“ஹலோ… ஸ்வஸ்தி” என்று கூப்பிட்டான்.
“எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
“அவன பத்தின டீடெயில்ஸ் தெரியணும். அதான்” என்று கேட்டான்.
“இவ்ளோ நேரம் அண்ணா சொன்னத கேட்டீங்க தானே. நான் எப்படி அண்ணா பர்மிஷன் இல்லாம சொல்ல முடியும்?” என்று கேட்டாள்.
“இல்லமா. எனக்கு ஒரு சில டௌட்ஸ் இருக்கு. அதான்” என்று கேட்டான்.
“சாரி. இப்போ நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத நிலைல இருக்கேன். பட் அண்ணா ஃபேமிலி பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட். அண்ணா அந்த அடையாளமே வேண்டாம்னு தான் இங்க வந்திருக்காங்க” என்று கூறினாள்.
“சரி” என்று கேட்டு கொண்டவன் சம்பந்தமே இல்லாமல் “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று கூறினான்.
“ஹலோ… என்ன பேசறீங்க?” என்று அதிர்ச்சியாய் கேட்டாள்.
“எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. அவ்ளோ தான். சரி. பாப்போம்” என்று சொல்ல இவள் தான் திகைத்து நின்று விட்டாள்.
“மச்சான் இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“எப்டி இருந்தா உனக்கென்ன? கிளம்பு நீ” என்று கத்தினான்.
“இப்ப உனக்கு என்ன பிரச்னை?” என கேட்டான்.
“நான் தான் பிரச்சினை. என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம். நேத்து என்ன நடந்தது? தர்மராஜ் வந்த மாதிரி இருந்தது” என்றவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வர அவன் முகம் வேதனையில் கசங்கியது.
“ஓவியா… ஒண்ணும் இல்ல. ஏன் இப்படி உங்கள வருத்திக்கறீங்க?” என கேட்டாள்.
“ஓ… காட்… நேத்து உங்கப்பா என்ன நினச்சிருப்பாங்க. சரியான மென்டல்னு என்ன நினச்சிருப்பாங்க. நானே அந்த ஆளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன்” என்று தலையில் அடித்து கொண்டான்.
“ஓவியா… நீ ஃபீல் பண்ண மாதிரிலா ஒண்ணும் நடக்கல. அப்பா நேத்து எவ்ளோ சாஃப்டா நடந்துகிட்டாங்க தெரியுமா?” என கேட்டான்.
இப்போது தூக்க கலக்கத்தில் பார்த்தது வர “ஓ…. அப்போ அது கனவில்லையா?” என்று கேட்டான்.
“டேய் என்ன பேசற?” என்று கேட்டான்.
“உங்கப்பா தான் கனவுல வந்தாருனு நினச்சிட்டேன்டா” என்றவன் “என்ன எப்டி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண?” என்று கேட்டான்.
“உனக்கு வழக்கமா கூப்பிடற மாதிரி கூப்பிட்டேன். நீ எடுக்கல” என்று கூறினான்.
“எப்போ கூப்ட்ட?” என்று கேட்டவன் அடுத்து நடந்ததை விசாரித்தான்.
“நீ எப்டிடா அங்க போன?” என்று கேட்டான் கண்ணன்.
“நான் எங்க போனேன்? போயிட்டு இருந்த வண்டி காணலையேனு அங்க போனேன். அங்க போனா டைல்ஸ் மாத்தி வெச்சிட்டு இருந்தாங்க. அப்றம் யாரு அனுப்பினாங்கனு ஒருத்தன்ட்ட விசாரிச்சேன். ஒரு போன் கால் வந்தது. அப்படியே மயங்கிட்டேன்” என்று கூறினான்.
“ஏன்டா இப்போ தான் ஓரளவுக்கு ஓகே ஆன. உன்ன யாரு தனியா போக சொன்னது?” என்று கேட்டான்.
“இப்படி ஒரு உயர்ந்த உள்ளம் இருக்கும்னு எனக்கு தெரியலையே” என்று சொன்னான்.
அடுத்த நாள் ஸ்வஸ்திகா அவனை பார்க்க வந்தாள். அவள் வந்த போது கண்ணனது கண்கள் அவளையே மொய்த்தது.
அவளது துறு துறு நடவடிக்கையில் அவன் வைத்த கண்ணை எடுக்கவில்லை.
ஓவியனிடம் லொட லொட என்று பேசியபடி இருந்தவள் அவ்வப்போது அவனையும் கவனித்து கொண்டிருந்தாள். தன்னுடைய பேச்சில் நித்திலாவையும் உள்ளே இழுக்க தவறவில்லை. அவனை மட்டும் அழகாக ஒதுக்கினாள்.
‘எவ்ளோ அழகா என்ன ஒதுக்கற கேடி? என்னைக்காவது உன்ன ஐ லவ் யூனு சொல்ல வைக்கல’ என்று மனதிற்குள் கறுவியவன் தன் மனம் போகும் போக்கை நினைத்து திடுக்கிட்டான்.
அன்றே தர்மராஜீம் வந்து திரும்ப அதிர்ச்சி கொடுத்தார்.
உண்மையில் அங்கு ஓவியனுக்கு அவரை பார்த்ததும் பயம் உண்டானது. அதனை அவருக்கு காட்டாமல் மறைத்தவன் உணர்ச்சியின்றி அவரை பார்த்தான்.
அவனை பார்த்தபடி வந்தவர் அவனின் நெற்றியில் திருநீறு இட்டார்.
ஓவியன் உட்பட அனைவரும் அதிர்ந்து நிற்க ஓவியனின் கையை பிடித்து அழுத்தியவர் “அங்கிள் எப்பவும் உன் கூட இருப்பேன்” என்றவர் அவனை தோளோடு சாய்த்து கொண்டார்.
ஓவியன் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனை பார்த்தான். பின்னர் அவர் உடனே கிளம்பி விட இது நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று குழம்பி நின்றனர்.
இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்கள்.
இம்முறை ஓவியன் ஒரு ஆண் நர்ஸை வேலைக்கு வைத்து விட்டான். ஆனால் எந்நேரமும் கண்ணனும், நித்திலாவும் அவனை தனியே இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.
“கண்ணா நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. டைம் ஆயிட்டு இருக்கு” என்று கூறினான்.
“எங்களுக்கு தெரியும். நீ அத சொல்லாத” என்று கோபமாய் கூறினான்.
“டேய் ப்ளீஸ்… நான் இப்ப யாரையும் நம்பற நிலைமைல இல்ல” என்று அவர்களை காயப்படுத்தும் என்று தெரிந்தே கூறினான்.
அவனது கூற்றை கேட்டவர்கள் நம்ப முடியாமல் திகைத்தனர்.
“ஓவியன்” என்று இருவரும் அதிர்ச்சியில் கத்த “கிளம்புங்க ரெண்டு பேரும் ப்ளீஸ்” என்று கூறினான்.
“ஓவியன் நீங்க பேசறது சரியில்ல” என்று நித்திலா கத்தினாள்.
“நான் இப்போ சரி, தப்புன்னு பாக்கற நிலைமைல இல்லம்மா. நீ கிளம்பு” என்று அவன் கையெடுத்து கும்பிட்டான்.
அந்த செய்கையில் அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள். அந்த பார்வை ஏதோ செய்தாலும் அதை கண்டு கொள்ளாதவன் போல அவர்களை கிளப்பினான்.
அவர்கள் சென்றதும் வீடே வெறிச்சோடி போய் இருந்தது. உதவிக்கு வந்த ஆண் நர்ஸ் மட்டும் தினமும் வந்தான்.
அவன் இருந்த விரக்தி நிலையில் யாரையும் பக்கத்தில் வைக்கவில்லை. ஆனால் அவர்கள் இல்லாமல் அவனுக்கு பைத்தியம் பிடிக்கும் போல் ஆனது.
இப்படியே இரண்டு நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மூன்றாவது நாள் காலை வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க கேட்டவன் போய் பார்க்க அங்கே தனது கற்பனை தான் உயிர் பெற்றிருக்கிறதோ என்று நினைத்தான்.
எங்கே கண் சிமிட்டினால் அவள் காணாமல் கரைந்து விடுவாளோ என்று அவனுக்கு அச்சமாக இருந்தது.
“நான் வீட்டுக்குள்ள வரட்டுமா? வேணாமா? எவ்ளோ நேரம் இங்கேயே நிக்கிறது?” என நித்திலா கேட்க தனது தலையை உலுக்கியவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க அவள் உள்ளே வந்தாள்.
உள்ளே வந்தவளோ அவனுக்கு குடிக்க காஃபி போட்டவள் பின் காலை உணவை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் வந்த சிறிது நேரத்திலேயே கண்ணன் வந்தான். அவனை முறைத்தவன் அமைதியாக தனது வேலையை பார்க்க போனாள்.
இருவரும் வந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்த போதும் அதற்கு மேல் அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. அவன் தன் வீட்டில் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.
அவள் காலை உணவை செய்தவுடன் அவனை சாப்பிட அழைக்க அவனோ அவளை கண்டு கொள்ளவில்லை.
“ஓவியன் உங்களுக்காக தான் நான் ப்ரிப்பேர் பண்ணிருக்கேன். சாப்பிடுங்க” என்று சொல்ல அவன் சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
காலை காஃபியையும் அவன் தவிர்த்திருந்தான்.
“நீங்க சாப்பிடலேனா நானும் சாப்பிட மாட்டேன்”
“டேய் சாப்பிட வாடா. நீ சாப்பிடாம எனக்கும் சாப்பாடு போட மாட்டேங்கறா” என்று சலிப்புடன் கூறினான்.
“நான் உங்ககிட்ட கேட்டேனா? வாங்க… எனக்கு ஹெல்ப் பண்ணுங்கனு” என்று கத்தினான்.
“டேய்”
“ஏதோ போனா போகுதுன்னு ரெண்டு நாளைக்கு வருவீங்க. அப்புறம் நான் உங்கள நினைச்சி ஏங்கிட்டு இருக்கணும்னு தானே இப்படி பண்றீங்க. போங்கடா ஃபர்ஸ்ட் வீட்டை விட்டு” என்று ஆங்காரமாக கத்தினான்.
அவன் பேசிய வார்த்தையில் நித்திலா அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.
“ஓவியன் நீ தப்பு பண்ற. நீ தானேடா யாரும் வரவேண்டாம்னு சொன்ன?” என்று கண்ணன் ஆதங்கமாய் கேட்டான்.
“ஆமா. நான் அப்படி தான் சொல்வேன்” என்று கூறினான்.
“டேய் இம்ச புடிச்சவனே உன் வீட்டுக்கு வந்தா வீட்டை விட்டு வெளிய போக சொல்லிடுவியாடா?” என்று கண்ணன் ஆத்திரமாய் கேட்டான்.
“ஆமா. சொல்லுவேன். என்னோட பழகி உங்களோட தரம் எதுக்கு கீழே போகணும்? ஆன்ட்டி தான் கேட்டாங்களே… உங்கப்பா பேசறப்ப கூட நிறைய கோபம், ஆத்திரம் எல்லாம் வந்துச்சு. உங்கம்மா கேள்வி நியாயம் தானே? அந்த நியாயமான கேள்விக்கு என்னால பதில் தெரிஞ்சும் சொல்ல முடியலையே… சொல்ல பிடிக்கலையே... நான் என்ன பண்ணட்டும்? அதுவும் இப்போ எதுவும் கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும்?” என்றவனது குரல் கமறியது.
ஓவியனின் குரலில் அவனது இரு பக்கமும் ஆறுதலாய் அமர்ந்தவர்கள் அவனது கையை இறுக பிடித்தனர்.
“எனக்கு யாரும் வேண்டாம்டா. நான் அன்பு வைக்கறவங்க எல்லாம் விலகி போயிடறாங்க. ப்ளீஸ்… என்னை விட்ருங்க. நான் தனியாவே இருந்துடுறேன்” என்றவன் கையெடுத்து கும்பிட்டான்.
அவனது குமுறலில் ஆறுதலாய் அவனை அணைத்தவன் தனது அன்னையை நோக்கினான். ஆம். சீதா அப்போது அங்கு வந்திருந்தார்.
இரண்டு நாட்கள் ஓவியனது நடவடிக்கையை தனது மக்கள் மாறி மாறி சொல்லுவதை கேட்கையில் அவரது தாயுள்ளம் பதறியது. தனது வார்த்தை அவனை மிக ஆழமாய் காயப்படுத்தியதென.
இப்போது அவனது கை காயப்பட்டதை கேட்டதும் துடித்தவர் அவனை பார்க்க வேண்டும் என்று வந்தார்.
அதுவும் அன்று அவர்கள் வீட்டில் இருந்த நாள் அவன் சொன்னதை நினைத்து அவருக்கு தூக்கம் வரவில்லை.
‘உங்கள் அன்புக்கு பேராசைப்பட்டு விட்டேன்’ என்று சொல்லியதில் அவர் நெக்குருகி போனார். அப்போது அவன் குரலும், அவன் உடல் மொழியும் அவனை நினைக்கையில் அவருக்கு எந்த வேலையும் ஓடவில்லை. அதனால் இன்று காலை கிளம்பி வந்து விட்டார்.
அவர் உள்ளே நுழைந்த போது அவர்கள் உட்கார்ந்த நிலை அவரை உலுக்கியது.
“ஓவியன்” என்றவர் கூப்பிட அந்த குரலில் அதிர்ந்து போய் அவரை பார்த்தான். அவனது கண்கள் அச்சத்தை காட்டியது.
