தன் வெண்சூட்டைப் பற்றியோ, தன் அதிகாரத்தைப் பற்றியோ யோசிக்கவில்லை. மயூராவைத் தன் வலுவான கரங்களில் அள்ளியெடுத்தான்.
“பைரவா! வண்டியை எடுடா!” என்று தன் ஒற்றைச் சைகையால் ஆட்களை மிரள வைத்தபடி, மாளிகையின் படிகளில் பாய்ந்து இறங்கினான்.
மழைநீரைக் கிழித்துக்கொண்டு அந்த ஆடம்பர கார் விசாகப்பட்டினத்தின் பிரதான மருத்துவமனையை நோக்கி அதிவேகமாகச் சீறிப் பாய்ந்தது. வழியில் இருந்த தடைகள், சிக்னல்கள் எதையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவனது ஒட்டுமொத்த உலகமும் தன் கைகளில் கிடந்து துடிக்கும் மயூராவின் மீது மட்டுமே இருந்தது.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும், அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகள் திறக்கப்பட்டன. மருத்துவர்களும் செவிலியர்களும் மயூராவைப் பிரசவ அறைக்கு உருட்டிச் சென்றனர்.
பிரசவ அறையின் தடிமனான கண்ணாடி கதவுகள் மூடப்பட்டதும்! வெளியே… அந்த நீண்ட ஹாலில் ரோலக்ஸும் பைரவனும் மட்டுமே நின்றிருந்தனர்.
இந்தியாவையே தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் மாஃபியா சக்கரவர்த்தி… அந்த மருத்துவமனையின் தாழ்வாரத்தில் ஒரு சிறு குழந்தையைப் போலத் தவித்துக் கொண்டிருந்தான்!
அவனது கால்கள் ஒரே இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. அவனது கைகள் நடுங்கின. அவன் தன் தலையைக் கைகளில் தாங்கியபடி சுவரில் சாய்ந்தான். அவனது கண்கள் அந்த மூடிய கதவையே உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தன.
உள்ளே அவனது உயிர்… அவனது மயூரா பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள்!
அருகில் நின்றிருந்த பைரவனுக்கு இந்தச் காட்சியைக் கண்டு உடம்பெல்லாம் சிலிர்த்தது, அடிவயிற்றில் பயம் கவ்வியது.
‘இவனா… இவனா அந்த ரோலக்ஸ்?’ பைரவன் பிரமிப்பில் உறைந்துபோனான்.
எண்ணற்ற எதிரிகளின் தலையைச் சீவியவன், துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அஞ்சாதவன், சுங்கத் துறையையும் காவல்துறையையும் தன் விரல் நுனியில் ஆட்டிப்படைத்த அந்த வேட்டைச் சிங்கம்… இன்று தன் மனைவிக்காகவும், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும் ஒரு பிஞ்சு மனிதனைப் போலக் கதறித் தடித்துக் கொண்டிருக்கிறான்!
அந்த மாபெரும் அரக்கனின் உள்ளம், அன்பின் முன்னால் எவ்வளவு பலவீனமாக உடைந்து போகிறது என்பதைக் கண்ட பைரவனின் கண்கள் கலங்கின.
அந்த நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு, “உவ்வா… உவ்வா…” என பிரசவ அறையிலிருந்து அந்த பிஞ்சு உயிரின் அழுகைச் சத்தம் தெளி வாகக் கேட்டது!
செவிலியர் ஓடி வந்து விஷத்தை கூறவும், ரோலக்ஸின் உடம்பில் ஒரு மின்னல் பாய்ந்தது போலிருந்தது. அவன் சட்டென நிமிர்ந்து பிரசவ அறையின் கதவைப் பார்த்தான்.
சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது. மற்றொரு செவிலியர், தூய வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட ஒரு அழகான பிஞ்சுப் பாப்பாவைத் தன் கைகளில் ஏந்தி வெளியே வந்தார்.
“ஆண் குழந்தை பிறந்திருக்குங்க!” என்றார் செவிலியர் புன்னகையுடன்.
ரோலக்ஸ் மெதுவாக அடிமேல் அடிவைத்து முன்னே வந்தான். அவனது கரங்கள் நடுங்கின. அந்தச் செவிலியர் குழந்தையை ரோலக்ஸின் கரங்களில் ஒப்படைத்தார்.
ரோலக்ஸ் அந்தப் பிஞ்சு உடலைத் தன் அகன்ற கரங்களில் ஏந்தினான். ரோஜா இதழ் போன்ற கன்னங்கள், குட்டி விரல்கள்… அவனது உதிரம், அவனது மகன்! ரோலக்ஸ் குனிந்து அந்தப் பிஞ்சு நெற்றியில் தன் உதடுகளைப் பதித்து ஆழமாக முத்தமிட்டான்.
ஆனால்… அந்த அடுத்த விநாடி… ரோலக்ஸின் கண்களில் ஒரு விசித்திரமான, கொடூரமான பயத்தின் நிழல் படிந்தது!
அவன் குழந்தையை உற்றுப் பார்த்தான்.
‘இந்தக் குழந்தை… தன்னைப்போல ஊமையாகப் பிறந்துவிட்டதா? இதற்கு காது கேட்கிறதா? இதனாலும் பேச முடியாதா?’ என்ற மாபெரும் அச்சம் அவனது இதயத்தை அழுத்தத் தொடங்கியது!
தான் பட்ட அவமானங்கள், பேச முடியாமல் தான் சந்தித்த சித்திரவதைகள் தன் மகனுக்கும் வந்துவிடுமோ என்ற மெளனப் பயம் அவனது கண்களில் ரத்தக் கண்ணீராகத் தேங்கியது.
அவன் பயத்துடன் தன் தலை நிமிர்த்தி, பிரசவ படுக்கையில் பலவீனமாகக் கண்விழித்துப் பார்த்த மயூராவைப் பார்த்தான். அவளது கண்களிலும் அதே பயத்தின் தவிப்பு இருந்தது!
ரோலக்ஸ் உடனே திரும்பிப் பைரவனைப் பார்த்தான். அவனது கண்கள் ‘என் மகனுக்கு காது கேட்கிறதாடா?’ என்று கதறின.
அவனது உள்ளத்தின் தவிப்பைப் புரிந்துகொண்ட பைரவன், உடனே முன்னே வந்து, குழந்தைக்கு அருகே தன் கைகளை ஓங்கி “படார்..!” என தட்டினான்.
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த நொடி, குழந்தை பயந்து தன் குட்டி கைகளைத் தூக்கி இன்னும் உரக்க அழத் தொடங்கியது!
பைரவன் புன்னகையுடன் ரோலக்ஸைப் பார்த்து தன் கைகளால் சைகை செய்தான், “ரோலக்ஸ்! குழந்தைக்கு நல்லா காது கேட்குதுடா! அவன் உரக்க அழுவுற சத்தம் எனக்கு நல்லா கேட்குதுடா ? அவன் நல்லா பேசுவான்டா!” என்றான்
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி… ரோலக்ஸின் முகத்தில் உலகத்தின் அத்தனை வெளிச்சமும் வந்து படிந்தது! அவனது உறைந்த உதடுகளில் ஒரு மாபெரும் மகிழ்ச்சியின் புன்னகை பூத்தது!
அவன் தன் மகனைத் தூக்கிக் கொண்டு மயூராவின் அருகில் சென்றான்.
பிரசவ வலியினாலும், குருதிப்போக்கினாலும் தளர்ந்து போய் கிடந்த மயூரா, மெதுவாகக் கண்களைத் திறந்தாள். தன் கணவன்… அந்த மாபெரும் மாஃபியா தலைவன், தன் குழந்தையைக் கைகளில் ஏந்தி, தன் பேரன்பின் சாட்சியாக நின்றிருப்பதை அவள் கண்டாள். அவளது கண்களின் ஓரங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
ரோலக்ஸ் குழந்தையை அவளருகே கொண்டு வந்தான். அவன் தன் ஊமை வாயை, பேச முடியாத உதடுகளை அசைத்து, ஒரு ரகசிய ஒலியை வெளிப்படுத்தினான்..
“சா… சா… சா… சா… சா… சா… சா… சா… சா… சா… சாறு!”
அவனது உதடுகளிலிருந்து வந்த அந்த ஒற்றை வார்த்தை… என ஏதோ ஒரு மாபெரும் பெயரைக் குறிப்பது போலிருந்தது!
மயூரா தன் கணவனை உற்றுப் பார்த்தாள். அவன் தன் மகனுக்குச் சூட்டிய அந்தப் பெயரை அவளது இதயம் புரிந்து கொண்டது.
ரோலக்ஸ் சொன்ன பெயரை கேட்டதும், பைரவன் கொஞ்சம் திணறினான்.. அவனுக்கு தெரியும் அந்த பெயருக்கு பின்னல் இருக்கும் காரணம், ஆனால் ரோலக்ஸ் இப்போ அந்த பெயரை சொல்ல காரணம் என்ன ! என குழப்பம் எழுந்தது … ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, அவனுக்கு தெரியும் ரோலக்ஸ் காரணமின்றி ஏதும் செய்ய மாட்டான் என்று …!, அவனின் முகம் அந்த பிஞ்சு குழந்தையை பார்த்து மீண்டும் புன்னகைத்தது.
“நம்ம பையன் பேரு… ‘சாறு’!” என்று அவன் மெல்லிய குரலில் முணுமுணுத்து, அந்தப் பெயரைத் தன் மனதினுள் ஆழமாகப் பதித்துக் கொண்டான்.
நாட்கள் வாரங்களாக மாறின.
குழந்தை சாரு, பிறந்த பிறகு, மலை உச்சி மாளிகையே ஒரு புதிய ஒளியில் மிளிர்ந்தது. ஆனால், மயூராவிடம் ஒரு விசித்திரமான அமைதியும், தவிப்பும் குடி கொண்டிருந்ததை ரோலக்ஸ் அடிக்கடி கவனித்தான்.
அவள் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, ஜன்னல் வழியே பெருங்கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளது கண்களில் லேசான பயத்தின் நிழல் எப்போதுமே படிந்திருந்தது.
ஒரு நாள் இரவு.
ரோலக்ஸ் தன் வெண்சூட்டைக் கழற்றி வைத்துவிட்டு, அறைக்குள் நுழைந்தான். மயூரா குழந்தையைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.
ரோலக்ஸ் அவளருகே வந்து அமர்ந்து, அவளது தோள்களை மென்மையாகத் தொட்டான். அவன் தன் விரல்களால், ‘என்ன ஆச்சு மயூரா? உன்னோட கண்களில் ஏதோ ஒரு பெரிய தவிப்பு இருக்கு… என்னிடம் எதையும் மறைக்காதே,’ என்று நேரடியாகக் கேட்டான்.
மயூரா தன் கணவனின் கரங்களைப் பற்றினாள். இத்தனை நாளாகத் தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பயத்தின் கதவுகளை உடைத்தெறிந்தாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது.
“ரோலக்ஸ்…” மயூரா சைகையிலும் மெல்லிய குரலிலும் தன் மன வேதனையைக் கொட்டினாள்…
“இவ்வளவு நாள் நாம ரெண்டு பேரு மட்டும் இருந்தோம். நீ யாருக்கும் பயந்தவன் கிடையாது… இந்த உலகமே உன்னைப் பார்த்துப் பயப்படுதுன்னு எனக்குத் தெரியும். உன்னை நினைச்சு நான் ஒரு நிமிஷம் கூடப் பயந்தது இல்லை…”என்றவள் நிறுத்தி, ரோலக்ஸின் கண்களை உற்றுப் பார்த்தாள்.
அவன் ‘என்ன ?” என்பது போல தன் புருவங்களை உயர்த்தினான் ..
“ஆனா… நீ வெளியே போகும்போதெல்லாம், திரும்பி வர்ற வரைக்கும் என் இதயம் துடிக்கவே இல்லை ரோலக்ஸ். ஒவ்வொரு நிமிடமும் உனக்கு ஏதேனும் ஆகிவிடுமோனு நான் தவிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்…”
என்றவளது கண்கள் இப்பொழுது தன் குழந்தையை பார்த்தது. “ஆனா இப்போ… நமக்கும்னு ஒரு பிஞ்சு உயிர் வந்துடுச்சு ரோலக்ஸ்! என் கைக்குள்ள இருக்குற இந்த உயிரைப் பார்க்கும்போது எனக்கு உயிர் நடுங்குது! நான் மட்டும் இல்லை… கண்டிப்பா நீயும் இப்போ பயப்படுற! உனக்கும் இந்த குழந்தை மேல அளவுகடந்த பாசம் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும்…” என்றவள் ரோலக்ஸின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.
“நாளைக்கு நமக்கோ… இல்ல இந்த குழந்தைக்கோ ஒரு பிரச்சனை வராதுனு என்ன நிச்சயம்? உன்னோட இந்த மாஃபியா உலகம், இந்த எதிரிகள், இந்தத் துப்பாக்கிகள்… இது எதுவும் இந்த பிஞ்சு உயிரைக் காப்பாற்றாது ரோலக்ஸ்! நாம முதல்ல இந்த குழந்தைக்குப் பாதுகாப்பான ஒரு வாழ்க்கையைக் கொடுக்கணும்…” என்றவள் தன் முகத்தை அவனது மடியில் புதைத்துக் கொண்டாள்.
“நாம இந்த அண்டர்வேர்ல்ட், இந்தத் துறைமுகம், இந்த அதிகாரம்… எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வேற எங்கயாவது தூரமா போயிடலாம் ரோலக்ஸ்! யாருமே இல்லாத ஒரு அமைதியான தீவுலயோ இல்ல கிராமத்துலயோ போய் வாழலாம்… ஏதோ ஒரு சின்ன தொழில் செய்து, கஞ்சியோ கூழோ குடிச்சுட்டு, நம்ம குழந்தையோட அமைதியா வாழலாம் ரோலக்ஸ்! ப்ளீஸ்… என்னை இந்த இடத்துல இருந்து கூட்டிட்டு போயிடு!”
மயூராவின் அந்தக் கதறலும், தாய்க்கே உரித்தான அந்த மாபெரும் பயமும்… ரோலக்ஸின் நெஞ்சை ஈட்டியாகத் துளைத்தன!
அகில கடல்களையும் ஆளும் அந்த மாபெரும் சக்கரவர்த்தி… தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் முற்றிலும் அதிர்ந்து போய்ட்டான்!
தான் உருவாக்கிய இந்த மாபெரும் மாஃபியா பேரரசு, டெல்லி அரசியல்வாதிகளின் கூட்டணி, பல்லாயிரக்கணக்கான அடியாட்களின் விசுவாசம், தன் லட்சியம்… இவை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடிப் போவதா?
அல்லது… தன் மனைவி மற்றும் பிஞ்சு மகனின் பாதுகாப்பிற்காக இந்த ரத்த பூமியை விட்டு விலகுவதா?
ரோலக்ஸின் மனம் கொந்தளிக்கும் கடலைப் போலத் தள்ளாடியது. அவனால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை. அவனது உதடுகள் அசைவற்றுப் போயின.
அவன் மயூராவை மென்மையாகத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, அவளது தலையை வருடினான். ஆனால், அவளது கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
அவன் மெதுவாக எழுந்தான். எந்தப் பதிலையும் தராமல்… அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறி பால்கனியை நோக்கி நகர்ந்தான்.
வெளியே பெருங்கடலின் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. ‘கடல் அரசன்’ ரோலக்ஸ்… தன் வாழ்நாளின் மிகப்பெரிய தர்மசங்கடமானப் பாதையில் நின்று கொண்டிருந்தான்!
வேட்டை தொடரும் ..⚓
