சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு, “ஆஷிக் ஃபோன் என்கிட்ட அப்படினா, என்னோட ஃபோன்… ஓ காட்! ஒருவேளை அவன் ஃபோனை பார்த்துட்டா? ஜீவா அனுப்புன மெசேஜ்… ஒருவேளை ஜீவா கால் பண்ணிட்டா? நோ… ஆஷிக்குக்கு எதுவும் தெரியக்கூடாது, அதுக்குள்ள நான் எதாவது பண்ணணும். அங்க போறத தவிர வேற வழியே இல்லை.” என்றவள்,
“கடவுள் ஏன் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறார்? என் வாழ்க்கையில சந்தோஷமே கிடையாதா? என்னோட ஓட்டம் எப்போதான் முடியும்? இன்னும் யாருக்கெல்லாம் பயந்துட்டு நான் ஓடணும்?” இவ்வாறு அவளது கண்களோடு சேர்ந்து உள்ளமும் குமுறியது.
ஆஷிக்கின் இல்லத்திற்குத் தயங்கி தயங்கி வந்தவள் காலிங் பெல்லை அழுத்த, அப்பொழுது வெளியே வந்த வேலைக்காரர்,
“நீங்க யாரு?”
“ஆஷிக்கை பார்க்கணும்.”
“சார் இன்னும் வரல, நீங்க யாரு?”
“நான்… என்னை அவருக்குத் தெரியும்.”
“வாங்க, வந்து உள்ள உக்காருங்க.”
“சரி” என்று உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தவள் தனக்குள்,
“கடவுளே! ஆஷிக் என் ஃபோனை மட்டும் பார்த்திருக்கக் கூடாது. ஏன் இன்னும் வரல? ஒருவேளை மெஸேஜ் எதையும் படிச்சுருப்பானோ? என்னைத் தேடி என் வீட்டுக்குப் போயிருக்க மாட்டான்ல?” என்று புலம்பியவாறே அமர்ந்திருந்தாள்.
ஆஷிக் வீட்டின் வேலைக்காரர் ஜியாவிற்கு ஜூஸ் பரிமாற, அவள் இருந்த டென்ஷனிற்கு அது அவளுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. அவருக்கு நன்றி தெரிவித்தவள், அதைத் தன் கையில் ஏந்தி பருகும் நேரம் பார்த்து உள்ளே வந்த ஆஷிக், “ஜியா!” என்றழைக்க, திடீரென்று அவன் அழைத்ததில் வெடுக்கென எழுந்தவள் தவறுதலாகத் தன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸை தன் மேல் சிந்த,
“ஏய் பார்த்து பண்ண கூடாதா? பாரு, உன் மேலயே சிந்திகிட்ட.”
“உன்னை யாரு இப்படி திடீர்னு வர சொன்னா?”
“ஹலோ, இது என் வீடு. நான் எப்படி வேணும்னாலும் வருவேன்… சரி ரெஸ்ட் எடுக்காம என் வீட்ல இந்த நேரத்தில என்னப் பண்ற?”
“அது வந்து…” என்று அவள் பதில் கூறுவதற்குள்,
“நீ ஒன்னும் என்னை மிஸ் பண்ணலையே?” என்று கேலியாக அவன் கேட்கும் பொழுதே, அவன் தன் மொபைலில் எதையும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தவள், நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் ஆஷிக்கையேப் பார்க்க,
ஆஷிக்கோ அவளைச் சீண்டுவதற்காக மீண்டும் அவளிடம், “நீ இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறத பார்த்தா, என்னை நீ நிஜமாவே மிஸ் பண்ற போல?” என்று தன் புருவம் உயர்த்திப் பார்க்க, எரிச்சல் அடைந்த ஜியா, “பேசியாச்சா? இல்லை, இன்னும் பாக்கி இருக்கா? உன் உளறலை கேட்கிறதுக்கு எனக்கு மூட் இல்லை, பாரு உன்னால என் சாரீல எப்படிக் கறையாகிடுச்சு…”
“சரி சரி… ஜூஸ் தானே கொட்டுச்சு, பாம்பு ஒன்னும் கொட்டலையே?”
“என்ன கலாய்க்கிறியா?”
“என்ன சமாளிக்கிறியா?” என்று அவன் கூற, அவள் தன் முகத்தை வேறுபக்கமா திருப்பிக்கொள்ள,
“ஓகே கோபப்படாத, என் வாஷ்ரூம் யூஸ் பண்ணிக்கோ, நேரா போ அதோ தெரியுதுல அந்த ரூம்தான் சரியா?”
“ம்ம்…” என்றவள், தன் மொபைலை அவன் எங்கே வைத்திருப்பான் என்று அவனையே மேலும் கீழுமாகப் பார்க்க,
அவளது கை பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன், “என்ன ம்ம்… என்னை அப்படிப் பார்க்கிற? இதான் அடிச்சு பார்க்கிறதா? முதல்ல போய் க்ளீன் பண்ணிட்டு வா, நான் எங்கேயும் போக மாட்டேன். அப்புறம் வந்து நிதானமா பாரு சரியா?” என்று கூற,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை, என்னை விடு.” என்றவள் அவனிடம் இருந்து விடுபட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்ற பிறகு இன்று நடந்த அனைத்தையும் யோசித்தவன், “ஜியா ரொம்ப வித்தியாசமா இருக்காளே? அவளுக்கு எதோ ஒரு ப்ராப்ளம் இருக்கிற மாதிரியே என் மனசுக்கு தோனுதே? என்னவா இருக்கும்? சரி, பொறுமையா கேட்போம்.” என்று தனக்குள் கூறினான்.
ஜியாவைக் காப்பாற்றும் பொழுது முதுகில் ஏற்பட்ட காயம், தான் இருக்கும் இடத்தை நினைவு கூற, வலியில் முகத்தைச் சுளித்தவன், மேலும் உள்ள உடல் அலுப்பின் காரணமாய் தன் தலையைப் பிடித்தவாறு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து, “ஷேக்கர் டீ…” என்று கூற, அவனது குரல் கேட்ட சில மணி துளிகளில் அவனுக்கு டீ பரிமாறப்பட, “சார் டின்னர் எல்லாம் டேபிள்ள எடுத்து வச்சுட்டேன்.”
“சரி, டைம் வேற ஆச்சு நீங்க கிளம்புங்க.”
“செர்வ் பண்ணிட்டு போறேன்.”
“இல்ல ஷேக்கர், நானே பார்த்துகிறேன் நீங்க எல்லாம் எடுத்து வச்சுட்டீங்கல்ல…”
“ஆமா சார்”
“தென் யு மே லீவ்”
“தாங்க் யு சார்.” என்றவன் அவனிடம் இருந்து விடுபட,
ஜியா வெளியே வந்து, “ஆஷிக், உன் வீட்ல உள்ள எல்லாமே உன்னை மாதிரிதானா?”
“என்ன?”
“எதுவும் ஒழுங்கா இல்ல, பைப் சரியா ஒர்க் ஆகல.”
“ஒர்க் ஆகலையா இல்ல மேடம்கு யூஸ் பண்ண தெரியலையா?” என்று நக்கலடிக்க,
“ஆஷிக்!”
“சரி வரேன்” என்றவன், “தப்பு இவ மேலயாதான் இருக்கும், ஆனாலும் என்னைத்தான் திட்டுவா.” என்று புலம்பியவாறு பாத்ரூமிற்குள் நுழைந்து,
“என்ன?”
“நீயே பாரு, எவ்ளோ ப்ரஸ் பண்ணினாலும் சரியா ஆகமாட்டிக்குது.”
“ம்ம் உனக்குத் தானே… ஆகாதே… நீ தள்ளு.” என்று கூறிவிட்டு,
“இதைச் சும்மா ப்ரஸ் பண்ணினா போதாது, ரொட்டேட் பண்ணணும்.” என்று கூறியவாறே செய்ய, டேப்பில் இருந்து தண்ணீர் கலகலவென வர,
“பார்த்தியா? இதுக்கெல்லாம் மூளை வேணும். அதான் உனக்குச் சுத்தமா கிடையாதே. எதுக்கெடுத்தாலும் என்கிட்ட சண்டை போட மட்டும் தெரியும்.” என்றவன் தன் காலரை தூக்கிவிட, தவறுதலாக அவனது கை ஷவருக்கான டேப்பில் பட, ஷவரில் இருந்து வந்த தண்ணீர் அவனை முழுவதுமாய் நனைத்தது.
இதைக் கண்ட ஜியா தன் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்து, “இதுக்குத்தான் ஓவரா பேச கூடாதுனு சொல்றது. ஆனா ஒத்துக்கிறேன், உன் அளவுக்கு மூளை இந்த உலகத்துலயே வேற யாருக்கும் கிடையாது.” என்று மீண்டும் சிரிக்க, பொய்யாக அவளைப் பார்த்து முறைத்தவன், அவளது கையைப் பிடித்து இழுத்து தன் மார்போடு சேர்த்துக்கொள்ள, அவனது அணைப்பின் ஸ்பரிசத்தில் தன்னையே மறந்தவள், ஆஷிக்கின் விழியோடு மூழ்கியவாறே நொடிபொழுது கூட இமை தட்டாமல், தன் பார்வையாலே அவனைக் கைது செய்து கொண்டிருந்தாள்.
ஜியாவின் விரிந்த விழிகளில் தன்னைத் தொலைத்தவன், அவளது பிறை நுதலை மறைத்தவாறு சரிந்து விழுந்திருந்த கேசத்தை மெல்ல சரி செய்து, தன் இதழால் அவளது நுதலை அலங்கரிக்க, தன்னவனது இதழின் தீண்டலில் தேகம் சிலிர்த்தவள்,
அவனிடம் இருந்து விடுபட முனைந்த நேரம் பார்த்து, தன் இரு கரங்கள் கொண்டு பின்னால் இருந்து இடுப்பை வளைத்து தன் விரிந்த மார்பிற்குள் சிறை வைக்க, திக்கு முக்காடிப் போனாள் ஜியா.
மெல்ல அவளது காதோரத்தில் இதழ் பதித்தவன், தன் கரம் கொண்டு அவளது வதனத்தை நிமிர்த்தித் தன் முகம் கொண்டு அவளது முகத்தை உரசியவாறே நிற்க, இதற்கு மேல் முடியாதவளாய்,
“ஆஷிக்!” என்று தடுமாற்றத்தோடு அழைத்தவள், மெல்ல அவனது அணைப்பில் இருந்து நழுவ, மேலும் இறுக்க அணைத்தவாறே ஆஷிக்,
“ம்…” என்று மட்டும் கூற, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, வாஷ்ரூமில் இருந்து வெளியே சென்று அவனது அறையில் மூச்சு வாங்க, தன் கண்களை மூடி நின்றுகொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றவன்,
தண்ணீர் துளிகள் சூறையாடிய கருப்பு நிற புடவையில், மஞ்சள் நிற இடை மட்டும் மிச்சம் இன்றி மொத்தமாய் எட்டிப் பார்த்து தனது கனன்று எரியும் தன் ஆசை தீக்குத் தூபம் போட, அழகு வென் சிற்பம் என்று தன் கண்முன் இருந்தவளைத் தன் தாபத் தீயால் அணைக்க எண்ணியவன்,
அவளது அருகில் சென்று அவளது பின்னந் தோளில் விரகத் தீயினால் கொந்தளித்துக் கொண்டிருந்த, தன் அதரங்களைத் தன் காதலின் ஆதாரமாய் அதிகாரத்தோடு பதித்து, தன் ஈரமான கேசம் கொண்டு அவள் மேல் சிலுப்ப,
குளிர்ந்த நீரில் வென் சிற்பமாய் உறைந்திருந்தவள், அவனது சூடான முத்தத்தில் தேகம் சிலிர்த்து, தன் கண்களைத் திறந்து அவன் பக்கம் திரும்பியவள்,
தன் எதிரே தன்னையே மறக்க செய்யும் மயக்கும் பார்வையுடன் தன்னை முற்றிலும் தன் வசமாக்க துடிக்கும் அக்மார்க் வசீகரப் புன்னைகையோடு, நீரில் நனைந்தபடியால் வெள்ளை நிற மேல்சட்டை உடலோடு ஒட்டிக்கொண்டு, தன்னை அணைத்துக் கொள்ளத் துடிக்கும் அகன்ற மார்பின் வளைவுகளை, வடிவம் மாறாது தெள்ளத்தெளிவாய் காட்டி, தன் பெண்மையைப் பந்தாடிய தன்னவனை ஏனோ காண இயலாது நாணி தரையை நோக்கினாள்.
தன்னவளின் வெட்கத்தைத் தன் வேட்கை தீர ரசித்தவனின் விழிகளில், தன் தழுவலுக்காகக் காத்திருக்கும், அவளது தேகத்தின் வளைவுகள் தெள்ளத் தெளிவாக நனைந்த புடவையைத் தாண்டி எட்டிப் பார்க்க, அதில் அவன் சிக்கிதான் போனான் என்றால் மிகையில்லை.
தன் தழுவழுக்காய் காத்திருந்த தன்னவளின் மஞ்சள் நிற இடுப்பை தன் ஐவிரலுக்குச் சொந்தமாக்கியவன், விலகியிருந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,
அவனது அணைப்பின் இறுக்கத்தில் தண்ணீர் பட்டு ஜில்லென்று இருந்த, அவளது தேகத்தில் திடீரென்று தீயின் சுவையை உணர்ந்தாள்.
வெறித்தவாறு அவனையே பார்த்தவளின் கண்களில் இருந்து நீர் கசிய, முகத்தில் வடியாமல் இருந்த அந்தத் தண்ணீர் துளிகளுக்குள் நடுவே, அவளது கண்ணீர் துளிகளைக் கண்டவனின் மனதில் மீண்டும் கவலை ஆட்கொண்டது.
ஆனால் ஜியாவோ அவனது அரவணைப்பில் தன் அனைத்து கவலைகளையும் மறந்து போனாள். அவனது அணைப்பு அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது என்றால் அது மிகை அல்ல.
மெல்ல மெல்ல அவனது அணைப்பின் கதகதப்பில் மெழுகாய் உருகியவள், இறுதியில் அவனில் தன்னையே மறந்தும் போனாள். அவன் மீதுள்ள கோபம் சில நொடிகள் மறைந்து போக, அவன் மீதுள்ள அதீத காதல் வெளிப்பட்டது.
ஜியாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதால் கவலையுற்றவன், மெல்ல தன் இறுக்கத்தைத் தளர்த்த, ஆனால் இந்தமுறை அவளது இறுக்கம் அவன் மீது உறுதியாகியது.
தன் வலக்கரம் கொண்டு அவனது முதுகை இறுக்கமாக பற்றியவள், தன் இடக்கரத்துக்குள் தன்னவனது தோள்களைச் சொந்தமாக்கினாள்.
திடீர் வானிலை மாற்றம் போல, அவளது கண்களில் சோகம் மறைந்து அலாதியான காதல் வெளிப்பட, செய்வதறியாது திகைத்தான். இதுதான் ஆணின் வெட்கமா என்ன? அப்படி ஒன்று இருந்தால் அதுவே உலகிலே மிக அழகான எட்டாவது அதிசயமாகும். அத்துணை அழகு.
அவனது திகைப்பை ரசித்தவள் மெல்ல தன் இதழ் ஓரம் புன்னகைத்து, தன் பாதங்களை உயர்த்தி அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
காதல் தீயில் கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது மனம், தன்னவளின் ஒற்றை முத்தத்தில் அடங்கியே போனது.
தன்னவளின் காதல் பரிசில் தன்னையே தொலைத்தவன் தன்னவளையே வெறித்துப் பார்க்க, அவன் எதிர்பார்க்கும் முன்பே தன்னவனின் மறு கன்னத்திலும் தன் இதழை, காதலோடு பதிக்க அவளோடு மூழ்கினான் ஆவலாய்.
மேலும் முன்னேறியவள் தன் இதழ் கொண்டு அவனது இதழை மூட, உருகினான் உறைபனியாக. அவளது இதழ்கள் தன் வேலையைச் செய்ய, தன் அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டியவள், நன்கு அவனது முதுகைப் பற்றிக்கொள்ள, அவளது விரல் நகம் ஏற்கனவே இருந்த அவனது காயத்தின் மீது அவனது மேல் சட்டையும் தாண்டி பட, லேசாகத் துடித்தவன் தன்னவளின் முத்தத்தில் மொத்தமாய் தன்னை இழக்க, வலியை கூட மறந்தான் அவள் அள்ளி தந்த காதலில்.
தன்னை வென்றவளின் கண்களில் தெரிந்த கரை காண முடியாத காதல் நீரில் நீந்தி சென்றான்.
சில மணித்துளிகள் கழித்து அவனிடம் இருந்து அவள் விடுபட, இந்த முறை அவன் தீண்டினான் அந்த மெல்லிய இதழை இதமாக.
ஆறு வருடங்களாய் அடக்கி வைத்திருந்த காதலென்னும் வேட்கை தீயை, ஒரு முத்தத்தால் அணைத்துவிட முடியுமா என்ன?
வேட்கை தனியும் வரை வன்மை இன்றி மென்மையாய் தீண்டியவன், பின்பு மெல்ல தன்னவளை தன் இருக்கரங்களிலும் ஏந்தி, அருகே இருந்த மெத்தை மீது மெதுவாகக் கிடத்தி முன்னேறினான் மெல்ல மெல்ல.
காதலின் முதல் மொழியான முத்தம் கொண்டு தன்னவளை வெல்ல நினைத்தவன் அவளது கண்களைப் பார்த்து, “நான் இந்த உலகத்துல உயிரோடு இருக்கிற கடைசி நொடி வரைக்கும், உன் அன்பு எனக்கு வேண்டும்.” என்றவாறு அவளது நுதலில் இதழ் பதித்து, மெல்ல அவளது இரு கண்களிலும் தன் இதழ் பதித்து, “எப்பவும் நான் உன் கூடவே சேர்ந்திருக்கணும்னு விரும்புறேன்.” என்று காதலாய் மொழிந்தவன், செல்லமாகத் தன்னவளின் மூக்கின் நுனியில் தன் இதழ் பதித்து, “இந்த உலகத்திலையே உன்னை மாதிரி ஒரு அழகு யாரும் இல்லை, எதுவும் இல்லை.
ஐ ப்ராமிஸ் யு, நான் உனக்கு ஒரு நல்ல தோழனா…” என்றவாறு அவளது கன்னங்களில் மிக அழுத்தமாக இதழ் பதித்து, மெல்ல அவளது கரங்களைத் தன் கரங்களோடு கோர்த்து, “எப்பவும் உன்னை ரெஸ்பெக்ட் பண்ற நல்ல ஆம்பளையா…” என்றவாறு அவளது கைகளில் உள்ள ஒவ்வொரு விரலிலும் தன் முத்தத்தை மோதிரமாய் அணிவித்தான்.
அவளது இதழில் லேசாகத் தன் அதரத்தை ஒற்றி எடுத்து, “உன்னை என் உயிரை விட அதிகமா நேசிக்கிறேன்.” என்றவன், “இப்படியே எப்பவும் நான் உன்னைக் காதலிக்கணும், அதுக்கு நீ எப்பவும் என்கூட வேணும் ஜியா.” என்றவாறே அவளது கழுத்தில் மிக அழுத்தமாகத் தன் இதழை பதித்துத் தன் முகத்தை அவளது கழுத்தின் வளைவுகளில் புதைத்துக்கொண்டான்.
அவனது ஒவ்வொரு வரிகளிலும் உள்ள அவனது காதலைக் கண்டு மெய் சிலிர்த்தவள், தன் கண்களை மூடி அவன் மீது சாய்ந்துகொள்ள, அதை ரசித்தவாறே முன்னேறியவனது கரங்கள் அவளது ஆடையோடு விளையாட, அதைத் தடுத்தவள் அங்கிருந்து செல்ல போக, அவளைத் தடுத்தவன் அவளது முதுகில் படர்ந்திருந்த முடியை நீக்கிவிட்டு அங்கும் தன் அதரத்தை ஆதூரமாய் பதிக்கும் நேரம் தன்னவனை மெல்ல தடுத்தவள், அவனது இரு கரங்களையும் தன் மீது போட்டவாறு அவனது மார்போடு சாய்ந்துகொண்டாள்.
தன்னிடம் தஞ்சம் வந்தவளைத் தன் நெஞ்சோடு இன்னும் நெருக்கமாய் சாய்த்து கொண்டவனின் உள்ளத்தில்,
‘இப்போ பார்க்கிற ஜியாவா இது? இவ்வளவு காதல் தனக்குள்ள இருந்தால், ஏன் என்னை விட்டுட்டு பிரிஞ்சு போகணும்? நேற்று வரை கோபமா இருந்தவ இப்போ எப்படி? இவ்வளவு காதலை என் மேல வச்சுக்கிட்டு ஏன் என்கிட்ட கோபமா இருக்கிற மாதிரி நடிக்கணும்? ஆனா அந்தக் கோபத்துலயும் நடிப்பு தெரியலையே? இப்போ என்மேல காட்டுற இந்த அன்புலயும் நடிப்பு இல்லை?’ என்று ஆயிரம் கேள்விகள், எழுந்து நின்று அவனது நிம்மதியைக் கெடுக்க,
ஜியாவிற்கும் அதே நிலைமைதான், அவள் உள்ளம் மட்டும் அவளைச் சும்மா விடுமா என்ன? ‘என் மேல இவ்வளவு காதலை வச்சுட்டு ஏன்டா எனக்கு அப்படி ஒரு துரோகத்தைப் பண்ணின? இன்னும் உன் கண்கள்ல என் மேல அதே காதலை நான் பார்க்கிறேன். உன்கிட்ட இருந்து என்னால தள்ளி போகவே முடியலை. இப்படியே உன்மேல சாஞ்சிட்டே செத்து போகணும்னு தோனுதுடா.’ என்று அவளது மனமும் தன் பங்கிற்கு அவளது நிம்மதியைக் கெடுத்தது.
சில நொடிகள் அமைதி காத்தவன் ஒருவித தடுமாற்றத்துடன், “சத்தியமா சொல்றேன் ஜியா, அந்த ஒரு விஷயத்துக்காக நீ என்மேல இவ்வளவு கோபமா இருக்கியானு என்னால இன்னும் நம்ப முடியலை.” என்றவனின் இதழைத் தன் விரல் கொண்டு தடுத்தவள், அவனை ஒருகணம் இமைகொட்டாமல் பார்த்தவள், “இப்போ வேண்டாம் ஆஷிக், ப்ளீஸ்…” என்று கூறியதும் அவளது கண்களில் கண்ணீர் வடிய, வடிந்த கண்ணீரைத் தன் கையில் ஏந்தியவன், தன்னவளைத் தன் நெஞ்சோடு சாய்த்து தன் இருகரம்கொண்டு அணைத்துக்கொண்டான்.
ஒருவேளை ஆஷிக் கூற வருவதை ஜியா தடுக்காமல் கேட்டிருந்தால், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கோபமும், தவறான புரிதலும் இன்றே இந்த நொடியே சரியாகி, இவர்கள் இணைந்திருப்பார்களோ? காலம்தான் கூற வேண்டும்.
***
