காதல் 67

ஆஷிக்கைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்ட ஹாஜரா, “இந்த கேஸ் எல்லாம் எதுவும் வேண்டாம். அப்பா சொல்றத கேளு, அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. பார்த்தவரை போதும், என்னால இதுக்கு மேல எதையும் தாங்கிக்க முடியாது.” என்று அழுதுகொண்டே பிடிவாதமாய் கூற, 

தன் நெற்றியை நீவியபடி, “அம்மா நீங்க ஏன்…” என்று சலிப்புடன் ஆரம்பித்தவனை அஸாத், “நீ உன் ரூம்க்கு போ.” என்று அனுப்பி வைக்க, 

அஸாத், “ரூம்க்கு போ” என்று சொன்ன மறுநொடி ஏன், எதற்கு என்று கேட்காமல், சரி என்றவாறு ஆஷிக் அங்கிருந்து சென்றதை இமை தட்டாமல் பார்த்த ஹாஜரா, இது எப்படிச் சாத்தியம் ஆனது என்கின்ற குழப்பத்தோடு தன் கணவரைக் காண, மனைவியின் மனதை படித்த அஸாத் நடந்த அத்தனையும் தன் மனைவியிடம் கூறி,

“அவன் ரொம்ப உடைஞ்சி போயிருக்கான். ஜியா ரொம்பப் பாவம். இந்த நேரத்துல அவங்க டெசிஷன்ஸ்ல விடுறது தான் சரி. நாம சப்போர்ட் பண்ணுவோம். மத்தவங்க என்னப் பேசுவாங்கன்னு யோசிக்கிறோம். ஆனா ஜியாவோட நிலைமையில இருந்து பாரு. மத்தவங்க பேசுறது எல்லாம் ஒரு விஷயமா இருக்காது. ஆஷிக் அதைத் தான் பண்றான். நாமளும் கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு காத்திருப்போம். 

எனக்கு இதுல விருப்பம் இல்லைதான், ஆனா அதுதான் அவங்க முடிவுன்னா நாம அவங்களுக்கு உதவிதான் பண்ணணும். மீடியா ரொம்ப இன்வால்வ் ஆகிருக்குன்னு எல்லாரும் யோசிக்கிறாங்க. எல்லாத்துக்கும் மேல சமீர் அப்பா ஷாஹித் பார்ட்டில முக்கியமான பதவியில இருக்காரு. 

ஜியா வேற மதம், ஸோ பிரச்சனை ரீலீஜியஸ் பேஸிஸ்ல திரும்பிட்டா வேற மாதிரியான ப்ராப்ளம் வருமோனு யோசிக்கிறாங்க. ப்ளஸ் அந்த மெடிக்கல் விவகாரம், அதான் எல்லாரும் முன்வர தயங்குறாங்க. ஆஷிக் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தான்னா, சமீர வேற மாதிரி டீல் பண்ணிருக்கலாம். இப்போ தப்பெல்லாம் நம்ம பக்கம் இருக்கிற மாதிரி ஆகிடுச்சு. சமீரை எல்லாரும் அப்பாவினு சொல்றாங்க. 

பத்தா குறைக்கு ஆஷிக்கை எப்படி ப்ரோவோக் பண்ணினா, அவன் ரியாக்ட் பண்ணுவான்னு சமீர் நல்லா தெரிஞ்சி வச்சுருக்கான். நீ கவலைப்படாத, நான் சும்மா இருக்க மாட்டேன். மேல் இடத்துல பேசிட்டு தான் இருக்கேன். சமீருக்கு எதிரா ஒரு எவிடென்ஸ் கிடைச்சாலும் அவனை உண்டு இல்லன்னு பண்ணிடலாம்.” என்று அஸாத் ஆதங்கமாகப் பேசிக்கொண்டிருக்க, ஹாஜரா தன் கணவனின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு மனதிற்குள் நெகிழ்ந்தார். 

“என் உயிர் தந்து உன் மானம் காப்பேன்” என்று ஜியாவுக்குக் கொடுத்த வாக்குறுதி, ஆஷிக்கிற்கு ஜியாவின் கலை இழந்த முகத்தைக் காணும் பொழுதெல்லாம் நினைவிற்கு வர, 

மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாமல் போனதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டான். ஜியாவைக் காணும் பொழுதெல்லாம் அவளுக்கு அநீதி இழைத்த அந்த அரக்கர்களைத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துபவன், இன்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதை எண்ணி கவலையுற்றவன், ஒருவித குற்ற உணர்வோடு தன் மனைவியைக் காண தன் அறைக்கு வந்தான். 

விழிகளை மூடியவாறு மெத்தை மீது கசக்கி எறிந்த மலர் போல வாடி வதங்கி கிடந்தாள் ஜியா. அவளைக் கண்ட மறுநொடியே அவனுக்குள் கனன்று வந்த கோபம் மேலும் அதிகரிக்க, அவளைப் பார்த்தவாறே மேலும் முன்னேறாமல் அறையின் ஓரமாக நின்றான். 

உறக்கத்திலே அவள் ஏதேதோ முணுமுணுக்கவும் சிறு பதற்றத்தோடு உள்ளே நுழைந்தான். ஏதேதோ உளறினாள் ஒன்றும் கோர்வையாக இல்லை. “ஒன்னும் இல்லடா, நான் இருக்கேன்.” என்றவாறு கலைந்து போன கேசத்தை வருடவும், சீரான மூச்சை வெளியிட்டவாறு அவள் உறக்கத்திற்குச் செல்ல, 

வதங்கி போன வதனத்தை வருத்தத்துடன் பார்த்தவாறே சற்று தள்ளி இருந்த நாற்காலியை, அவள் அருகே மிகவும் மெதுவாய் அவளது உறக்கம் கலையாமல் தூக்கி வைத்தவாறு அதில் வந்து அமர்ந்தான். 

மனதில் ஆழமாக ஆல மர வேர் போல முளைத்திருந்த ஆயிரம் கேள்விகள் மீண்டும் தலை தூக்க, மீண்டும் அதே போராட்டங்கள்… தன் சந்தோஷத்தை தின்ற அதே போராட்டங்கள், இன்னும் தின்ன துடிக்கும் அதே வேதனைகள். தப்பிக்க வழி தெரியாமல் தவித்தான். 

திடீரென்று உதறல் எடுத்த தன்னவளின் கரத்தை மென்மையாய் தனக்குள் பத்திரப்படுத்தினான். நெஞ்சுக்குழிக்குள் ஒருவித வலி உருவாகி தொண்டைக்குழியில் வந்து சிக்கிக்கொண்டு அழுத்தியது. உடைந்து கதற துடித்த இதயத்தைக் கட்டுப்படுத்தினான். பார்த்து பார்த்து ரசித்த மனைவி, இன்று கண்முன் சிதைக்கப்பட்ட சிற்பம் போலக் கலையிழந்து கிடந்தாள், நெஞ்சம் கனத்தது. 

பாதத்தில் இருந்த தழும்பு உறைந்திருந்த ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது. தழும்பில் தன் இதழை அழுந்த பதித்தான். கரைபுரண்ட விழிநீர் அவளது பாதத்தை நனைத்தது. 

நீதிமன்றத்தில் அவள் உடைந்து அழுத காட்சி, அவன் கண் முன் தெரிய, என்ன செய்யப் போகிறோம்? ஜியாவை பழைய நிலைக்கு எப்படிக் கொண்டுவர போகிறோம் என்பதை யோசிக்கும் பொழுதே, உள்ளத்தில் ரணவேதனை எட்டிப்பார்க்க, கண்ணீர் மீண்டும் கன்னத்தை நனைத்தது.

இரு மெல்லிய கரங்கள் உதிர்ந்த துளிகளைத் தன் கரத்திற்குள் சேமித்துக் கொண்டது. விரல் பட்ட ஸ்பரிசத்தில் விழி திறந்தவனின் விழிகள், ஜியாவின் உணர்ச்சிகளற்ற விழியைப் பார்த்த மறுநொடி உள்ளுக்குள் திரண்டு வந்த வேதனையை அடக்கிக்கொண்டு, 

அவளது கேசத்தை வருடியவாறே, “இப்போ எப்படிடா இருக்க?” என்றான் முணுமுணுப்பாக. 

வெறுமையோடு பார்த்தவள், “இன்னும் நான் செத்து போகல ஆஷிக்.” என்றாள் விரக்தி, வெறுப்பு, கோபம் எல்லாம் தன் முகத்தில் மின்னலை போல மாறி மாறி தோன்ற. 

தவித்துப் போனான். ‘நான் இன்னும் செத்து போகல’ என்ற வரிகள், உயிரோடு அவனைக் கொன்றது. எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் உதட்டை அழுத்தினான். கட்டுப்பாட்டை மீறி விழிநீர் வழிந்தது. சட்டையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன், ‘இல்லை. அப்படிச் சொல்லாத’ என்பது போலத் தன் தலையை அசைத்து தன் மறுப்பைத் தெரிவித்தவன்,

“அப்படிச் சொல்லாத, எல்லாம் சரியாகிரும்.” என்றான் தன் மனைவியின் கரத்தை இறுக்கப் பற்றியவாறு. வெறுமையோடு புன்னகைத்தவள், “சரியாகிருமா? என்ன சரியாகும்? எப்படிச் சரியாகும் ஆஷிக்?” என்று வெறுப்போடு பேச, தனது இயலாமையை எண்ணி வருத்தப்பட்டவாறே ஜியாவை நோக்கினான். 

அபிநயம் கொஞ்சிய விழிகள் இன்று பேச மறுத்து ஊமை போல உணர்வற்று இருப்பது அவனை மேலும் கலங்கடித்தது. 

“எல்லாம் முடிஞ்சு போச்சுல ஆஷிக். இனிமே வாழ்ந்து எதுக்கு?” விரக்தியின் உச்சத்தில் கண்ணீரோடு வெளிப்பட்டது வார்த்தைகள். 

“இல்லமா, எதுவும் முடிஞ்சு போகல. நான் இருக்கேன், நீ பார்க்க வேண்டிய சந்தோஷம், நான் கொடுக்க வேண்டிய சந்தோஷம், நாம வாழ வேண்டிய வாழ்க்கை நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கு. உன்கூட ரொம்ப வருஷம் வாழனும்.” என்று ஆறுதல் படுத்தினான். 

“வேண்டாம் ஆஷிக், எதுவும் வேண்டாம். என் மேல அன்பு வைக்காத. அதுக்குத் தகுதியே இல்லாத ஜென்மம் நான்…” என்று தன் தலையில் அடித்தவாறு கதறி துடித்தாள். சமாதானம் செய்தான், அடங்கவில்லை. தன்னை மறந்து வெறிப் பிடித்தது போல ஆக்ரோஷமாகக் கத்தினாள். 

“ஜியா… சொல்றத கேளு… நான் பார்த்துக்கறேன், பொறுமையா இரு.” என்று சாந்தப்படுத்த நெருங்கிய ஆஷிக்கைத் தள்ளிவிட்டு, தலையைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதாள். 

தள்ளிய வேகத்தில் தன் நிதானத்தை இழந்து சுவற்றில் மோத, ரத்த காயத்தோடு மீண்டும் அவளை நெருங்கினான். 

தன்னைத் தானே காயப்படுத்த துணிந்த நேரம், தன்னோடு இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். திமிறினாள், விடவில்லை. தன்னை மறந்து அவனது மார்பை குத்தினாள், விலகவில்லை தாங்கிக்கொண்டான். 

அவள் அலறியதைக் கேட்டு பக்கத்து அறையில் இருந்த ஆயிஷா, சரண்யா மற்றும் அவர்களைக் காண வந்த ஆதர்ஷ், ரோஹித், நடாஷா, தியாவும் வந்துவிட, 

தன் மனைவியை இந்த நிலையில் மற்றவர்கள் பார்ப்பதை விரும்பாதவன், ஜியாவை ஒரு கரத்தில் தாங்கியவாறே மற்றொரு கரத்தால் கதவை சாற்றினான். அவனது விழிகளில் வெளிப்பட்ட இயலாமை அவர்களை வருத்தியது. அவனது வருகைக்காகக் காத்திருந்தனர். 

நிமிடங்கள் கழிந்திருக்க அழுது அழுது தன் ஜீவனைப் பாதி இழந்தவள், வியர்வை சிந்த அவன் மார்பிலே சரிந்தாள். 

மூக்கைப் பார்த்தான் எந்த ரத்தம் கசிவும் இல்லை, நிம்மதி அடைந்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜியா ரெண்டாவது முறையாக இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறாள். 

‘பேனிக் அட்டாக், உயிர் போகும் ஆபத்து, தற்கொலை முயற்சி…’ என்று மருத்துவர் கூறிய அனைத்தும் அவன் நினைவிலே வந்து இடியை போல முழங்க, அந்த ஒவ்வொரு வரிகளும் அவனது உயிரை அறுத்தது. உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும் அலறித் துடித்தது. உடனே மருத்துவரிடம் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினான். 

“லெட் ஹெர் ரெஸ்ட். ஷீ நீட் அ கம்ப்ளீட் ரெஸ்ட். அவங்களைப் பார்த்துக்கோங்க, நான் உடனே வரேன்.” என்றார். 

மூச்சு காற்று போல அவளை விட்டு அகலாது அருகிலே இருந்தான். சொன்னது போலவே உடனே வந்த மருத்துவர் ஜியாவை பரிசோதித்துவிட்டு, “இன்ஜெக்ஷன் போட்ருக்கேன், நல்லா தூங்குவாங்க. டிஸ்டர்ப் பண்ணாதீங்க, இடையில எழும்ப மாட்டாங்க. எழும்பினா சாப்பாடு குடுங்க, இல்லனா விட்ருங்க.”

“என் பொண்ணு சரியாகிருவாள்ல?” என்று தடுமாற்றத்தோடு வெளிப்பட்டது ஷங்கரின் குரல். அவரது தோளை தட்டியவர்,

“காலையில நார்மலா இருப்பாங்க.” ‘இதை அவ்வளவு எளிதாய் சரி பண்ண முடியாது’ என்பதை மறைமுகமாகக் கூறிய மருத்துவர், ஆஷிக்கை தனியாக வருமாறு கூறிவிட்டு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றார். 

மனமுடைந்து போய் இருந்த ஷங்கரை ஹாஜராவும் அஸாத்தும் ஆறுதல் படுத்தினர். 

முகமெல்லாம் வியர்த்திருக்க, விழிகளில் கலவரத்தோடு மருத்துவரிடம் வந்தவனின் மனமெல்லாம், ஒன்றை ஒன்றுதான் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தது. ‘ஜியாவின் உடல் நிலையில் எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது’ என்பதைத் தான் ஜெபித்துக் கொண்டிருந்தான். அவனது மனவோட்டத்தை உணர்ந்தவர் எடுத்த எடுப்பில் அவனைச் சங்கடப்படுத்த விரும்பாமல், 

அவனது நெற்றியில் இருந்த காயத்தைப் பற்றிக் கேட்க, என்னவென்று விளங்காமல் காயத்தில் கை வைத்ததும் வலி எடுக்க முகத்தைச் சுளித்தவனுக்கு, அப்பொழுது அடிபட்டிருந்தது நினைவிற்கு வர அவரிடம்,

“அது ஒன்னும் இல்லை, ஜஸ்ட் இக்னோர் இட்.” என்றவன்,

“எதுக்குத் தனியா கூப்டீங்க? ஜியா நல்லா இருக்காள்ல?” என்று ஒருவித பயத்துடன் கேட்க, 

“ஆஷிக் இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கணும்.” என்று அவர் சுற்றி வளைக்க, மேலும் கலவரம் கொண்டவன்,

“அங்கிள் ப்ளீஸ் ஜியாக்கு என்னாச்சு?”

“பிஎஸ்டிடீவோட ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கா. ஷீ நீட் டு பீ ஹாஸ்ப்பிட்டலைஸ்ட். சைக்காலஜிக்கலா…” என்று அவர் தொடர்வதற்குள் முந்திக்கொண்டவன், 

“ப்ளீஸ்… சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட் குடுக்க அவ என்ன பைத்தியமா? அண்ட் ஷீ இஸ் நாட் அ பேஷண்ட். ஆமா அவ டிப்ரெஸ்ட்டா இருக்கா, எனக்குத் தெரியும். அதுக்காகச் சைக்காலஜிக்கல் ட்ரீட்மெண்ட் எல்லாம் அவளுக்குத் தேவை இல்லை. 

உங்களுக்குத் தெரியுமா என் ஜியா கூட ஒரு நல்ல டாக்டர் தான். நீங்க என்ன பண்ணணுமோ என்கிட்ட சொல்லுங்க, நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் சற்றுக் கடினமாகப் பேச அதைப் பெரிது படுத்தாதவர் அவனிடம்,

“சரி உன்கிட்ட ஒன்னு கேக்குறேன், உன்னால ஜியாக்கு மறுபடியும் அட்டாக் வராம பார்த்துக்க முடியும்னு உறுதியா சொல்ல முடியுமா? முடியாது அதுதான் உண்மை. அட்டாக் வரும் போதெல்லாம் தூங்க வைக்க முடியாது. இன்னைக்கு அவளுக்குக் கொடுத்திருக்க டோஸ் வழக்கத்தை விட அதிகமானது. கண்டின்யூ ஆனா மருந்தே அவளை அழிச்சுரும். 

லாஸ்ட் ஸ்டேஜ் விட்டா, ‘ஷி வில் டை’ ஃபார் தி ஷ்யுர்.” மென்மையோடு அழுத்தமாய் கூறினார். 

சிலையென உணர்ச்சி அற்று நின்றான். தோளை உலுக்கி, “கேக்குறியா?” என்றவரிடம், “ம்ம்…” என்று தன் தலையை அசைக்க மேலும் தொடர்ந்தவர்,

“உனக்கு ரெண்டு ஆப்ஷன்… ஒன்னு கண்டிப்பா சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் குடுத்தே ஆகணும். இல்லன்னா மறுபடியும் அவளுக்கு அட்டாக் வராம நீ பார்த்துக்கணும். உன்னால முடியாது ஆஷிக், அந்த ஸ்டேஜெல்லாம் அவ கடந்துட்டா. 

இப்போ எல்லாம் அட்டாக் வந்தா என்ன பண்றோம்னு அவளுக்கே தெரியாது, அந்த ஸ்டேஜ்ல இருக்கா. ட்ரீட்மென்ட் கொடுக்காம விட்டா நார்மலா இருக்கும் பொழுதும், தன்னை மறந்து ரியாக்ட் பண்ண ஆரம்பிப்பா. 

ஜியாவ நான் பைத்தியம்னு சொல்லல, அவ அந்த ஸ்டேஜ்க்கு போயிற கூடாதுனு சொல்றேன். ஜியாக்கு இருக்கிறது டிஸிஸ் இல்லை, இட்ஸ் அ டிஸ்ஸார்டர். ஷீ நீட் அ மெண்டல் சப்போர்ட், நாட் அ மெடிசின். மெடிசினால கண்ட்ரோல் தான் பண்ண முடியும். மெடிக்கல் கவுன்சலிங்கால மட்டும்தான் அவாய்ட் பண்ண முடியும். 

இந்தியாவுல ஏழு சதவிகித மக்கள் பிஎஸ்டிடீயால பாதிக்கப் பட்ருக்காங்க. முதல் ஸ்டேஜ்ல சரியான கவுன்சலிங் எடுத்துக்கிட்டா, கண்டிப்பா இதைச் சரி பண்ணலாம். ஆனா உன்னை மாதிரி பல பேர் தப்பா நினைச்சு, ட்ரீட்மென்ட் எடுத்துக்காம இருக்கிறது தான் அதிகமான பாதிப்புக்குக் காரணம். பல பேர் சூசைட் பண்ணிக்கிறதுக்குக் காரணமே இதுதான்.” ஆஷிக்கிடம் அனைத்தையும் தெளிவாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

ஆஷிக்கின் கால்கள் தானாகச் சென்றது ஜியாவின் அறைக்குத்தான். பாதுகாப்பில்லாத குழந்தையைப் போல உடலை குறுக்கி கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். 

மருத்துவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனது காதில் ரீங்காரமிட, அறையை விட்டு வெளியே வந்தான் சித்த பிரம்மை பிடித்தது போல.

“டாக்டர் என்னடா சொன்னாங்க?” என்று தன் நண்பர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், தன் தலையில் கை வைத்தவாறு சோபாவில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தான். 

மருத்துவர் கூறியது, ஜியா நினைவில்லாமல் மருத்துவமனையில் கிடந்தது, நினைவு திரும்பி கதறியது என்று அனைத்தும் அவனது நெஞ்சை கசக்கி பிழிய, விழி நீர் விடாமல் வழிந்தது. 

வெகு நேரம் யோசித்தவனுக்கு இது எல்லாவற்றுக்கும் காரணமாய் இருந்த சமீர் மீது கோபம் சீறிக்கொண்டு வர, இருந்த கோபத்தில் தான் இருந்த மர சோபாவையே பின்னே தள்ளியவாறு எழுந்தவன், 

“என்னடா தப்பு பண்ணினா என் ஜியா? அவளுக்கு ஏன்டா இப்படி எல்லாம் நடக்கணும்? முடியலடா! ஒருத்தனையும் விடக் கூடாது, எதாவது பண்ணணும்…” என்று கோபமாக உறுமியவனின் வார்த்தையில், ரௌத்திரத்தை விட வலி அதிகமாகத் தென்பட்டது. 

“ஆஷிக் ரிலாக்ஸ்! நீ கவலைப்படாத, நாம ஏதாவது பண்ணலாம்.” என்று ரோஹித்தும் ஆதர்ஷும் மாறி மாறி அவனுக்கு ஆறுதல் அளிக்க அசையாமல் நின்றவன், 

திடீரென்று தன் கண்களில் கனல் தெறிக்க அவர்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாது, வேகமாக அங்கிருந்து சென்று வண்டியில் ஏறி வேங்கையெனச் சீறிப் பாய்ந்தான். 

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!