24.ராட்சசனின் காதல் பாவை

24.. ராட்சசனின் காதல் பாவை.

போன பகுதியில்:

“பாஸ், பிரஸ் மீட் ரெடியா இருக்கு. நீங்க வந்தா ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்று சொன்னான் சுனில்.

இனி..

அதைக் கேட்டவன் சிறு தலையசைவை மட்டும் கொடுத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான். இவன் வெளியே வருவதற்கும் ஸ்ரீனா வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினான். அவன் பின்னால் சுனில் வர, ஸ்ரீனாவைப் பார்த்து வா என்பது போல் சைகை செய்தவன், அவளை அழைத்துக்கொண்டு அவன் பின்னாலேயே வந்தான்.

மூவரும் லிப்டில் ஏறியவர்கள், தரைத்தளத்தை வந்தடைந்தனர். மீட்டிங் ரூமில் பிரஸ் மீட் அரேஞ்ச் செய்யப்பட்டிருக்க, நேராக விதுரன் அங்கு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்தவுடன் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து,

“ஹலோ சார்.” என்று சொன்னார்கள் அனைவரும்.

அதைக் கேட்டவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அவனுக்கென்று போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான். அவன் அமர்ந்தவுடன் அவன் பக்கத்தில் ஸ்ரீனாவும் சென்று நின்றாள்.

அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் பத்திரிகையாளர்கள் தங்கள் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள்.

“சார், ஏற்கனவே இந்த வீடியோ பத்தி நாங்க கேட்க வந்திருந்தபோது, நீங்க எந்தப் பதிலும் சொல்லாம எங்களைத் திருப்பி அனுப்பிட்டீங்க. அதுக்கப்புறம் இந்த வீடியோ இருந்த இடமே தெரியாம போயிடுச்சு. இப்போ இந்த வீடியோவைப் பார்த்து நீங்க என்ன சொல்லப் போறீங்க சார்?” என்று கேட்டான் ஒரு பத்திரிகையாளர்.

ஆனால், விதுரன் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அதைப் பார்த்த இன்னொரு பத்திரிகையாளர்,

“சார், என்ன சார் அமைதியா இருக்கீங்க? உங்களைத்தான் கேட்கிறோம். ஏற்கனவே அந்த வீடியோ இருந்த இடமே தெரியாம போச்சு. இப்போ மறுபடியும் அந்த வீடியோ வைரல் ஆகிட்டே இருக்கு. அந்த வீடியோல இருக்கிற பொண்ணு இவங்கதானே? இவங்கதானே உங்களை அடிச்சது?” என்று கேட்டான் அந்தப் பத்திரிகையாளர்.

அதில் அவனுக்குக் கோபம் வரத் தொடங்கியது. இருந்தும், தன் கைகளை இறுக்கி மூடிக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், அமைதியாகப் பக்கத்தில் நிற்பவளையே பார்த்தான் விதுரன்.

இவனுடைய பார்வையை உணர்ந்தவள், மெல்ல அவர்கள் முன்பு வந்து நின்றாள்.

இவள் வந்ததுதான் தாமதம்,

“மேடம், அன்னைக்கு நீங்க எதுக்கு சாரை அடிச்சீங்க? அந்த இடத்துக்கு நீங்க எதுக்கு வந்தீங்க?” என்று ஒருவன் கேட்கத் தொடங்கினான்.

அவன் கேட்ட கேள்வியில் பதில் பேச முடியாமல் தடுமாறியவள், அமைதியாக விழி பிதுங்கி நின்றாள். இவளுடைய அமைதியைப் பார்த்த விதுரனுக்கு இன்னும் கோபம் ஏறியது. அதில் சுனிலை முறைத்துப் பார்க்க, அதில் சுனிலோ மெல்ல யாருக்கும் கேட்காத வகையில்,

“ஸ்ரீ, பயப்படாம பேசு. யாரைப் பார்த்தும் பயப்படாத. எதனா ஒண்ணுன்னா பாஸைப் பார்த்துப் பேசு.” என்று சொன்னான் சுனில்.

ஏற்கனவே அங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்தவளுக்கு மனதில் பயம் வந்துவிட்டது. சுனில் சொன்னதைக் கேட்டவளுக்கு, ‘என்ன, இவரைப் பார்த்தா?’ என்பது போல் இருந்தது. ஏதோ அவன் பார்த்துக் கொள்வான் என்று சொன்னதில் மனதில் சிறு தைரியம் வந்தது. அவளையும் அறியாமல் அவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்.

“இங்க பாருங்க, அந்த வீடியோல இருக்கிற பொண்ணு நான்தான். அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். அன்னைக்கு என்னைச் சில ரவுடிங்க துரத்திட்டு வந்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு அந்த இடத்துக்கு வந்துட்டேன். அந்த இடத்துக்குள்ள நுழைஞ்ச உடனே, அவங்க வராங்களான்னு பின்னாடியே திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு உள்ளே வரும்போதுதான் சார் மேல மோதி கீழே விழப் போனேன். நான் எங்கே விழுந்துடப் போறேன்னு சொல்லி சார் என்னைத் தாங்கிப் பிடிச்சாரு. ஆனா, அது எனக்கு அப்போ புரியல. எனக்கு அப்போ அந்த ரவுடிங்கதான் வந்துட்டாங்கன்னு நினைச்சு நான் அந்தத் தப்பைப் பண்ணிட்டேன். ஆனா, சார் பெரிய மனசு பண்ணி என்னோட தப்பை மன்னிச்சு, அந்த ரவுடிங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்துனது மட்டுமில்லாம, எனக்குப் பர்சனல் செக்யூரிட்டி வேலையும் கொடுத்திருக்காரு. என்னோட பாஸ் ரொம்ப கிரேட்.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

இவள் சொல்லும் வரை பொறுமையாக இருந்த ஒரு பெண் பத்திரிகையாளர்,

“என்ன மேடம், இப்படி சொல்றீங்க? ஆனா, நாங்க ஏதோ கேள்விப்பட்டோமே.” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“அப்படி என்ன மேடம் கேள்விப்பட்டீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“நீங்க ஒரு கால் கேர்ள்னு கேள்விப்பட்டேன். சாருக்குத்தான் அங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. சார் யாருன்னு தெரியாததனால நீங்க அடிச்சிட்டீங்கன்னு நாங்க கேள்விப்பட்டோம்.” என்று கேட்டாள் அந்தப் பெண்.

இந்த மாதிரி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் கேட்ட அதிர்ச்சியில் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

அதே நேரம் விதுரனுக்கும் அந்தப் பெண் கேட்டதில் கோபம் வந்தது. இருந்தும், தன் கோபத்தை வெளிக்காட்டாமல் இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், இவள் எந்தப் பதிலும் பேசவில்லை. இன்னொரு பத்திரிகையாளர் எழுந்து அவளைப் பார்த்துக் கேள்விகள் கேட்கத் தொடங்கினான்.

“என்ன மேடம், அமைதியா இருக்கீங்க? இவ்வளவு நேரம் பதில் சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ பார்த்தா அமைதியா இருக்கீங்க. சார் உங்களுக்கு எத்தனாவது கஸ்டமர் மேம்? உங்க நம்பர் இருந்தா குடுங்க.” என்று கேட்டான்.

அந்தப் பத்திரிகையாளன் நக்கலாக அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் அவளுடைய கண்கள் கலங்கின. உடல் முழுவதும் கூசியது. தன்னை எந்த அளவுக்குக் கீழ்த்தனமாக நினைத்திருந்தால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பான் என்று நினைத்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.

தன் அழுகையைக் கட்டுப்படுத்த நினைத்தவளுக்கு அது முடியாமல் போக, உடனே பேசத் தொடங்கினாள்.

“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. அன்னைக்கு நடந்ததைத்தான் உங்ககிட்ட சொன்னேன். நான் இதுல எந்தப் பொய்யும் சொல்லல. இதுக்கு மேல என்னை அந்த மாதிரி நினைச்சுப் பேசாதீங்க.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட இன்னொருவன்,

“ஏன் மேடம் அழறீங்க? நாங்க உண்மையாத்தான் கேட்டோம். பொய் எதுவும் சொல்லலையே! வேணாம்னா இங்க பாருங்க.” என்று சொன்னான் அந்தப் பத்திரிகையாளர்.

அவன் சொன்னதில் நிமிர்ந்து பார்த்தாள்.

அந்த லேப்டாப்பில் அரைகுறை ஆடையுடன் சில ஆபாசப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது போல் இருக்க, அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே ‘மை காண்டாக்ட் லிங்க்’ என்று இருந்தது.

அதைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நேரம் மெல்ல அழுது கொண்டிருந்தவள், முகத்தை மூடிக்கொண்டு,

“இங்க பாருங்க, அதுல இருக்கிறது நான் கிடையாது. நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.” என்று கத்தி அழுதாள் மண்டியிட்டபடி ஸ்ரீனா.

இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்திருந்தவனுக்குப் பொறுமையின் எல்லை கடந்தது.

“ஸ்டாப் இட்! அங்க என்ன நடந்துச்சுன்னு என் பி.ஏ. சொல்லிட்டாங்க. இதுக்கு மேல அவங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.” என்று சொன்னான் விதுரன்.

அனைவரிடமும் சொல்லியவன், திரும்பிச் சுனிலை ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய பார்வைக்கு அர்த்தம் சுனிலுக்குப் புரிந்துவிட,

“ஓகே பாஸ்.” என்று சொன்னான் சுனில்.

அவன் சொல்லிய அடுத்த நொடி, அங்கு முகத்தை மூடி அழுது கொண்டிருந்த ஸ்ரீனாவின் கையைப் பிடித்தவன்,

“வா என் கூட.” என்று சொல்லி அவளை வேகமாக அழைத்துக்கொண்டு லிப்டில் ஏறினான் விதுரன்.

சுனில், விதுரன் பார்வையால் சொன்னதைப் புரிந்துகொண்டவன், நொடியும் தாமதிக்காமல் அங்கு இருந்த அனைவரையும் வெளியே செல்லவிடாமல் நிறுத்தினான். அவர்கள் அனைவரிடமும் ரிப்போர்ட்டர் ஐடி இருக்கிறதா, எந்தப் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று ஒவ்வொருவரையும் சோதனை செய்யத் தொடங்கினான்.

அதில் ஒரு சிலர் வெளியே செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது சிறு சந்தேகம் எழ, உடனே அவர்களிடம் சென்றவன்,

“மொத உங்க ஐடி கார்டைக் காட்டுங்க. அதுக்கப்புறம் நீங்க வெளியே போகலாம்.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதில் ஒருவன் பேசத் தொடங்கினான்.

“என்ன சார், எங்க ஐடி கார்டைக் காட்டச் சொல்றீங்க? நாங்க ஐடியைக் காமிச்சிட்டுத்தானே உள்ள வந்திருக்கோம். நாங்க ரிப்போர்ட்டரா இல்லாம எப்படி உள்ள வர முடியும்?” என்று கேட்டான் ஒருவன்.

“உள்ள வரச் சொல்லும்போது ஐடி காட்டினீங்க இல்ல? இப்பவும் ஒருவாட்டி காட்டுங்க. அப்படி நீங்க காமிச்சா வெளியே போய்க்கிட்டே இருக்கலாம்.” என்று சொன்னான் சுனில்.

“இதோ பாருங்க சார், நீங்க பண்றது தப்பு. எங்களை குற்றவாளி மாதிரி நீங்க விசாரிச்சிட்டு இருக்கீங்க. நீங்க இப்படி பண்றதால உங்க மேல எங்களால கேஸ் கொடுக்க முடியும்.” என்று சொன்னான் இன்னொருவன்.

“தாராளமா கேஸ் போடுங்க. எந்தப் பிரச்சனையும் இல்ல. அதுக்கு முன்னாடி உங்க ஐடி கார்டைக் காட்டுங்க.” என்று சொன்னான் சுனில்.

அதில் அவர்களுக்குப் பதற்றம் அதிகமாக, பதற்றத்துடன் பேசத் தொடங்கினார்கள்.

“இங்க பாருங்க சார், எங்களை விட்டுருங்க. அப்படி இல்லன்னா நீங்க சொன்னதெல்லாம் பொய்யின்னு நாங்க எழுதுற மாதிரி இருக்கும்.” என்று மிரட்டுவது போல் சொன்னார்கள்.

அதைக் கேட்ட சுனில் சிறிதும் பயப்படாமல் அவர்கள் முன்பு கைகளை நீட்டிக்கொண்டு நின்றான். ஐடி கார்டு வேண்டும் என்பது போல்.

ஆனால், அவர்களோ அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

“இங்க பாருங்க சார், நாங்க உள்ள வரும்போதே ஐடி கார்டைக் காட்டிட்டுத்தான் வந்தோம். அதனால உங்ககிட்ட காட்டணும்னு எந்த அவசியமும் கிடையாது.” என்று சொன்னவன் அங்கிருந்து நகரப் பார்த்தான்.

அவன் நகர, அவன் முன்பு நான்கு, ஐந்து பாடிகார்டுகள் வந்து நின்றனர். அவன் செல்ல முடியாத அளவுக்கு அவர்கள் வழியை மறித்தனர்.

உடனே அவர்களைப் பார்த்த சுனில்,

“இவங்களை நம்ம இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட அவர்களும் அங்கிருந்த நால்வரையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

அதே நேரம் இங்கு..

இவளை வேகமாக அவன் அழைத்துக்கொண்டு செல்ல, அதைக்கூட அறியாதவள் அந்தப் பத்திரிகையாளர்கள் பேசியதை நினைத்து அழுதபடியே இருந்தாள்.

லிப்டில் ஏறிய இருவரும் கடைசித் தளத்திற்கு வந்தனர். லிப்ட் வந்து நின்றதும் அதிலிருந்து வெளியே வந்தவன், அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு அவனுடைய கேபினுக்குள் நுழைந்தான்.

கேபினுக்குள் நுழைந்தவன், அவளைத் தனக்கு முன்பு இழுத்து நிறுத்தினான் விதுரன்.

ஆனால், அவளோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. கீழே அவர்கள் பேசியதுதான் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதில் அவள் அழுது கொண்டே இருக்க, அதில் கடுப்பான விதுரன்,

“ஷட் அப்!” என்று சொன்னான் விதுரன்.

இனி வரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்.

பாவை தொடரும்..

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!