ஓவியன் நித்திலாவை அணைத்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் சிலையாய் சமைந்து நின்றார்கள்.
“டேய் என் முன்னாடியே என் பொண்ண நீ கட்டிப்பிடிப்பியாடா? அப்போ நான் சந்தேகப்பட்டது தப்பில்ல?” என்று தர்மராஜ் கர்ஜித்தார்.
“என்னது சந்தேகப்பட்டியா?” என்று குரலில் ரௌத்திரம் பொங்க கேட்டவனை கோபமாய் பார்த்தவர்
“டேய் நேத்து நைட் நீங்க குளோஸா இருந்ததை நான் பார்த்தேன் டா” என்று நித்திலாவை காரி உமிழும் பார்வை பார்த்தவர் அவனை அடிப்பதற்கு வர அதனை தனது ஒரு கையால் தடுத்தவன் அவளது உதடை தனது உதட்டால் அழுந்த மூடினான்.
அவனது செயலில் அனைவரும் விழி விரித்து நின்றார்கள்.
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் அவனை பிரிக்க முயல அவனோ பசை போல அவளை ஒட்டிக் கொண்டான்.
அவரை கோபப்படுத்த ஏதோ ஒரு வேகத்தில் அவளுக்கு முத்தம் கொடுத்தவன் இப்போது அவளின் உதடுகளின் மென்மையில் வெளி வர முடியாமல் திணறினான்.
ஒரு சில நொடிகளில் தன்னை சுதாரித்து அவளிடம் இருந்து பிரிந்தவன் “நீ எது நடக்கணும்னு ஆசைப்பட்டியோ… அது நடந்திடுச்சு. ஓகே. இனி என் நிலா மேல ஒரு துரும்பு பட்டா கூட உங்கள சும்மா விடமாட்டேன்” என்று உறுமியவன் அவளை கையோடு அழைத்துச் சென்றான்.
நடந்து முடிந்த நிகழ்ச்சியில் அன்னபூரணியும், தர்மராஜும் அதிர்ச்சியில் சிலை போல நின்றனர்.
முதலில் சுதாரித்த தர்மராஜ் “டேய் ஃபிரண்டுனு எவனாவது வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்த அவனை உயிரோட சாகடிச்சிடுவேன்” என்றவரது கோபமான குரலில் சுயநினைவை அடைந்த கண்ணன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.
கண்ணன் வெளியே வந்த போது அப்போது கூட ஓவியன் நித்திலாவின் கையை பிடித்தபடி நின்றிருந்தான்.
நித்திலாவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“டேய் இன்னும் என்னடா உள்ள நின்னுட்டிருக்க? வந்து வண்டிய எடு” என்றவனின் குரலில் கண்ணன் வந்து வண்டியை எடுத்தான்.
“நித்திலா எந்த நிமிஷமும் நான் உன் கூட எப்பவும் இருப்பேன். ஞாபகம் வச்சுக்கோ. இனிமேல் யாராவது ஏதாவது சொன்னாங்கனு நீ எங்கேயும் நம்பி போய்டாத. அதுவும் குறிப்பா உங்கப்பா” என்றவன் “என்ன மனுஷன்டா இவன்?” என்று சொல்லியவனுக்குள் ஏதேதோ ஞாபகம் வர அவன் முகம் அளவில்லா வேதனையை காட்டியது.
அந்த நினைவுகளில் தனக்குள் மூழ்கி இருந்தவன் திடுக்கிட்டு நித்திலாவை பார்த்தான்.
“நித்திலா” என்று அவனது குரல் தயக்கமாய் வெளியே வர அவள் அமைதியாக அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.
“நிலாமா” என்று கனிவான குரலில் அவன் கூப்பிட “வேணாம் ஓவியன். ஏதும் பேசாதீங்க” என்றவள் அவனின் மடியில் படுத்துக் கொண்டாள்.
அவளை தர்மராஜின் பார்வை உயிரோடு கொன்றது. அந்த பார்வையில் இருந்து வெளிவர முடியாமல் தத்தளித்தவளுக்கு ஓவியனின் செய்கைகள் ஆறுதலாக இருந்தது.
நேற்றில் இருந்தே அவள் ஒரு விதமான மன உளைச்சலில் இருந்தாள்.
அதில் இருந்து வெளிவர வேண்டும் என்று தான் வேலையில் மூழ்க முயற்சி செய்தாள்.
அதனை தர்மராஜ் எளிதாக தடுத்து விட்டார்.
அவளும் அவருக்கு உடம்பு சரியில்லை என்ற பதட்டத்தில் எதையும் யோசிக்கவில்லை.
ஆனால் இப்போதோ…
“ஒண்ணும் இல்லடா. ஒண்ணும் இல்ல” என்று அவளது நடுங்கிய உடலை தட்டி கொடுத்தான்.
அதுவரை அமைதியாக இருந்தவள் இப்போது வெடித்து அழ ஆரம்பித்தாள்.
“கண்ணம்மா என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?” என்று கனிவான குரலில் கேட்டவன் “டேய் ஃபர்ஸ்ட் வண்டிய நிறுத்துடா” என்று கண்ணனிடம் கத்தினான்.
“குட்டிமா அண்ணா இருக்கறப்ப நீ எதுக்கு இப்படி அழற?” என்று காரை நிறுத்தி விட்டு பின் சீட்டிற்கு வந்தவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.
“நீயும் என்னை சந்தேகப்படுறியா கண்ணா?” என்று அழுகையோடே கேட்டாள்.
“டேய் என்னடா குட்டிமா என்ன பேச்சு பேசற?” என்று பதட்டமாய் கேட்டான்.
“அவரு… அவரு… என்னை அருவருப்பா பார்க்கறாருடா. நான் அவ்வளவு கேவலமானவளா?” என்று கேட்டாள்.
“குட்டிமா” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“ஏன்டா இவரை தாண்டி நம்ம ஏதாவது யோசிச்சிருப்போமா? நான் ஆஃபிஸ் விட்டா வீடு, வீட்டை விட்டா ஆஃபிஸ் இதை விட்டா நான் எங்கடா போறேன். எனக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? அவங்க எத்தனை டைம் என்னை கூப்பிட்டுருப்பாங்க. நான் எங்கயாவது அவரை மீறி போயிருப்பேனாடா. ஏன்டா என் மேல ஒரு பர்சன்ட் கூடவா இவருக்கு நம்பிக்கை இல்ல?” என்று விசும்பியபடி கேட்டாள்.
“நான் அவ்வளவு கெட்ட பொண்ணாடா?” என்றவளுக்கு இப்போதும் அந்த பார்வை கண் முன்னால் நின்றது.
அதனை பார்க்க விரும்பாதவள் போல தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவளது செய்கையை பார்த்த இருவருக்கும் கண்கள் கலங்கியது.
“கண்ணம்மா இங்க பாருங்க. நீங்க தேவதை. என் லைஃப்ல எனக்கு வழிகாட்டியா வர்ற ஒளி நீ. நீ இப்படி பேச கூடாது” என்றவன் அவளை தனது தோள்களில் சாய்த்துக் கொண்டான்.
“இல்ல ஓவியன். என்னால தான் நீங்க இவ்ளோ கஷ்டம் அனுபவிக்குறீங்க. என்னை சேஃப் பண்ணலேனா உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்காது” என்று வேதனையான குரலில் கூறினாள்.
அதை கேட்டு சிரித்தவன் “எனக்கு இந்த கஷ்டம் பழகி போயிடுச்சுடா” என்று கூறினான். அந்த சிரிப்பில் அவனுடைய வலி தெரிந்தது.
அவளுடைய தலையை ஆதுரமாக வருடியவன் “நீங்க தேவையில்லாம எந்த வார்த்தையும் விடாதீங்க. நீங்க எங்களோட ஏஞ்சல்” என்று கனிவான குரலில் கூறியவன் “என்னடா?” என்று கண்ணனிடம் கேட்டான்.
“ஆமா குட்டிமா. நீ எங்க தேவதைடா. நீ எதுவும் யோசிக்காத. நான் அப்பா கிட்ட பேசிக்கிறேன்” என்றவனுக்கு அப்பா என்ற சொல்லே கசந்தது.
“டேய் நீ எதுவும் பேச வேண்டாம். நான் பேசிக்கிறேன்” என்று இறுகிய குரலில் ஓவியன் கூறினான்.
“நீ பேசின வரையும் போதும். அடுத்து வீட்டுக்கு போனா என்ன நடக்குமோனு டென்ஷனா இருக்கு” என்று கண்ணன் கலக்கத்துடன் கூறினான்.
இப்போது ஓவியனுக்குமே பயம் வந்தது. தான் செய்து வைத்த வேலையை நினைத்து மலைத்து நின்றான்.
“மச்சான்” என்றவன் தயக்கமாய் அவனை பார்க்க அவனோ ‘மவனே தனியா சிக்குடி உனக்கு இருக்கு?’ என்று மிரட்டலுடன் பார்க்க அவனோ ‘ஆமாடா. நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு?’ என்று பார்த்தான்.
அந்த பார்வையில் கண்ணன் திகைத்து நின்றான்.
“கண்ணா எங்கயாவது ஒரு நல்ல ஹோட்டலா பாரு ரெஃப்ரஷ் ஆகற மாதிரி” என்று ஓவியன் சொல்ல “நான் உனக்கு டிரைவராடா?” என பார்த்தான்.
“கண்ணா நிலா அழுததுல அவங்க முகமே சரியில்ல. இப்படியே அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்னனு சொல்ல சொல்ற?” என்றவனை கேள்வியாக பார்த்தான்.
“ஓவியா அதுக்குனு நடந்தது தெரிய வேண்டாம்னு நினைக்கிறியா?”
“இங்க பாரு நடந்ததை என்னைக்கும் நான் மறைக்கணும்னு நினைக்கல. அன்னைக்கே உங்க வீட்டு மெம்பர்ஸ் எவ்ளோ பயந்தாங்க தெரியுமா? அவங்க ரெஃப்ராஷாகட்டும். நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லவும் கண்ணன் சரி என்று ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.
அனைவரும் சாப்பிட்டவர்கள் ஒரு அறையை எடுத்து நித்திலாவை ஓய்வெடுக்க வைத்தார்கள்.
சிறிது நேரம் அங்கிருந்தவர்கள் கிளம்ப கண்ணனின் செல்லுக்கு சீதாவி்டம் இருந்து போன் வந்தது.
“கண்ணா எங்க இருக்கீங்க?”
“வீட்டுக்கு தான்மா வந்திட்டு இருக்கோம்” என்று சொன்னான்.
“சரிடா. நீ சீக்கிரம் வா. பேய் வந்த மாதிரி இந்த மனுசன் ஆடுறாரு” என்றவர் சொல்ல கண்ணனுக்கு தர்மராஜின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
“ம்மா… நாங்க வந்துடுவோம்” என்று கட் செய்தவனின் கார் பறந்தது.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது தர்மராஜின் சத்தம் காதை பிளந்தது.
நித்திலாவை பார்த்தவர் அவளை அடிக்க பாய்ந்தார்.
“ஏன் ஹாஸ்பிடல கூத்தடிச்சது போதாதுனு இப்போ ஹோட்டல்லயும் கூத்தடிச்சிட்டு வர்றியா?” என்று இறுகிய குரலில் கேட்டார்.
“ப்பா பார்த்து பேசுங்க” என்று கண்ணன் சொல்ல அடிக்க வந்தவரின் கையை பிடித்த ஓவியனின் ரௌத்திரத்தில் சிலை போல நின்றார்.
“மிஸ்டர். தர்மராஜ் அவங்க மேல ஒரு துரும்பு பட்டாலும் நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துடுவேன்” என்று கூறினான்.
“என்ன ஓவியன் என்னை மிரட்டி பார்க்கறியா?”
“உண்மைய தான் சொல்றேன். பெத்த பொண்ணையே கொலை பண்ண டிரை பண்றேன்னு போலீஸ்ல சொன்னேன்னா தூக்கி உள்ள வெச்சுடுவாங்க. உனக்கு ஓகேவா தர்மராஜ்?” என்று நக்கலான குரலில் கேட்டான்.
“அவங்க மேல கை வெச்சினா அதான் நடக்கும்” என்று அவரை மிரட்டியவன் “நித்திலா உள்ள போங்க” என்று சொல்ல அமைதியாய் சென்றாள்.
“நீ இங்க இருக்க கூடாது. வீட்டை விட்டு வெளிய போ” என்று இப்போது தர்மராஜ் கர்ஜித்தார்.
“அது நீங்க சொல்லணும்னு அவசியம் இல்ல தர்மராஜ்” என்றவன் கண்ணனுக்கு கண் காட்டி விட்டு உள்ளே வந்தான்.
தனது அறையில் தளர்ந்து போய் கண் மூடி படுக்கையில் சாய்ந்தான்.
இன்னும் கை, கால் ஆங்காங்கே வலியாக தான் இருந்தது. அதுவும் தர்மராஜை தடுத்ததில் தன்னை மீறி இன்னொரு கையும் ஆங்காங்கே அடியாக இருக்க இவ்வளவு நேரம் வலியை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது முடியாமல் போனது. ஆனால் யாரையும் கூப்பிடவோ, பேசவோ பிடிக்கவில்லை.
அவன் திரும்பி இன்னொரு பக்கம் படுக்க நினைக்கையில் “ஆ…” என்றவன் கத்த கண்ணன் பதறி போய் வந்தான்.
“என்னடா வலிக்குதா? எங்க வலிக்குது?” என்று கேட்டான்.
“அது அங்க ரொம்ப ஆட்டிட்டேன் போல. வலிக்குது” என்று வலியால் முகம் சுழித்தவனை பார்த்தவன் அவசரமாக மருந்து எடுத்துக் கொண்டு வந்து தடவினான்.
அவன் தடவி விட்டதும் அப்படியே கண்களை மூடிக் கொண்டான்.
“கண்ணா”
“என்னடா?”
“நான் வீட்டை விட்டு போறேன்டா. ஆனா நித்திலாவை இப்போ இந்த மைன்ட் செட்ல விட்டுட்டு போக பிடிக்கலடா. அந்த மனுஷன் ஏதாவது பண்ணிடுவாரோனு பயமா இருக்கு” என்றவனின் குரல் கலக்கத்தை காட்டியது.
“டேய் நாங்க அவளை பார்த்துக்க மாட்டோமா? ஆனா நீ ஏன்டா போறேன்னு சொல்ற?” என கேட்டான்.
அவனை கூர்ந்து பார்த்தவன் “இன்னைக்கு நடந்ததுல உனக்கு ஏதும் கோபம் இல்லையா?” என்று கேட்டான்.
“ஏன்டா அதெப்படிடா எங்க முன்னாடியே அவ்ளோ தைரியமா லிப் டூ லிப் அடிச்ச? நீ பண்ண கூத்துல ஹாஸ்பிடலே திகைச்சு போயிடுச்சுடுடா” என்றவன் குரலில் ஓவியனின் முகம் சிகப்பாய் மாறியது.
“டேய் என்னடா உன் ஃபேஸ் இவ்ளோ ரெட்டிஷா மாறுது?” என்று ஆச்சரியமாக பார்த்தான்.
அவனை முறைத்தவன் “இன்னைக்கு நடந்ததுக்கு நீ திட்டறியோ, அடிக்கறியோ எதுனாலும் என்னை பண்ணு. நித்திலா மேல கைய வச்ச மவனே உன் உயிர் உன்கிட்ட இருக்காது” என்றவனை விசித்திரமாக பார்த்தான்.
“என்னடா பார்வை?”
“நீ நித்திலாவை லவ் பண்றியா?” என்று கேட்டான்.
“தெரியல மச்சி. ஆனா அவங்களுக்கு ஏதாவதுனா எனக்கு உடம்பெல்லாம் நடுங்குதுடா” என்றவன் “நான் நித்திலா எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு நாளைக்கு கிளம்பிடுறேன்டா” என்று கூறினான்.
“டேய் நீ தனியா போய் எப்படி மேனேஜ் பண்ணுவ?”
“நான் பார்த்துக்கிறேன்டா” என்றவன் கண்களை மூட கண்ணன் அவனது தலையை வருடி விட்டுச் சென்றான்.
ஓவியன் அவனது செயலில் உறைந்து போனான்.
