அது இறுதி ஆண்டு தகவல் தொழில்நுட்ப வகுப்பறை. ஆண்களும், பெண்களுமாய் இருபுறமும் அமர்ந்திருக்க அந்த துறை ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் ஒரு பகுதியினர் சின்சியராக நோட்ஸ் எடுக்க, இன்னொரு சாராரோ தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சிலிருந்து அவ்வப்போது குசுகுசுவென பேச்சுச் சத்தம் கேட்டதில் ஆசிரியர் திரும்பிப் பார்க்க அவர்கள் சட்டென்று அமைதியாயினர்.
திரும்பவும் அவர் கரும்பலகையில் எழுத ஆரம்பிக்க உடனே அங்கே திரும்பவும் சத்தம் கேட்க “ஜோஸ்வினினினி…” எனக் கத்த
“மேம்…”
“என்ன பண்ணிட்டு இருக்க?”
ஒரு நிமிடம் திருதிருவென விழித்தவள் பின் சுதாரித்து,
“மேம்..! நோட்ஸ் எடுத்தேன்”
“ஓ… அப்படினா நீ என்ன எழுதினயோ அதப் படி” எனச் சொல்ல அவள் என்ன செய்வதென்று தெரியாது திணறினாள்.
ஏனெனில் அங்கே அவளது கேங் நாளை எந்த தியேட்டரில் என்ன படம் பார்க்கலாம் என டிஸ்கஷன் ஓடி கொண்டிருந்ததில் அவள் ஒன்றும் எழுதவில்லை.
“ஜோஸ்வினி படினு சொன்னேன்” என அதட்ட ஜோஸ்வினியின் கண்ணசைவில் அதற்குள் கடைசி பெஞ்சின் ஒரு டெஸ்கிலிருந்து இன்னொரு டெஸ்க்குக்கு நோட் பாஸ் ஆக அதைக் கவனித்த ஆசிரியரோ,
“ஏய்..! அங்க என்ன நடக்குது? என்ன பண்றீங்க? ரேஷ்மி என்ன பண்ற?” என அவளிடம் கேள்வி கேட்க, அவளும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.
“ஜோஸ்வினி உன் நோட்ல இருந்து படிக்கச் சொன்னா அவ நோட்ட வாங்கற? ஒன்னுதுல எழுதாம என்ன பண்ற?” எனக் கேட்க,
“மேம்…” என அவள் திணற அதிலிருந்தே அவள் எழுதவில்லை என யூகித்தவர்,
“கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்” எனக் கத்த அதில் அமைதியாக தலைகுனிந்தபடி வெளியே சென்றவளின் முகம் வகுப்பறையை தாண்டியதும் புன்னகையைக் காட்டியது.
எப்போது அந்த வகுப்பு முடிவடையும் என்று இருந்தவளுக்கு அந்த ஆசிரியரே அவளை வகுப்பை விட்டு வெளியேற்றவும் அவள் சந்தோஷமடைந்தாள்.
‘தேங்க்யூ மண்டோதரி. மீ எஸ்கேப்’ என்று உற்சாகமாக மனதுக்குள் குதித்தபடியே வகுப்பறையை விட்டு வெளியேறிய ஜோஸ்வினியோடு ரேஷ்மியும் இணைந்து கொண்டாள்.
“ஜோ… நில்லுடி” எனக் கத்த,
“வாவ்… உன்னையும் வெளிய அனுப்பியாச்சா அந்த மண்டோதரி… கம்பெனிக்கு யாருமில்லேயேனு நினைச்சேன்” என ஜோஸ்வினி மகிழ்ச்சியாகச் சொல்ல,
“பக்கி, மாடு… ஏன்டி உன்னால தான் நான் வெளிய வந்தேன்… உனக்கு கொழுப்புடி”
“டென்ஷன் ஆகாத எரும. ஒரே பசி. வா கேண்டின் போகலாம்” என ஜோஸ்வினி சற்றும் சம்பந்தமில்லாமல் சொல்ல ரேஷ்மி தலையிலடித்துக் கொண்டாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஷ்யாம் அங்கு வந்தான்.
“ஹேய் டார்லிங்… இங்க என்ன பண்ற?”
“காலேஜ சுத்திப் பாக்கறேன்” என அவள் கடுப்புடன் சொல்ல,
“ஜோ உனக்கு இப்போ கிளாஸ் இருக்கும் தான?”
“டேய் நாங்களே அந்த மண்டோதரி கிளாஸ விட்டு அனுப்பிட்டானு இருக்கோம். இவன் வேற?” என ரேஷ்மி புலம்ப ஜோஸ்வினியோ,
“ஷியாம் நாளைக்கு மாஸ் கட் பண்றோம். தளபதி படத்துக்கு போறோம். டிக்கெட் புக் பண்ணு” என்க, அவனோ அதிர்ந்தான்.
“ஏன்டி கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?”
“என்னடா?” என அவள் புருவம் உயர்த்த,
“தனியா போய் லவ்ஸ் பண்ணலாம்னு பாத்தா கிளாஸயே கூட்டிட்டு போற?” என்றவன் கேட்க அதில் கடுப்பான ரேஷ்மியோ,
“அய்யா… ராசா… உன் லவ்லாம் கேண்டீன் போய் வெச்சுக்கோ. இப்போ நடய கட்டிறீங்களா ரெண்டு பேரும்?” என அவள் கடுப்புடன் சொன்னதும் அவளை முறைத்தவாறே கேண்டீனை அடைந்தனர்.
“ஷியாம் உனக்கு கிளாஸ் இல்ல?”
“ஐயா இன்னைக்கு கட். ஈசிஆர் போறமே” என அவன் உற்சாகமாக சொல்ல அவளோ ஷியாமை முறைத்தாள்.
“ஏன் டார்லிங் முறைக்கற?”
“எப்படியும் தண்ணி அடிக்கத் தான் போற. அதுக்கு அவ்ளோ தூரம் எதுக்குடா?” எனக் கேட்க அவனோ ஈஈ என இளித்தான்.
“டேய் உன் முழியே சரியில்ல…” என அவள் சொல்ல,
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல செல்லம்” என்று கொஞ்சியவனிடம்,
“நாளைக்கு எனக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கணும்” என சொல்லவும் டன் என அவன் புன்னகைக்க,
‘இதுங்க ரெண்டும் பண்றது எங்க போய் முடியுமோ?’ என்ற யோசனையுடன் ரேஷ்மி அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஜோஸ்வினியும் ரேஷ்மியும் ஒரே வகுப்பைச் சேர்ந்த தோழிகள். ஜோஸ்வினிக்கு பேசும் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் வல்லமை உண்டு.
எல்லோரையும் அவளது குறும்புப் பேச்சால் கட்டி வைத்து விடுவாள்.
மண்டோதரி… மணிமேகலை மேம். எப்போதும் அவருக்கும், இவளுக்கும் ஆவதே இல்லை. வகுப்பில் ஏறுக்குமாறாக ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். அதனால் அந்தக் கடுப்பில் அவர் வெளியே அனுப்ப, ஜோஸ்வினியால் ரேஷ்மியும் வெளியே வந்தாள்.
ஷியாம் ஜோஸ்வினியின் காதலன். ஒரு வருடமாக அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று பரிதாபப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு சரி என்று சொல்ல அப்போது இருந்து அவர்களது காதல் வளர்ந்து வருகிறது.
எனினும் அவனை அவள் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. என்ன தான் சம்மதம் சொன்னாலும் அவளுடைய படிப்பின் மீதான நாட்டத்தில் அவனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதனால் அவனுக்கு அதைப் பற்றிய மனத் தாங்கல் உண்டு.
அவளுக்கு வெளி நாட்டில் எம்.எஸ் செய்ய வேண்டும் என்பது கனவு. அதனால் அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவளுக்கு சமீபமாக இன்னொரு சந்தேகம் வந்தது. அவன் தன்னை ரொம்பவும் கட்டுப்படுத்துகிறானோ என்று… இருந்தாலும் அவள் அதைத் தற்போதைக்கு தள்ளிப் போட்டாள். அவனின் நடவடிக்கைகளை பொறுத்துப் பார்த்து கொள்ளலாம் என்று.
அன்றிரவு அவள் செல்பேசியில் வகுப்பு தோழியுடன் சாட் செய்ய அவளோ மணிமேகலை மேம் வகுப்பில் நாளை டெஸ்ட் என தகவல் சொல்ல அதில் கடுப்பானவள் ஷியாமுக்கு போன் செய்ய அவன் எடுக்கவில்லை.
இரண்டு, மூன்று முறை போன் செய்தும் அவன் எடுக்காமல் இருக்க சந்தேகம் கொண்டவள் அவனது தோழனுக்கு போன் செய்ய அவனோ அவன் தண்ணி அடித்துக் கொண்டிருப்பதாக கூற அவளுக்கு கோபம் பொங்கியது.
பின் கடுப்பாகி என்ன செய்வதென்று அவள் யோசிக்க அவனிடமிருந்து போன் வந்தது.
“ஹலோ”
“டா…டார்லிங்” என குழறலான குரலில் அவன் பேச,
“டேய் குடிச்சியா?”
“இ… இல்ல டார்லிங்”
“டேய் பொய் சொல்லாதே. காலைல ரொம்ப நல்லவன் மாதிரிப் பேசின?” என அவள் கேட்க அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.
“அது காலைல. இது நைட்” என சொல்ல அவளோ பல்லைக் கடித்தாள்.
“என்ன டார்லிங் கோபமா இருக்கியா?. கோபப்பட்டுக்கோ. ஏன்டி லவ் அக்செப்ட் பண்ணதுல இருந்து அது பண்ணாத, இத பண்ணாதனு உயிர எடுக்கறே?. தண்ணி கூட அடிக்கலேனா இந்த சமூகம் என்ன எவ்வளவு கேவலமா நினைக்கும்?” என அவன் பினாத்திக் கொண்டே போக அதற்கு மேல் பேச பிடிக்காமல் கட் செய்தவள் ஆன் லைனில் சினிமாவுக்கு போவதற்கான டிக்கெட்டை புக் செய்தாள்.
அடுத்த நாள் அவளை பார்க்க ஷியாம் வர அவளோ அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் சென்றதில் ஷியாமோ அவள் பின்னால் ஓடினான்.
******
அபிஷேக் சென்னை விமான நிலையம் வந்த போது அவனை வரவேற்க ஆதவன் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்தவன் ஆதவனை பார்த்துப் புன்னகைக்க அவனும் புன்னகைத்தவன் அவனுடைய டிராவலிங் பேகை வாங்கிக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டான்.
“எப்டி இருக்க ஆது?”
“ஃபைன்டா. ஹவ் இஸ் ஜர்னி?”
“குட் டா. அம்மா, அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா?” எனக் கேட்க,
“எல்லாரும் ஃபைன்டா. நீ பாக்க தானே போற”
“இல்ல மச்சி. நான் ஹோட்டலேயே தங்கிக்கறேன்” என அபிஷேக் தயங்க,
“டேய் என்னடா இப்டிப் பேசற?. நான்லா எதுக்குடா பிரெண்டுனு இருக்கேன்”
“இல்லடா…” எனத் தயங்க ஆதவன் அவனை முறைத்தான்.
“சரிடா. நான் உங்க வீட்டுக்கு வரேன். பட் ஒன் வீக் தங்கிட்டு ஹோட்டல்க்கு போறேன்” என்க,
“டேய்…” என்று ஆதவன் பல்லைக் கடித்தான்.
“கூல்டா. நான் உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பல” என விளக்கம் சொல்ல,
“நீ வரது எங்களுக்கு சிரமமாடா? நீ இல்லேனா நான் ஃபிரான்ஸ்ல எப்டி சமாளிச்சிருப்பேனு தெரில. ஆனா நீ இப்படி பேசுற?” என ஆதவன் வருத்தம் அடைய,
“கூல்டா. ஹோட்டல்ல இருந்தா கொஞ்சம் வசதியா இருக்கும்” எனச் சொல்ல,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என் கூட தான் இருக்கற” என்று அவன் மறுக்க முடியாத குரலில் சொல்ல சரி என்று வேறு வழியில்லாமல் தலை அசைத்தான்.
ஆதவன் அபிஷேக்கின் கல்லூரி தோழன். அவன் பிரான்சில் அபிஷேக்குடன் செஃப்புக்கான படிப்பை முடித்தவன்.
அவன் இந்தியா அதுவும் தமிழ்நாடு என்று தெரிந்ததும் பாலகிருஷ்ணன் அவனை தன் மகன் போல கவனித்துக் கொண்டார். அப்படி இருக்கையில் இவன் இப்படி தயங்கவும் ஆதவனுக்கு பயங்கர கோபம். அதனால் அவனை பேசி எப்படியோ சம்மதிக்க வைத்து விட்டான்.
அபிஷேக்கை ஆதவன் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல அங்கே இவனை வரவேற்று உபசரித்ததில் ரொம்பவே மகிழ்ந்து போனான்.
வீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு வர அவனை வரமிளகாய் சட்னியின் வாசனை சுண்டி இழுத்தது.
அதை முகர்ந்தவன், “வாவ்… கலர்புல்” என்றவன்,
“ஆன்ட்டி இதென்ன ஒயிட் பால் மாதிரி இருக்கு?” என விசாரிக்க,
“இது வெள்ளைப் பணியாரம் தம்பி” என மஞ்சரி புன்னகையுடன் சொல்ல,
“இது காரைக்குடி டிரேஷனல் டிஷ்டா. டேஸ்ட் பண்ணிப் பாரு” எனச் சொல்ல பணியாரத்தோடு சட்னியை பிட்டு வாயில் வைத்தவன்,
“அப்பா… என்ன காரம்…” என்றவன்
“பட் செம காம்பினேஷன் ஆன்ட்டி” என்று புகழ்ந்தவன் ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்.
சாப்பிட்டுக் கொண்டே, “ஆன்ட்டி சூப்பர் டிஷ். நான் ஊருக்கு போறதுக்குள்ள என்னென்ன கத்துக்கணுமோ எல்லாம் உங்க கிட்டக் கத்துக்கறேன்” என்று சொன்னவனை மஞ்சரி ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்ன தம்பி நீங்களே இந்தியன் ரெஸ்ட்ராரென்ட் நடத்தறீங்க?. செஃப் வேற. உங்களுக்குத் தெரியாத சமையலா? இப்படிச் சொல்றீங்க?”
“எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்கணும்னு இல்லையே ஆன்ட்டி” என்று சிம்பிளாக சொன்னவன் பின்பு
“நான் செஃப்பா இருந்தாலும் என்னுடைய ரெஸ்ட்ராரென்ட்டுக்குத் தேவையான இந்தியன் சமையலை மட்டும் தான் கத்துக்கிட்டேன் ஆன்ட்டி. இந்தளவு காரம் ஃபிரான்ஸ்ல சாப்பிட மாட்டாங்க. ஆனா காரம் குறைச்சோ, இனிப்பு சேர்த்தோ இந்த வெள்ளை பணியாரத்தையும் ஒரு மெனுவா ஆக்கிடலாம் போல ஆன்ட்டி. அவ்வளவு நல்லா இருக்கு” என்றவன் ஆதவனிடம்,
“டேய் நம்ம எப்போடா ரெஸ்ட்ராரென்ட் போறது?”
“மெதுவா போலாம்டா. இன்னைக்கு ரெஸ்ட் எடு. உனக்கு ஜெட்லாக் வேற இருக்கும். நாளைக்குப் போகலாம்” என்று சொல்ல அவனும் சரி என்று தலையசைத்தான்.
